தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 34

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து

மார்ச் 17

“கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்து.” 1.நாளா. 16:29

தேவன் தமது நாமத்தை அவருடைய வல்லமையான கிரியைகள் எல்லாவற்றின் மேலும், அன்பான ஈவுகள் எல்லாவற்றின் மேலும் தயவாய் மாட்சிமையாய் வரைந்திருக்கிறார். தேவ நாமத்தை நாம் நன்கறிய வேண்டும். அதிலும் சுவிசேஷத்தை ஆராய்ந்தறிய வேண்டும். தேவன் தமது நாமத்தை, பாவங்களைக் குணமாக்குதலிலும், நீதிமான்களாக்கப்படுவதிலும், பரிசுத்தவான்களாக்கப்படுவதிலும், மகிமைப்படுத்துவதிலும் வரைந்திருக்கிறார். தமது மகிமையான தன்மைகளையும், குணநலன்களையும் விளக்கி வெளிப்படுத்துகிறார். தேவன் தமது நாமத்தை தம்முடைய வசனத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அதை உபதேசங்களிலும், வாக்குத்தத்தங்களிலும், கட்டளைகளிலும், இனி வெளிப்படப்போகிற காரியங்களிலும் நாம் வாசிக்கிறோம்.

யேகோவாவின் நாமத்தை நாம் சரியானபடி வாசித்து அறிவோமானால், ஆச்சரியத்தோடும் நிரப்பப்படுவோம். அப்படி நிரப்பப்படும்போது நமது ஜெபங்களிலும், துதிகளிலும், நடக்கைகளிலும் அவரை மகிமைப்படுத்துவோம். அவருடைய நாமத்திற்குரிய பிரகாரம் அவரை மகிமைப்படுத்த நமது திறமைகளும், காலமும் போதவே போதாது. அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. இருதயம் மட்டும் சுத்தமாய் இருக்குமானால் அது நமக்கு இனிமையாய் இருக்கம். நாம் அடிக்கடி தேவமகிமையை அசட்டை செய்கிறோம். தேவனுக்குரியதை நாம் செலுத்தாமல் போவதால் ஆத்துமாவுக்கரிய ஆறுதலை நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம். அவரு நாமத்திற்கரிய மகிமையை அவருக்குச் செலுத்த நாம் கற்றுக்கொள்வோமாக.

வான் கடல் பூமி யாவும்
உம் நாமம் துதித்து போற்றும்
உமது நாமம் கற்போம்
அப்போது ஞானிகள் ஆவோம்

நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்

மார்ச் 16

“நீர் என்னை ஆசீர்வதித்துக் காத்தருளும்.” 1.நாளா. 4:10

இது யாபேஸ் பண்ணின ஜெபம். எந்தக் கிறிஸ்தவனும் இப்படித்தான் ஜெபிப்பான். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும். அதனோடு அவர் வேதனையைக் கூட்டார் என்றே அவன் அறிவான். கர்த்தர் ஆசீர்வதித்தால் அது பலிக்கும். அவர் கிறிஸ்துவில் எல்லா ஞான நன்மைகளாலும் பரமண்டலங்களில் இருந்து ஆசீர்வதிக்கிறார். சகலமும் நமக்கு இயேசுவில் பொக்கிஷமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவருடைய நிறைவிலிருந்து நாம் கிருபைமேல் கிருபையைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.  அவர் இன்னும் நம்மை ஆசீர்வதித்து வருகிறார். உன் அப்பத்தையும் தண்ணீரையும் அவருடைய அன்பால் சாரம் ஏற்றப்படும்போது வெகு இனிமையாய் இருக்கும். புதியதாக்கும் கிருபையினாலும், சீர்ப்படுத்தும் கிருபையினாலும் முன் செல்லும் கிருபையினாலும் அவர் நம்மை ஆசீர்வதிக்கிறார்.

நம்முடைய ஆத்துமாவைப்போல் என்றும் உள்ளதுமான விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களால் நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை ஆசீர்வதிப்பதே அவருக்குச் சந்தோஷம். நம்மை  மகிமையாய், நித்தியமாய் ஆசீர்வதிக்கும்படி, நமக்காக மரிக்கும்படி தமது குமாரனைக் கொடுத்தார். நம்மை ஆசீர்வதித்து ஆசீர்வாதமாக்குவேன் என்றே வாக்களித்திருக்கிறார். அவர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்று உணருவதே ஓர் ஆசீர்வாதம். அதை உணருகிற ஒவ்வொருவனும் அதைக் கருத்தாய் தேடுகிறான். ஆகவே நாமும்கூட அவர் வசனத்தை வாசித்து, அவர் அன்பை விசுவாசித்து, அவர் ஆசீர்வாதத்திற்காகக் கெஞ்சி யாபேசைப்போல் நல்வாக்கைப் பெற்றுக்கொள்வோமாக.

முடிந்தது என்று சொன்னாரே
அவ்வாக்கைக் கேள்
அது கடைசி வார்த்தை ஆனதே
அதனால் திடன் கொள்.

சமாதானம் சமாதானம்

ஏப்ரல் 05

“சமாதானம் சமாதானம்.” ஏசாயா 57:19

இவ்விதமான மிருதுவான அமைதி தரும் வார்த்தைகளைத்தான் சுவிசேஷம் நமக்குச் சொல்லுகிறது. நமக்கு வரும் எத்துன்ப நேரத்திலும், சோதனையிலும், வியாதியிலும், வருத்தத்திலும் அது நம்மிடம் சமாதானம் சமாதானம் என்றே சொல்லுகிறது.

பாவத்தைப் பரிகரிக்க இயேசு மரித்ததால் சமாதானம், மோட்சத்தில் உனக்காகப் பரிந்து பேச இயேசு உயிர்த்ததால் சமாதானம், சகலத்தையும் ஆளும் இயேசுவின் கரத்தில் உன் பிரச்சனைகள் இருப்பதால் உனக்குச் சமாதானம். கிறிஸ்து உன்னை நேசிக்கிறதினால் உனக்குச் சமாதானம். அவரின் மரணத்தில் நீ ஒப்புரவாக்கப்பட்டபடியினால் உனக்குச் சமாதானம். மனம் கலங்கவேண்டாம், உன்னைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் எண்ணம் எல்லாமே சமாதானம். உன்னைக் குறித்துத் தேவனால் தீர்மானிக்கப்பட்டதெல்லாம் சமாதானம். பரலோகமும் உன்னோடு சமாதான உறவை ஏற்படுத்திக் கொள்கிறது.

கிறிஸ்து உனக்காக மரித்தபோதும், உன் பாவம் தொலைந்தபோதும் உன் சமாதானம் நிறைவேறி முடிந்தது. உனக்குச் சமாதானம் உண்டாக்குகிற அவரையே நோக்கிப்பார். கெத்செமனே கொல்கொதா இவைகளை அடிக்கடி நினைத்துக்கொள். தேவனைச் சமாதானத்தின் தேவனாகவும் பரலோகத்தைச் சமாதானத்தின் வீடாகவும் சிந்தனை செய். உம்மை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்கிற வாக்கை அடிக்கடி தியானி. உன் மனதில் கர்த்தரின் சமாதானம் தங்கட்டும்.

விசுவாசம் வர்த்திக்கப்பண்ணும்
சமாதானம் அளித்திடும்
உமது பெலனை நம்புவேன்
பாவத்தால் கலங்கிடேனே.

உண்மையுள்ள தேவன்

செப்டம்பர் 30

“உண்மையுள்ள தேவன்” உபா. 7:9

மானிடரில் உண்மையுள்ளவர்களைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம். ஆனால், நமது தேவன் உண்மையுள்ளவர் என்று நாம் அறிகிறோம். ஆனால் நாம் அவரை நம்பலாம். அச்சமன்றி அவரை நெருங்கித் தாராளமாக அவரிடத்தில் யாவற்றையும் மனம் திறந்து சொல்லலாம். அவர் உண்மையுள்ளவராகையால் நம்மைப் புதியவர்களாக மாற்றுகிறார். நம்மைக் கண்டிக்கிறார். தம்முடைய சித்தத்தை நமக்கு அறிவிக்கிறார். துன்பங்களில் நம்மை ஆதரித்து, நம்முடைய கஷ்டங்களில் நம்மை மீட்கிறார். நமது பகைவரை வென்று அடக்குகிறார். நமது இருளான நேரங்களில் நமக்கு வெளிச்சம் தருகிறார்.

தேவன் உண்மையுள்ளவர் என்பது நமக்குக் கிடைக்கும் தேவ இரக்கத்திலும், நம்மைப் பாதுகாக்கும் கிருபையிலும், நமது குறைகளிலும், நாம் சுமக்கும் சிலுவையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மகத்துவங்களை நமக்குக் காண்பிக்கவும், தமது வசனத்தை அதிகாரத்துடன் செலுத்தவும், நம்முடைய வேண்டுதல்களுக்குப் பதிலளிக்கவும் தமது சித்தத்தைச் செயல்படுத்தவும், நமக்கு சகல நன்மைகளைப் பொழியவும் தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஏதேன் தோட்டத்திலிருந்து பாவம் செய்த ஆதாமை வெளியேற்றினதாலும், பெருவெள்ளங்கொண்டு பாவிகளான மக்களை நோவாவின் காலத்தில் அழித்ததினாலும், பாவ மக்களை மீட்கத் தமது குமாரனையே தந்ததினாலும், நமது ஆன்மீக வாழ்க்கையில் நம்மைத் தாங்கி திடப்படுத்தத் தம் ஆவியானவைர அருளினதாலும் அவருடைய நீதியும் உண்மையும் விளங்குகின்றன. அவர் நமது அடைக்கலம். கன்மலை. இளைப்பாறுதல். அவர் உண்மையுள்ளவராதலால் நாமும் உண்மையுள்ளவர்களாக இருப்போமாக.

கர்த்தர் மேல் வைத்திடு
உன் பாரமனைத்தையும்
உண்மையுள்ள அவர் தாம்
உன் பளு நீக்கிக்காப்பார்.

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

யூலை 01

“அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து.” சங்.103:3

தினந்தோறும் நாம் பாவம் செய்கிறபடியால் தினந்தோறும் நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது. நம்முடைய பாவம் கொடிய தன்மை உடையது. இரத்தக் கிரயத்தைக் கொடுத்து, நம்மை மீட்ட ஆண்டவருக்கு விரோதமாக நாம் பாவம் செய்கிறோம். தன் எஜமான் வீட்டில் வாசம் செய்து அவருடைய போஜனத்தை அவரோடு புசித்து, அவருடைய உதாரத்துவத்தால் சகலத்தையும் பெற்று அனுபவிக்கிற ஊழியக்காரன், இப்படி தனக்கு தயவு காட்டுகிற எஜமானுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுபோல நாமும் பாவம் செய்கிறோம். பாசமாய் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஒரு நல்ல பட்சமுள்ள அன்பான தகப்பனுக்கு விரோதமாய் பாவம் செய்கிறதுப்போலவே நாமும் பாவம் செய்கிறோம்.

நம்முடைய பாவங்கள் அநேகம். அடிக்கடி செய்கிறோம். அது பல வகையானது. அவைகளினின்று தப்ப முடியாது. ஆயினும் கர்த்தர் நம்முடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார். நிறைவாயும், இலவசமாயும், எவ்வித குறைவுவராமல் மன்னிக்கிற தேவனைப்போல வேறு ஒருவரும் இல்லை. இந்த மன்னிப்பு இயேசுவின் இரத்தத்தால் கொள்ளப்பட்டது. அவர் மன்னிப்பைத்தரும்போது பாவத்தின்மேல் பகையும், துக்கமும், அதை விட்டுவிலகுதலும் உண்டாகவேண்டும். தேவன் நம்மைப் பலமுறை மன்னித்து கொண்டே இருக்கிறார். தகப்பனைப்போல் அன்பாயும், பலமுறையும் மன்னிக்கிறார். தேவன் இரக்கமாய் மன்னிக்கிறார் என்று சாட்சி கொடுத்த தாவீது பெரிய பாவி. அவன் விபசாரம் செய்து மோசம்பண்ணி, கொலைக்கும் ஆளாகி, அது தெய்வ செயல் என்று சொல்லி வெகு காலம் பாவத்தில் உறங்கிக்கிடந்தான். ஆனால் அவன் மனசாட்சி குத்தினபோது தேவனுக்குமுன் பாவங்களை அறிக்கையிட்டான். இதை வாசிக்கிறவரே, நீர் பாவமன்னிப்பு பெற்றதுண்டா? நீர் குற்றவாளி அல்லவா? தேவன் உமக்கு மன்னிக்க காத்திருக்கிறார். பாவத்தை அறிக்கை செய்து, ஜெபம்பண்ணு. இயேசுவின் புண்ணியத்தைச் சொல்லி, கெஞ்சி மன்னிப்பைப் பெற்றுக்கொள்வீராக.

இயேசுவே உமது அருளை
சொல்வது என் பெருமை
அதை என்றும் போற்றவே
மன்னிப்பளித்துக் காருமேன்.

தமது கிருபையுள்ள வசனம்

நவம்பர் 20

“தமது கிருபையுள்ள வசனம்” அப். 14:3

அருமையான நமது வேதாகமத்திற்கு இது மற்றொரு பெயர்தான் தேவனுடைய கிருபையான வசனம், கிருபையற்ற பாவ மனிதருக்குக் கிருபையுள்ள வார்த்தைகள். இது தேவ கிருபையினால் பிறந்தது. தேவனுடைய உள்ளத்தில் பலகாலம் மறைந்து கிடந்தது. இது பரலோகத்திலிருந்துப் பூமிக்கு இறங்கி வந்தது. கிருபைதான் இதுவரை வசனத்தை வைத்திருக்கிறது. இது இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் மீட்பை இலவசமாகக் கொடுக்கிறது. கர்த்தருடைய ஆசனத்தருகில் வருகிறவர்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்ளுகிறது. நம்முடைய குறைவுகளுக்கெல்லாம் தேவையான நிறைவை மீட்பரின்மூலமாக நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக வைத்திருக்கிறது. கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவர்களுக்குப் பரம வீடு நியாயமாகக் கிடைக்கச் செய்கிறது.

நமக்கு மீட்பு கிருபையால்தான் வருகிறது. அதன்மூலமாகவே கர்த்தர் நமது செயல்களை நம் இதயத்தில் நிறைவேற்றுகிறார். கிருபைக்கும், நியாயப்பிரமாணத்திற்கும் வெகுவாக வேறுபாடுகள் உண்டு. கிருபை, தேவன் நமக்குக் காட்டிய இரக்கத்தை எடுத்துக்கூறி, எண்ணிலா மேன்மையான நன்மைகளை நமக்குக் காட்டி, நித்திய மீட்பை நமக்கு அறிவிக்கிறது.

அன்பானவர்களே, விசுவாசத்தை நியாயப்பிரமாணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம். சுவிசேஷம் எதையும் கட்டளையிடுகிறதில்லை. சுவிசேஷம் மகிழ்ச்சியின் கீதம். அது உங்களுக்குப் பாவ மன்னிப்பையும், சமாதானத்தையும், விடுதலையையும் பிரசங்கிக்கிறது. அது தேவ இரக்கத்தையும் கிருபையையும்பற்றிய சுபசெய்தி. மனதுக்கு மங்களச் செய்தி. கிரயமுமின்றிக் காசுமின்றிக் கிடைக்கும் இலவச நன்மைகளைப்பற்றிக் கூறும் தேவ செய்தி.

கர்த்தாவே, உமது நேசம்
என்றும் குறையாப் பொக்கிஷம்
எங்கள் பாவங்கள் போலவே
அளவிலடங்காததே.

அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

மார்ச் 19

“அவர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்.” சங். 23:3

காணாமற் போன ஆட்டைப்போல் விழி தப்பினோன். நாம் எப்போதும் அலைந்து திரிய ஏதுவானவர்கள். அப்படி அலைந்துதிரியும்போது அந்த நல்ல மேய்ப்பர் நம்மைத் தேடி கண்டுபிடிக்குகும் வரையில், நாம் சரியான பாதைக்குத் திரும்புகிறதேயில்லை. அவருடைய பார்வையோ, அலைந்து தரிகிற ஆட்டின்மேல்தான் இருக்கிறது. அவருடைய உள்ளமோ காணாமற்போன ஆட்டின்மேலே இருக்கிறது. அதைக் கண்டு அதன்மேல் அன்புகாட்ட தகுந்த நேரம் வரும் என்றே காத்திருக்கிறார். நயமாயும், பயமாயும், கண்டித்தும், போபித்தும் அதைப்பின் தொடர்ந்து போய் கண்டுபிடித்து வருகிறார்.

தொழுவத்தைவிட்டு அலைந்து திரிவது, புத்தியீனமென்று அந்த ஆத்துமா உணரும்போது, அலைந்து திரிகிறதினால் மனவருத்தமடைந்து, உள்ளுக்குள்ளே ஜெபித்து, எப்போது திரும்பலாமென்று கவலைப்பட்டு மேய்ப்பனின் அடிகளைத் தேடி வந்து, தன் பாவத்தையும், அறியாமையையும் அறிக்கையிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சி, உம்முடைய இரட்சிப்பின் சந்தோஷத்தை எனக்குத் திரும்ப கட்டளையிடும் என்று சத்தமிடும். மேய்ப்பனோ தன் கரத்தினால் அதைத் தூக்கி, தோளின்மேல் போட்டு அன்பாய்க் கண்டித்து தொழுவத்திற்குக் கொண்டு போகிறான். கிருபையால்தான் இப்படி திருப்ப ஏதுவுண்டு.

மேய்ப்பனுடைய கரிசனையில்தான் அலைந்து திரிகிற ஆத்துமா சீரடையும். சீர்ப்பட்டவன் மேய்ப்பனால் சுத்தமாக்கப்படுகிறார். அவன் மனம் மிருதுவாகிறது. பாவத்தின்மேல் பகை ஏற்படுகிறது. தன்னைத்தான் வெறுத்து தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறான். மேய்ப்பனின் இரக்கமே நம்மை இப்படி நடத்துகிறது. நம்மை மீட்டு மேய்ப்பனின் இரக்கத்தை அனுதினமும் நினைப்போமாக.

வழி தப்பி திரிய
என் இருதயம் பார்க்கிறது
உமக்கே அதைப் படைக்கிறேன்
அதை நீரே திருத்துமேன்.

My Favorites

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18 "தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு" உன். 8:5 ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக்...
Exit mobile version