செப்டம்பர்

முகப்பு தினதியானம் செப்டம்பர் பக்கம் 3

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.

அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்

செப்டெம்பர் 07

“அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்…… என்கிறார்கள்” யோபு 21:14-15

அக்கிரமக்காரர் இப்படிச் சொல்லுகிறார்கள். தேவ சமுகம் அவர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. தேவன் இல்லாமல் வாழ்வது இவர்களுக்கு அதிக பிரியம். தேவன் ஒருவர் இருக்கிறபடியால், அவர் தங்களைவிட்டுத் தூரமாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். நீங்களும் அப்படியே இருந்தீர்கள். உங்கள் முன்னிலைமையும் அப்படியே இருந்தது. இப்பொழுதுதோ தேவ சமுகத்தை விரும்புகிறீர்கள். இது தேவனுடைய அன்பினால் உண்டானது.

தேவனுடைய மகிமையைக் கண்ட நீங்கள், அவரின் அடைக்கலத்திற்குள் இருக்கிறபடியால் உங்களுக்கு ஒன்றும் கேடானதுநேரிடாது என்று அறிந்திருக்கிறபடியால் உலகிற்கு வெளிப்படுத்தாத விதமாய் உங்களுக்குத் தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். நீங்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டு விலகி இரும் என்று சொல்லாமல், என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாய் இருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்பீர்கள். தேவனே, எங்களைவிட்டு விலகி இரும் என்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டு பிசாசுக்கும், அவன் தூதருக்கும், ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிற நித்திய அக்கினிக்கும் போங்கள் என்று அவர் சொல்வதை ஒரு நாள் அவர்கள் கேட்பார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கும் எங்கள் இருதயத்துக்கும் அவர் வந்து தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைப் பார்த்து, வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலக தோற்றத்துக்கு முன்னே உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள் என்று அவர் அழைப்பார்.

தேவனைப் பார்த்து நான்
என்னிடம் இருப்பேன் என்பேன்
என் இருதயத்தில் வாசஞ்செய்து
என்னை முழுதும் ஆண்டுக்கொள்ளும்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை

செப்டம்பர் 15

“அவர் கையைத் தடுக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை” தானி. 4:35

தேவனுடைய கை என்பது அவருடைய செயல். அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் விளங்கும் அவருடைய ஞானம், வல்லமை, மகத்துவம் போன்றவைகளே. அவுருடைய நோக்கத்தை அறிந்து கொள்ள ஒருவனாலும் கூடாது. அவர், தமது நோக்கத்தை உறுதியாய்ச் கொண்டு செயல்படுகிறார். எக்காரியமாயினும் அவர் மிகவும் எளிதாக முடித்துவிடுவார். அவர் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் அவருடைய கரங்களில் இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் பாதுகாப்பாக இருக்கிறபடியால் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காக அவருடைய கரம் கிரியை செய்கிறபடியால் சேதமின்றி வாழ்கின்றனர். அவர் தம்முடைய வசனங்களுக்கேற்பத் தமது செயல்களை நடப்பிக்கிறார்.

அவர் சொன்னது சொன்னபடி நிறைவேற வேண்டும். நாம் நம்மை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டால் சுகபத்திரமாயிருக்கலாம். அன்பானவர்களே, தேவனுடைய கரம் உங்கள்மேல் உயர்ந்திருக்குமானால், உங்களுக்கு ஒரு குறைவும் வராது. அவருடைய கைகள் உங்களைத் தாங்குகிறபடியால் நீங்கள் விழமாட்டீர்கள். அவருடைய கரத்தின் செயல்கள் யாவும் உங்களுக்கு நம்மையாகவே முடியும் என்று விசுவாசியுங்கள். உங்களுடைய சத்துருக்களிடமிருந்து அவருடைய கை உங்களை மீட்கும். உங்களை ஆதரித்து, உங்கள் குறைவுகளை நிறைவாக்கும் வனாந்தரத்தில் நடந்தாலும் அவருடைய கரத்தால் நீங்கள் காக்கப்பட்டு உயர்த்தப்படுவீர்கள். அனைத்தையும் அவருடைய கரம் ஒழுங்குபடுத்தும். சொல்லிமுடியாத அன்பினால் அவருடைய உள்ளம் நிறைந்திருக்கும். உங்களுக்காக அவர் செயல்படும்பொழுது, எவராலும் அவரைத் தடுத்து நிறுத்தமுடியாது.

தெய்வ கரங்கள் தாமே உனை
பெலப்படுத்தி என்றும் காக்கும்
தம் வாக்குகளை நிறைவேற்றி
எப்போதுமவர் வெற்றிதருவார்.

My Favorites

என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்

நவம்பர் 27 "என்னைக் கழுவியருளும் அப்போது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்" சங். 51:7 தாவீது பெரும் பாவத்தைச் செய்து பாதகமானதை நடப்பித்தவன். தன் பாவம் கொடுரமானது என்று அவனே நன்கு அறிவான். அதை அறிக்கையும்...
Exit mobile version