ஜனவரி 10
“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” பிலி. 2:9
இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த புழுவைப்போல் எண்ணப்பட்டார். ஆனால் தேவனோ அவரை அதிகமாக உயர்த்தினார். உன்னதங்களில் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். தேவகுமாரனுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராஜாதி இராஜனின் தலை மகுடத்திலுள்ள இரத்தினக் கற்கள், காலை பொழுதின் கதிரவ பிரகாசத்திலும் அதிக பிரகாசமாயிருக்கின்றன. அவரின் செங்கோல் பூமியெங்கும் செல்லும்படி நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய இராஜ்யம் நித்திய இராஜ்யம். அவரின் ஆளுகை தலைமுறை தலைமுறையாய் உள்ளது. தேவதூதர்கள் அடிபணிந்து அவரை வணங்குகிறார்கள். இவர்களின் ஆரவாரப் பாடல்களெல்லாம் அவரைப் பற்றினதே.
கிறிஸ்துவானவர் துன்பத்திலும் தாழ்த்தப்பட்டபடியால் மிகவும் கெம்பீரமாக உயர்த்தப்பட்டார். தமது பிள்ளைகளின் நன்மைக்காக இயேசு உயர்த்தப்பட்டாரென்பதை நினைக்கும்போது எவ்வளவு இன்பமாயிருக்கிறது. உலகிலுள்ள மக்கள் யாவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று ஜீவிக்கவும்,உலகை ஜெயித்து பரிசுத்தமாக வாழவும், கடைசியில் தம்மோடு அவர் பிள்ளைகள் ஜெயித்து என்றென்றுமாய் இருக்கவும், அவரைச் சுற்றி வாழ்த்து பாடவுமே இவர் சிங்காசனத்திற்கு மேலாய் உயர்த்தப்பட்டார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே! உம்மை அறிந்து, உமது உயிர்த்தெழுதலின் மகிமையை அடைந்து, உம்மோடே மகிமையில் உட்காரும்படி எனக்கு கிருபைத் தாருமே.
மனிதர் இகழும் இயேசு
மகிமைக்கு பாத்திரரே,
நித்திய கிரீடமும் மோட்சமும்
அவருடைய தாகுமே