தினதியானம்

முகப்பு தினதியானம்

நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்

அக்டோபர் 04

“நீங்கள் உப்பாய் இருக்கிறீர்கள்” மத். 5:13

உலகத்தின் உப்பாயிருக்கவேண்டிய நம்மைப் பாவமானது சாரமற்றவர்களாக மாற்றிவிடுகிறது. தேவ கிருபையால்தான் அது சுத்திகரிக்கப்பட்டுச் சாரம் உள்ளதாக்கப்படுகிறது. இந்த நன்மைகள் கிறிஸ்துவால் உண்டாகிய அவருடைய ஜனங்களுக்குப் பயனுடையதாகப் பரவுகிறது. தம்முடைய பிள்ளைகளை இயேசு உப்பைப்போல் இருக்கு வேண்டுமென்கிறார். இவர்கள் மற்றவர்களைப் பாதுகாக்கத்தக்கவர்கள். கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்குப் பயனுடைய சாட்சிகளானவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உப்புக்கல். இதனால் அவன் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் பயன் உள்ளவனாகிறான். கிறிஸ்தவனை வழிநடத்துபவை வேதவசனங்கள். அவனுடைய வாழ்க்கை மற்றவர்களுக்குப் போதனை தருவதாக இருக்க வேண்டும்.

பரிசுத்தவான்கள் இல்லாவிடில் இந்தப் பூமி எரியுண்டு அழிந்துபோயிருக்கும். தேவ பிள்ளைகள் இல்லாதிருக்கும் இடம் இருள் நிறைந்த இடம். பிரியமானவர்களே, நீங்கள் உப்பாக இருக்கிறீர்களா? உங்களைச் சூழ்ந்து இருப்போருக்கு உங்களால் நன்மைகள் உண்டா? உங்கள் பேச்சு, வாழ்க்கையும், தேவனுடைய சாரத்தைப் பெற்று எழுப்புதலோடும், கிருபையோடும் எல்லாரையும் சந்திக்கிறதா? நீங்கள் எல்லாருக்கும் பயன்படும் பாத்திரங்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய நடத்தையால், உலகத்தார் நலமானவைகளைத் தெரிந்து கொள்ளுகிறார்களா? இவ்வாறெல்லாம் இருந்து நீங்கள் உப்பாக வாழ்வீர்களானால், மற்றவர்களுக்கு நீங்கள் பயனுடையவர்களாயிருப்பீர்கள். நன்மைகளையும் செய்வீர்கள். நீங்கள் பாவத்துக்கு மரித்து நீதிக்கு உயிர்த்திருப்பீர்கள். நீங்கள் உப்பென்று உண்மையானால் அதன் குணங்கள் உங்களில் விளங்கும். கிருபை பெற்றவர்களாகிய நீங்கள் உப்பாயிருப்பீர்களானால் சாரமுடையவர்களாகிய நலமானதைச் செய்வீர்கள். சாரம் உள்ள உப்பாயிருங்கள். கிறிஸ்துவே உங்களிலுள்ள சாரம்.

இயேசு எனக்காய் மரித்தார்
என்னில் சாரம் ஊட்டினார்
சாரம் உள்ள உப்பைப்போல்
என்றும் வாழ்வேன், அவருக்காய்.

முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்

அக்டோபர் 02

“முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்போம்” ரோமர் 8:37

ஒவ்வொரு விசுவாசியும், தன் சுபாவத்தோடும், உலகத்தோடும், மாம்சத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. ஊழியம் செய்யத் துவங்கினால் அவனுக்கு மனமடிவுண்டாக்கும் காரியங்கள் அவனைச் சூழ்ந்து கொள்ளுகின்றன. சாத்தான்தான் விசுவாசிக்கு முக்கிய சத்துரு. சாத்தான் சோதனைகளையும், நோய்களையும் மரணத்தையும் கொண்டுவரும்பொழுது தேவபிள்ளை இவைகளின்மீது ஜெயங்கொள்கிறான். இந்த வெற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம்தான் கிடைக்கிறது. இயேசுவின் அன்பே இவர்களைத் தாங்கி வெற்றியைப் பெற்றுத் தருகிறது.

இவர்களின் ஆண்டவரும் இரட்சகரும், சிநேகிதருமான இயேசு ஞானத்தையும், வல்லமையையும் அளிக்கிறார். இவற்றினால் விசுவாசிகள் வெற்றியடைகிறார்கள். இவ்வெற்றியை அடைவது இயேசு நாதர்மீது கொண்ட விசுவாசத்தினாலேயே. பொறுமையும் ஆழ்ந்த நம்பிக்கையும் வெற்றியடையப் பெலன் தருகின்றன. இவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி, தோல்வியே காணாதது. இதுபோன்ற முழு வெற்றியை உலகில் எவரும் பெறமுடியாது. இயேசுவன்றி வேறு எவரும் வெற்றி தரவும் முடியாது. அவர் காட்டிய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால், நாம் வெறும் வெற்றிபெறுகிறவர்களாய் மட்டுமல்ல, முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாவும் மாறுவோம். விசுவாசியே, இயேசுவின் ஞானத்தின்மீதும், வல்லமையின்மீதும், பாதுகாப்பின்மீதும் உன் நம்பிக்கையை வைத்திருக்க மறவாதே. அவரையே உனது முன் மாதிரியாகக் கொண்டிரு. அப்பொழுது வெற்றி உனக்கு நிச்சயம். வெற்றியடைபவன் மகுடம் பெறுவான். உன் வெற்றிக்கிரீடம் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

எம் தலைவர் இயேசுவே,
துன்பம் அவருக்காகப்பட்டால்
இன்ப வெற்றியைத் தருவார்
என்றும் வெற்றி வீரராவோம்.

மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்

ஜனவரி 6

“மார்த்தாளே, மார்த்தாளே… நீ கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” லூக்கா 10:41

இயேசு மார்த்தாளில் அன்புகூர்ந்தார். மார்த்தாளும் இயேசுவில் அன்புகூர்ந்தாள். ஆனாலும் உலகக் காரியங்களை குறித்து அதிகமாய் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள். இதனால் இரட்சகர் அவளைத் தயவாய்க் கண்டித்தார். அவளோ கவலைப்பட்டு படபடப்பாய்த் திரிந்தாள். அதினின்று அவளைத் தப்புவிக்க வேண்டுமென்பதுதான் நேசருடைய நோக்கம். மார்த்தாள் மிகுந்த கவலைக்குள்ளாகி கலங்கினபடியால், அவரோடு சம்பாஷிக்கவும் அவர் சொல்வதைச் சாந்தமாய்க் கேட்கவும் கூடாமற்போயிற்று.

கிறிஸ்தவர்களுக்குள் இது சாதாரணமாய் காணப்படும் குறை. சபையிலும் இன்று மார்த்தாளைப்போல் எத்தனையோ போர் இருக்கிறார்கள். மரியாளைப் போன்றவர்கள் வெகு சிலரே. நாமும் மரியாளைப்போல் இயேசுவின் பாதத்தண்டையில் உட்கார்ந்து, அவர் சொல்பதைக் கேட்டு, அவர் நமக்காகக் கவலைப்படுகிறார் என்று உணர்ந்து, நம்முடைய கவலைகளையெல்லாம் அவர் மேல்வைப்போமாக. நமது காரியங்களை எல்லாம் அவர் கரத்தில் இருக்கின்றன. சகலத்தையும் அவரே நடத்துகிறார். முதலாவது அவருடைய இராஜ்யத்தை நாம் தேடவேண்டுமென்றும், தேவ சமாதானம் உங்கள் இருதயத்தில் ஆளுகை செய்யட்டும். நடக்கிறதெல்லாம் உங்கள் நன்மைக்காக மாற்றப்படும். இவ்வுலகத்தைவிட்டு சீக்கிரத்தில் பிரிந்து, நீங்கள் வெகுவாய்க் கவலைப்படுகிற சகலத்தையும் பின்னால் எறிந்து, நீங்கள் மறுமைக்குட்படுவீர்கள். ஜெப சிந்தையுள்ளவர்களாய் இருங்கள். வீண் கவலைக்கு இடங்கொடாதேயுங்கள். மார்த்தாள் செய்த வேலையை மரியாளுடைய சிந்தையோடு செய்யுங்கள். இந்த நாளில் இரட்சகர் உங்களை இப்படிக் கண்டிக்கிறார் என்று அறிந்து, உங்கள் கவலைகளை, அவர் உங்கள் பாவங்களைப் புதைத்த இடத்தில் புதைத்துப்போடப் பார்ப்பீர்களாக.

நான் மார்த்தாளைப்போல
வீண் கவலை கொள்வனே?
ஒன்றே தேவை என்றாரே
அதனையே நாடாதிருப்பது ஏன்?

எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்

டிசம்பர் 08

“எங்கள் தேவனே உம்மை அறிந்திருக்கிறோம்” ஓசியா 8:2

தேவனை அறிந்திருப்பது மிகவும் நல்லது. அவர் நமக்குப் போதிப்பதினால், நாம் அவரை அறிந்துகொள்ளுகிறோம். இயேசுவே நாம் அறிந்துகொண்டால்தான் நாம் தேவனை அறிந்து கொள்ள முடியும். ஏனெனில், அவர்தான் பிதாவை நமக்கு வெளிப்படுத்தினார். வேத வசனம் அவரை வெளிப்படுத்துகிறவிதமாய், இயேசுவை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன. அவ்வண்ணமாக அவரை அப்படியே அறிந்துகொள்வோமானால். அந்த அறிவு நமக்கு மகிழ்ச்சியையும் ஞானத்தையும் தரும். நமக்கு அமைதியும் கிடைக்கும், அப்பொழுதுதான் அவருடைய இரக்கம், உருக்கம், தயவு, வல்லமை, அன்பு, நட்பு, உபகாரச் சிந்தை ஆகியவையும் வசனத்தின்மேல் நமக்கு நம்பிக்கையும் கிடைக்கும்.

இவ்வாறு அவர்மேல் நாம் நம்பிக்கை கொண்டால் அவருடைய தன்மைகளை நேசிப்போம். அவருடைய மக்களோடு ஐக்கியம் கொள்வோம். ஜெபிப்போம், வேத வசனத்தின்படி நடப்போம். தொடர்ந்து அவற்றைத் தியானிப்போம். அவரின் சித்தத்தில் பிரியப்படுவோம். நித்திய ஜீவனைப் பெறுவோம். இயேசு சொன்னார், ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். நாம் தேவனை அறிந்துகொள்ள வேண்டுமானால், அவருடைய வசனத்தை அறிய வேண்டும். அவருடைய செயல்களைக் கவனிக்க வேண்டும். அவருடைய பணிகளைச் செய்ய வேண்டும். அவருடைய தூய ஆவியானவரால் நடத்தப்பட வேண்டும். இன்றிரவு நாம் தேவனிடத்தில், தேவனே நான் உம்மை அறிந்து இருக்கிறேன். உம்மிடம் மிகவும் அன்பு செலுத்துவேன் என்று சொல்லக்கூடுமா?

தேவாவியே வாருமே
உம் வார்த்தை தெளிவாக்குமே
தேவனே அறியக் காட்டிடும்
கர்த்தாவே, உம்மைக் காட்டிடும்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

யூலை 30

“பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” 1.சாமு.15:22

சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும் என்று நம்பி, தேவனை நேசிக்கிற நேசத்தால் உந்தப்பட்டு வேதப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதே தேவனுக்குப் பிரியம். கீழ்ப்படிகிறதுதான் பலியைப் பார்க்கிலும் உத்தமம். கீழ்ப்படியும்போது நமக்கு நியாயமாய் தோன்றுகிறதை தள்ளி, மனட்சாட்சியின்படி தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அதற்கு இணங்கி முழுமனதோடு அந்த அதிகாரத்திற்கு கீழ் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் உயர்ந்தது. இப்படி கீழ்ப்படியும்போது அவர் ஞானமும், தயவும் உள்ளவர் என்று அறிக்கையிட்டு அவருடைய சித்தத்திற்குச் சந்தோஷமாய் இணங்குகிறோம்.

இப்படி நாம் கீழ்ப்படிவது தேவனுக்குப்பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாம் தேவ வசனத்துக்கு ஒத்து, உத்தமமாயும், தாழ்மையாயும் எப்போதும் மாறாமலும் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் செலுத்தும் எந்தக் காணிக்கையிலும் நாம் சிக்கக்கூடிய எந்த வருத்தத்திலும் அது அதிக நலமாய் இருக்கும். பிதாவைப்போல நாம் இயேசுவை நேசித்தாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கீழ்படிய வேண்டும். அவர் அருளிய வாக்குத்தத்தங்களை நம்புகிறதோடு அவர் அதிகாரத்தையும் மதிக்க வேண்டும். பிதாவின் நேசத்தை ருசிக்கிற பிள்ளைகளைப்போல் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்குச் செய்யும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் அவரோடு ஐக்கியப்படுகிறோம் என்பதற்கு நற்பலனாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரம ஞானம் தந்தும்மை
பிரியப்படுத்தச் செய்திடும்
விருப்பத்தோடு செய்கையும்
என்னில் உண்டாக பண்ணிடும்.

பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்

யூலை 31

“பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” யோவான் 15:21

இயேசு நேசிக்கிற சகலரையும் தேவன் நேசிக்கிறார். அவர்கள் யார்? அவருடைய வசனத்தைப் பிடித்து, அவர் புண்ணியத்தின்மேல் சார்ந்து, அவருடைய நாமத்தை நம்பி, அவரின் நியமங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு அவரே தங்கள் ஆத்துமாவுக்கு அருமையானவர் என்று காண்பிப்பவர்கள். இப்படிப் பட்டவர்களையே பிதாவானவர் நேசிக்கிறார். இந்த அன்பில் இவர்களைப்பற்றி தேவன் கொண்டிருக்கும் அளவற்ற எண்ணமும், பிரியமும், அதிகம் அடங்கியிருக்கிறது. இவர்களைச் சிநேகித்து நன்மை செய்யவும், அவர்களை ஆசீர்வதிக்கவும், அவர் எவ்வளவோ மனதுள்ளவராயிருக்கிறார். தேவன் இப்படி நோக்கங்கொண்டு சிநேகித்து குமாரன் முடித்த மகிமையான கிரியையில் இதை நிறைவேற்றினார்.

அவர் அன்பு நித்தியமானது. மாறாதது. சுயாதீனமுள்ளது. அதற்கு சாட்சியே அவர் செய்த உடன்படிக்கை. தமது குமாரனைத் தந்த ஈவு, ஆவியானவரைக் கொடுப்பேன் என்ற வாக்குத்தத்தம், ஆவிக்குரிய நன்மையான வேதவசனம், மகிமையின் நாம் ஜெபிக்கும்போது இதை மறக்காது நம்புவோமா. அவர் சித்தம்படி செய்யவும், சகிக்கவும் மனதாயிருப்போமா, கர்த்தர் சிநேகிக்கிற சகலத்தையும் நாடி, பாவிகள்மேல் மனதுருகி, அவர்களோடும், அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோமாக. தேவனை தேடுகிற ஒவ்வொருவரையும் பார்த்து அவர் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லி உற்சாகப்படுத்துவோமாக. தேவன் நம்மை நேசிக்கிறபடியால் சபையில் விருத்தியையும் ஐக்கியத்தையும் பரம சித்தத்தையும் நாடித் தேடுவோமாக.

நாம் கெட்டுப்போய் இருக்கையில்
சுதனைக் தந்தவர் பிதா
ஆவியும் அவர் ஈந்ததால்
அவரை என்றும் போற்றுவோம்.

எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்

யூலை 26

“எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்.” 1தெச 5:16

ஒவ்வொரு தேவபிள்ளையும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு, பாக்கியவான் என்று சொல்லப்படுகிறான். அவன் எப்போதும் பாக்கியவானாய் இருக்க வேண்டியவன். எப்போதும் சந்தோஷமாய் இருங்கள் என்று வசனம் சொல்லுகிறது. சந்தோஷம் ஆவியின் கனிகளில் ஒன்று. இது விசுவாசத்தின் பலனாய் நம்பிக்கையோடு சேர்க்கிறது. ஆகவே நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள். இது தைரியம் உள்ள, சேனைத் தலைவன் அடையும் வெற்றியில் போர் சேவகன் அடையும் சந்தோஷம். கப்பலில் பிரயாணம்பண்ணும் ஒருவன், புத்திசாலியும், அனுபவசாலியுமான கப்பலோட்டியைக் குறித்து அடையும் சந்தோஷம். மன்னிப்பைப் பெற்று தேவகிபையை அடைந்தவனுடைய சந்தோஷம். அன்பும், பட்சமுள்ள தகப்பனைப்பற்றி வீடு திரும்பிய குமாரன் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷம் சொல்ல முடியாது. மகிமை நிறைந்தது. இது எப்பொழுதும் பரிசுத்தமான சந்தோஷம்.

இந்த சந்தோஷம் பாவம் செய்தால் சேதமடைந்து குறைந்துபோம். தேவ பிள்ளையே, உன் தேவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படு என்கிறார். பழங்கால தேவபக்தர்கள் துன்பத்திலும் சந்தோஷப்பட்டார்கள். தேவனுடைய பரிசுத்த வசனமும், அருடைய கிருபை நிறைந்த உடன்படிக்கையும், இயேசுவில் இருக்கும் பரிபூரணமும், தேவனுடைய மகிமையான தன்மைகளும் இந்தச் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம். இது நம்முடைய அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் குறித்து நாம் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷத்தை அடிக்கடி கெடுத்துக்கொள்ளாமல் நாம் பத்திரப்படுத்த வேண்டும். நம்மைச் சேதப்படுத்தி தேவனை வருத்தப்படுத்துகிற நம்முடைய அவிசுவாசம், பாவம், கிறிஸ்துவைப் பற்றின எண்ணம், தகாத சிந்தை, உலகத் தொல்லைகள், தப்பான நடத்தை, தன்னயம் இவைகள் யாவும் நமது நித்தியமான சந்தோஷத்தைக் கெடுத்துப்போடுகின்றன. தேவ பிள்ளையே, நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும்.

கர்த்தரில் என்றும் மகிழ்ந்திரு
அவர் உன் பரம நேசர்
அவர் மகிமை அளிப்பார்
பரம ராஜ்யமும் தருவார்.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்

அக்டோபர் 01

“இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப் பண்ணினார்” ரோமர் 5:11

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகச் சிலுவையில் சகல பாடுகளையும் சகித்து, நமக்கு நீதியுண்டாகப் பாவமன்னிப்பையும், நித்திய பாக்கியத்தையும் சம்பாதித்தார். அவர் பலியானது நம்முடைய பாவங்களுக்காகவும், சர்வ லோகத்தின் பாவத்திற்காகவுமே. அவர் செய்த அனைத்தும் நற்செய்தியாகச் சுவிசேஷங்களில் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. விசுவாசத்தினால் நாம் அதை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்பதினால் சமாதானம் பெறுகிறோம். மனுக்குலத்திற்குத் தேவையானதை எல்லாம் அவர் கல்வாரியில் செய்து முடித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத எவரும் வாழ்வில் சமாதானம் அடைய முடியாது.

ஒவ்வொரு நாளும் இந்த ஒப்புரவாக்குதலில் நம்பிக்கை வைக்காமலிருந்தால் நம்மால் அவரோடு மகிழ்ச்சியாக நடக்க முடியாது. முன்னே நாம் அதைப் பெறாமலும், நம்பாமலும் இருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் கல்வாரி இரத்தத்தினால் அதைப் பெற்று இருக்கிறோம். முன்னே நாம் அதன் தன்மையையும், அருமையையும் அறியாமலிருந்தோம். இப்பொழுது அவர் அவற்றை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இரக்கமே நமக்குத் தைரியம் கொடுக்கிறது. இயேசுவின் மரணம் நமக்கு வாழ்வு. நமது சமாதானம் அவரே. அவருடைய நீதியின் மேலும், மகத்துவத்தின் மேலும் நாம் நமது கண்களை வைத்துக்கொண்டேயிருக்கவேண்டும். இதை மறந்தால் நாம் சாத்தானால் அடிமைகளாக்கப்படுவோம். நமது குற்றங்கள் நம்மைக் கலங்கடிக்கும் போதும், பயம் நம்மை ஆள்கொள்ளும்போதும், நாம் அவருடைய கல்வாரிப் பலியை விசுவாசித்தால், பற்றிப்பிடித்தால், நாம் தைரியசாலிகளாகவும், நீதிமான்களாகவும் பாக்கியமுள்ள தேவ மைந்தர்களாகவும் இருப்போம்.

இயேசுவே, உம் பிராயச்சித்தம்
எவருக்கும் அருமையானதே
சிலுவையையே நித்தம் யாம்
கண்டு பற்றிக் கொள்வோம்.

My Favorites

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்

யூலை 08 "அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்." மீகா 7:19 ஏதோ ஓரு துக்கமான காரியம் நடந்துவிட்டதாக இந்த வசனம் சொல்கிறது. கர்த்தர் தமது ஜனங்களைவிட்டு தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார். கர்த்தர் கோபங்கொண்டார். ஆனால் நம்மைப்புறக்கணிக்கவில்லை. அப்படி...
Exit mobile version