தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 34

அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்

செப்டம்பர் 17

“அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர்” எரேமி. 50:34

நமது மீட்பர் நமக்கு மிகவும் நெருக்கமான உறவினர். கர்த்தராகிய இயேசுவைப்போல நமக்கு மிகவும் நெருக்கமானவர். வேறு யாரும் கிடையாது. பலவிதமான சூழ்நிலைகளிலும் நம்மோடு ஐக்கியப்படுபவர். இவரைப்போல் வேறு யாரும் இல்லை. இவர், தம்முடைய உயிரையே, நம்மை மீட்கும் பொருளாகத் தந்த நமது மீட்பர். நாம் சாத்தானுடைய வலையில் மீண்டும் விழுந்து விடாதபடி நம்மைக் காக்கத் தம்முடைய தூய ஆவியானவரையே நமக்குத் தாராளமாகத் தந்துள்ளார். மரித்தபின் நம்மை உயிரோடு எழும்பத் தம்முடைய மீட்பின் வல்லமையை முழுமையாகப் பயன்படுத்துகிறார். தாம் உலகிற்கு எதற்காக வந்தாரோ அதைப் பரிபூரணமாக நிறைவேற்றியுள்ளார். ஏனெனில், அவர் வல்லமையுள்ளவர். நீதிமான். வாக்கு மாறாதவர். சொன்னதைச் செய்வார்.

அவர், நம்மைச் சிறைபிடித்த சாத்தானிடமிருந்தும், நம்மை ஒடுக்கி ஆண்ட பாவத்தினின்றும் நமது சத்துருவாகிய மரணத்தினின்றும் மீட்ட கர்த்தர். இது மெய்யானது. ஆதலால், நாம் நமது பெலவீனங்களையும், குறைவுகளையும் அவரிடத்தில் அறிக்கை செய்வோமாக. அவர் ஒருக்காலும் நம்மீது சத்துரு ஆளுகை செய்யவிடமாட்டார். அவன் ஒருக்காலும் வெற்றி பெறவிடார். அவருடைய நோக்கமும், விருப்பம் நம்மை உயர்த்துவதே. நம்மோடு மகிழ்ந்திருப்பதே அவருடைய பேரவா. அக்கிரமங்களிலும், பாவங்களிலும் உழன்று கிடந்த நம்மை மீட்டு கிருபையாக நம்மை உயிர்ப்பிப்பதே. நம்முடைய எதிர் காலத்தை அவர் வளமுள்ளதாக்குவார். நமது கரத்தின் கிரியைகளை ஆசீர்வதிப்பார். நம்முடைய காரியங்களை எவ்வகையிலும் செய்து முடிப்பார்.

வல்ல மீட்பர் இயேசுவே
என்னைத் தயவாய் மீட்டீரே
சாத்தானின் கரத்திலிருந்தென்னைத்
தயவாய் மீட்டுக் கொண்டீரே.

தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்

ஓகஸ்ட் 27

“தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்”. நீதி. 2:8

விசுவாசி நடக்க வேண்டிய பாதை சத்துருக்களின் தேசத்திலும் இருக்கிறது. இது மிக துன்பம் நிறைந்தது. இது மிகவும் களைத்துப் போகக்கூடிய பிரயாணம். வருத்தம் நிறைந்தது. விசுவாசியின் பெலவீனம் அதிக வருத்தத்தைக் கூட்டுகிறது. உள்ளான போராட்டமும் அவன் வழியைக் கடினப்படுத்துகிறது. ஆகிலும் நாம் சேர வேண்டிய நகரத்திற்கு அந்த ஒரு பாதைதான் உண்டு. இந்தப் பாதை இளைப்பாறுதலுக்கும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட சுதந்திரத்திற்கும் நடத்துகிறது. இந்தப் பாதையில் கர்த்தரும் தம்முடைய பரிசுத்தவான்களுடன்கூட நடக்கிறார். அவர்களின் குறைவுகளைப் போக்கி அவர்களுடைய நிலைமைக்குத்தக்கதாக இரக்கம் பாராட்டுகிறார்.

சத்துருக்கள் இவர்களை மேற்கொள்ள முடியாமல் தற்காக்கிறார். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை அவர்களுக்கு நேரிடுவதில்லை. தேவன் உண்மையுள்ளவராய் இருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடுகூட அதற்கு தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார் என்று எக்கொடிய சோதனையைப்பற்றியும் சொல்லலாம். சாத்தான் உங்களைக் குற்றப்படுத்தும்போது பின்வாங்கிப் போகாமலும், பாதுகாக்கிறார். அவர்களுடைய பெலவீனத்தில் தம்முடைய பெலனைப் பூரணப்படுத்தி தம்முடைய கிருபை அவர்களுக்குப் போதும் என்று ரூபிக்கிறார். விழிப்பாய் அவர்களைக் கவனித்து பலத்த கையால் தாங்கி, அன்பான மனதால் அவர்களைத் தாங்குகிறார். அன்பரே, இன்றுவரை அவர் உங்களைப் பாதுகாத்து வந்ததை கவனித்துப் பாருங்கள். இனிமேலும் அவர் உங்களைப் பாதுகாப்பார் என்று நம்புங்கள். பரிசுத்தவான்களைப் பராமரிப்பதும் அவர்களின் பாதைகளைப் பாதுகாப்பதுமே அவருடைய வேலை.

இயேசுவின் கரத்தில் பக்தர்
என்றும் சுகமாய் இருப்பர்
அவரால் துன்பங்களைக்
கடந்து என்றும் சுகித்திருப்பர்.

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்

ஏப்ரல் 30

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”  மத். 5:5

சாந்தகுணம் மனப்பெலவீனமல்ல. பல சமயம் நாம் தவறாய் இரண்டையும் ஒன்றாக்கி விடுகிறோம். கல்மனமுள்ளவர்களிடமும் சாந்த குணம் இருக்கிறது. சாந்த குணம் உள்ளவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை மதித்து நடுங்குகிறார்கள். இவர்கள் தேவன் சொல்லும் எல்லாவற்றையும் முறுமுறுக்காமல் காற்றுக்குச் செடி வளைகிறதுப்போல வணங்கி கர்த்தரின் சித்தம் ஆகக்கடவது என்பார்கள்.

சாந்த குணமுள்ளவர்கள் மௌனமாய்த் தேவ கட்டளைகளுக்கு அர்ப்பணித்து இயேசுவைப்போல் பொறுமையாய் நடந்து, பரிசுத்தாவியின் நடத்துதல்படி நடப்பார்கள். அவர்கள் தேவனிடம் தாழ்மையோடும், பிறரிடம் விவேகத்தோடு நடந்து தங்களுக்குப் புகழைத் தேடாமல் கர்த்தருக்கு மகிமையைத் தேடுவார்கள். இவர்கள் சாந்த குணமுள்ள ஆட்டுக்குட்டிகள். கெர்ச்சிக்கிற சிங்கங்கள் அல்ல. சாதுவான புறாக்கள். கொல்லுகிற கழுதுகளல்ல. ஆட்டைப்போல உபகாரிகள். ஓநாய்போல கொலையாளிகளல்ல. இவர்கள் கிறிஸ்துவைப்போல் நடந்து அவரைப்போல் பாக்கியராயிருப்பார்கள். இப்போது அவர்களுக்கு இருப்பது எல்லாம் கொஞ்சந்தான். ஆனால் பூமியைச் சீக்கிரத்தில் சுத்திகரித்துக் கொள்வார்கள். அவர்களுடைய மனநிலையே பெரிய பாக்கியம். ஒன்றுமற்றவர்களைக் கலங்கடிக்கும் பூசலுக்கு விலகி இருக்கிறார்கள். மற்றவர்கள் சேதப்படும்போது இவர்கள் தப்பி சுகமாய் காக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் சாந்தமாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமாய் இருக்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். மற்றவர்கள் எதிர்த்து நிற்கும்போது இவர்கள் பொறுமையாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் கலங்கி இருக்கும்போது இவர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் சாபமாகும்போது இவர்கள் ஆசீர்வாதமாகிறார்கள்.

ஏழைப்பாவி நான்
சாந்தம் எனக்களியும்
ஏழை பலவீனன் நான்
தாழ்மையை எனக்கருளும்.

என் கனம் எங்கே

ஏப்ரல் 18

“என் கனம் எங்கே” மல்கியா 1:6

கர்த்தர் தமது மக்கள் தம்மை மகிமைப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நாமும் இந்த முக்கியமான கடமையை மறந்திருக்கிறோம். மத்தேயுவைப்போல விசுவாசத்திலும் கிரியைகளிலும், பேதுருவைப்போல உண்மையிலும், உற்சாகத்திலும், யோவானைப்போல மிகுந்த அன்பிலும், பவுலைப்போல இரத்த சாட்சியிலும், உருக்க பாரத்திலும் அவரைக் கனப்படுத்த வேண்டும்.

அன்பர்களே, தேவனைக் கனப்படுத்துவது உங்களுக்கு பிரியமா? அப்படியானால் அவர் செயலை நம்புங்கள். அவர் எப்போதும் உங்களைப் பார்க்கிறாரென்று நினைத்து நடவுங்கள். எல்லாரையும்விட அவர் ஜனத்தை அதிகம் நேசியுங்கள். அவர் ஊழியம் சிறந்து நடக்க எது வேண்டுமானாலும் செய்து உதவுங்கள். தேவனுக்காய் காரியங்களைச் செய்யாவிட்டால் அவர் உங்களைப் பார்த்து என் கனம் எங்கேயென்று நன்றாகக் கேட்கலாம். தேவன் விரும்புகிறபடி அவரைக் கனப்படுத்த வேண்டுமானால் அவரின் தன்மைகளை அறிய வேண்டும். இயேசுவின்மூலம் நல்ல ஐக்கியத்தை வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அவர் சமுகம் முன் நிற்கிறதாக எண்ணவேண்டும். அவர் அதிகாரத்துக்குக் கீழ் அடங்க வேண்டும். அவரின் நேசத்தின் ஆழத்தை ருசித்து, அவரின் சித்தம் செய்ய வேண்டும். அவர் விரும்புகிறதைப் பார்த்து அதன் மேல் நோக்கமாயிருக்க வேண்டும். நீங்கள் அவரைக் கனப்படுத்தினால், உங்களுக்கு நல்ல சமாதானம் தந்து வேண்டிய யாவையும் கொடுத்து, எந்தத் துன்ப வேளையிலும், சகாயத்தையும் தந்து, அன்பாய் உங்களை அடிக்கடி சந்தித்து, எந்தச் சத்துருவையும் கடைசியிலே வெற்றி சிறக்க சத்துவத்தையும், கொடுத்து உங்களைக் கனப்படுத்துவார்.

தேவன் எனக்குப் பிதாவா?
நான் அவரின் பிள்ளையா?
அவரைக் கனப்படுத்தி
அவர் சித்தம் நடப்பேன்.

ஒன்று செய்கிறேன்

ஏப்ரல் 07

“ஒன்று செய்கிறேன்.” பிலி. 3:13

உலகத்தில் நாம் வைக்கப்பட்டிருக்கிற விசேஷித்த நோக்கத்தின் மேல், நமது விருப்பங்கைளயும், நினைவுகளையும், எண்ணங்களையும் வைப்பது மிகவும் முக்கியம். தாவீது கர்த்தருடைய வீட்டில் வாசம்பண்ணவேண்டுமென்கிற ஒரே ஒரு காரியத்தையே விரும்பினான். மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள். பவுல் பரம அழைப்பின் பந்தயப்பொருளின்மேல் நோக்கமுள்ளவனாயிருந்தான். கடந்து போனதை மறந்து மேலானவைகளை, இனிமையான பரம காரியங்களை, அதிக பயனுள்ளவைகளை நாடினான். கடந்து போனதும் நிகழ் காலத்திலுள்ளதும் போதுமென்று நினைக்கவில்லை. அவர் விருப்பம், விரிவானது. அவன் நம்பிக்கை மேலானது. தேவனுக்காக செய்ய வேண்டியதெல்லாம் செய்ய வேண்டும். தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிதெல்லாம் பெற்றுக் கொள்ள Nவுண்டும். கூடியமட்டும் இயேசுவைப்போல மாறவேண்டும். இதுவே அவனுடைய பெரிய விருப்பமாய் இருந்தது.

அன்பானவர்களே, இது எவ்வளவாய் நம்மைக் கடிந்துக்கொள்ள வேண்டும்? தீர்மானித்தவைகளினின்று நமது மனம் எத்தனை முறை பின்வாங்கி போயிருக்கிறது? நமது இருதயம் முன்னானவைகளை மறந்துவிட்டிருக்கிறது? இயேசுவானவர் தமக்கு முன்வைக்கப்பட்ட சந்தோஷத்தின் மேலேயே நோக்கமாயிருந்தார். மோசே இனிவரும் பலனின்மேல் நோக்கமாயிருந்தான். பவுல் உலகின் காரியங்களைப் பாராமல் நித்திய காரியங்களைNயு நாடினான். அந்த ஒரே காரியத்தின்மேல் நமது மனதையும் குறியையும் உறுதியாய் வைக்கவேண்டியது அவசியம். தம்முடைய மக்களை உற்சாகப்படுத்த இயேசு கிறிஸ்து காப்பிக்கிறதும், அந்த நாளில் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதுமான காரியந்தான் அது.

பந்தயத்தை இலக்காக
வைப்பதொன்றே தேவை
பின்னானதை மறந்து
இயேசுவில் மோட்சம் காண்பேன்.

இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்

அக்டோபர் 31

“இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார்” சங். 147:3

மனிதருடைய இருதயத்தைப் பாவம் நிரப்பி அதைக் கடினப்படுத்தியிருக்கிறது. தேவ கிருபையால் மட்டுமே அதைத் தூய்மையாக்கி மென்மைப்படுத்த முடியும். தேவ ஆவியானவரால் இருதயம் மென்மையாக்கப்பட்டவன்தான் தன் இருதயக் கடினத்தைக் குறித்து துக்கப்படுவான். தேவன் பாவங்களை மன்னித்தார் என்ற மனநிறைவு ஒன்றே இருதயத்தை இளகச் செய்யும். தேவ ஆவியானவரால் ஆன்மா உயிர்ப்பிக்கப்படும்பொழுது, பாவ உணர்வு அதிகம் ஏற்படும். நமது குற்றங்கள், குறைவுகள் எல்லாம் நமது இருதயத்தை நொறுக்கும் தேவ பயம் உண்டாக்கும். இந்நேரத்தில் நொறுங்குண்ட இருதயத்தைக் குணமாக்க இயேசு கிறிஸ்து மனபாரம் நீக்கி மனமகிழ்ச்சியளிப்பார்.

இந்நேரத்தில் சாத்தான் அதிக தீவிரமாக செயல்படுவான். தேவ வசனத்தைப்பற்றிய அறிவு குறைந்து அவிசுவாசம் பெருகும் போது மனம் கடினமாகும். மனந்திரும்புவதும் கடினமாகும். ஆவி நெர்ந்து போதும். இந்நிலையில் இருதயம் நொறுங்குண்டு போய்விட்டதால் தோன்றும். அப்பொழுது தன்னைக் தேவனுக்கு முன் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். நொறுங்குண்ட அவன் இதயம் குணமாகும். ஆண்டவருடைய வசனமும், இரட்சகருடைய இரத்தமுமே, மனசாட்சிக்கு அமைதியை கொடுத்து, உடைந்த இதயத்தைச் சீர் செய்யும். அப்பொழுது காயப்பட்ட இதயம் குணமாகும்.

இதை வாசிக்குத் நண்பனே, உன் இருதயம் நொறுக்கப்பட்டிருந்தால் அதைக் குணப்படுத்தும்படி உன் தேவனிடத்தில் கெஞ்சிக்கேள். கர்த்தரை நோக்கிப்பார். அவர் உன்னைக் குணமாக்குவார்.

காயப்பட்ட இருதயத்தைக்
கழுவி சுத்தப்படுத்தும்
தயக்கமுள்ள நெஞ்சை அது
மயக்கமின்றி விடுவிக்கும்.

ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

ஏப்ரல் 25

“ஆனந்த பாக்கியத்திற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்” தீத்து 2:13

கிறிஸ்தவன் எதிர்பார்க்க வேண்டியவன். அவனுக்கு வேண்டிய நல்ல காரியங்கள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. அவனுக்கிருக்கும் வாக்குத்தத்தங்கள் வெளிப்படப்போகிற மகிமையைப் பற்றியது. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வரப்போகும் மேசியாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் வந்தார். ஊழியம் செய்தார். துன்பப்பட்டார். பிராயச்சித்தம் செய்தார். திருப்பி போகும்போது நான் மகிமையாய் மறுபடியும் வருவேனென்று வாக்குக் கொடுத்தார். மகா பரிசுத்த ஸ்தலத்துக்குப் போய் இப்போது நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். நம்மை ஆசீர்வதிக்க சீக்கிரம் வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் ஆறுதல் அடைந்து புத்திரசுவிகாரத்தை அடைவார்கள். நாமும் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆட்டவரோடு என்றென்றுமாய் இருப்போம்.

இது நம்முடை நம்பிக்கை, இந்த நம்பிக்கையை எதிர்ப்பார்த்துதான் நாம் வாழ வேண்டும். மரணம் என்று எங்கும் சொல்லவில்லை. மரணத்தையல்ல, இயேசுவின் வருகையே எதிர்நோக்கி ஜீவிக்க வேண்டும். பக்தனாகிய ஏனோக்கு இப்படித்தான் ஜீவித்தான். அவன் தேவனோடு சஞ்சரித்து அவருக்குப் பிரியமாய் நடந்தபடியால் பரலோகத்திற்கு உயர்த்தப்பட்டான். அப்போஸ்தலர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்ததால் நம்மைப்போல் இவ்வுலக காரியங்களால் அத்தனை வருத்தம் அடையரிருந்தார்கள்.

நம்பிக்கையால் ஏவப்பட்டு
கர்த்தரை எதிர்ப்பார்ப்பேன்
மகிமையோடு வருவார்
என்னையும் தம்மிடம் சேர்ப்பார்.

My Favorites

என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது

பெப்ரவரி 17 "என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது." சங். 119:25 இப்படி சரியான அறிக்கை செய்வது சாதாரணமானாலும், மிக உண்மையானது. உலகம் வெறும் மண். அதன் பணமும் பதவிகளும் மண்தான். மேலான இராஜ்யத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது...
Exit mobile version