தினதியானம்

முகப்பு தினதியானம்

கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்

அக்டோபர் 18

“கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராய் இரும்” சங். 30:9

நமது வாழ்க்கையில் எப்பொழுதும் நமக்குத் தேவ ஒத்தாசை தேவை. நமக்குச் சாயம் செய்பவர் கர்த்தரே. அவர் நமக்குச் சகாயம் செய்ய நாம் அவரைக் கருத்தால் வேண்டிக்கொள்ள வேண்டும். பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவருடைய வாக்குகளை நாம் நமது ஜெபங்களாக்க வேண்டும். உமது வாக்கின்படியே எனக்கு ஆகட்டும் கர்த்தாவே என்று ஜெபிக்கும்பொழுதுதான் நமது ஜெபம் சரியானதாகிறது. இப்பொழுதும்கூட கர்த்தாவே, நீர் என்குச் சகாயராய் இரும் என்று கருத்தாய் ஜெபிப்போம். அநேகர் விழுந்து போகிறார்கள். நீர் என்னைத் தாங்காவிடில் நானும் விழுந்துபோவேன். என் சத்துருக்கள் பலத்திருக்கிறார்கள். என் இருதயம் கேடானது. மனுஷனை நம்புவது விருதா. என்னையே நான் நம்புவதும் வீண் அகந்தையாகும். உமது ஒத்தாசை இல்லாவிடில் உமது கிருபை என்னை வந்தடையாது. ஆகையால் கர்த்தாவே எனக்குச் சகாயராயிரும் என்று ஜெபி.

எந்தக் கடமையிலும், எந்தப் போராட்டத்திலும், எந்தச் சோதனையிலும் கர்த்தருடைய உதவிதான் நம்மைத் தூக்கிவிடும். எந்த நேரத்திலும் அவருடைய சகாயத்தைத் தேடும் ஜெபம் நமக்கு ஏற்றதாகும். அந்த ஜெபம் மெய்யானதாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும். கர்த்தர் நமக்குச் சகாயராயிருப்பதனால் நமது கடமைகளை நாம் செவ்வனே நிறைவேற்றுவோம். நம் ஜெபங்களுக்குப் பதில் கண்டடைவோம். எத்துன்பத்தையும் மேற்கொள்ளுவோம். சகல குறைகளும் தீரும். துன்பங்கள் இன்பங்களாக மாறும்.

கர்த்தாவே, நான் பெலவீனன்,
உம்மையே பற்றிப் பிடிப்பேன்
நீர் என் துணை, என் நண்பன்
நான் வெற்றி பெற்றிடுவேன்.

கர்த்தருக்கே காத்திரு

பெப்ரவரி 27

“கர்த்தருக்கே காத்திரு.” சங். 37:7

எப்பொழுதுமே பாவியானவன் அமைதலற்றவன். அவன் இருக்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டபடியால் அவன் ஆவை அவனை நிலையற்றவனாக்குகிறது. கிறிஸ்து அவனைப் பார்த்து என்னிடத்தில் வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்கிறார். விசுவாசி இளைப்பாறுதல் பெற்றிருந்தாலும், சோதனைகளிலும், கவலைகளிலும், அவிசுவாசத்தாலும் அடிக்கடி இழுக்கப்பட்டு, பின்னும் அமைதலய்யவனாகிறான்.

அன்பானவர்களே, உங்களில் கவலைக்குரிய காரியம் இவைகளாய் இருக்கக்கூடாது. நீ கர்த்தரில் இளைப்பாற்றி காத்திருக்க வேண்டும். தேவ சமுகமே உனக்கு ஆனந்தமாய் இருக்க வேண்டும். தேவ சித்தத்திற்குக் காத்திருக்க வேண்டும். அவர் திட்டமிடுகிறதெல்லாம் உன் நன்மைக்காகத்தான் இருக்கும். நீங்கள் பரிசுத்தமாய் வாழவேண்டுமென்பதே தேவசித்தம். தேவ அன்பில் இளைப்பாற்றிக் காத்திருக்கவேண்டும். அவர் சமுகத்தில் அமர்ந்து அவரைப்பற்றி தியானம் பண்ணவேண்டும். தேவ இரக்கத்திற்குக் காத்திருந்தால் இளைப்பாறிக்காத்திரு. அது உண்மையுள்ளது, மாறாததது, தேவனுக்கும் உனக்கும் ஐக்கியம் தேவை. இந்த ஐக்கியத்தில் இளைப்பாறு. அவர் உன் பிதா. கரிசனையுள்ள பிதா. ஞானமுள்ள பிதா. சகாயஞ் செய்யும் பிதா. தேவன் இருக்கிறவிதமாய் அவரைத் தரிச்சிக்க அவரில் காத்திரு. அவர் சகலத்தையும் உன் நன்மைக்காகவும் தன் மகிமைக்காகவும் நேர்ப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திரு, பாக்கியமுள்ளவனாயிரு.

தேவ தாசர் தேவ சித்தம்
காத்திருந்து அறிவர்
சோதிக்கப்பட்டும் நித்தம்
அவர் கடாட்சம் பெறுவர்.

சத்தியத்தை அறிவீர்கள்

மார்ச் 09

“சத்தியத்தை அறிவீர்கள்.” யோவான் 8:32

கிறிஸ்துவானவர் நமக்கு போதிக்கிறவரானால், நாம் பிள்ளைக்குரிய குணத்தோடும் கற்றுக்கொள்கிற மனதோடும் இருப்போமானால் சத்தியத்தை அறிந்துக்கொள்வோம். சீயோன் குமாரர்களும் குமாரத்திகளும் கர்த்தரால் போதிக்கப்படுகிறார்கள். தேவ போதனையைக் கேட்கிற எவரும் கிறிஸ்துவில் வளருவர். இயேசுவிடம் வருகிற எல்லாரும் இரட்சிப்புக்கேற்ற ஞானம் பெற்று சத்தியத்தை அறிந்து கொள்வர். கிறிஸ்துவுக்குள் சத்தியம் இருக்கிறது. அதன் மையம் அவர்தான். அவர் வசனத்தை நம்பி, அவர் பலிபீடத்தின்மேல் சார்ந்து அவருடைய சித்தத்தை அப்படியே செய்யும்போதுதான் அவரை அறிந்துக்கொள்ளுகிறோம். அவரை அறிந்துக்கொள்ளுகிறதே சத்தியத்தை அறிந்து கொள்வதாகும்.

சத்தியம்தான் நம்மை விடுதலையாக்கும். அது அறியாமையிலிருந்தும், தப்பெண்ணத்தினின்றும், புத்தியீனத்தினின்றும், துர்போதகத்திலிருந்தும் நம்மை விடுதலையாக்கும். சாத்தானுடைய அடிமைத்தனத்தினின்றும், நியாயப்பிரமாணத்தினின்றும் பொடுமையிலிருந்தும், அது நம்மை தப்புவிக்குpறது. பாவத்தின் குற்றத்தினின்றும் குற்ற மனசாட்சியினின்றும் அது நம்மை விடுவிக்கிறது. தேவனைப்பற்றி உண்மையான அறிவை நமக்குப் புகட்டி, சமாதானத்தையும் ஒப்புரவாகுதலையும் நமக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவோமானால் உலகத்தை ஜெயிப்போம். பரம இராஜ்யத்தில் பிரவேசிப்போம். தேவ சமாதானம் பெற்று அவர் சித்தம் செய்வோம்.

தேவ பக்தியே நமது ஆனந்தம்.
கர்த்தாவே நீர் போதிக்கும்போது
பாவம் அற்றுப்போவதால்
உமதாவியில் நடத்திடும்.
கிருபையால் என்னைப் பிரகாசியும்.

என்ன செய்தேன்

நவம்பர் 12

“என்ன செய்தேன்?” எரேமி. 8:6

ஒரு நாளின் இறுதியில் நமது செயல்களை இப்படி விசாரிக்கும் பொழுது, இக்கேள்வி அவசியம் வரும். நம் இருதயத்தை நாம் ஆராய்வதோடு, நமது நடத்தையையும் வேத வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இன்றிரவு நம்மையே நாம் சில கேள்விகள் கேட்டுக் கொள்வோமாக. தேவனுக்கு விரோதமாக நான் இன்று என்ன செய்தேன்? அவருடைய கட்டளைகளை மீறினேனா? அவருடைய வசனத்தை விசுவாசியாதிருந்தேனா? அவருடைய தூய ஆவியானவரைத் துக்கப்படுத்தினேனா? அவடைய அன்பு மைந்தனை அசட்டை செய்தேனா? அவருடைய செயல்களுக்கு விரோதமாக முறுமுறுத்தேனா? அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நின்றேனா? என் இருதயம் அவருடைய நியமங்களைப் புறக்கணித்து அவருடைய முகத்திற்கு முன்பு விரோதம் பேசியதா? அவருடைய அன்பைச் சந்தேகித்தேனா? அவருடைய உண்மையைப்பற்றி தவறாக நினைத்தேனா? இன்று நான் கர்த்தருக்காக என்ன செய்தேன் என்று சோதித்துக் கொள்வோம்.

நோயாளிகளைச் சந்தித்தேனா? ஏழைகளுக்கு உதவினேனா? துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொன்னோ? சபையில் என் கடமைகளைச் செய்தேனா? பின் வாங்கியவர்களைத் திருப்ப முயற்சித்தேனா? அவருடைய மகிமைக்காக இன்று நான் செய்ததென்ன? அவருடைய இராஜ்ய விருத்திக்காக என்ன செய்தேன்? என்னையே நினைத்துப் பெருமை கொண்டேனா? கிறிஸ்து நாதருக்காக இன்று என்ன செய்திருக்கிறேன் என்று யோசி. அவருக்காக உழைக்க தீர்மானித்துக்கொள். தீமையை விட்டு விலகி நன்மை செய்.

குற்றம் நிறைந்த மனதோடு
உம்மண்டை நான் வந்தேன்
சுத்தமாக்கும் என்னை நீரே
உம்மண்டை சேர்த்தருளும்.

கர்த்தாவே நான் உமது அடியேன்

ஜனவரி21

“கர்த்தாவே நான் உமது அடியேன்” சங்.116:16

நாம்கர்த்தருடைய ஊழியக்காரர். அவருடைய மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். அவர்துதியைச் சொல்லி வர மீட்கப்பட்டோம். அவரின் மேன்மையான குணங்களைவிளக்குவதற்கே உருவாக்கப்பட்டோம். நாம் அவருடைய நெருங்கிய உறவினர்கள். இயேசுவானவர்நமது எஜமான். அவர் சித்தம் நமக்குச் சட்டம். அவருக்குப் பிரியமானதெதுவோ,அதுவே நமக்கு ஆனந்தமாயிருக்கவேண்டும். நமது எஜமானே நமக்கு முன்மாதிரி. அவர்பிதாவின் ஊழியக்காரனாக உலகத்துக்கு வந்து சகலத்தையும் பிதாவின் சித்தப்படியேசெய்து முடித்து பிதா கட்டளையிட்ட சகலத்தையும் முணுமுணுக்காமல் செய்து முடித்தார்.அன்று அவர் தம்மைத்தாமே தாழ்த்தி கீழ்ப்படிந்தபடியால் இப்பொழுது உயர்த்தப்பட்டு,மேன்மையாக்கப்பட்டு மகா உன்னதத்தில் இருக்கிறார்.

அவர்நம்மைப் பார்த்து ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்யமனதானால் அவன் என்னைபஇபோலிருக்கக்கடவன். நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்.ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால், என் பிதா அவனைக் குனப்படுத்துவார் என்கிறார்.நாம் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதினால் மனுஷன் நம்மைக் குறைவாய் எண்ணினாலும்எண்ணலாம். ஆனால் தேவனோ நம்மை மேன்மைப்படுத்துவார். உலகம் நம்மை நித்தித்துஅவமதிக்கலாம். அவர் தம்முடைய சமுகத்தாலும் அன்பான பார்வையாலும் நம்மைக்கனப்படுத்தி பிறகு நம்மை மகிமையில் சேர்த்துக் கொள்வார். இன்றைக்கு நாம்யாருக்கு ஊழியஞ் செய்தோம்? யாரைப் பிரியப்படுத்தினேம்? யாருடைய வேலைக்குமுதலிடம் கொடுத்தோம்? அவர் நம்மை அழைக்கும்போது அவரண்டைக்குப் போகமனமுள்ளவர்களாய், அல்லது நம்மை உலகத்தில் வைக்கும் பரியந்தமும் அவருக்குஊழியஞ்செய்ய முனமுள்ளவர்களாய் இன்றைய நாளில் சிந்திப்போம்.

கிறிஸ்துவின்அடியார்
மகாமேன்மை உடையார்
அவர்நுகம் சுமப்போர்
தேவாசீர்வாதம்பெறுவர்.

என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்

ஜனவரி 13

“என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்” மாற்கு 9:24

நம்முடைய விசுவாசம் பலவீனமுள்ளது. அவிசுவாசமோ மிகவும் பலமுள்ளது. தேவன் சொல்வதை நம்பாமல்போவது பாவத்தின் இயல்பு. வேத வாக்கியங்களை ஒரு கிறிஸ்தவன் முற்றிலும் நம்புகிறது நல்லது. சில வேளைகளில் தேவன் சொல்கிறது மிகவும் நல்லதாயிருக்கும்போது அது உண்மைதானோவென்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. நாம் செய்த பாவங்களை நினைத்து, இவ்வளவு பெரிய மகிமையான காரியங்கள் நமக்குக் கிடைக்குமோவென்று சந்தேகம் கொள்ளுகிறோம். வேதம் சொல்லுகிறபடி, நல்ல தேவன் பெரிய பாவிக்கு பெரிய நன்மைகளை வாக்களிக்கிறார் என்று நம்புவது சுலபமல்ல. நாம் அவைகளை உறுதியாய் நம்பி, நமக்குச் சொந்தமாக்கி கொண்டு, நமக்குரியதாகச் சொல்லி ஜெபிக்கிறதும் அவ்வளவு எளிதல்ல. எங்கே துணிகரத்துக்கு இடங் கொடுக்கிறோமோ என்று பயந்து அவிசுவாசத்துக்குள்ளாகி விடுகிறோம். சாத்தான் சொல்வதைக் கேட்டு சந்தேகத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுத்து விடுகிறோம். நான் சத்தியத்தை சொன்னால் ஏன் நம்புவதில்லையென இரட்சகர் கேட்கிறார். வாக்குத்தத்தம் உண்மைதானா? அது பாவிகளுக்குரியதா? கிருபையினின்று அது பிறந்திருக்கிறா? தேவ அன்பும் இரக்கமும் மேன்மை அடைய அது நமக்குக் கொடுக்கப்பட்டதா?

அப்படியானால் தேவ வார்த்தைகளை நம்பி பற்றிக்கொள்ளவும், தேவன் சொன்னபடியே செய்வாரென விசுவாசிக்கவும் வேண்டும். பாவங்களை நாம் எங்கே கொண்டுபோட வேண்டியதோ, அங்கே நம்முடைய அவிசுவாசத்தையும் கொண்டு போடவேண்டும். அவ்வாறு செய்ய முடியாவிடில் இயேசுவிடம்தான் கொண்டு போகவேண்டும். அதை அவரிடம் அறிக்கையிட்டு சீஷர்களைப்போல் ‘கர்த்தாவே எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்’ என்று கெஞ்சுவோமாக. அல்லது மேலே அந்த மனிதன் சொன்னதுபோல, ‘என் அவிசுவாசம் நீங்கும்படி உதவி செய்யும்’ என்று கேட்போம்.

பிழைகளெல்லாம் மன்னித்திரே
விசுவாசிக்க செய்யுமே
உம்முடையவன் என்று சொல்லி
முத்திரை என்மேல் வையுமே

பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்

யூலை 30

“பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்” 1.சாமு.15:22

சடங்குகளைப் பெரிதாக எண்ணுவது மனித இயற்கை. இஸ்ரவேலரும் அப்படியே செய்தார்கள். எண்ணிக்கையற்றோர் இன்றும் அப்படி செய்கிறார்கள். ஆனால் அதைவிட கிறிஸ்து முடித்த கிரியையினால் ஜீவனும் சமாதானமும் கிடைக்கும் என்று நம்பி, தேவனை நேசிக்கிற நேசத்தால் உந்தப்பட்டு வேதப்பிரமாணங்களைக் கைக்கொள்ளுவதே தேவனுக்குப் பிரியம். கீழ்ப்படிகிறதுதான் பலியைப் பார்க்கிலும் உத்தமம். கீழ்ப்படியும்போது நமக்கு நியாயமாய் தோன்றுகிறதை தள்ளி, மனட்சாட்சியின்படி தேவனுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து, அதற்கு இணங்கி முழுமனதோடு அந்த அதிகாரத்திற்கு கீழ் அடங்க வேண்டும். அப்படிப்பட்ட கீழ்ப்படிதல்தான் எல்லா பலியைப் பார்க்கிலும் உயர்ந்தது. இப்படி கீழ்ப்படியும்போது அவர் ஞானமும், தயவும் உள்ளவர் என்று அறிக்கையிட்டு அவருடைய சித்தத்திற்குச் சந்தோஷமாய் இணங்குகிறோம்.

இப்படி நாம் கீழ்ப்படிவது தேவனுக்குப்பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாம் தேவ வசனத்துக்கு ஒத்து, உத்தமமாயும், தாழ்மையாயும் எப்போதும் மாறாமலும் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் செலுத்தும் எந்தக் காணிக்கையிலும் நாம் சிக்கக்கூடிய எந்த வருத்தத்திலும் அது அதிக நலமாய் இருக்கும். பிதாவைப்போல நாம் இயேசுவை நேசித்தாலும் அவருக்கு மனப்பூர்வமாய் கீழ்படிய வேண்டும். அவர் அருளிய வாக்குத்தத்தங்களை நம்புகிறதோடு அவர் அதிகாரத்தையும் மதிக்க வேண்டும். பிதாவின் நேசத்தை ருசிக்கிற பிள்ளைகளைப்போல் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் நமக்குச் செய்யும் நன்மைகளுக்குப் பதிலாக நாம் அவருக்குக் கீழ்ப்படியாமல் கிறிஸ்துவை நேசிக்கிறோம் என்பதற்கு சாட்சியாகவும் அவரோடு ஐக்கியப்படுகிறோம் என்பதற்கு நற்பலனாகவும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

பரம ஞானம் தந்தும்மை
பிரியப்படுத்தச் செய்திடும்
விருப்பத்தோடு செய்கையும்
என்னில் உண்டாக பண்ணிடும்.

கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்

பெப்ரவரி 04

“கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்.”  மத். 24:6

அதாவது கவலைக்கொள்ளாதபடி மனமடிவாகாதபடி, திகையாதபடி எச்சரிக்கையாயிருங்கள். துன்பங்களைத் தைரியமாய்ச் சந்தித்து, பொறுமையோடும், மனதிடனோடும் சகித்து தேவனுக்கு முற்றிலும் கீழடங்கப் பாருங்கள். உலகத்தார் கலங்கி நிற்கலாம். நீங்கள் கலங்கக்கூடாது. நீங்கள் என் தொழுவத்தின் ஆடுகள். என் வீட்டின் குமாரர்கள். என் தோட்டத்து வேலையாள்கள். நீங்கள் கலங்கக்கூடாது. உங்கள் காரியங்கள் அனைத்தும் அன்பினாலும் ஞானத்தினாலும் திட்டமிடப்பட்டிருக்கிறது. நீங்கள் என் கரத்தில் சுகமாயிருப்பவர்கள். நீங்கள் உங்களைத் தீங்கிற்கு விலக்கி காப்பதற்கு நான் எப்போதும் உங்களோடிருக்கிறேன். கண்ணீரைத் துடைத்து உங்கள் மனதை லேசாக்குகிறேன். ஆகவே நீங்கள் கலங்கக்கூடாது.

நடக்கிறவைகளெல்லாம் உங்களுக்கு நன்மையாகவேதானிருக்கும். நீங்கள் கவலைப்படும்போது என்னைக் கனவீனப்படுத்துகிறீர்கள். ஆகவே மனகலக்கத்திற்கும் வீண் கவலைக்கும் இடங்கொடாதபடி பாருங்கள். கலங்காதிருக்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? என் வசனத்தை உறுதியாய் நம்புங்கள். என்னோடு எப்போதும் நடவுங்கள். உங்கள் பயங்கள், எனக்குச் சொல்லுங்கள். உங்கள் கவலைகளையும், சுமைகளையும் என் பாதத்தருகே வையுங்கள். எல்லாவற்றிற்கும் முடிவு வரும் என்று அறியுங்கள். தேவன் உண்மையுள்ளவர். அவர் என்னோடிருக்கிறார் என்று நினையுங்கள். துன்பங்களைச் சகிக்கிறதற்குத் தேவையான உதவி கிடைக்குமென்று எதிர்பாருங்கள். நீங்கள் என்னோடு ஐக்கியப்பட்டவர்கள் என்பதை மறந்துப்போகாதீர்கள். சிநேகிதரே, நாம் கிறிஸ்துவோடிருந்தால் கலங்க வேண்டியதில்லை. நீங்கள் அமர்ந்திருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். அப்படி இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அன்பாய் உங்களுக்குக் கூறுகிறேன்.

என் மனமே நீ கலங்காதே
தேவ சித்தமுண்டு காத்திரு
உனக்கு விளங்கா விட்டாலும்
எல்லாம் சுபமாய் முடியும்.

பரிசுத்த ஜனம்

டிசம்பர் 18

பரிசுத்த ஜனம். ஏசாயா 62:12

கர்த்தருடைய ஜனம் எல்லாருமே பரிசுத்த ஜனம்தான். அவர்களுக்கு மெய்யுணர்வைத் தந்து மனஸ்தாபப்படும் உணர்வையும் அடைய அவர் செய்கிறார். இவர்தான் பாவத்தின்மேல் வெறுப்பைத் தருகிறவர். பரிசுத்தர்களாயிருக்கத் தேவன் தமது ஜனத்தைத் தெரிந்துகொண்டபடியால், அவர்கள் பாவம் செய்வதைவிட்டுவிடுகிறார்கள். இந்த ஜனங்கள் பரிசுத்தமாகவேண்டுமென்றே இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார். ஓளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்குபெற அவர்கள் தகுதியாகும்படி தேவஆவியானவர் அவர்களுக்குள் வாசம்பண்ணுகிறார். பரிசுத்தம்தான் அவர்களுடைய ஜீவன். அவர்களுடைய இன்பம் அவர்கள் பரிசுத்தத்தின்மீது வாஞ்சை கொண்டு நாடித் தேடுகிறார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரதத்ததினால் மீட்கப்பட்டு, அவரால் சுத்திகரிக்கப்பட்டு, அவராலே நீதிமான்களாக்கப்படுகின்றனர். நீதிமான்களாக்கப்படுவதுதான் பரிசுத்தமாக்கப்படுதலுக்கு அடிப்படை. ஒருவன் நீதிமானாக்கப்பட்டால், அவன் பரிசுத்தமாக்கப்படுவான். பரிசுத்தமாக்கப்படுவதால், தான் நீதிமானாக்கப்பட்டதை நிரூபிப்பான். பாவம் வெறுக்கப்பட்டு, அது கீழ்ப்படுத்தப்படாவிட்டால், அது மன்னிக்கப்படுவதில்லை. பாவம் செய்கிற எவனும் நீதிமானல்ல, பரிசுத்தவானுமல்ல. இயேசுவைத் தன் சொந்தம் என்றோ, தான் பரிசுத்தஆவியைப் பெற்றவன் என்றோ சொல்லுவது தவறு. பரிசுத்தவான்கள் யாவரும் பாவத்திற்காகத் துக்கப்பட்டு, அதனோடு போராடி வெல்லுகிறார்கள். தங்கள் தேவனுக்கு முன்பாகப் பரிசுத்தமாக நிற்கிறார்கள். இவர்கள்தான் மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள். உனது நிலை என்ன? பரிசுத்தர் கூட்டத்தில் நீ இருக்கிறாயா ?

கர்த்தாதி கர்த்தர் பரிசுத்தர்
கிறிஸ்துவும் பரிசுத்தர்
தூய ஆவியானவரும் பரிசுத்தர்
அவர் பரிசுத்தராதலால் நாமும் பரிசுத்தராவோம்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு

பெப்ரவரி 14

”கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு.” சங். 37:4

கர்த்தர் நம்மில் மகிழுகிறதுபோல, நாம் அவரில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். இதற்கு அவருடைய அன்பைப்பற்றி சரியான எண்ணங்கள் நமது உள்ளத்தில் வரவேண்டும். இயேசுவில் வெளியாகியிருக்கிற அவரின் மகிமையான குண நலன்களைத் தியானிக்க வேண்டும். அவருடைய அன்பும் பூரண இரட்சிப்பும் நமக்கு உண்டென உணரவேண்டும். அவரின் அழகையும் பரலோக சிந்தையும் நம்மில் இடைவிடாமல் இருக்க வேண்டும். அவரின் வாக்குகளை அதிகம் நம்ப வேண்டும்.அவரின் பாதத்தில் காத்திருக்க வேண்டும். நமது தகப்பனாகவும், நண்பனாகவும் அவரை நாட வேண்டும். நமது பங்கு நித்திய காலமாய் நமக்கிருக்கிறதென்று விசுவாசிக்க வேண்டும்.

எனவே, கீழான காரியங்களின் மேலிருக்கும் நாட்டத்தை நீக்கி, அதைக் கர்த்தர்மேல் வைக்க அதிகமாய் பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருப்பவர்கள் வெகு சிலரே. அவரைப் பற்றி தியானிப்பது, அவரைப்பற்றி அறிந்துக்கொள்வது அவரைப்பற்றிப்படிப்பது போதுமென்றிருக்கிறோம். ஆனால் அது போதாது. நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருக்க வேண்டும். நமக்கு வேண்டியதையெல்லாம் நமக்குக் கொடுக்கும் பொக்கிஷங்களில் நாம் மகிழலாம். நமக்குத் தரும் பாதுகாப்பிற்காகவும் அவரில் மகிழலாம். அவரின் அலங்காரமான பரிசுத்தத்தில் மகிழலாம். அவரின் கிருபைக்காகவே அவரில் அனுதினம் மகிழலாம்.

கர்த்தாவே உம்மில் மகிழுவேன்
உமது அரவணைப்பில் பூரிப்பேன்
நீர் என் நேசர், துன்பத்தில்
உமதண்டை ஓடி வருவேன்.

My Favorites

நீதிமான்களின் உயிர்த்தெழுதல்

ஏப்ரல் 06 "நீதிமான்களின் உயிர்த்தெழுதல்." லூக்கா 14:14 கிறிஸ்துவுக்குள்  மரித்தவர்கள் முதலாவது உயிர்த்தெழுந்திருப்பார்கள். அழியாமையுள்ளவர்களாய்ப் பலத்தோடும் ஆவிக்குரிய மகிமையோடும் எழுந்திருப்பார்கள். கிறிஸ்துவின் மகிமையான சரீரத்துக்கு ஒப்பான சரீரம் அவர்களுக்கு இருக்கும். அவருடைய சத்தம் அவர்களை உயிர்ப்பித்து,...
Exit mobile version