நானே வழி

யூன் 26

“நானே வழி.” யோவான் 14:6

இந்த வசனம் ஒரு நல்ல உவமானம். இரட்சகர் நமக்குத் தேவை எனக் காட்டுவதற்கு இந்த உவமானத்தைப் பயன்படுத்துகிறார். நாம் தேவனுக்குத் தூரமானவர்கள். நாம் பாவிகளானதால் தேவனால் அங்கீகரிக்கப்படுவதற்குச் சுபாவப்படி வழி இல்லை. ஆனால் இயேசுவோ நமக்கு மத்தியஸ்தராகி நம்மைப் பிதாவிடம் வழி நடத்தும் வழியானார். இந்த வழிதான் நம்மைப் பாவத்திலிருந்தும், பரிசுத்தத்திற்கும், கோபாக்கினைக்குரிய பயத்தினின்று நித்திய சிநேகத்திற்கும் நம்மை நடத்துகிறது. தேவனை அறிவதற்கும், தேவனோடு ஒப்புரவாகுதற்கும், தேவனால் அங்கிகரிக்கப்படுவதற்கும், தேவனோடு சம்பந்தப்படுவதற்கும், தேவனை அனுபவிப்பதற்கும், தேவனுக்கு ஒப்பாவதற்கும், தேவ சமூகத்தண்டையில், அவர் மகிமையண்டைக்கும் நடத்த இயேசுதான் வழி.

எல்லாப் பாவிகளுக்கும், அவரை ஏற்றுக்கொள்ளுகிற யாவருக்கும் அவர் வழியாகத் திறக்கப்பட்டுள்ளார். அவரை நம்புகிற யாவருக்கும் அவரே நல்வழி. வரப்போகிற ஆக்கினைக்குத் தப்ப ஓரே வழி. ஆனால் நாமோ சுபாவப்படி அவர் வழியை விட்டு விலகிப்போனோம். ஆவியானவர் இதை நமக்கு உணர்த்துகிறார். இயேசுவைப் போலொத்த வழிதான் நமக்கு வேண்டுமென்று அறிகிறோம். விசுவாசத்தினால் அந்த வழிக்கு உட்படுகிறோம். கண்ணீரால் அந்த வழியை நனைக்கிறோம். அந்த வழியில் நாம் பிரயாணப்படவேண்டும். அவர் வழியில் செல்லும் எவரும் சுகத்தோடு தாங்கள் சேரும் இடம் அடைவர். அன்பர்களே! நாம் நிற்கிற இடம் நல்ல இடம். நாம் நடக்கிற பாதை நேரானது. நாம் தொடங்கி இருக்கும் பயணத்தின் முடிவு நித்திய ஜீவன்.

நீரே வழி உம்மால்தான்
பாவம் மாம்சம் ஜெயிப்பேன்
உம்மையன்றி பிதாவிடம்
சேரும் வழி அறியேன்.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு

யூன் 22

“ஜீவ வசனத்தைப் பிடித்துக்கொண்டு.” பிலி. 2:14

சுவிசேஷத்தைப் பிடித்துக்கொண்டு கிறிஸ்துவானவரைக் குறித்த வாக்குத்தத்தத்திலும் அவருடைய கிரியையிலும் உள்ள ஜீவனை இது வெளிப்படுத்துகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்டவர்களுக்கு ஜீவனை தேவனுடைய இலவச ஈவாகக் கொடுக்கிறது. வசனம் ஆவியானவரின் வல்லமையினால் ஜீவனை அளிக்கப் பயன்படுகிறது. இந்த ஜீவ வசனம்தான் தேவ தயவிலும், கிறிஸ்துவின் ஐக்கியத்திலும், ஆவியானவரைப் பெறுவதிலும், ஜீவ வழியில் சேர்ப்பதிலும், ஆக்கினைத் தீர்ப்புக்கு விலக்குவதிலும், நித்திய மகிமைக்கு சேர்ப்பதிலும் நம்மை நடத்துகிறது. இந்தச் சுவிசேஷம் நமக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்காக நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வசனத்தை நாம் அந்தகாரத்தில் வெளிச்சத்தைப்போலவும், பசியினால் வருந்தும் பாவிக்கு உணவுப்போலவும், ஆயுள் குற்றவாளிக்கு மன்னிப்புப்போலவும், மீட்கப்பட்டவர்களுக்கு சட்ட நூலாகவும் தூக்கிப் பிடிக்க வேண்டும். தேவ ஊழியத்தில் பரிசுத்த நடத்தையாலும், கனியுள்ள வாழ்க்கையினாலும், அதைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். அன்பர்களே, சுவிசேஷத்தை ஜீவனுள்ள வசனமாக ஏற்றுக்கொள்வோமாக. அதைப் பிறர்க்குச் சொல்லுவது நம்முடைய கடமையென்று எண்ணுவோமாக. அந்தக் கடமையைச் சரியானபடி நிறைவேற்றுகிறோமா என்று நம்மை நாமே கேட்போமாக. அச்சிட்டுள்ள அவர் வசனத்தை வாங்கிப் பிறர்க்குக் கொடுப்பதினாலும் அவ்வாறு செய்பவர்களுக்கு உதவி செய்வதினாலும் ஜீவ வசனத்தைத் தூக்கிப் பிடிப்போமாக.

நன்றி உள்ளவர்களாய் என்றும்
சேவை செய்வோம் அவருக்கு
நம் இயேசுவைப் புகழ்ந்து
நம்மையே அவருக்குக் கொடுப்போம்.

வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்

யூன் 04

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.” அப். 20:35

கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகள் இவை. நித்தியத்தில் அவரை ஏவிவிட்டதும் பரத்தை விட்டு பூமிக்கு வரும்படி செய்ததும் இன்னும் அவரைத் தூண்டிவிடுகிறதும் இந்த வசனத்தில் உள்ள பொருள்தான். தமது சீஷர்களுக்கு இதை அடிக்கடி சொன்னதால் இது ஒரு பழமொழியாய் மாறி இருக்கலாம். நம்முடைய போதகத்துக்கும் எச்சரிப்புமாக இது எழுதி வைக்கப்பட்டுள்ளது. மனிதர் இதன்படி செய்ய முடியாமல் போனாலும் இது ஒரு சரியான சட்டவாக்காகும்.

வாங்குகிறது என்பது குறைவையும் திருப்திபடாத ஆசையையும் காட்டுகிறது. கொடுக்கிறதென்பது மனநிறைவையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. கொடுக்கிறதில் உதார குணமும் மற்றவர்களின் நன்மைக்கடுத்த கவலையும் வெளிப்படுகிறது. இது தெய்வீகத்தன்மை. அவர் மற்றவர்களுக்கு உதவி செய்யும்படியே நமக்குக் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கு கொடுக்கத்தான் தேவன் நம்மை மீட்டார். நம்மை மகிமைப்படுத்துகிறார். தூய இன்பத்துக்க இது ஊற்று. நாம் அவர் சமூகம் போய், இவ்வார்த்தைகளால் தைரியப்பட்டு, மேலானவற்றை நம்பிக்கையோடு அடிக்கடி கேட்க ஏவப்படும்போது இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைத்துக்கொள்ளக்கடவோம். இதை மற்றவர்களுக்கு ஞாபகப்படுத்தி அவரண்டைப் போக ஏவிவிடுவோமாக. இந்தச் சட்டவாக்கின்படி விவேகமாயும், கபடற்ற விதமாகவும் செய்ய, தடையாயிருக்கும் எல்லாவற்றையும் வெற்றி பெற்று வாழ்வோமாக.

இயேசு தம்மைத் தந்தார்
நமக்குக் கிருபை ஈந்தார்
அவரைப் பின்பற்றிப் போ
அவரைப் போல வாழப்பார்..

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்

யூன் 12

“கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களை மன்னித்தார்.” எபேசி. 4:32

ஆசீர்வதாங்களிலே மிகவும் முக்கியமான ஒன்று தேவன் கொடுக்கும் பாவ மன்னிப்பு. நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டு போயிற்றென்று அறிந்து உணருவது நமக்குக் கிடைத்த பெரிய சிலாக்கியம். நம் தேவன் மன்னிக்கிறவர். இலவசமாய் மன்னிக்கிறவர். அடிக்கடி மன்னிக்கிறவர். மனதார மன்னிக்கிறவர். சந்தோஷமாய் மன்னிக்கிறவர். நியாயப்படி மன்னிக்கிறவர். அவர் மன்னிக்கிறதால் மன்னிக்கப்பட்ட பாவம் மறைக்கப்பட்டுப் போகிறது. இந்த மன்னிப்பு கிறிஸ்துவினால் மட்டுமே கிடைத்த ஒன்றாகும். இது மனந்திரும்புதல், விசுவாசம், நற்கிரியைகள், இவைகளினால் நாம் பெற்றவைகளல்ல. கிறிஸ்துவின் நிமித்தம்மட்டுமே நாம் மன்னிக்கப்படுகிறோம்.

இயேசுவானவர் நம்மை தேவனிடம் சேர்க்கும்படி அக்கிரமகாரருக்காய் நீதிமானால் ஒருதரம் நம்முடைய பாவங்களுக்காகப் பாடுபட்டார். அவர் நம்முடைய பாவங்களுக்காக நிறைவும், பூரணமும் நித்தியமுமான பிராயச்சித்தத்தை உண்டுபண்ணி, தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்து பாவத்தைத் தொலைத்தார். ஆகவே நாம் இயேசுவை விசுவாசித்து, தேவன் தம் குமாரனை குறித்து கொடுத்த சாட்சியை ஏற்றுக்கொண்டு, கிருபாசனத்தைக் கிட்டிச்சேர்ந்து, அவர் நாமத்தைச் சொல்லி பாவ மன்னிப்புக்காக கெஞ்சும்போது தேவன் நமக்கு மன்னிப்பளித்து, தம் குமாரனை மகிமைப்படுத்துகிறார். எந்த விசுவாசிக்கும் மன்கிக்கிறார். எந்த அக்கிரமத்தையும் மன்னிக்கிறார். அவர் பாவங்களையெல்லாம் குலைத்துப்போடுகிறார். எல்லா குற்றங்கக்கும் பாவியை நிரபராதியாக்குகிறார். தேவன் மன்னித்தவரை ஆக்கினைக்குள்ளாக்குகிறவன் யார்? தேவன் தம்மை நீதிமானாக்கினாரே? கிறிஸ்து மனதார நமக்காக மரித்தார். நித்திய மீட்பைச் சம்பாதித்தார். அவர் நிமித்தம் இன்று நாம் தேவனுக்கு முன்பாக மன்னிப்புப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட பாவிகளாக நிற்கிறோம்.

என் பாவம் மன்னிக்கப்பட்டதை
என் நேசத்தால் ரூபிப்பேன்
எனக்குரியது யாவையும்
அவருக்கே படைப்பேன்.

உலகம் அவரை அறியவில்லை

யூன் 16

“உலகம் அவரை அறியவில்லை.” 1.யோவான் 3:1

ஆண்டவர் இயேசு பூமியில் வாழ்ந்தபோது உலகம் அவரை அறியவில்லை. இப்போது மனிதரில் அநேகர் அவரை அறியவில்லை. தேவனுடைய இருதயத்தில் பொங்கி, மாம்சத்தில் வாசம்பண்ணும்படி செய்து அவரைத் துக்கமுள்ளவராக்கின அன்பை அவர்கள் அறியார்கள். கெட்டு, தீட்டுப்பட்டுப்போன மனிதனுக்கு அவர் காட்டுகிற அன்பான குணமும், பட்சமும் அவர்களுக்குத் தெரியாது. அவர்களை ஏற்றுக்கொள்ள அவருக்கிருக்கிற மனதைப்பற்றியும், அவர்களை வழி நடத்த அவருக்கிருக்கும் தீர்மானத்தைப்பற்றியும் அவர்களுக்கு அடைக்கலம் தர அவருக்கிருக்கும் இரட்சிப்பைப்பற்றியும் அவர்களுக்குத் தெரியாது. அவர் எவ்வளவு மகிமையுடையவரென்றும், அவரின் அதிகாரம் எப்படிப்பட்டதென்றும், அவரின் இரத்தத்தின் வல்லமையென்ன என்றும், அவர்கள் அறிவார்கள். அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்றும் எத்தனை பாடுகளை அனுபவித்தாரென்றும், கெட்டுப் போனவர்களை எப்படி இரட்சிக்கிறாரென்றும் அவர்கள் அறியார்கள். கிறிஸ்துவை நேசியாதவனும் விசுவாசியாதவனும் அவரை அறியான்.

அவரை அறிகிற எவரும், அவரை அறிவர். அத்தகையோர் அவர் சொல்வதை விசுவாசித்து, மகத்துவம் உள்ள வழியில் நடந்து அவர் உண்மையுள்ளவரென்றும் மகிழ்வர். இயேசுவை நாம் அறிய வேண்டுமானால், அவர் நமக்கு வெளிப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் மனதுக்கு வெளிச்சம் தந்து, அவரின் தன்மையைக் காட்டி, அவர் வார்த்தையை நம் மனதில் தங்கும்படி செய்வார். இல்லையேல் நாம் அவரை அறிந்துக்கொள்ள முடியாது. நாம் தினந்தோறும் அவரின் மகிமையைக் கண்டு கர்த்தருடைய ஆவியினால் மகிமையின்மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலாக மாற்றப்படுவோமாக.

சுத்த ஆவியை எனக்குத்தந்து
தேவ சுதனை எனக்குக் காண்பியும்
தெளிவாய் என் கண்களுக்கு
அவர் மகிமையை வெளிப்படுத்தும்.

விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்

யூன் 07

“விசுவாசம் அன்பு என்னும் மார்கவசம்.” 1.தெச.5:8

எப்பொழுதுமே நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். சத்துருக்கள் நம்மைச் சூழ்ந்திருந்தார்கள். இரட்சிப்பின் அதிபதி நமக்கு ஆயுதங்களைச் சவதரித்து தந்திருக்கிறார். அந்த ஆயுதங்கள் முழுவதையும் எடுத்து அதைக் கொண்டு நம்மைத் தற்காக்க வேண்டும். அன்பு விசுவாசம் இவைகளால் செய்யப்பட்ட மார்க்கவசத்தை எடுத்து இருதயத்தைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ்விரண்டும் ஆவியானவருடைய சிறப்பான கிருபைகள். விசுவாசம் என்பது தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கை. அன்பென்பது தேவனைப்பற்றும் பாசம். இவை வெவ்வேறானாலும் ஒன்றாய் சேர்ந்திருக்கிறது. தம்மையில் வேறுபட்டாலும் இணைந்திருக்கிறது.

விசுவாசம் எப்போதும் அன்பைப் பிறப்பிக்கும். அன்பு விசுவாசத்தை உறுதிப்படுத்தும். இவ்விரண்டும் இருந்தால் ஒரு கிறிஸ்தவன் எந்தச் சத்துருவையும் எதிர்க்கலாம். விசுவாசம் எப்போதும் கர்த்தராகிய இயேசுவைப் பாவிகளின் இரட்சகராகவும் சிநேகிதனாகவும் ஆண்டவராகவும் பிடித்துக்கொள்கிறது. அன்போ கண்பளுக்குத் தோன்றின தேவனாகவும் கிருபை ஊற்றாகவும் பிடித்துக்கொள்ளுகிறது. விசுவாசம் வாக்குத்தத்தங்களை ஏற்றுக்கொண்டு அவைகளை நம்புகிறது. அன்பு அதிசயத்து அவைகளுக்காய் துதி செலுத்துகிறது. விசுவாசம் நீதிமானாக்கிக் கொள்ள கிறிஸ்துவின் நீதியைத் தரித்துக் கொள்ளுகிறது. அன்போ மகா மகிமை நிறைந்ததாகக் கிறிஸ்துவில் களிகூறுகிறது. விசுவாசம் அனுதின சுத்திகரிப்பாக திறந்த ஊற்றண்டைக்கு நம்மை நடத்திச் செல்லுகிறது. அன்போ ஐக்கியப்பட்ட நம்மை அவர் சிங்காசனத்தண்டை நடத்துகிறது. விசுவாசம் ஆதரவுக்காகக் கிறிஸ்துவை நோக்குகிறது. அன்போ, அவருக்காய் உழைக்கவோ துன்பப்படவோ ஆயத்தமாயிருக்கிறது. விசுவாசம், மோட்சம் நம்முடைய வீடு என்று நமடக்குச் சுட்டிக்காட்டுகிறது. அன்போ அங்கே சீக்கிரம் போக நம்மை ஏவிவிடுகிறது.

விசுவாசம் அன்பும்
எனக்கிருந்தால் போதும்
அப்போது வெற்றி பெற்ற
மோட்ச இன்பம் அடைவேன்.

சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்

யூன் 08

“சகோதரரே நாம் கடனாளிகளாய் இருக்கிறோம்.” ரோமர் 8:12

அபாத்திரருக்குத் தயைக் காட்டுகிறதினால் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் அதிகரிக்கின்றன. சிருஷ்டிகளாக நம்மைப் பார்த்தால் நாம் கடன்காரர். புது சிருஷ்டிகளாய் பார்த்தாலோ இன்னும் பெரிய கடன்காரர். தேவதீர்மானத்தின்படி வாக்குத்தத்தப் புத்தகத்தில் நம்முடைய பேர் எழுதப்பட்டுள்ளதாலும் ஆண்டவரின் ஊழியத்தில் பங்கிருப்பதாலும் அவரின் கீழ்ப்படிதல், மன்றாட்டு, மரணம் இவைகளின் நன்மைகள் நமக்காயிருப்பதினாலும், நாம் தேவ கிருபைக்குக் கடன்பட்டவர்கள். பிராயசித்த, இரத்தத்தால் நீதிக்கு திருப்தி உண்டாக்கி நாம் தேவ கோபத்தினின்று விடுவிக்கப்பட்டதாலும், பிசாசின் வல்லமைக்கு தப்புவதாலும் நாம் அவருக்குக் கடன்பட்டவர்கள்.

அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்துக்கிடந்த பொழுது, நாம் தேவ வல்லமையால் உயிர்ப்பிக்கப்பட்டு, தேவ சித்தத்தைக் கற்று, சுயாதீனத்திற்கும், சுகத்திற்கும் உள்ளானபடியினால் நாம் கடன்பட்டவர்கள். அனுதினமும் நிமிஷந்தோறும் நாம் பெற்றுக்கொள்ளுகிற விலையேறப்பெற்ற நன்மைகக்காகத் தேவனுக்குக் கடன்பட்டவர்கள். அன்பர்களே, நம் கடமையை உணர்ந்துப் பார்ப்போமாக. அன்பு நன்றியறிதல் என்னும் கடமை நமக்குண்டு. ஆகவே நமது பரம பிதாவின் கற்பனைகளை நன்கு மதித்து, ஆண்டவரின் வழிகளைக் கவனித்து, பரிசுத்தாவியானவரின் வழி நடத்துதலுக்கு இடங்கொடுத்து, தேவ வசனத்துக்கெல்லாம் சந்தோஷமாய் கீழடங்குவோமாக. கடனாளிகளாக நம்மைத் தாழ்த்தி, யோக்கியமாய் நடந்து, நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல என்றும், நமது காலமும் பலமும் நமக்கு உரிமையல்லவென்றும் ஒத்துக்கொண்டு எல்லாம் கர்த்தருடையவைகளே என அறிக்கையிடுவோமாக.

நான் மன்னிப்படைந்த பாவி
என் கடன் மகா பெரியது
அவர் செய்த நம்மைக்கீடாக
எதைப் பதிலாய்த் தருவேன்.

உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்

யூன் 01

“உங்கள் அன்பைத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.” 2.கொரி 8:24

தேவனை நேசிக்கிறோமென்று சொல்லியும் நேசியாமலிருந்தால் நாம் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்தவ அன்பு எல்லாவற்றையும்விட கிறிஸ்துவையும் அவர் காரியத்தையும் பெரிதாக எண்ணும். அவரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து அவர் சித்தம் செய்யும். அவர் கற்பனைகள் எல்லாவற்றிற்கும் உண்மையாய் கீழ்ப்படிந்து அவர் பிள்ளைகள் இவ்வுலகில் மேன்மக்கள் என்று அவர்களோடு சந்தோஷப்படும். இந்த அன்புதான் துன்பப்படுகிறவர்களோடு பரிதபிக்கும். எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாயிருக்கும். நாம் உண்மையுள்ள ஜாக்கிரதையுள்ள கிறிஸ்தவர்கள் என்றால் இப்படிச் செய்வோம்.

தேவனுடைய பிரமாணம் இப்படி நம்மை நேசிக்கும்படி செய்கிறது. சர்வ வல்ல பிதா இந்த நேசத்தை நமக்குள் உண்டாக்குவேன் என்கிறார். பரிசுத்த ஆவியானவரால் இந்த அன்பு நம் உள்ளத்தில் ஊற்றப்படுகிறது. இயல்பாகவே நம்மில் அன்பு இல்லாதபோது அவர்தான் தெய்வீக அன்பை ஊற்றுகிறார். அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, விரும்பி தேடப்பண்ணுகிறார். சுவிஷேத்தை விளக்கிக் காட்டி நம்முடைய இருதயத்தில் தேவ அன்பை ஊற்றி அதை உண்;டுபண்ணுகிறார். தேவனோடு தினமும் அவர் ஐக்கியத்தில் நம்மை வழி நடத்திச் செல்லுகிறார். அன்பர்களே, நாம் தேவனையும் அவர் பிள்ளைகளையும் நேசிக்கிறோமென்று சொல்லுகிறோம். அப்படியானால், நல்வசனத்திலும், கிரியைகளிலும் அவர்களுக்கு உதவி செய்து, மற்றெல்லாரிலும் அவர்களை மேன்மையாக எண்ணி அந்த அன்பை நிரூபிக்க வேண்டும். வியாதியில் அவர்களைச் சந்தித்து, வறுமையில் உதவி செய்து, ஒடுக்கப்படும்போது பாதுகாத்து இயேசுவின் நிமித்தம் அவர்களிடத்தில் பட்சமாய் நடந்துகொள்வோமாக.

இயேசுவின் இரத்தம் பெற்றோம்
அதில் காப்பற்றப்பட்டோம்
அவ்விரக்கத்தைக் காட்டுவோம்
அன்பைப் பாராட்டுவோம்.

என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்

யூன் 27

“என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்.” உன். 2:16

பரிசுத்த நிச்சயம் கொண்ட எவரும் இப்படித்தான் சொல்லுவர். கிறிஸ்து பிதாவினால் பாவிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் தான் தேவன் கொடுத்த சொல்லி முடியாத ஈவு. விசுவாசம் அதை ஏற்று அங்கிகரிக்கிறது. கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறது பயபக்தியான அர்ப்பணிப்பால் உறுதிப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொள்கிறவர்கள் அவருடையவர்களாயிருப்பர். அவருடையவராக மட்டும் இருப்பேன் என்று வாக்குக் கொடுக்கின்றனர். இது பரிசுத்த ஐக்கியத்தால் உறுதிப்படுகிறது. கிறிஸ்து தன்னுடையவர் என்று சொல்லுகிறவன் அவரோடு ஐக்கியப்பட்டவனாய் ஜீவிக்கிறான். என் நேசர் நாம் விசுவாசித்து நம்கும் இரட்சகர். நான் மதித்து நேசிக்கிற தெய்வம். நான் வணங்கி கீழ்ப்படிகிற ஆண்டவர். என் மனமும், யோசனையும் பற்றிப் பிடித்துக்கொள்ளும் அவருமையானவர். நான் என் நேசருடையவள். அவர் என்னைத் தெரிந்துகொள்ளாமல் போயிருந்தால் நான் அவரைத் தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருப்பேன்.

அவர் என்னை மீட்டார். இல்லாவிட்டால் நான் இன்னும் அடிமையாகவே இருப்பேன். அவர் என்னை அழைத்தார். இல்லாவிட்டால் தேவனை விட்டு இன்னும் அலைந்து திரிகிறவனாயிருப்பேன். அவர் என்னைப் பரிசுத்தப்படுத்தினார். இல்லாவிட்டால் அவர் மகிமையை இன்னும் காணாதிருப்பேன். நான் என் நேசருக்கு மனையாட்டியின் தோழி. நான் அவரின் பங்கு. அவரின் மகிழ்ச்சி. அவரில் வெற்றி பெற்று கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களில் மிமையான கிரீடம். அன்பர்வளே! இந்த நிச்சயத்தைப் பெற்றுக்கொள்ளப்பாருங்கள். அவர் என்னுடையவர், நான் அவருடையவன் என்று உண்மையாகச் சொல்லும்வரைக்கும் ஓயாதேயுங்கள்.

இயேசுவே என் சொந்தம்
அவரில் சுகம், ஜீவன் அடைவேன்
நான் அவருடையோன் ஆகவே
மணவாட்டிப்போல் களிப்பேன்.

My Favorites

தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே

ஜனவரி 03 "தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே"  1.தீமோ 2:5 மனுஷன் அநேக மத்தியஸ்தர்களை ஏற்படுத்திக் கொள்கிறான். மத்தியஸ்தர் ஒருவர்தான். தேவன் ஒருவரைத்தான் அங்கீகரித்திருக்கிறார். ஒரே மத்தியஸ்தர் போதும். இயேசு கிறிஸ்துதான் அந்த ஒருவர். அவர்...
Exit mobile version