Home Blog Page 5

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

அப்பழம் உண்ணாதே என்று சொல்லி
ஆண்டவர் கட்டளை ஒன்றைக் கொடுத்திருந்தும் ஆ… ஆ….
கட்டளை மீறிய காரணத்தால்
எம்மைத் தொட்டது தொடர்ந்தொரு பாவங்களே ஆ… ஆ….
பாவத்தின் சம்பளம் மரணம் என்றார்
கர்த்தர் பாவியை இரட்சிக்க விரைந்து வந்தார்
பாடுகள் வேதனைத் துயர் அடைந்தார்
இயேசு பாவத்தைச் சிலுவையாய் சுமந்து வந்தார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இத்தனை கொடுமைக்கும் ஆளாகி
இயேசு இரக்கத்தின் தேவனாய் உயிர்த்தெழுந்தார் ஆ… ஆ….
மனுக்குலம் காத்திட மறுபடியும்
தாம் வருவதாய் கூறியே இறையானார்

சத்தியம் மண்ணில் நிலைத்திடவே
எங்கள் நித்திய தேவனும் அவதரித்தார் ஆ… ஆ….
பத்தியமாகவே மருந்தளித்து
பாவ நோயினைத் தீர்க்கவே இரங்கி வந்தார்
சத்தியம் மண்ணில் நிலைத்திடவே

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மனுக்குலம் காக்கப் பிறந்திட்ட இயேசு
மரித்தபின் உயிர்த்தெழுந்தார்
மறுபடி மீண்டும் வருவதாய் சொல்லி
மாமறை வேதம் தந்தார்
திரு மாமறை வேதம் தந்தார்

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
திருமறை கூறும் சீரிய கருத்தினைச்
சிந்தையில் ஏற்றிவிடு
அழிவில்லா ஆனந்த ஜீவனை நீயும்
அவருக்காய் கொடுத்துவிடு
உன்னை அவருக்காய் கொடுத்துவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
நினையாத நேரத்தில் திருமணவீட்டுக்குள்
மணவாளன் வருவதைப் போல
மறுபடி வருகின்ற மனுக்குல வேந்தனின்
வருகையைக் காத்து இரு
அவர் வருகையைக் காத்து இரு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு நீ ஓடியே வந்துவிடு

அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
அழைக்கின்ற தெய்வத்தின் அன்புக்கு நீயும்
அடிமையாய் சென்றுவிடு
உனக்கென்று வழியைக் காட்டிய இயேசுவின்
நாமத்தைத் தொழுதுவிடு
அவரின் நாமத்தைத் தொழுதுவிடு

இருகரம் நீட்டி அழைக்கின்ற தெய்வம்
இயேசுவைப் போல் உண்டோ
ஒருமுறை அவரின் அன்பினைக் காண
ஓடியே வந்துவிடு
நீ ஒடியே வந்துவிடு
நீ ஓடியே வந்துவிடு

ஆயனே தூயனே வாரும்

ஆயனே தூயனே வாரும்
இந்த பாவியை உம் மந்தையில் சேரும்
பாவியை உம் மந்தையில் சேரும்
பாதைகள் மாறியே போனேன்
உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே
உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
மானிடர் சுமைகளை சிலுவையாய்
நீர் சுமந்ததை இப்புவி அறியுமே
கேளுங்கள் தரப்படும் என்றவர்
நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
நெஞ்சிலே நிம்மதி இல்லையே
உம்மைக் கெஞ்சினேன் ஆறுதல் தாருமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
வஞ்சகர் வலைதனில் மாயமே
அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே
தாயினை மிஞ்சிடும் அன்பையே
உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ……. ஓ…….

இயேசுவே நாதரே வாரும்
எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்
பாடலின் வேண்டுதலைக் கேளும்

அன்புள்ள மானிடனே

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

அழைக்கின்ற தெய்வம் இவர் போல
இந்த உலகத்தில் கிடையாது
அடைக்கலம் கொடுக்கின்ற தெய்வமவர்
அவர் அண்டையில் சென்றுவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

மானிடன் செய்யா அற்புதத்தை
இவர் செய்தே காட்டியவர்
மரித்தபின் உயிர்த்த தெய்வமென்று
இவர் மகிமையைப் பாடிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உன்னைப் போலவே பிறர் மீதும்
நீ அன்பினைக் காட்டிவிடு
இதுவே இயேசுவும் விரும்புவது
என்று இன்றே மனந்திரும்பு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

உள்ளத்தில் இருக்கும் தேவனுக்கு
உன் உடம்பே ஆலயமாம்
அந்த உடலினை வீணே கெடுக்காதே
உன் பழக்கத்தை மாற்றிவிடு

அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு
அன்புள்ள மானிடனே
உன் அறிவுக்கு வேலை கொடு
ஆண்டவர் இயேசுவிடம்
உன் உள்ளத்தைக் கொடுத்துவிடு

ஜீவனுள்ள தேவனே

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வாழ்வு என்ற பயணத்தில் –நான்
வழி தவறிச் சென்றேனே
வாழ்வு என்ற பயணத்தில் – நான்
வழி தவறிச் சென்றேனே
பாவச் சேற்றில் எனை மீட்ட
பரமன் உம்மைத் துதிக்கின்றேன்
பாவச் சேற்றில் எனை மீட்ட பரமன்
உம்மைத் துதிக்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மறைந்தாலும் – உமது
வார்த்தை என்றும் மாறாது
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்
கிருபை நிறைந்த கர்த்தாவே – உம்
வருகைக்காக காத்திருப்பேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
உயிர்த்தெழுந்த இயேசுவே – உமது
மகிமை சொல்லிப் பாடுகிறேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்
தினமும் உமது நாமத்தை – நான்
ஜெபித்துக்கொண்டே வாழ்கின்றேன்

ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே
ஜீவனுள்ள தேவனே – எந்தன்
பாவங்களைத் தீருமே

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை

பரிசுத்த ஆண்டவரே என் பாவத்தை மன்னியுங்கள்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
கண்கள் குருடாகி என் காலத்தைக் கழித்துவிட்டேன்
உம்மை அறியாமல் ஒரு ஊதாரியாய் இருந்தேன்
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே
கண்கள் திறந்தீரே என் கவலைகள் தீர்த்தவரே

உமது அடிச்சுவட்டில் புதிய வாழ்வைத் தொடங்குகிறேன்
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
சத்திய வழி நீரே நித்திய ஜீவனும் நீரே ஐயா
இறப்பின் விடுதலையை உலகில் மெய்ப்பித்த இரட்சகரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே
தந்தையின் வழிகள் என் வழியெனச் சொன்னவரே

வேதத்தின் பொருள் நீரே – ஜீவ நாதத்தின் ஒளி நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
பரிசுத்த ஆவியினால் பிறந்த தேவகுமாரனும் நீரே
தவத்தின் தலைவராகி எம்மைக் காத்திட வந்தவரே
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ
உள்ளக் கோவிலிலே என்றும் உறைந்திட வாரீரோ

மந்தைக் கூட்டத்துக்குள் நானும் சிந்தையைப் பறிகொடுத்தேன்
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
தந்தையே எனை மேய்க்கும் தலைவனும் நீரே ஐயா
மன்னுயிர் காத்திடவே செஞ்சிலுவை சுமந்தவரே

என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்
என்னுயிர் நீரே ஐயா இயேசு நாதனே நேசிக்கிறேன்

நல்ல நேரம் வந்து அழைத்தது

நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது
என்னைத் தேவனோடு இணைத்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
உள்ளம் தூய்மையோடு சிரித்தது
ஊமைக் கோபம் ஓடி மறைந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
தினம் இயேசு பாதம் நினைத்தது
மனம் மாறி நெஞ்சம் துதிக்குது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நெஞ்சில் பாவம் ஓடி மறைந்தது
கர்த்தர் வார்த்தை நெஞ்சில் பதிந்தது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வார்த்தை தேவனாக இருந்தது
ஜீவ நாதமாக ஒலித்தது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
வானம் பூமி மாறிப் போனாலும்
தேவன் வார்த்தை என்றும் மாறாது
நல்ல நேரம் வந்து அழைத்தது….

அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
அருள் வேதநூலைப் படித்திடு
இருள் நீங்கி ஞானம் அடைந்திடு
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது
கனிவோடு பேசும் மொழியிது
பணிவோடு தேடும் வழியிது

நல்ல நேரம் வந்து அழைத்தது….
என்னைத் தேவனோடு இணைத்தது

Mulmudi Mudi Sumanthu – முள்மூடி முடி சுமந்து

முள்மூடி முடி சுமந்து
நீர் முதுகில் சிலுவைகொண்டு
கல்வாரி மலைமீது
நீர் தள்ளாடி நடந்தது ஏன்
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
பொல்லாத மானிடரை
நீர் இரட்சிக்க வந்தீரோ
கர்த்தாவே கதறுகின்றேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா
இங்கு கல்லான இதயங்களில்
கண்ணீர் வந்திடவில்லை ஐயா

கண்கெட்ட குருடர்களும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
குஷ்டம் வந்த ரோகிகளும்
உமது கைதொட்டு சுத்தமாகினார்
செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே
அன்று செத்தவரும் எழுந்திருந்து
தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே

அத்தனையும் செய்த உம்மை
பின்பு சித்ரவதை செய்தது
ஏன் கர்த்தாவே கதறுகிறேன்
அந்தக் காட்சியை நினைக்கின்றேன்
கல்லடியும் கசையடியும்
வாய்ச் சொல்லடியும் ஏற்றது ஏன்
ஐயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய்
இவற்றைத் தாங்கித் தவித்தீரோ
இன்னும் நாம் உணரவில்லை
மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை

அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம் ஆண்டு கட்டப்பட்டது. தினமும் 20,000 பணியாட்கள் வேலை செய்ததாகவும், இதைக் கட்டி முடிக்க 22 ஆண்டுகள் சென்றதாகவும் சரித்திரம் கூறுகிறது. வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில், மிக விலையுயர்ந்த பலவித வண்ணக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இச்சிறந்த கட்டிடத்தின் மேன்மை இதன் கட்டிடக்கலை நுட்பத்தையோ, கைவன்மையையோ, செலவிட்ட பொருட் செல்வத்தையோ சார்ந்ததாயிராமல், அது கட்டப்பட்ட நோக்கத்தையும் சார்ந்துள்ளது. மன்னன் ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மீது வைத்திருந்த அன்பின் நிமித்தம், அவளுக்காக எழுப்பின ஒப்பற்ற அன்பின் சின்னமே இந்த தாஜ்மகால் ஆகும். இந்த அன்பின் உன்னத சின்னத்தைக் கண்டுகளிக்க இன்றும் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் திரண்டு வருகின்றனர்.

அன்புடையீர்! உலகில் மிகச்சிறந்த அன்பின் சின்னம் எது என்று அறிந்திருக்கிறீர்களா? அது மூன்று முக்கிய கண்டங்கள் சந்திக்கும் இஸ்ரவேல் நாட்டிலுள்ள எருசலேம் என்னும் நகரில் உள்ள கல்வாரி என்ற குன்றில் உள்ளது. இது ஆச்சரியமாக உள்ளதா? அந்த இடத்தை நீங்கள் எப்பொழுதாகிலும் கண்டிருக்கிறீர்களா? இப்பொழுது வாருங்கள்! நாம் போய், அந்த அன்பின் சின்னம் என்னவென்று கண்டு, அவ்வன்பில் திளைத்து இன்புறுவோம்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, அந்தக் கல்வாரிக் குன்றில் சரித்திரத்தின் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி காலத்தையும், சரித்திரத்தையும், மனுமக்களையும் இரு கூறுகளாகப் பிரித்துள்ளது. “நாம் பாவிகளாய் இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:8). “பிதாவாகிய தேவன் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள்”(யோவான் 3:1). இந்த இறை வசனங்கள் கூறும் உண்மைகளாவன:

01. மனிதர்களாகிய நாம் அனைவரும் பாவ மக்களாக உள்ளோம்.

நாம் அனைவரும் பாவம் செய்து தேவ மகத்துவத்தை இழந்து விட்டோம்.(ரோமர் 3:23) என் இருதயம் சுத்தமாக இருக்கிறது. நான் பாவங்களுக்கு விலகி தூய்மையாயிருக்கிறேன் என்று சொல்லக் கூடிய மனிதர் எவரேனும் இவ்வுலகில் உண்டோ? இவ்வுலக மக்கள் அனைவரும் தூய, நீதியுள்ள தேவனுக்கு முன்பாகக் குற்றம் புரிந்தவர்களாகவே உள்ளனர். ஒரே மனிதனாலே (படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆதாம் மூலமாக) பாவமும், (அந்த) பாவத்தினாலே, மரணமும் உலகத்தில் பிரவேசித்தது”(ரோமர் 5:12) என்றும், “பாவத்தின் சம்பளம் மரணம்”(ரோமர் 6:23) என்றும் திருமறை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

02.தேவன் இத்தகைய மனுமக்களையும் நேசித்து அன்பு கூறுகிறார்.

என்ன ஆச்சரியம்! நாம் பாவிகளும், துரோகிகளுமாக இருப்பினும், பெரும் பாதகர்களாக நாம் இருப்பினும், தேவன் அளவு கடந்து நம்மீது அன்பு கூறுகிறார். தேவன் அன்பு கூறுபவராகவே இருக்கிறார். இதுவே தேவனுடைய பண்பு. நம்மில் உள்ள பாவத்தையோ பாவத் தன்மையையோ அல்ல, கொடும் பாவியாக உள்ள நம் அனைவரையும் அவர் அன்பு கூர்ந்து நேசிக்கிறார். அவர் பாவத்தை மன்னித்து நமக்குப் புதியதோர் வாழ்வை அருளும்படி காத்து நிற்கிறார். இதற்காகத் தம்மண்டை வரும்படி நம்மை அழைக்கிறார்.

03.இயேசு கிறிஸ்து பாவிகளாக இருக்கும் நமக்காகவே மரித்தார்.

தேவன் அன்புள்ளவராக மட்டுமல்ல, நீதியும் தூய்மையுள்ளவராகவும் இருக்கிறார். தூய்மை, நீதி, நேர்மை, அன்பு ஆகிய இம் மூன்று பண்புகளும் சரிசமமாகவே அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. இதனிமித்தம் அவர் பாவத்தை அவசியம் தண்டித்து, நீதியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும். “ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது” (எபி 9:27). இதுவே பாவத்துடன் மரிக்கும் மனிதருடைய மாற்றமில்லா முடிவாகும். தேவன் பாவத்திற்கு கொடுக்கும் நீதியான தீர்ப்பு, நித்திய மரண தண்டனையாகிய நரகமே.

ஆயினும், தேவன் துதிக்கப்படத்தக்கவராக உள்ளார். அவர் மனிதர்களாகிய நம்மீது வைத்துள்ள பெரிதான அன்பினிமித்தம் பாவிகளாகிய நாம் தேவ தண்டனைக்குத் தப்பித்துக் கொள்வதற்கான ஒரே நல்வழியை உருவாக்கியுள்ளார். “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16). மெய்தேவனுடைய ஒரே பேறான குமாரனே, கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து. உங்களையும் என்னையும் போல அவர் ஒரு மனித சரீரம் எடுத்துக் கொண்டு, ஒரு கன்னியின் வயிற்றில் பாவம் அற்றவராக பிறந்து, தூய வாழ்க்கை நடத்தி, உலக மக்கள் யாவருக்கும் பதில் ஆளாக சிலுவை மரத்தில் மரித்து ஜீவபலியானார்.

அவர் தம் சொந்த சரீரத்தில் நம் அனைவரின் பாவ சாபங்களையும் ஏற்றுக் கொண்டு, கல்வாரிக் குன்றில் நாட்டப்பட்ட சிலுவை மரத்தில் நமக்காகவே மரித்தார். பாவத்தினிமித்தம் நாம் பெறவேண்டிய தண்டனையாகிய மரணத்தையும், நரகவேதனையையும் தாமே சுமந்து தீர்த்தார். அவரே நமது பாவங்களைக் கழுவுவதற்கென்று கிருபையின் ஆதாரமாகி பலியானார். நமது பாவங்களைக் கழுவிச் சுத்திகரிக்க அவர் சிலுவையில் தமது தூய இரத்தத்தைச் சிந்தினார். “இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம்(நமது) சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்”(1யோவான் 1:7).

ஆம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து நமது பாவங்களுக்காகவே மரித்தார். ஆயினும் அவருடைய மரணத்தோடு எல்லாம் முடிவடைந்து விடவில்லை. அடக்கம் செய்யப்பட்ட அவர், மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, பலருக்கும் காட்சியளித்து, தாம் உயிரோடுள்ளதை உறுதிப்படுத்தினார்.

மற்றும் அநேக உறுதியான செயல்களினால் தாம் உயிரோடு எழுந்துள்ளதை நிரூபித்துக் காட்டி, விண்ணுலகம் போனார். அங்கு தம்முடைய மாட்சிமையிலும், மேன்மையிலும் தேவனுடைய ஆசனத்தின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவே எல்லோருக்கும் ஆண்டவர்! இயேசுக்கிறிஸ்துவை அண்டிக்கொள்ளும் அனைவருக்கும், அவருடைய சிலுவைப் பலியினால் பாவ மன்னிப்பாகிய மீட்பு உண்டு.

இவ்வுலகில் மெய்யன்பின் உன்னதச் சின்னம், கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து பாவ மனிதனுக்குப் பதிலாகப் பலியான சிலுவை தான். “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது: நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாக இருக்கையில், கிறிஸ்து நமக்காக மரித்ததினால், தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”(ரோமர் 5:7,8).

இது தகுதியற்ற நம் ஒவ்வொருவருக்காகவும் காண்பிக்கப்பட்ட இறையன்பு,

இறைவன் தம்மையே மரணத்தில் ஊற்றிவிட்ட அன்பு, உங்களையும் என்னையும் கவரும் அன்பு, நம் அனைவரின் பாவத்திற்காக மரித்துப் பலியான அன்பு, இந்த சிலுவை மரணமே மெய்யான அன்பின் சின்னம், ஒப்பற்ற அன்பின் சின்னம்!

அந்த சிலுவையில் தம்மை ஒப்புவித்த ஆண்டவராகிய இயேசுக்கிறிஸ்துவிற்கு முன் நீங்களும் அடிபணிவீர்களா? அவ்வாறு பணிவீர்களாயின் உங்கள் பாவம் நீங்கி, பாவத்திற்காக வரும் தண்டனையாகிய நரக ஆக்கினையாவும் விலக்கப்பட்டு, இரட்சிக்கப்படுவீர்கள். இந்த மகா அன்பின் சின்னத்தின் மேன்மைதான் எவ்வளவோ!

ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும் பாரம் குறையாமல் தவிக்கிறோம்.

மனிதனுக்கு ஏன் இந்தப் பாரங்கள்? அவன் சுமக்கிற சுமைகள் யாவை? அச்சுமைகளைப் போக்கும் வழிமுறை உண்டா?

மனிதனுக்கு உழைப்பு ஒரு சுமை

“வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?” (பிர 3:9). உழைப்பே மனிதனின் பெரும் சுமையாக உள்ளது. “நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைக்கிறான்” என்பது வழக்குச் சொல். மூட்டை சுமக்கிற உழைப்பாளி முதல் பெரும் அலுவலங்களில் குளிர்சாதன அறைகளிலிருந்து பணியாற்றும் உயர் அதிகாரி வரை, அவரவர் செய்யும் வேலைகள் யாவும் அவரவர்களுக்கு பெரும் சுமையே. முதன் முதலில், மனிதன் பாவம் செய்த போது தேவன் அவனைப் பார்த்து, “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்பும் வரைக்கும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்” (ஆதி 3:19) என்று சபித்தார். ஆகையால் தான், எம்மனிதனும் தன் பிழைப்புக்காகச் செய்யும் எந்தத் தொழிலும் அவனுக்குப் பெரும் பாரமாகவே உள்ளது.

இதை அவன் சுமக்க முடியாததினால்தான் எத்துறையில் உள்ளவர்களும் இன்று காரணங்கள் பல கற்பித்து, எதிர்ப்புகள் தெரிவித்து, வேலை நிறுத்தம் செய்கிறார்கள். பாவத்தின் காரணமாய் விழுந்த தேவ சாபம் மனிதன்மேல் இருக்கும்வரை தொழிலாளரின் பிரச்சினைக்கும், அவன் சுமக்கும் பாரத்திற்கும் தீர்வு காண முடியாது.

மனிதனுக்கு மதம் ஒரு சுமை

“மனிதன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான். அதை வணங்கிப் பணிந்து கொள்கிறான். அதைத் தோளில் எடுத்து, அதைச் சுமந்து அதைத் தன் ஸ்தானத்தில் வைக்கிறான்” (ஏசா 46:7) என்று திருமறை மனிதர்களின் மதச் செயல்களை எடுத்துக் கூறுகிறது. மனிதன் தெய்வங்களை சுமந்து கொண்டு இருக்கிறான். ஆம், மனிதன் ஏற்படுத்திய மதக்கோட்பாடுகள், நோன்புகள், விரதங்கள், அனுசாரங்கள் அனைத்தும் சுமக்கிறதற்கு அரிய பாரமாகவே உள்ளன. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, அந்நாட்களில் இருந்த குருக்களையும், மதத்தலைவர்களையும் பார்த்து, “உங்களுக்கு ஐயோ! சுமக்க அரிதான சுமைகளை மனிதர் மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவுமாட்டீர் கள்” (லூக்கா 11:46) என்று அவர்களை கண்டித்தார். ஆம் நண்பரே! நீர் மதச் சடங்குகளைக் கடைப்பிடித்து இளைத்து, மனச்சோர்வுற்றிருக்கிறீர் அல்லவா? மனித இருதயத்தின் ஆழத்தில் குடிகொண்டிருக்கும் பாவத்தை, இருண்ட குற்ற மனசாட்சியை அகற்ற, மனிதன் செய்யும் ஓயாத முயற்சிகளே இந்த சமயச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஆகும். மனிதனுக்கு இது எத்தனை பெரிய பாரம் பாருங்கள்!

மனிதனுக்கு வியாதி ஒரு சுமை

மனிதன் நோயையும் வேதனையையும், உடல் ஊனத்தையும் சுமந்து, துக்கித்து நிற்கிறான். சிலர் குருடர், சிலர் செவிடர், சிலர் தீராத நோய் கொண்டோர். மற்றும் பலர் எண்ணிலடங்கா கொடும் நோயினால் பீடிக்கப்பட்டோர். மருத்துவத் துறையின் வளர்ச்சியும், புதிய மருந்துகளின் கண்டுபிடிப்பும் நோய்களின் வலிமையை மிஞ்சிவிடவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் பெருக்கத்தை ஈடு செய்துவிடவில்லை. பாவத்தின் விளைவும், பாவத்தின் சம்பளமாக இருக்கும் சாவும், மனிதனின் உடலில் குடிகொண்டிருக்கும்வரை, மனிதன் நோய் நொடியைச் சுமக்கிறவனாகவே இருப்பான்.

மனிதனுக்கு சாவு ஒரு சுமை

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் நாயீன் என்ற ஓர் ஊருக்குச் சென்ற போது, இறந்துபோன ஒரு வாலிபனைச் சுமந்து கொண்டு வருவதைக் கண்டார். அவர் அருகில் சென்று, பாடையைத் தொட்டு, மரித்த அவனை உயிரோடு எழுப்பினார். பாடையில் மரணமே இருந்தது. அதை அவர்கள் சுமந்து வந்தனர். ஆம்! மனிதன் மரணத்தையும் சாவையும் சுமந்துகொண்டுதான் இவ்வுலகில் அலைகிறான். மரணத்திற்குப் பயப்படாதோர் எவர்? மரணபயம் நாள்தோறும் நம்மை அழுத்திக் கொண்டே இருக்கிறது. “பாவத்தின் சம்பளம் மரணம்”, (ரோமர் 6:23) என்றும், ஜீவ காலமெல்லாம் மனிதன் மரண பயத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறான் என்றும் மரணத்தின் அடிப்படைக் காரணத்தை வரையறுத்தியும் வேதம் கூறுகிறது. நண்பரே! இதை நம்புவீரா?

நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்ட கடவுள்

“மெய்யாகவே கிறிஸ்து நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என்றும், “கர்த்தரே நம் எல்லோருடைய அக்கிரமத்தையும், இயேசு கிறிஸ்துவின் மேல் விழப்பண்ணினார்” என்றும் “அநேகருடைய அக்கிரமத்தை கிறிஸ்து சுமந்தார்” என் றும் அவரைக் குறித்துப் பரிசுத்த வேதம் கூறுகிறது.

ஆம்! மனிதன் சுமக்கும் எல்லாப் பாரங்களையும் போக்கி, இளைப்பாறுதல் காணும் வழியினைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து திறந்துள்ளார். அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தபடியினாலே, நம்முடைய சுமைகளை அறவே நீக்கிப்போட அவர் ஒருவரே அதிகாரம் பெற்றுள்ளார். “இதோ! உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.” என்று அவரைக் குறித்து திருவார்த்தை கூறுகிறது. நம்முடைய பாவங்கள் யாவற்றிற்கும் சிலுவையில் மட்டுமே தீர்வு உண்டு. ஆகையால் பாவத்தின் அடிப்படையில் மனிதன்மேல் விழுந்த எல்லாவித சுமைகளும், பாரங்களும் நீக்கி, ஆன்மாவிலும் சரீரத்திலும் விடுதலை வழங்கும் வழியானது நமக்கு இப்பொழுது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இளைப்பாறுதல் தரும் இயேக கிறிஸ்து

அன்பர்களே! இனியும் உங்கள் பாரங்களைச் சுமந்து களைத்துப்போக வேண்டாம். நம்முடைய சுமைகள் எதுவாயினும், பாரங்கள் எவ்வளவாயினும் இரட்சகராகிய இயேசுவினிடம் அவற்றிற்குத் தீர்வு உண்டு. அவரே நமக்கு உண்மையான இளைப்பாறுதலைத் தருகிறார். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்து விடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (சங் 55:22) என்று விளம்பிய தேவன் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆதாரமாகக்கொண்டு, அவரிடம் உம் சுமைகள் அனைத்தையும் இறக்கி வைத்துவிடுங்கள். நாம் சுமக்க இயலாத பாரங்களுக்காகவே, அவர் கொடூரச் சிலுவையைத் தம் தோளின் மேல் சுமந்தார். தாம் சுமந்த அச்சிலுவையிலே தொங்கி மரித்து நமக்கு விடுதலையையும் மீட்பையும் தந்துள்ளார். அவரிடம் வந்து உங்கள் பாரங்களையும் சுமைகளையும் இறக்கி வையுங்கள். பலவித சுமைகளைச் சுமந்து சோர்வுற்றிருக்கிற நம்மைப் பார்த்து, “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங் கள்” என்று கூவி அழைத்து, “நான் உங்களுக்கு இளைப் பாறுதல் தருவேன்”, என்று வாக்களிக்கும் இயேசு கிறிஸ்துவிடம் இப்பொழுதே வாரீர் !!

நம்முடைய பாவங்களைச் சிலுவையில் சுமந்து இரத்தம் சிந்தின நல் மீட்பராம் இயேசுவிடம் வரும்போது நம்முடைய பாவபாரமெல்லாம் நீங்கி நிம்மதியும் சமாதான மும் கிடைக்கும்.

Popular Posts

My Favorites

ஜெயங்கொள்ளுகிறவன்

யூலை 20 "ஜெயங்கொள்ளுகிறவன்" வெளி 2:17 ஒவ்வொரு கிறிஸ்தவனும் போர்ச்சேவகனானபடியால் கிறிஸ்து இயேசுவின் நற்சேவகனாக இருக்க கற்பிக்கப்படுகிறான். கிறிஸ்தவனாகிய போர்ச்சேவகன் யுத்தத்திற்குப்போக வேண்டும். அவனுக்குச் சத்துருக்கள் ஏராளம், பலசாலிகள். கிறிஸ்தவன் அவர்களை ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள்...