நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31

“நான் தேவனை நாடி” யோபு 5:8

இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத் தூரத்திலிருந்து பார்த்தூல் அவைகள் பயங்கரமாகத் தோன்றினாலும் உண்மையில் பயங்கரமானவைகள் அல்ல. நண்பா, நீ செய்கிறது என்னவென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் கலங்கி நிற்கும்போது நான் தேவனையே நாடுவேன். துன்பத்தில் ஆறுதலுக்காகவும், பெலவீனத்தில் பெலனுக்காகவும், குற்றத்தில் மன்னிப்புக்காகவும், தேவனையே நாடுவேன். பயங்கர போராட்டத்தின்போது ஜெயத்திற்காகவும் சந்தேகத்தில் நம்பிக்கைக்காகவும், வெறுமையில் அவரின் நிறைவுக்காகவும், அவரையே நாடுவேன்.

அவ்விசுவாசத்தின் வல்லமையின்கீழ் இருப்பேனாகில் விசுவாசத்திற்காக அவரிடம் போவேன். அவனுடைய ஜெயத்தை அடக்க, அவனுக்கு விரோதமாய் ஜெயக்கொடியைப் பிடிப்பேன். நான் விழுந்து விடுவேனோ என்நு நினைக்கும்போது அவருடைய நீதியின் வலதுக்கரத்தை பிடித்துக்கொள்ள அவரையே நாடுவேன். மரணத்தைக் கண்டு நான் பயப்படும்போது மரண இருளை வெளிச்சமாக்கும்படி அவரையே நாடுவேன்.

உனக்கு எது தேவையோ அதைத் தேவனிடம் கேள். எந்த பயத்தையும் அவரிடம் சொல். எந்தத் துன்பத்தையும் அவர் முன்னே வை. நீ அவரை நாடித் தேடுவது மட்டும் வீணாய்ப் போவதில்லை.

கர்த்தரைத் தேடு கொடுப்பார்
கேள் உனக்குத் தருவார்
அவர் கிருபை பொழிவார்
நோக்கி கெஞ்சி காத்திரு.

கர்த்தாவே….. என்னை நினைத்து

ஓகஸ்ட் 30

“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5

இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.

அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.

பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.

உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்

ஓகஸ்ட் 16

“உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள்” சங்கீதம் 89:16

இவர்கள் தேவனுடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். நமக்கென்று ஒரு நீதியே கிடையாது. அவரே நமக்கு நீதியைச் சம்பாதித்து வைத்திருக்கிறார். இந்த நீதியை இலவசமாய்த் தருகிறார். இந்த நீதியை விசுவாசத்தினால் பெற்றுக்கொள்கிறோம். நமது கிறிஸ்தவ மார்க்கம் விசேஷமானது. நம்முடைய தலையாகிய கிறிஸ்துவின் ஞானத்தினால் நாம் ஞானிகளாகிறோம். நம்முடைய மூத்த சகோதரன் இயேசுவால் நாம் ஐசுவரியவான்களாகிறோம். நம்முடைய இரட்சகரின் நீதியால் நாம் நீதிமான்களாகிறோம். இந்தச் செய்தி நியாயப்பிரமாணத்தை மேன்மைப்படுத்தி, ஆத்துமாவைச் சந்தோஷத்தால் நிரப்புகிறது. இந்த நீதியில் நாம் குற்றவாளி என்று தீர்க்கிற நியாயப்பரமாணத்தின் வல்லமைக்கும் சாத்தானுடைய பொல்லாத தந்திரத்திற்கும், கொடிய உலகத்துக்கும், மரணத்தின் பயங்கர வேதனைக்கும் மேலாக உயர்த்தப்படுகிறோம்.

இது சமாதானத்திற்கும் தேவ நேசத்திற்கும் புத்திரசுவிகாரத்திற்கும் தேவ சமுகத்து நம்பிக்கைக்கும், கிறிஸ்துவோடு உன்னத ஸ்தலத்தில் உட்காருகிறதற்கும், நித்திய மகிமைக்கும் நம்மை உயர்த்துகிறது. இது தேவனுடைய தன்மைபற்றியும், கிறிஸ்துவின் அன்பான கிரியைபற்றியும் மேலான எண்ணம் கொள்ளச் செய்கிறது. நாம் இந்த நீதியை மதித்து, நித்தம் தரித்துக் கொண்டு தேவன் நம்மை அங்கீகரிக்கிறதற்கு நன்றி சொல்வோமாக. இந்த நீதி நம்முடைய கலியாண வஸ்திரம், அழியாத கேடகம், பரம வாழ்வை நம்மை சுதந்தரிக்கச் செய்யும் பத்திரம். இந்த நன்மை நம்மை ஷேமப்படுத்தி, ஆறுதல்படுத்தி, பலப்படுத்தி, மேன்மைப்படுத்துகிறது.

எல்லாரும் பட்டு வஸ்திரம்
உடுத்தி மகிழட்டும்
என் போர்வை கிறிஸ்துவின் நீதியே
இது என்றும் எனக்குள்ளதே.

உன் உக்கிராணக் கணக்கையொப்புவி

ஓகஸ்ட் 12

“உன் உக்கிராணக் கணக்கையொப்புவி”  லூக்கா 16:2

நமக்கெல்லாருக்கும் ஒவ்வொரு வேலையைத் தேவன் வைத்திருக்கிறார். அது பொறுப்பான நம்பிக்கையுள்ள வேலை. அந்த வேலைக்கு தலையும், மனமும், கைகளும், கால்களும் வேண்டும். இந்த உக்கிராணக்காரன் சுறுசுறுப்பும், உண்மையும் ஜாக்கிரதையுமாய் இருந்து கணக்கொப்புவிக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் எல்லாரும் கணக்கு கொடுக்கவேண்டியவர்கள். வெகு சீக்கிரத்தில் நாம் கணக்கொப்புவிக்கவேண்டும். நமது எஜமான் சீக்கிரம் வரப்போகிறார். அப்போது அவரை எதிர்கொண்டு போகாமல் பின்னடைவோமா? நம்முடைய செல்வாக்கு, பணம், யோசனைகள், செயல்கள் இவைகளை எப்படி பயன்படுத்தினோம். ஆத்துமாவின் வேலைகளில் என்ன பங்கேற்றோம்? எப்படி தேவனுக்குரிய காரியங்களில் நாம் ஈடுபட்டோம். இவைகளையெல்லாம் குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும்.

நண்பரே, நீ ஒர் உக்கிராணக்காரன் என்பது உனக்குத் தெரியுமா? வேதம் உன் எஜமான் இயேசு கொடுத்த சட்டம். உன் நடக்கைக்குப் பிரமாணம். இதைத் தியானிக்கிறாயா? உன் எஜமானுடைய கண் உன்மேல் இருக்கிறது. இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிறாயா? இந்த வசனத்துக்குப் பயப்படுகிறாயா? கர்த்தருடைய நாள் சமீபித்து வருகிறது. நம்முடைய கணக்குகளை ஒப்புவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டது. இப்பொழுது உன் காரியம் எப்படியிருந்தாலும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுக்கு அப்போது தேவனால் புகழ்ச்சி கிடைக்கும். இப்போதாவது உன் பொறுப்பை உணர்ந்து, அதற்கு ஏற்றதாய் நடந்தால் எவ்வளவு நலம்!

நியாயாதிபதியாம் கர்த்தாவே
உமக்குமுன் நான் நிற்பேன்
அப்போது குற்றமற்றுவனாக
விளங்கி மகிழ்வேன்.

கடைசிச் சத்துரு

ஓகஸ்ட் 02

“கடைசிச் சத்துரு” 1.கொரி. 15:26

கிறிஸ்தவனுக்கு அநேகச் சத்துருக்கள் உண்டு. தேவ கிருபையினால் இவன் சகல சத்துருக்களையும் மேற்கொள்ளுவான். அதில் பரிகரிக்கப்பட வேண்டிய கடைசிச் சத்துரு மரணம். மரணம் தான் எல்லா இராஜ்யத்துக்கும் சத்துரு. இது ஞானவான்களையும், தேச தலைவர்களையும், பரிசுத்தரையும் அழித்துப் போடுகிறது. இது சபையின் சத்துரு. இது பக்தியுள்ளவரையும், நன்மை செய்பவரையும், பயனற்றவரையும் நீக்கிப்போடுகிறது. தேவாலயத்துக்கும் சத்துரு இது. பணிவிடைக்காரர்களையும், ஊழியர்களையும், போதிக்கிறவர்களையும், வாலிபரையும் தேவனுக்காய் உழைப்பவர்களையும் மரணம் கொடுமையாக கொண்டுபோய் விடுகிறது. இது குடும்பங்களுக்குச் சத்துரு. தாய் தந்தையையும், மனைவி புருஷனையும், பிள்ளைகளையும் பிரித்துவிடுகிறது. ஊழியர்களையும், பக்திமான்களையும் உலக மனிதரையும் பாவிகளையும் பட்சபாதமின்றி மரணம் விழுங்கி விடுகிறது. நம்முடைய ஆண்டவர் இயேசுவுக்கும் அது சத்துருவாய்தான் இருந்தது.

மரணம்தான் கடைசி சத்துரு.முதல் சத்துரு சாத்தான். இரண்டாம் சத்துரு பாவம். கடைசிய சத்துரு மரணம். இது கடைசியாக நம்மைத் தாக்குகிறது. வியாதியிலும், முதுமையிலும், ஏன் இளமையிலும் மரணம் வந்துவிடுகிறது. இதுவே கடைசியாக அழிக்கப்படுகிற சத்துரு.தேவ தீர்மானத்தின்படி மரணம் கிறிஸ்துவினால் அழிக்கப்பட்டுப்போய்விடும் என்று வாக்களித்திருக்கிறார். பரிசுத்தவான்கள் அதற்காக ஜெபிக்கிறார்கள். அது அழியும் என்று சபையும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த வசனத்தை நிறைவேற்ற இயேசு கிறிஸ்துவும் வரப்போகிறார். அப்பொழுது அது நிச்சயமாய் அழிக்கப்பட்டுப்போம். பூரணமாய் அழிக்கப்பட்டுப்போம். இப்பொழுதும் பக்திமான்கள் அதன் வல்லமையை எதிர்த்து, அது வர சம்மதித்து முடிவுக்கு வாஞ்சித்து, மகிழ்ச்சியாய் அதற்கு உட்பட்டு, அதன் பிடிக்குத் தப்பி சொல்லமுடியாத மகிமையை அனுபவிக்க எதிர்நோக்கலாம்.

தேவா உமது சாயலை
எனக்களித்துப் போதியும்
அப்பொழுது உம் சமுகம்
கண்டு என்றும் களிப்போம்.

உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்

ஓகஸ்ட் 18

“உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்” உன்.1:4

சுபாவப்படி உத்தமர் ஒருவரும் இல்லை. ஒருவரும் தேவனுக்குரியதைத் தேவனுக்கும் மனுஷருக்குரியதை மனுஷருக்கும் செலுத்தப் பார்க்கிறதில்லை. இப்படி செய்வதுதான் உத்தமம். இது கிருபையிலிருந்து உண்டாகிறது. உத்தமமே மறுபடியும் பிறந்தவர்க்கு அத்தாட்சி. உத்தமமானவர்கள் எப்பொழுதும் தேவனுடைய கண்கள் தங்கள் பேரில் இருக்கிறதென்றும், தாங்கள் தேவ வசனத்தின்படி நமக்கக் கடமைப்பட்டவர்கள் என்றும், தாங்கள் தேட வேண்டியது, தேவ தயவு என்றும், அவர் நிதானிப்பே மிகவும் முக்கியம் என்றும் எண்ணுவார்கள். உத்தமர்கள் ஆண்டவர் இயேசுவை வெகுவாய் நேசித்து அவரை அறிந்து அவரை மகிமைப்படுத்துவார்குள். உத்தமமாய் தேவனை நேசித்து, அதற்கு சாட்சியாக அவர் சமுகத்தில் சந்தோஷித்து சகலத்திலும் அவரில் பிரியமாய் நாடி வாழ்வார்கள்.

உத்தமர்கள் தேவனைக் குறித்து எப்போதும் சந்தோஷமாய் பேசப் பிரயாசப்பட்டு, அவருக்காக எதையும் செய்யவும், உலகத்தையும் பாவத்தையும், வெறுத்து தேவனுக்கு எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள். கர்த்தரை மகிமைப்படுத்தி அவரைக் கனம்பண்ணுவதைவிட வேறு எதையும் மிகவும் முக்கியமானதாய் நினைக்கமாட்டார்கள். அன்பரே, நீ உத்தமனா? இயேசுவை நேசிக்கிறாயா? உத்தம இருதயத்தோடு அவரை நேசிக்கிறாயா? எல்லாவற்றிலும் அதிகமாய் நேசிக்கிறாயா? நீ அவரை நேசிக்கவில்லையென்றால் நீ உத்தமன் அல்ல. ஒருவன் கர்த்தாகிய இயேசு கிறிஸ்துவில் அன்பு கூராவிட்டால் அவர் சபிக்கப்பட்டவன். கர்த்தர் வருகிறார். என்று அப்போஸ்தலன் இடும் சாபம் எவ்வளவு பயங்கரமானது.

இயேசுவே என் நோவில் நீ
சஞ்சீவி, மரணத்தில் ஜவீன்
உமது வாயின் வார்த்தைகள்
என் ஆத்துமாவுக்கு அமிர்தம்.

உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்

ஓகஸ்ட் 22

“உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும்”  வெளி 3:8

பாவிகள் பெலன் இல்லாதவர்கள். பரிசுத்தவான்கள் பெலவீனராய் இருந்தாலும் பெலன் அவர்களுக்கு உண்டு. இந்தப் பெலன் இயேசுவின் நாமத்தில் கிடைக்கிறது. அவர் பெலவீனருக்கு பெலன். வேதத்தில் தேவன் நான் உன்னைப் பெலப்படுத்துகிறேன் என்று வாக்களித்திருக்கிறார். கர்த்தரிலும் அவரின் சத்துவத்திலும் பெலப்படுங்கள் என்று வசனம் சொல்லுகிறது. விசுவாசத்தினால் ஜெபத்தில் பிரவேசித்து நமக்கு உள்ளதை இயேசுவோடு ஜாக்கிரதையாய்ப் பயன்படுத்த ஐக்கியப்படுகிறதினால், பெலவான்களாகிறோம். நமக்கு குறைந்த பெலன்தானுண்டு. அதிக பெலனுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். இயேசுவை இறுகப்பிடித்து முன்னேறி செல்லவேண்டும். நமக்குள் இருக்கும் பெலனைக் கொண்டு சாத்தானுக்கும். பாவத்துக்கும் உலகத்துக்கும் விரோதமாயும், தேவனுக்கும் அவருடைய காரியத்துக்கம் அனுகூலமாயும் போர் செய்ய வேண்டும்.

இன்னும் அதிகமான பெலனுக்காக நாம் முயற்சி செய்ய வேண்டும். தேவன் கொடுப்பதில்லை என்று சொல்கிறதில்லை. அவர் தம்முடைய வாக்குக்கு விரோதமாக நடப்பதில்லை. நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. இப்போதிருப்பதைக் காட்டிலும் நமக்கு அதிகப் பெலன் தேவைப்படுகிறது. அந்தப் பெலனை தேவன் நமக்குச் சம்பூரணமாய்த் தருகிறார். இது பெரிய தேவனுடைய இரக்கம். முன்னே நாம் பெலவீனர்கள். இப்போதோ கொஞ்சம் பெலன் உண்டு. போதுமான அளவு கிடைக்கும் என்று வாக்களித்துள்ளார்.. தேவன் சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவத்தைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லியிருக்கிறது. எவ்வளவு சந்தோஷமானக் காரியம். அவர் பாதத்தில் காத்திரு. அவர் உன் ஆத்துமாவில் பெலனைத் தந்து உன்னைப் பெலப்படுத்துவார்.

கிறிஸ்துவில் பெலன்படு
போர் செய்து எதிர்த்து நில்
சர்வாயுத வர்க்கம் அணிந்து
பேய், பாவம் யாவும் வெல்.

முழுக்குடும்பத்துக்கும்

ஓகஸ்ட் 24

“முழுக்குடும்பத்துக்கும்” எபேசி. 3:14

கிறிஸ்துவின் சபை ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தின் ஒரு பங்கு பூலோகத்திலும், மறுபங்கு பரலோகத்திலும் இருக்கிறது. ஒரு பங்கு இன்னும் தோன்றவில்லை. இக்குடும்பம் முழுவதற்கும் பிதாவானவரே தேவன்.தேவன் தன் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு பிள்ளையையும் காப்பாற்ற அவர்கள்மேல் மனதுருகுகிறார். ஒவ்வொருவரையும் அருமையானவர்களாய் எண்ணுகிறார். ஒருவனையும் அவர் தள்ளமாட்டார். இயேசு எல்லாருக்கும் பரிகாரியாக இருப்பதால், பிணையாளி ஒருவன் இல்லை என்று முறையிட அவசியம் இல்லை. ஒரு குடும்பமாக நம்மை ஏற்றுக்கொள்ள நாம் பரலோகத்தின் தூதர்களிலும் மேற்பட்டவர்களல்ல. அவர் முழு குடும்பத்தையும் ஒன்றுபோல் நேசித்து, மீட்டு, புத்திரசுவிகாரமாக்கினார்.

தமது சபையை முழுவதும் பரிசுத்தமும், பாக்கியமுமாக்கும்படி நிர்ணயத்திருக்கிறார். குடும்பத்தினரின் ஒவ்வொருவருடைய பேரும் ஜீவ புத்தகத்தில் எழுதியிருக்கிறது. இவர்களை இரட்சகர் தமது உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். பரலோகமே இந்தக் குடும்பத்தின் வசந்த மாளிகை. நம்முடைய பிதாவின் வீடு. பிதாவானவர் நமக்குக் கொடுத்த ஈவு. நமக்காக உலகம் உண்டாகும்முன்னே அவர் ஆயத்தப்படுத்தியிருக்கிறார். அதைச் சந்தோஷமாக நமக்குக் கொடுக்கிறார். நாம் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் ஒன்று. ஒரே குடும்பம். இந்த ஆவியின் ஐக்கியத்தைச் சமாதானத்தோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்குச் செய்தது நமக்குச் செய்ததென்று இரட்சகர் சொல்கிறார்.தேவ பிள்ளைகளைச் சேதப்படுத்துவது இரட்சகரையே சேதப்படுத்துவதாகும். தலையானது அவயங்களோடு சேர்ந்து துன்பத்தைச் சகிக்கிறது. பிதாவானவர் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்.

கர்த்தாவே நான் உம்முடையயோன்
என்று சொல்ல செய்யும்
நீர் என் சொந்தம் என்
ஆத்துமா பிழைத்து வாழ்ந்திடும்.

அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்

ஓகஸ்ட் 15

“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9

பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.

இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.

இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.

நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல

ஒகஸ்ட் 11

“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” யோவான் 13:34

இயேசுவின் சிநேகத்தை எவ்வளவாய் ருசித்தாலும் அது போதாது. அது எவ்வளவோ இனிமை நிறைந்தது. நாம் அவரைத் தெரிந்து கொள்ளுமுன்பே அவர் நம்மை நேசித்தார். அவர் நம்மேல் அன்பாயிருந்தபடியால் தேவதூதர்களுடைய சுபாவத்தைத் தரித்துக் கொள்ளாமல், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டு நம்முடைய பாவங்களுக்கு பலியாக மரித்தால் தம் அன்பை காட்டுகிறார். நம்முடைய ஆத்தும சத்துருவை ஜெயித்தாலும், நமக்கு முன்னோடியாக பரமேறியதாலும், தம் அன்பை காட்டினார். பரிசுத்தாவியானவரை அனுப்பியதாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவராய் இருப்பதாலும் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் செய்து வருகிற ஒவ்வொன்றிலும் தமது அன்பைக் காட்டுகிறார். தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த நம்மைக் கண்டு, தமது பிள்ளைகளாக்கினார். பாவிகளாகிய நம்மைக் கண்டு மனதுருகுகிறார். ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாதுகாக்கிறார். தமது அன்பினால்தான் நாம் தவறு செய்யும்போது நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். அலைந்து திரிந்தாலும் திரும்பவும் நம்மை அவர்பக்கம் கொண்டு சேர்க்கிறார். அவர் அன்பாயிருப்பதினால் நம்மை இரட்சிக்கிறார். நமக்கு அவசியமான எல்லாவற்றிலும் நன்மையால் நிரப்புகிறார். அவர் மணவாளனாக திரும்பவும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக்கொள்வதும் அவரின் பெரிய ஆழமான அன்பைக் குறிக்கும். பாவம் செய்பவர்களை விட்டுவிட்டு தம்முடைய பிள்ளைகளைத் தமது மகிமையில் நிரப்ப அழைத்து செல்வார். அவரின் சிங்காசனம்முன் நம்மை உயர்த்துவார். மகிமை நிறைந்த இரட்சகரே, உம்முடைய அன்பு அறிவுக்கு எட்டாதது.

கர்த்தாவே உமதன்பு
அளவில் எட்டாதது
அது கறையில்லா மகா
ஆழமான சமுத்திரம்.

Exit mobile version