நவம்பர்

முகப்பு தினதியானம் நவம்பர்

அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்

நவம்பர் 11

“அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்” மல். 3:3

புடமிடப்படும் வெள்ளி தேவனுடைய மக்களே. அவர்களுக்கு வரும் துன்பங்கள்தான் புடமிடுதல். வெள்ளியை சுத்தமாக்க வேண்டுமென்பதே அவருடைய நோக்கம். அதனால், அவர்களை அவர் புடமிடுகிறார். தமது நோக்கம் நிறைவேறும்வரை சுத்தம்பண்ணுகிறார். சுத்தமாக்குகிற வேலையைத் தாமே செய்கிறார். துன்பத்தை அதிகமாக்கி தம் பணியைக் கவனமாகச் செய்கிறார். நோக்கம் நிறைவேறப் பொறுமையோடு காத்திருக்கிறார். அவருடைய விருப்பம் வீணாகாது. ஒரு சோதனையால் அவருடைய நோக்கம் நிறைவேறாவிடில் வேறு சோதனைகளைத் தருவார். தமது நோக்கம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் துன்பங்கள் ஏன் தொடர்ந்து வருகின்றன என்று கேட்கலாம். அதற்குப் பதில் இதுதான் உங்களிலுள்ள களிம்பு இன்னும் நீங்கவில்லை. நேரிடும் பெரும் துன்பங்களனைத்தும், பெரிய இரக்கங்களே. நீ பிற்காலத்தில் ஒளியிலுள்ள பரிசுத்தவான்களைப்போல் அனுபவிக்கும் சுதந்தரத்திற்கு உன்னை ஆயத்தமாக்கும் கருவிகள்தான் அவை. உங்கள் துன்ப நேரங்களில் நீங்கள் கைவிடப்பட்டவர்களென்று நினைக்க வேண்டாம். உன்னைத் தூய்மையாக்கும் வேலையைக் கர்த்தர்தாமே உடனிருந்து செய்கிறார். உங்கள் பெருமை, கோபம், தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமை ஆகிய களிப்புகள் உங்களிலிருந்து நீங்க வேண்டும். நீக்கியவுடன் துன்பங்கள் முடிந்துபோகும். ஒருமுறை அவர் அனுமதியார். போதுமான நேரத்திற்கு மேலாக ஒருகணம்கூட நீங்கள் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். இவ்வாறுதான் அவர் உங்களை மகிமைப்படுத்துகிறார். அன்பனே, உன்னைப் புடமிடுகிறவர் உன் கர்த்தர். தம் வேலை முடியும்வரை உன்னுடன் அவர் இருக்கிறார். உனக்கு ஒரு தீங்கும் வராது.

பொன்போல் ஜோதி வீசுமட்டும்
என்னோடிரும் புடமிடுகையில்
சோதனை முடிந்த பின்னர் உம்
முகம் என்னில் காண்பீரே.

தேவன் என்னென்ன செய்தார்

நவம்பர் 05

“தேவன் என்னென்ன செய்தார்” எண். 23:23

தேவன் தமது ஜனத்தைப் பாவத்தினின்றும், அறிவீனத்தினின்றும் விடுவித்து, அவர்களுக்கு அதிகமான நன்மைகளைக் கொடுக்கிறதினால் புறவினத்தாரும் அதைப் பார்த்து பொறாதை கொள்ளலாயினர். தம்முடைய சபையைத் தேவன் தமது குமாரனின் பாடுகள் மரணத்தால் மீட்டுக்கொண்டார். அவருடைய சபையைச் சேர்ந்த அவருடைய அவயவங்களை உயிர்ப்பித்து குணமாக்கி தூய்மைப்படுத்துகிறார். அவர்களைப் பூமியின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூட்டி சேர்க்கிறார். அவர்களின் குறைகளைச் சந்தித்துப் பராமரித்து பாதுகாத்து தமது வல்லமையால் அவர்களுடைய விசுவாசத்தின்மூலம் இரட்சிப்பைத் தந்து காக்கிறார்.

தமது ஆத்துமாவைப் பிசாசின் பிடியிலிருந்து விடுவித்து தமது குமாரனுடைய வீட்டிலேகொண்டு போய்ச் சேர்க்கிறார். அவரின் இரத்தத்தினால் நம்முடைய பாவங்களை மன்னித்து, அவரின் கிருபையினால் நீதிமான்களாக்குகிறார். நமது இருதயத்தில் விசுவாசத்தை ஏற்படுத்திக் கிருபையினால் மேலான நன்மைகளைக் கொடுத்து, பரிசுத்த ஆவியால் நம்மை நிரப்புகிறார். நமக்காக சத்துருக்களை வென்று நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை நீக்குகிறார்.

தேவன் எவ்வளவு பெரிய காரியங்களை நமக்குச் செய்திருக்கிறார்? அற்புதமானவைகளை நடப்பித்திருக்கிறார். யாருக்காக இவைகளைச் செய்தார்? பாவிகளான நமக்காகத்தான். ஏன்? தமது நாம மகிமைக்காகவே.

பிரியமானவர்களே, தேவன் இம்மட்டும் செய்த காரியங்கள், வரும் நாள்களுக்கு நம்மைத் தைரியப்படுத்த வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் இன்னும் நிறைவேறும். தாம் சொன்னபடியெல்லாம் செய்தார்.

தேவன் இம்மட்டும் செய்தது
இனி செய்வதற்கும் ஆதாரம்
விசுவாசக் குறைவின்றியே நாம்
அவரில் தைரியமாயிருப்போம்.

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து

நவம்பர் 26

அதில் வண்டல்களின்மேல் அசையாமல் இருந்து” எரேமி. 48:11

தன் சுய ஞானத்தில் பெருமை கொண்டு, தன் பெலனே போதுமான பெலன் என்று எண்ணுகிறவன் அடையும் பலன் இந்த அழிவே. அமைதியும், ஆறுதலும் தனக்கிருந்தபடியால், அவன் மகிழ்ந்து போவான். நமக்குக் கஷ்டங்கள் வராவிடில் நமது வாழ்க்கையும் இப்படிதான் இருக்கும். நமது இரட்சகராகிய தேவனை நாம் மறந்து நமது பாதுகாப்பான கன்மலையை அற்பமாக எண்ணுவோம். தேவனை மறந்து விடுவோம். நம்மைப்பற்றியே பெருமையாக எண்ணிக்கொண்டிருப்போம். சோம்பேறிகளாகி விடுவோம். நமது ஜெபங்கள் உயிரற்றுப்போம். பரம காரியங்களில் நாம் சலிப்படைந்து விடுவோம். ஆண்டவருக்கடுத்தவைகளை அசட்டை செய்வோம். அவரோடு நமக்கிருந்த ஐக்கியம் துண்டிக்கப்படுகிறது. ஆவிக்குரிய காரியங்களைப்பற்றிய உரையாடல்கள் இல்லை. நாம் உயிரற்றுப்போகிறோம். நாம் உத்தம கிறிஸ்தவர்களானால், இந்நிலையை நாம் அடையும்பொழுது துன்பங்கள் வரும் என்று எதிர்பார்ப்போம்.

துன்பங்கள் நமக்கு எவ்விதத்திலும் வரும். கழுகு தன் கூட்டைக் கலைப்பதுபோல நாமும் துன்பங்களால் கலங்கடிக்கப்படுவோம். கண்ணீரோடும் ஜெபத்தோடும் நாம் அவரண்டை வரும்வரை ஒரு சோதனைக்குப்பின் மற்றொன்று, ஒரு துக்கத்தையடுத்துப் பிறிதொன்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். ஆண்டவரைப் பின்பற்றாத மோவாப் வண்டல்களின்மேல் அசையாமல் தங்கியிருக்கலாம். ஆனால், தேவ மக்களாகிய இஸ்ரவேலர் அவ்வாறிருக்கலாகாது. இத்தகைய நிலையை நாம் அடையாதபடி எச்சரிக்கையாயிருப்போம். கவனமாக கர்த்தருக்கென்று உழைத்து, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும் காலம் இது. உறங்காமல் ஆண்டவருக்காக உழைத்திடுவோம்.

பாவத்தால் சோர்வடையாமல்
பாவியின் நேசா, எனைக் காரும்,
காலமும் கர்த்தருக்காயுழைத்து,
காலமும் வாழும் பேறடைவோம்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

நீர் உண்மையாய் நடப்பித்தீர்

நவம்பர் 03

“நீர் உண்மையாய் நடப்பித்தீர்” நெகே. 9:33

தேவன் எதையும் உண்மையாகவே நடப்பிப்பார் என்பது யாருமே ஒப்புக்கொள்ளுவதுதான். ஆனால் துன்ப நேரத்தில் இது உண்மை என்று உணர்ந்து அதை நம்பி நடப்பது நம்மால் முடியாமற் போகிறது. கர்த்தர் தாம் ஏற்படுத்திய முறைபடியே என்றுமே செயல்படுவார். அவருடைய உண்மையும் ஒழுங்கும் அவருடைய ஞானத்திலிருந்தும், அன்பிலிருந்தும் பிறக்கின்றன. அவர் தாம் செய்யப்போகிறதெல்லாவற்றையும் ஏற்கெனவே தீர்மானித்துள்ளார். தமது தீர்மானங்கள் யாவும் நல்லவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

நாம் பணப்பிரியம், தற்பிரியர், திருப்தியற்றவர்கள், ஏழைகள். நாம் தேவனுடைய செயல்களை மனதிருப்தியுடன் ஏற்றுக்கொள்வதில்லை. காரணமின்றி எல்லாக் காரியங்களிலும் முறுமுறுக்கிறோம். நாம் தேவனைப் புரிந்துக்கொள்வதில்லை.

ஆனாலும், சிலவேளைகளில் நமக்கு வரும் இழப்புகள், துன்பங்கள், சோதனைகள் கண்ணீர்போன்று துயர நேரங்களில்தான் தேவரீர் எல்லாவற்றையும் உண்மையாய் நடப்பிக்கிறீர் என்று அறிக்கையிடுகிறோம். எகிப்தில் யாக்கோபு, யோசேப்பை அணைத்துக்கொண்டபோது இவ்வாறு உணர்ந்தான். யோபு இரட்டத்தனை ஆசீர்வாதங்களைப் பெற்றதுபோதுதான் இதை உணர்ந்தான்.

தானியேல் சிங்கங்களிடமிருந்து மீட்கப்பட்டபோது விசுவாசித்ததினால் இதை உணர்ந்தான். சோதனைக்குள் நாம் இருக்கும்போது இவ்வாறு நாமும் அறிக்கை செய்வது மிகவும் அவசியம். ஆண்டவர் நம்மை சோதிக்கும்போது நீர் உண்மையாய் நடப்பித்தீர் என்று உணர்ந்து சொல்வோமாக. இத்தகைய விசுவாசம் நமக்குள் வளர வேண்டும்.

கர்த்தர் செய்வதெல்லாம் நலமே
முடிவை நாமறியோம் அவர் அறிவார்
அவர் செய்வதெல்லாம் நமக்கு
முடிவில் பாக்கியமாகவே நிகழும்.

நீ மரணபரியந்தம் உண்மையாயிரு

நவம்பர் 06

“நீ மரணபரியந்தம் உண்மையாயிரு” வெளி 2:10

தேவன் தமது ஜனத்திற்கு அதிகம் நல்லவர். தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுபவர். தமது மக்களின் வேண்டுதல்கள் வீணென்று ஒருபோதும் நினைப்பதேயில்லை. தமது மக்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களைத் தூண்டுகிறார். இந்த வசனம் எபேசு சபையிலுள்ளவர்களுக்குள் கூறப்பட்டது. அவர்கள் வசனத்தைப் பிரசங்கிப்பதிலும், ஆத்துமாக்களுக்காக விழித்திருப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும், பரிசுத்தத்தையும் சமாதானத்தையும் விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும்.

சபையின் போதகர்கள் சபையில் எப்போதும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். விசுவாசிகள் சத்தியத்தைப் பிடித்துக்கொண்டு அதன்படி நடந்து எப்போதும் அதையே பிரசங்கிக்க வேண்டும். தங்களது மனசாட்சிக்கு உண்மையாயிருந்து அதற்குக் கீழ்ப்படிந்து, நீதியாய் உத்தமமாய் நடக்க வேண்டும்.

தன்னுடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தையை நம்பி, தேவ சித்தத்தின்படி நடந்து, தேவனுக்கா துன்பத்தையும் சகிக்க வேண்டும். உலகத்தாரிடத்தில் உண்மையாக வாழ்ந்து, பாவத்தைக் குறித்து, அவர்களை எச்சரித்து, கிருபையால் கிடைத்த நற்செய்தியைக் கூறி அவர்களை இயேசுவண்டை வழி நடத்தவேண்டும். பரிசுத்தவான்களிடத்திலும் உண்மையைக் காட்டி, அவர்களை நேசித்து, துன்பத்தில் அவர்களைத் தேற்றி அவர்களின் கஷ்டத்தில் அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். நீ மரணபரியந்தம் உண்மையாயிரு என்றால், மரணம் வந்தாலும் உண்மையாயிருப்பதைத் தவறவிடாதே என்று பொருள். அப்படி நீ இருந்தால் ஜீவ கிரீடத்தைப் பெறுவாய்.

உண்மையாயிருக்க உதவி செய்யும்
விசுவாசத்தால் எமது இடைகட்டும்
உயிர் மெய்யிலென்றும் நிலைத்து
உயிர் மகுடம் பெற்றிடச் செய்யும்.

தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்

நவம்பர் 10

“தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கும்” ஓசியா 14:2

தேவனுடைய பிள்ளைக்குப் பாவத்தைப்போல் துன்பம் தரக்தக்கது வேறு ஒன்றுமில்லை. பாவத்திலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றுதான் அவன் விரும்புகிறான். அதற்காகவும் ஜெபிக்கிறான். அவன் எல்லாவற்றிலும் நீதிமானாக்கப்படும்பொழுது தனது குற்றங்களிலிருந்து விடுதலை பெறுகிறான். இதுமட்டுமல்ல, அவன் செய்யும் எல்லா செயல்களையும் பாவ விடுதலையோடு செய்ய விரும்புகிறான். பாவம்தான் ஒருவனை அலைக்கழித்து வருத்தப்படுத்துகிறது. கர்த்தருடைய பிள்ளை என்று சொல்லும் சாட்சியைக் கெடுத்து, அவனுடைய அமைதியைக் குலைத்து விடுகிறது. ஆகவே, அவன் ஆண்டவரிடம், தன்னிடமிருந்து எல்லாத் தீங்குகளையும் போக்கிவிட வேண்டுமென்று கெஞ்சுகிறான். ஜெபிக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைக் கர்த்தர் அவன் இருதயத்தில் உண்டாக்குகிறார். எந்தத் தேவனுடைய பிள்ளையும் முதலில் தேட வேண்டிய காரியம் இதுதான்.

ஒருவன் தன் அக்கிரமங்களினால் வீழ்ந்து இருக்கலாம். அவன் பரிசுத்தத்தின்மூலமாக மட்டுமே எழுந்திருக்கக்கூடும். தன் சொந்த புத்தியீனத்தினால் அவன் விழுந்திருக்கலாம். கர்த்தருடைய இரக்கத்தினால் அவன் எழுந்திருக்கக் கூடும். தேவன் எல்லா அக்கிரமங்களையும் நீக்கி போடுவாரா? ஆம், நீக்கிப்போடுவார். தமது பலியினால் எல்லாப் பாவங்களையும் நீக்குவார். தம்முடைய வசனத்தை நிறைவேற்றிப் பாவத்தின் வல்லமையை அகற்றுவார். மரணத்தை ஜெயிக்க பெலன் தருவார். ஆகவே, ஒவ்வொரு நாளும், கர்த்தாவே, என்னை முற்றிலும் பரிசுத்தமாக்கும். என் ஆத்துமா ஆவி, சரீரம் முழுவதையும் கிறிஸ்துவின் வருகைமட்டும் குற்றமில்லாததாகக் காப்பாற்றும். என்று ஜெபிப்பதால், நாம் மறுபடியும் பிறந்தவர்கள் என்று சாட்சியும் பெறுவோம். அந்த ஜெபத்தைக் கர்த்தர் கேட்பார். நீங்கள் முற்றும் பரிசுத்தமாவீர். அவர் உண்மையுள்ளவர். அவர் அப்படியே உங்களைப் பரிசுத்தமாக்குவார்.

நோயையும் துன்பத்தையுமல்ல
பாவத்தையே என்னிலிருந்து நீக்கும்
எவ்வாறு பெரும்பாவமாயினும்
தயவாக அதை மன்னித்தருளும்.

தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு

நவம்பர் 18

“தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு” உன். 8:5

ஒவ்வொரு விசுவாசியும் இயேசு நாதரையே நேசிக்க வேண்டும். உலகம் விசுவாசிக்கும் பாழ்நிலம். பரலோகமோ அவனுக்குத் தந்தையார் இல்லம். அவன் வாழப்போகும் வாசஸ்தலம். கிறிஸ்துவையே துணையாகப் பற்றிக் கொண்டு இந்த உலகில் அவன் பயணம் செய்கிறான். இந்த வசனம் தன் நேசர்மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் மணவாட்டியைப்போல விசுவாசியைக் குறிப்பிடுகிறது. இது மணவாட்டிக்கு இருக்கும் பலவீனத்தையும், நேசருக்கு இருக்கும் பலத்தையும், அவர் மேல் அவளுக்கு இருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. அவர் மவாட்டிக்கு துணையாகவும், பெலனாகவும் இருக்கிறார். திருச்சபை கிறிஸ்துவின் மணவாட்டி. சொரிந்து ஆறுதலளிக்கிறார். திருச்சபை தம்மேல் சார்ந்திருப்பதையே அவர் விரும்புகிறார்.

பிரியமான விசுவாசியே, உன் நேசரோடு நெருங்கியிரு. இக்கொடிய வனாந்தரமான உலகில் அவரை விட்டுப் பிரியாதே. எப்பொழுதும் அவர்மேல் சார்ந்திரு. உன் பெலவீனத்தை உணர்ந்துகொள். அவருடைய வலிமையான கரம் உனக்கு உதவ ஆயத்தமாயிருக்கிறது. உன்னைத் தூக்கி எடுத்து நடத்துவார். அவர்மேல் நீ எவ்வளவு அதிகமாக சார்ந்திருக்கிறாயோ, அவ்வளவு அதிகமாக அவர் உன்மேல் அன்பு செலுத்துகிறார். அவரை நேசிக்கும் அளவுக்கு அவருடன் ஐக்கியமாவாய். அவரே உன்னை நடத்தட்டும். அவரையே நம்பு. வல்லமையுள்ள அவரைப் பற்றிக்கொள். என்றும் அவரோடேயே நடந்து அவரையே போற்று. நீ அவரோடிருக்கும் மட்டும் எனக்குப் பமில்லை. அவருடைய சமுகத்தில் உன் இருதயம் கொழுந்து விட்டெரியும் அனுபவத்தைப் பெறுவாய். உன் நேசரை விசுவாசித்து, அவரை அறிந்து, எப்பாழுதும் அவர் பேரில் சார்ந்துகொள்.

எச்சோதனையிலும் நீ
உன் நேசர்மேல் சார்ந்திரு
அவரே உன் மீட்பர், இரட்சகர்
அவரே உன்னைக் காப்பார்.

நீதிபரன்

நவம்பர் 13

“நீதிபரன்” அப். 7:52

நமதாண்டவரின் நாமங்களில் இதுவும் ஒன்று. அவர் பரிசுத்த தன்மையுடையவர். பூரண நீதிமான். யாவருக்கும் செலுத்த வேண்டியவைகளைச் செலுத்தி முடித்தவர். தேவ குமாரனாக அவர் தமது பரம தகப்பனுக்குக் கீழ்ப்படிந்து அவரைக் கனம்பண்ணினார். பணிவுடனும் பக்தியுடனும் அவருக்குப் பணிபுரிந்தார். தமது ஜனத்திற்குப் பிணையாளியாக, அவர்கள் சகிக்க வேண்டியதைத் தாமே சகித்தார். நியாயப் பிரமாணத்தைக் கனப்படுத்தி மேன்மைப்படுத்தினார். தமது இரத்தத்தால் கழுவப்பட்டவர்களை முற்றும் பரிபூரண பரிசுத்தராக்கினார். அவர் நீதிபரர்.

தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றினார். தமது மக்கள் ஒவ்வொருவருக்கும் தக்கப்படித் தமது தன்மைகளைக் காட்டி வருகிறார். முறைப்படி தம்முடைய சத்துருக்களைத் தண்டித்துத் தம்மை நம்புகிற எல்லாரையும் இரட்சிக்கிறார். அவர் தம் வார்த்தையில் என்றும் மாறாதவர். அவருடைய நடத்தையில் யாதொரு குறையும் காணப்படவில்லை. தம்மிடம் அண்டிவரும் எப்பாவியையும் அவர் தள்ளிவிடார். தமது மந்தையில் வந்து சேருகிற ஆடுகளை அன்பாகக் கண்காணிப்பார். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் செவி கொடுப்பார். தான் னஒரு பாவியென்று அவர் பாதத்தைக் தேடுகிற எவருக்கும் அவர் இரட்சிப்பைத் தருகிறார். தமது ஊழியக்காரருக்குக் கொடுக்கும் ஒரு கலசம் தண்ணீரைக்கூட அவர் மறந்துவிடாமல், அதற்குகந்த பதிலளிப்பார். அக்கிரமக்காரரையும் அகந்தையுள்ளோரையும் அழித்து, தமது பரிசுத்தவான்களுக்கு என்றும் நித்திய பாக்கியத்தைக் கொடுத்து நீதிபரராகவே விளங்குகிறார்.

நீதிபரர், என் ஆண்டவர்
தம் நீதியால் என்னை நித்தம்
தாங்குவார், அருள்தனை அளித்து
ஆனந்தம் தருவார் பரத்தில்.

என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்

நவம்பர் 17

“என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்” யோபு 29:18

யோபு தனக்கிருந்த கூடாகிய வீட்டை சௌகரியமுள்ளதாகவும் ஆறுதல் தருவதாகவும் நினைத்திருந்தான். அது நிரந்தரமானது என்றும் எண்ணினான். ஆனால் இம்மண்ணுலகில் எங்கு நம் வீட்டை நாம் அமைத்தாலும் அது இயற்கையின் உபாதைகளான புயல், வெள்ளம், நெருப்பு, பூகம்பம் இவற்றிற்குத் தப்பாது. நிலையான நரகம் நமக்கு இங்கு இல்லை. நாம் இங்கு நிரந்தரமாக வாழ முடியாது. யோபு வாழ்வில் பழுதில்லாதவன். நேமையான, தூய வாழ்க்கையுடையவன். அவனும் இவ்வாழ்க்கையை வெறுத்து மேலான தேவனுடைய இடத்தையே நாடினான். இப்பூமியில், அந்தப் பரம வீட்டிற்கு இணையானது எதுவும் கிடையாது. இம்மைக்குரிய நன்மைகள் நமக்குத் தற்காலிகமாகத் தரப்பட்டவைதான்.

இவ்வுலகில் எங்கு நமது கூட்டை ஏற்படுத்தினாலும் அது அழிந்துபோகும். நமக்கு நிரந்தரமான வீடு பரலோகம். எனவே நம்முடைய வாழ்வை நிர்ணயிக்கும் தேவனுடைய கரத்தில் நாம் ஒப்புக்கொடுப்போம் என்று இருந்தாலும், ஒரு நாள் நாம் இவ்வுலகை விட்டுப்போ வேண்டியவர்களே. மரணத்தை நாம் சந்தித்தே ஆக வேண்டும். படுக்கையில் மரிப்போமா. விபத்தில் மாள்வோமா. ஏழையாக மரிப்போமா. ஐசுவரியவனாக மரிப்போமா என்பது முக்கியமல்ல. நாம் கிறிஸ்துவின் மகனாக, மகளாக மரிக்கிறோமா என்பதே முக்கியம். அவ்வாறு நாம் மரித்தோமானால், நமக்கு நித்திய வாழ்வு கிடைக்கும். அங்கு மரணம் இல்லை. அவ்விடம் ஒன்ற நமக்கு நிரந்தரமாக வீடு. அதையே நாடித் தேடி, அதைப் பெற உழைப்போம். வாழ்வோம்.

இவ்வுலகம் சதமல்ல
என் வீடு பரத்திலேயேதான்
என் மீட்பர் இருக்குமிடமே
என் வீடாக என்றுமிருந்திடும்.

My Favorites

விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்

அக்டோபர் 03 "விசுவாசத்தில் பலவீனமுள்ளவன்" ரோமர் 14:1 இந்த வார்த்தைகள் சில நேரங்களில் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. தேவனுடைய ஜனங்கள் அவருடைய வார்த்தையைப் பற்றி அறிய வேண்டிய முறைப்படி சரியாக, ஆழமாக அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதனால்,...
Exit mobile version