தினதியானம்

முகப்பு தினதியானம் பக்கம் 4

என் தேவன் என்னைக் கேட்டருளுவார்

செப்டம்பர் 21

“என் தேவன் என்னைக் கேட்டருளுவார்” மீகா 7:7

தேவன் சொன்னபடியே தம் வாக்கை மெய்யாய் நிறைவேற்றுபவர். கடந்த நாள்களில் என்றும் அவர் வாக்குத் தவறியதில்லை. இம்மட்டும் நடத்தியவர் இனிமேலும் நடத்துவார் என்பதை இது காட்டுகிறது. அவர் என் தேவனாக இருக்கிறபடியால் என் பிதாவாகவும் இருக்கிறார். என் நிலைமை அவருக்குத் தெரியும். எனக்குரிய பங்கை அவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார். அவர் எனக்கும் கிருபையையும், ஜெபத்தின் ஆவியையும் தந்திருக்கிறார். அவர் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாக இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறர். தமக்குப் பயன்படுகிறவர்களின் விருப்பத்தை அவர் நிறைவேற்றி, அவர்களுடைய விண்ணப்பங்களைக் கேட்டு, அவர்களை இரட்சிப்பதாகவும் வாக்கு அளித்திருக்கிறார்.

பிரியமானவர்களே, நாம் தேவனை நோக்கி கூப்பிட்டு, நம்முடைய விண்ணப்பங்களை அவரிடம் கூறி, நம்முடைய ஜெபங்களை ஏறெடுத்து, அவருடைய உதவியையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் எப்பொழுதும் தேடுவோமாக. அவர் நம்மைக் கேட்டருளுவார். இன்று நண்பர், நாளை பகைவராகலாம். ஆனால் தேவன் அவ்வாறு மாறுபவரல்ல. மனிதர் நம்மை அசட்டை செய்யலாம். ஆனால் தேவன் ஓருக்காலும் அசட்டை செய்யார். ஆகவே நாம் மீகாவைப்போல், நானோவென்றால் கர்த்தரை நோக்கிக் கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன். என் தேவன் என்னைக் கேட்டருள்வார். என் சத்துருவே எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் என்று கூறலாம். அவர் தாமதித்தாலும், மறவார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்காதிரார்.

ஜெபித்துக் கொண்டே இரு
உன் ஜெபம் தேவன் கேட்பார்
ஞான நன்மையாலுனை நிரப்பி
பரம அன்பால் சோதிப்பார்.

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்

டிசம்பர் 26

அப்படிச் சொல்லமாட்டோம் என்கிறபடியினால்.. யோபு 34:33

நம்மில் பலர் தங்களுடைய சொந்த விருப்பப்படியே நடக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தேவனாகிய கர்த்தர், தங்களுடைய மேன்மைக்கும், சுகத்துக்கும், நலனுக்கும் ஏற்றாற்போல தங்களை நடத்தவேண்டும் என்று விரும்புகிறார்கள். வேதவசனம் நமது விரும்பம்போல சொல்லுகிறதில்லை. நாம் வசனம் கூறுவதைப்போலத்தான் நடக்கவேண்டும். தேவனுடைய கிரியைகள் நம் விருப்பப்படி இருப்பவை அல்ல. நாம் சொல்லுவதுபோல நடக்கவேண்டுமென்று விரும்பினதால் நாம் புத்தியீனர். ஆண்டவர் உனது மனதின்படியா நடக்க வேண்டும் ? உனது சிந்தைப்படியா அவர் யோசிக்க வேண்டும்? இவ்வாறு நாம் எண்ணுவது தவறுதானே? இதனால் தேவனுக்கு மகிமை ஏற்படாது. இது அவருக்கு வேதனையைத்தான் தரும். உனது பாவமும் பெருகிப்போம். உன்னைவிட உன் தேவன் ஞானமும் அறிவும் அதிகம் உள்ளவர். அவருக்கு எதிராக நீ செயல்படக் கூடாது. உனக்கு வேண்டியது பணம், பொருள், சுகம், கண்ணீர், துன்பம், கவலை போன்றவை வேண்டாம். இது தன்னலம். அவ்வாறு நீ வாழ்வது தேவனுக்குப் பிரியமாகாது. தன்னலம் ஒரு கொடிய பாவம்.

அன்பானவரே, இவ்வாறான எண்ணத்தைக் குறித்து எச்சரிக்கையாயிரு. இத்தகைய எண்ணங்கள் யாவருக்கும் வருபவைதான். ஆனால், அதற்கு எதிர்த்து நில். இது ஆபத்தானது. மோசத்தில்கொண்டுவிடும். எச்சரிக்கையுடனிரு.

ஆண்டவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர். செயல்களில் மா வல்லவர். அவருடைய வழிகள் நீதியுள்ளவைகள், அவருடைய ஒழுங்கங்கள் ஞானமானவை. அவருடைய நோக்கங்கள் இரக்கம் நிறைந்தவை. எல்லாம் சரியாக முடியும்போது, எப்பக்கத்திலும் அவருடைய மகிமை பிரகாசத்தைக் காணலாம்.

தேவ சித்தமே நலமாம்,
அதன்கீழ் அமைந்திடுவேன்,
என் மனம் பொல்லாதது.
அதன்படி நடவேன்.

இலக்கை நோக்கித் தொடருகிறேன்

பெப்ரவரி 03

“இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”  பிலி. 3:14

விசுவாச பந்தயத்தில் ஓடுகிறவன். பந்தயப் பொருள் அவனுக்கு முன் வைக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தம், மகிமை, பரலோகம் இவைகளே இந்தப் பந்தையப் பொருள். அவன் ஓடவேண்டிய ஓட்டம் பரிசுத்த வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஓட்டத்தில் அNநுக சத்துருக்கள் எதிர்ப்படுவார்கள். துன்பங்களும், சோதனைகளும் வந்தாலும் நமது குறி இலக்கை நோக்கியே கவனிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றே அவன் அனுதினமும் போராட வேண்டும். கிறிஸ்து வைத்த வாழ்க்கையின் மாதிரியே அந்த இலக்கு. அவரைப்போலவே நாம் மாறவேண்டும். அவரைப்போன்றே பாவத்தைப்பகைத்து, சாத்தானை ஜெயித்து, சோதனைகளைச் சகித்து, ஓடவேண்டும்.

இயேசுவோ தமது முன்வைத்த சந்தோஷத்தை நோக்கிக் கொண்டே பந்தயச் சாலையில் ஓடி தமது இலக்கை அடைந்து, கிரீடத்தைப் பெற்று ஜெய வீரராய் தேவ வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர்தான் நமக்கு முன்மாதிரி. நமது விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரும் அவரே. நமது கண்களும் கருத்தும் அவர் மேலிருக்க வேண்டும். அவர் தேடிய விதமாகவே நாமும் தேடவேண்டும். அப்போஸ்தலனைப்போல் ஒன்றையே நோக்கி, அதையே நாடி இல்கை நோக்கி தொடர வேண்டும். அப்போதுதான் பந்தையப் பொருள் கிடைக்கும். ‘நான் ஜெயங்கொண்டு பிதாவின் சிங்காசனத்தில் அமர்ந்ததுப்போல, ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடுகூட உட்காரும்படி கிருபை செய்வேன்’ என்று கிறிஸ்துவும் சொல்லுகிறார்.

நாம் ஓடும் ஓட்டத்தில்
இரட்சகரையே நோக்குவோம்
அந்த இலக்கை நோக்கினால்
பந்தயப் பொருளைப் பெறுவோம்.

தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்

டிசம்பர் 05

“தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்” பிர. 9:7

நாம் ஆண்டவருக்கு சத்துருக்களாக மாறும்போதும், அவருக்கு எதிரடையாய் செயல்படும்போதும், தேவன் நாம் செய்வதை அங்கீகரிக்கவேமாட்டார். அப்படி ஒருவேளை அவர் அங்கீகரிப்பாரானால், அது அவர் கலகக்காரரையும், துரோகிகளையும் அங்கீகரித்தது போலாகிவிடும். நாம் தேவ குமாரனை எப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறோமோ அப்பொழுதுதான் அவர் நம்மை அங்கீகரிப்பார். சுவிசேஷம் இயேசு நாதரைத் தேவன் கொடுத்த ஈவாகவும், இரட்சகராகவும் நமக்குக் காட்டுகிறது. பொதுவாக நாம் இந்த ஈவைத்தான் அசட்சை செய்கிறோம். இந்த இரட்சகரைத்தான் புறக்கணிக்கிறோம். ஆனால், தூய ஆவியானவர் நம்முடைய ஆத்துமாக்களை உயிர்ப்பித்து நமக்கு ஒளி தந்தார்.

அவர் நம்முடைய இருதயத்தில் விசுவாசத்தை உண்டு பண்ணினபோதோ, நாம் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டோம். தேவனுடைய கிறிஸ்துவை நாம் ஏற்றுக்கொண்டதால், நம்மை அவர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். நாம் அவரில் மகிமை உள்ளவர்களாக மாற்றுப்படுகிறோம். அவருடைய அருமையான பிள்ளைகளாக மாறுகிறோம். அவருக்காக ஏதாவது நாம் செய்ய வேண்டுமென்ற விருப்பம் நமக்கிருந்தால், அவர் அதையும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளுகிறார். இது எத்தனை இன்பமான காரியம்! எவ்வளவு மகத்துவமானது! எத்தனை மேன்மையானது! இதை நாம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாகும்படி தூய ஆவியானவர்தாமே நம்மை நடத்துவாராக.

இயேசு என்னை ஏற்றுக்கொண்டார்
என்னை அவர் அங்கீகரிப்பார்
இயேசுவுக்காய் என்றும் உழைப்பேன்
என் இயேசுவின் நாட்டை சேருவேன்.

நான் இரக்கம் பெற்றேன்

யூன் 19

“நான் இரக்கம் பெற்றேன்.” 1.தீமோ. 1:13

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவைத் தூஷித்து அவரைத் துன்பப்படுத்தி, அவருடைய ஊழியத்திற்குச் சேதம் உண்டாக்குகிறவனாய் இருந்தான். கர்த்தரோ இனி விசுவாசிக்க போகிறவர்களுக்கு மாதிரியாக அவனுக்கு இரக்கம் காட்டினார். இதனால் நிர்ப்பந்தனுக்கும் இரக்கம் கிடைக்குமென்றும், அவர் தமது சித்தத்தின்படி பாவிகளுக்கு இரக்கம் காட்டுகிறவர் என்றும் நாம் அறிந்துக்கொள்கிறோம். இரக்கத்தைத் தேடாத பவுலுக்கே இரக்கம் கிடைக்கும்போது இதைத் தேடுகிற எவருக்கும் கிடைக்கும் என்பது எத்தனை நிச்சயம். கர்த்தர் காட்டினதும், பவுல் பெற்றுக்கொண்டதுமான இரக்கம், கொடுமையான எண்ணிக்கைக்கு அடங்காததான எல்லா பாவத்தையும் பூரணமாக மன்னித்துவிடுமென்று காட்டுகிறது.

மனசாட்சி எவ்வளவாய்க் கலக்கப்பட்டாலும் இந்த இரக்கம் பூரண சமாதானத்தைக் கொடுக்கிறது. அது உள்ளான பரிசுத்தத்தைத் தந்து நமது நடக்கையைச் சுத்தம்பண்ணுகிறது. அது கிறிஸ்துவைப் பற்றின அறிவைச் சகலத்துக்கும் மேலாக எண்ணி அதை நாடித்தேடவும் மற்ற எல்லாவற்றையும் குப்பையென்று உதறி தள்ளவும் செய்கிறது. அது வியாகுலத்தைச் சகித்து ஆத்துமாவைப் பெலன் பெற செய்கிறது. அது தேவ நேசத்துக்கும் ஆத்தும இரட்சிப்பைப்பற்றின கவலைக்கும் நம்மை நடத்தி இயேசுவின் சபையோடு பலவித பாசத்தால் நம்மை சேர்த்து கட்டுகிறது. அன்பரே, நீ இரக்கம் பெற்றவனா? அந்த இரக்கம் பவுலுக்குச் செய்ததை உனக்கும் செய்திருக்கிறதா? எங்கே இரக்கம் இருக்கிறதோ அங்கே கனிகள் இருக்கும். இத்தனை நம்மைகளுக்கும் காரணமாகிய இரக்கம் எவ்வளவு விலையேறப்பெற்றது.

இரக்கத்திற்கு அபாத்திரன்
நீரோ இரக்கமுள்ளவர்
எல்லாரிலும் நான் நிர்ப்பந்தன்
ஏழைக்கிரங்குவீர் தேவா.

தேவன் பிரியமானவர்

ஓகஸ்ட் 08

“தேவன் பிரியமானவர்” கலா. 1:15-16

அப்போஸ்தலனாகிய பவுல் தன் தாயின் வயிற்றிலிருந்து முதல் பிரித்தெடுக்கப்பட்டதையும், கிருபையினால் அழைக்கப்பட்டதையும், கிறிஸ்து தன்னில் வெளிப்பட்டதையும், தான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், பிரித்தெடுக்கப்பட்டதையும் குறித்து இவை யாவும் தேவனுடைய சித்தத்தினால் ஆனது என்கிறார். சவுலைப் பவுலாக்கி அவன் காரியத்தில் கிருபையைக் காண்பித்தது தேவ தயவு தான். இந்தத் தயவுக்கு அவன் பாத்திரன் அல்ல. தேவன் இப்படிச் செய்ய தேவனை ஏவிவிடத்தக்கது அவனிடத்தில் ஒன்றுமில்லை. ஆனால் தேவனுக்குப் பிரியமானபடியால், அவர் சித்தங்கொண்டிபடியால் அப்படி செய்தார். மற்றவர்களைக் காட்டிலும் நாம் வித்தியாசமானவர்களா? முன் இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் வித்தியாசம் உண்டா? அப்படியானால் மற்றவர்களுக்குக் கிடைக்காதவைகள் நமக்கு மட்டும் கிடைத்திருக்கிறது. தேவனுடைய சுத்த கிருபையே அவரின் சுயசித்தமே இதற்குக் காரணம் ஆகும்.

அவர் யார்மேல் இரக்கமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் இரக்கம் கொள்கிறார். யார்மேல் பிரியமாயிருக்க சித்தம் கொள்கிறாரோ அவர்கள்மேல் பிரியமாயிருக்கிறார். தகுதியே இல்லாத நம்மை தேவன் நேசித்து தகுதிப்படுத்தி பிரியமாயிருக்கிறார். தங்கள் பாத்திர தன்மைக்கு அதிகமாகவே எல்லாருக்கும் கிடைத்திருப்பதால் முறுமுறுக்க எவருக்கும் நியாயமில்லை. சிலருக்கு அதிக தயவு கிடைத்திருக்குமென்றால் அதற்கு நன்றியுள்ளவர்களர் இருப்பது அவர்களது கடமை. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைத்திருக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார். கர்த்தர் உங்களையும் தமது ஜனமாக்கிக் கொண்டார். அவர் தமது மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார்.

கர்த்தருக்கே மகிமை
எனக்கு வேண்டாம் பெருமை
அவர் பாதம் தாழ்ந்து பணிந்து
கிருபைக்கு நன்றி கூறுவேன்.

கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்

நவம்பர் 24

“கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்” ரோமர் 5:6

பரிசுத்தமானவர்களுக்காக அல்ல, துன்மார்க்கருக்காகவும், கெட்டுப் போனவர்ர்களுக்காகவும், பலவீனருக்காகவும், அபாத்திரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். தேவ சாயலை இழந்தவர்கள், தேவன் அளிக்கும் ஜீவனைக் காணாதவர்கள், அவருக்கு அந்நியர்களாகிச் சத்துருக்களானவர்களுக்காகவும் அவர் மரித்தார். இவ்வாறானவர்களுக்காக மரிப்பதுமான் மிகப் பெரிய தயவு. நல்லவர்களுக்காகவும், பக்திமான்களுக்காகவும் மரித்திருப்பாரானால், இப்பாவிகளாகிய நமக்காக மரிக்கவில்லையென்று நாம் சொல்லி விடலாம். ஆனால் இயேசுவோ அக்கிரமக்காரருக்காக மரித்தார். நாம் இப்படிப்பட்ட அக்கிரமக்காரரே. நாம் அவரை விசுவாசிப்போமானால், நமக்காகவேமரித்தார் என்று அறிவோம். நமக்குப் பதிலாக, நமக்கு பிணியாளியாக அவர் மரித்தார். நான் மரணத்தை அனுபவியாதிருக்க அவர் மரித்தார். நாம் அவருக்குள் நீதியாகும்படிக்குப் பாவமில்லாத அவர் பாவிகளான நமக்காக மரித்தார்.

அக்கிரமக்காரர்களும், பாவிகளுமான நாம் பிழைத்திருப்பதற்கு இயேசு கிறிஸ்து மரித்தார் என்பதை நினைத்து ஆறுதல் அடைவோமாக. நாம் பாவங்களுக்கு செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவரே, நமது சரீரத்தில் நம் பாவங்களைச் சுமந்தார். இதற்காக அவருக்கு நன்றி சொல்லுவோம். இனி நாம் மரிப்பதில்லை. நமது பாவங்களுக்காகப் பிரதிபலன் செய்தாயிற்று. நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் செய்தாயிற்று. அவர் நமக்கு நித்திய ஜீவனைப் பெற்றுத் தந்தார். என்னிடத்தில் விசுhசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் கூறியிருக்கிறார். மாட்சிமை நிறைந்த மீட்பரே உமது அளவற்ற அன்புக்காக எவ்வாறு உம்மைத் துதிப்போம்.

சிலுவையில் என்க்காய்
ஜீவனைவிட்ட கிறிஸ்துவே
உம் அன்பிற்காகவென்றும்
உம்மைத் துதி செய்வோம்.

நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல

ஒகஸ்ட் 11

“நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல” யோவான் 13:34

இயேசுவின் சிநேகத்தை எவ்வளவாய் ருசித்தாலும் அது போதாது. அது எவ்வளவோ இனிமை நிறைந்தது. நாம் அவரைத் தெரிந்து கொள்ளுமுன்பே அவர் நம்மை நேசித்தார். அவர் நம்மேல் அன்பாயிருந்தபடியால் தேவதூதர்களுடைய சுபாவத்தைத் தரித்துக் கொள்ளாமல், நம்முடைய சுபாவத்தைத் தரித்துக்கொண்டு நம்முடைய பாவங்களுக்கு பலியாக மரித்தால் தம் அன்பை காட்டுகிறார். நம்முடைய ஆத்தும சத்துருவை ஜெயித்தாலும், நமக்கு முன்னோடியாக பரமேறியதாலும், தம் அன்பை காட்டினார். பரிசுத்தாவியானவரை அனுப்பியதாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவராய் இருப்பதாலும் தமது அன்பை நமக்கு வெளிப்படுத்தினார்.

அவர் செய்து வருகிற ஒவ்வொன்றிலும் தமது அன்பைக் காட்டுகிறார். தேவனுக்குச் சத்துருக்களாக இருந்த நம்மைக் கண்டு, தமது பிள்ளைகளாக்கினார். பாவிகளாகிய நம்மைக் கண்டு மனதுருகுகிறார். ஒவ்வொரு நிமிடமும் நம்மைப் பாதுகாக்கிறார். தமது அன்பினால்தான் நாம் தவறு செய்யும்போது நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம். அலைந்து திரிந்தாலும் திரும்பவும் நம்மை அவர்பக்கம் கொண்டு சேர்க்கிறார். அவர் அன்பாயிருப்பதினால் நம்மை இரட்சிக்கிறார். நமக்கு அவசியமான எல்லாவற்றிலும் நன்மையால் நிரப்புகிறார். அவர் மணவாளனாக திரும்பவும் வந்து நம்மை தம்மோடு சேர்த்துக்கொள்வதும் அவரின் பெரிய ஆழமான அன்பைக் குறிக்கும். பாவம் செய்பவர்களை விட்டுவிட்டு தம்முடைய பிள்ளைகளைத் தமது மகிமையில் நிரப்ப அழைத்து செல்வார். அவரின் சிங்காசனம்முன் நம்மை உயர்த்துவார். மகிமை நிறைந்த இரட்சகரே, உம்முடைய அன்பு அறிவுக்கு எட்டாதது.

கர்த்தாவே உமதன்பு
அளவில் எட்டாதது
அது கறையில்லா மகா
ஆழமான சமுத்திரம்.

தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்

ஜனவரி 10

“தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” பிலி. 2:9

இயேசு கிறிஸ்துவைப்போல் அவ்வளவாய் தன்னைத் தாழ்த்தியவர்கள் ஒருவருமில்லை. அவரைப்போல் அவ்வளவாய் உயர்த்தப்பட்டவரும் இனி உயர்த்தப்பட போகிறவருமில்லை. உலக பாத்திரத்திற்கு அபாத்திரராக நினைக்கப்பட்டு, தாழ்ந்த புழுவைப்போல் எண்ணப்பட்டார். ஆனால் தேவனோ அவரை அதிகமாக உயர்த்தினார். உன்னதங்களில் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார். தேவகுமாரனுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இராஜாதி இராஜனின் தலை மகுடத்திலுள்ள இரத்தினக் கற்கள், காலை பொழுதின் கதிரவ பிரகாசத்திலும் அதிக பிரகாசமாயிருக்கின்றன. அவரின் செங்கோல் பூமியெங்கும் செல்லும்படி நீட்டப்பட்டிருக்கிறது. அவருடைய இராஜ்யம் நித்திய இராஜ்யம். அவரின் ஆளுகை தலைமுறை தலைமுறையாய் உள்ளது. தேவதூதர்கள் அடிபணிந்து அவரை வணங்குகிறார்கள். இவர்களின் ஆரவாரப் பாடல்களெல்லாம் அவரைப் பற்றினதே.

கிறிஸ்துவானவர் துன்பத்திலும் தாழ்த்தப்பட்டபடியால் மிகவும் கெம்பீரமாக உயர்த்தப்பட்டார். தமது பிள்ளைகளின் நன்மைக்காக இயேசு உயர்த்தப்பட்டாரென்பதை நினைக்கும்போது எவ்வளவு இன்பமாயிருக்கிறது. உலகிலுள்ள மக்கள் யாவரும் மனந்திரும்பி பாவமன்னிப்பு பெற்று ஜீவிக்கவும்,உலகை ஜெயித்து பரிசுத்தமாக வாழவும், கடைசியில் தம்மோடு அவர் பிள்ளைகள் ஜெயித்து என்றென்றுமாய் இருக்கவும், அவரைச் சுற்றி வாழ்த்து பாடவுமே இவர் சிங்காசனத்திற்கு மேலாய் உயர்த்தப்பட்டார். நேற்றும், இன்றும், என்றும் மாறாதவரே! உம்மை அறிந்து, உமது உயிர்த்தெழுதலின் மகிமையை அடைந்து, உம்மோடே மகிமையில் உட்காரும்படி எனக்கு கிருபைத் தாருமே.

மனிதர் இகழும் இயேசு
மகிமைக்கு பாத்திரரே,
நித்திய கிரீடமும் மோட்சமும்
அவருடைய தாகுமே

 

தம்மைத்தாமே தாழ்த்தினார்

ஏப்ரல் 15

“தம்மைத்தாமே தாழ்த்தினார்” பிலி. 2:8

இவ்வாறு தம்மைத் தாழ்த்தினவர் யார்? மகிமையின் பிரகாசமானவர், பிதாவின் அச்சடையாளமானவர் தேவனோடிருந்தவர். தேவனாயிருந்தவர். வல்லமையுள்ள தேவனும், நித்திய சமாதானப் பிரபுவுமானவர், எப்படி அவர் தம்மைத் தாழ்த்தினார்? நம்முடைய தன்மையை எடுத்து அடிமையின் ரூபம் எடுத்து, மரண பரியந்தம் கீழ்ப்படிந்து தம்மைத் தாழ்த்தினார்.

மாட்டு தொழுவத்தைப் பார், தச்சுப் பட்டரையைப் பார், நாசரேத்தூர் குடிசையைப் பார், யோர்தான் நதியைப் பார், தலை சாய்க்க இடமின்றி அலைந்தவரைப் பார். கெத்செமனேயைப் பார், கொல்கொதாவைப் பார், யோசேப்பின் கல்லறையைப் பார், இவைகயையெல்லாம் பார்த்தான் அவர் எவ்வளவாய் தன்னைத் தாழ்த்தினார் என்பது விபரிக்க வேண்டி இராது. எல்லாம் உனக்குத் தெரிந்ததே. ஏன் இப்படி தன்னை தாழ்த்தினார் என யோசி. அவர் நம்மை நேசித்தபடியினால் தம்மைத் தாழ்த்தினார். அளவற்ற அன்பினால் ஏவப்பட்டு மகத்துவமானவர் தம்மைத் தாழ்த்தினார். மனுஷரோடு பழகி, நமது குறைகளையும், பெலவீனங்களையும் அறிந்ததினால், நமக்கு பெலன் தர தம்மைத்தாழ்த்தினார். நமக்கு உதவிடும்படி மரணம் மட்டும் பணிந்து தாழ்த்தினார். நமக்கு உயர்த்த தம்மைத் தாழ்த்தினார். நம்மை மேன்மைப்படுத்த தம்மைச் சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். சாபமாக்கினார். நாம் மகிழ்ந்து பாட அவர் பெருமூச்சு விட்டார். நாம் பிழைக்க அவர் மரித்தார். நாம் சிங்காசனம் ஏற அவர் சிலுவையில் ஏறினார். ஆச்சரியமான தாழ்மை. அதிசயமான அன்பு.

பாவிக்காய் மனதுருகி
தேவன் இரத்தம் சிந்தினார்
இது என்ன அதிசயம்
எவர்க்கும் விளங்கா இரகசியம்.

My Favorites

மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக

பெப்ரவரி 26 "மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக."  வெளி 2:5 மனந்திரும்புதலுக்குச் சிந்தனை தேவை. நடத்தையைப்பற்றியும், தன் நிலைமையைப்பற்றியும் பயபக்தியாய் சிந்திக்கிற சிந்தனை வேண்டும். அது பாவத்தைப்பற்றி உணர்வதில் ஏற்படுகிறது. தேவனுக்கு முன்பாக நம்முடைய...
Exit mobile version