Home Blog Page 25

என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்

செப்டம்பர் 09

“என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறார்” சங். 31:7

வாழ்க்கையில் ஏராளமான நண்பர்கள் இருக்கலாம். அவர்களது உண்மை நமது துன்பத்தில்தான் விளங்கும். மகிழ்ச்சி என்னும் சூரியன் பிரகாசிக்கும்பொழுது, சிரிப்பும், கும்மாளமும் உண்டு. ஆனால் துன்பம் என்னும் புயல் வரும்பொழுது நம்முடன் இருப்பவன் யார்? தாவீதரசனுக்கும் துன்பங்கள் வந்தன. நண்பர்கள் அந்தநேரங்களில் அவனை தாங்கவில்லை. கைவிட்டுவிட்டனர். ஆனால், தேவன் அவனை மறக்கவில்லை. அவனை கவனித்து, சந்தித்து, அவன்மீது அக்கறை கொண்டு, அன்புகாட்டி, அவனுடைய குறைவுகளை நீக்கி அவனைக் காப்பாற்றினார்.

இதேபோன்ற பெருமை பரிசுத்தவான்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. இஸ்ரவேலரை அவர் அவாந்தரவெளிகளிலும் வனாந்தரங்களிலும் நடத்தி வந்தார். அவரால் தெரிந்துக்கொள்ளப்பட்ட தமது மக்களாகிய நம்மையும் அவர் நினைத்து, நம்மீது அக்கறை கொண்டு, அன்பு செலுத்தி நம்மை ஆதரிப்பார். முன்நாட்களில் அவர் அவ்வாறு செய்தார். கடந்துபோன நாட்களிலெல்லாம் நம்மைக் காத்து, நடத்தி, ஆதரித்தார். நம்மைப் போஷித்துச் செழிப்பான இடத்திற்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்தார். நமது ஆத்தும வியாகுலங்களை அவர் அறிந்து, அவர் நன்மைசெய்தபடியால், நாம் சாட்சி கூறி அவரை மகிமைப்படுத்துவோம். இம்மட்டும் நமது துயரங்களை அறிந்து இருக்கிறபடியால், இனியும் நம்மை நடத்த அவர் வல்லவர். பல துன்பங்ளிலிருந்து நம்மை விடுவித்தவர் இன்றும் நம்மை விடுவிப்பார். அதை அவர் நமக்கு வாக்களித்துள்ளார். அவர் உண்மையுள்ளவர், நமது இனிய நண்பர். அவர் நமது துன்ப துயரத்தில், சோதனைகளில் நம்மைக் காத்து ஆதரிப்பார்.

உம் முகம் கண்டால், ஆண்டவா
எம் பயங்கள் நீங்கிப் போம்.
உம் இரக்கம் தான் என்றும்
எமக்குச் சமாதானம் தந்திடும்.

எனக்கு எதிரே உத்தரவு சொல்

செப்டம்பர் 08

“எனக்கு எதிரே உத்தரவு சொல்” மீகா 6:3

நம்முடைய நடத்தை பல நேரங்களில் மாறக்கூடியதாய் இருக்கிறது. தேவனைவிட பெரியதாக உலகத்திலும், உலகத்தில் உள்ளவற்றிலும் அன்பு கூர்ந்தால் தேவன் அங்கு அசட்டை செய்யப்படுகிறார். நாம் அவரைக் குறைவுபடுத்துகிறோம். அவரை நேசிக்காமல் இருக்கும்போது, அவருக்கு மிகுந்த விசனமளிக்கிறோம். இதைக் கண்டு, அவர் மனம் நொந்து, என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? எதினால் உன்னைத் துக்கப்படுத்தினேன் எனக்கு எதிரே பதில் சொல் என்கிறார்.
நீ தனி ஜெபத்தை அசட்டை செய்கிறாயா? கிருபையின் வசதிகளைக் குறித்து கவலையற்றிருக்கிறாயா? வேதாகமத்தை வாசியாமல் அசட்டையாயிருந்து அதை ஒதுக்கி வைத்து விட்டாயா? தேவனே நேசிக்க வேண்டிய நீ உலகத்தின்மேல் அன்பு செலுத்துகிறாயா? ஏன் அவரை விட்டுப் பின்வாங்கினாய்? இதனாலேயே அவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்.

மேலும் அவர், என்னில் நீ கண்ட குறை யாது? என் அன்பில் குறை கண்டாயா? என் வாக்குகளை நான் நிறைவேற்றவில்லையா? தேவனுக்குரிய மகத்துவமான காரியங்களை நான் செய்யவில்லையா? ஏன் என்னை அசட்டை செய்தாய்? என்னைவிட உலகத்தையும், சத்துருவையும் ஏன் அதிகம் நேசித்தாய்? எனக்கு எதிரே உத்தரவு சொல். என்று கேட்கிறார். விசுவாசியே உன்னிடம் தவறுகள் இல்லையா? உன் ஆண்டவரை நீ துயரப்படுத்தவில்லையா? உன் பாவங்களை அறிக்கை செய்து, மனந்திரும்பி, ஆண்டவரின் அன்பினுள் வந்து சேர். அவருடைய சமுகத்திற்குள் வா. அவருடைய அன்புக்குள் உன்னை மறைத்துக்கொள்.

நான் நிர்பந்தன், தேவா
என்னைத் தள்ளாதிரும்.
உமது சமுகத்திலேயேதான்
நான் என்றும் மகிழட்டும்.

அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்

செப்டெம்பர் 07

“அவர்கள் தேவனை நோக்கி, எங்களை விட்டு விலகி இரும்…… என்கிறார்கள்” யோபு 21:14-15

அக்கிரமக்காரர் இப்படிச் சொல்லுகிறார்கள். தேவ சமுகம் அவர்களுக்கு வெறுப்பைக் கொடுக்கிறது. தேவன் இல்லாமல் வாழ்வது இவர்களுக்கு அதிக பிரியம். தேவன் ஒருவர் இருக்கிறபடியால், அவர் தங்களைவிட்டுத் தூரமாய் இருக்க வேண்டும் என்கிறார்கள். நீங்களும் அப்படியே இருந்தீர்கள். உங்கள் முன்னிலைமையும் அப்படியே இருந்தது. இப்பொழுதுதோ தேவ சமுகத்தை விரும்புகிறீர்கள். இது தேவனுடைய அன்பினால் உண்டானது.

தேவனுடைய மகிமையைக் கண்ட நீங்கள், அவரின் அடைக்கலத்திற்குள் இருக்கிறபடியால் உங்களுக்கு ஒன்றும் கேடானதுநேரிடாது என்று அறிந்திருக்கிறபடியால் உலகிற்கு வெளிப்படுத்தாத விதமாய் உங்களுக்குத் தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறீர்கள். நீங்கள் ஆண்டவரைப் பார்த்து எங்களை விட்டு விலகி இரும் என்று சொல்லாமல், என் ஆத்துமா ஜீவனுள்ள தேவன்மேல் தாகமாய் இருக்கிறது. நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன் என்பீர்கள். தேவனே, எங்களைவிட்டு விலகி இரும் என்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களே! என்னை விட்டு பிசாசுக்கும், அவன் தூதருக்கும், ஆயத்தம் பண்ணப்பட்டு இருக்கிற நித்திய அக்கினிக்கும் போங்கள் என்று அவர் சொல்வதை ஒரு நாள் அவர்கள் கேட்பார்கள். ஆனால் எங்கள் வீட்டிற்கும் எங்கள் இருதயத்துக்கும் அவர் வந்து தங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களைப் பார்த்து, வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலக தோற்றத்துக்கு முன்னே உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ள வாருங்கள் என்று அவர் அழைப்பார்.

தேவனைப் பார்த்து நான்
என்னிடம் இருப்பேன் என்பேன்
என் இருதயத்தில் வாசஞ்செய்து
என்னை முழுதும் ஆண்டுக்கொள்ளும்.

ஏன் சந்தேகப்பட்டாய்

செப்டம்பர் 06

“ஏன் சந்தேகப்பட்டாய்” மத். 14:31

இந்த வார்த்தை பேதுருவைப் பார்த்து கேட்கபட்டதென்றாலும் நமக்கும் ஏற்றதே. நம்மில் சந்தேகப்படாதவர், அடிக்கடி சந்தேகப்படாதவர் யார்? சந்தேகத்தை பாவம் என்று எல்லாருமே உணருகிறார்களா? ஆம், அது பாவம்தான். நம்முடைய சந்தேகங்கள் எல்லாமே அவிசுவாசத்திலிருந்து உண்டானவைகள்தான். இது ஆண்டவரின் அன்பு, உத்தமம், நீதி இவைகளின் பேரில் சந்தேகிக்கச் செய்கிறது. அவரின் வசனத்தைவிட வேறு ஏதும் தெளிவாய் பேச முடியுமா? அவர் வார்த்தையில் நம்முடைய நம்பிக்கை, சந்தோஷம், சமாதானம், இவைகளைக் காட்டிலும், திடமான அஸ்திபாரம் வேறு ஏதாகிலும் உண்டா?

தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பேன் என்று வாக்களிக்கவில்லையா? எந்தப் பரிசுத்தவானையும் அரவணைத்துப் பாதுகாத்து நடத்துவேன் என்று சொல்லவில்லையா? தம்முடைய மக்கள் செய்யும் விண்ணப்பங்களுக்கு உத்தரவு அருளுகிறவிதத்தை அவருடைய வசனத்தின்மூலமும், வேதாகமத்தின் சரித்திரங்கள்மூலமும் நடைமுறையில் காட்டவில்லையா? அவர் எப்போதாவது நம்மை மோசம் போக்கினதுண்டா? அவர் பரியாசம்பண்ணப்படத்தக்கவரா? அவர் மாறாதவர் அல்லவா? தேவ பிள்ளையே, உன் சந்தேகத்திற்குச் சாக்கு சொல்லாதே. சந்தேகிப்பது பாவம் என்பதை அறிக்கையிட்டு எப்பொழுதும் முழு இருதயத்தோடும் அவரை நம்பக் கிருபை தரவேண்டும் என்று ஜெபித்து கேள். சந்தேகம் ஆத்துமாவைப் பெலவீனப்படுத்தும், ஆவிக்கு ஆயாசம் உண்டாக்கும் சந்தேகம், கீழ்ப்படிதல் தடுத்துப்போடும். ஆகவே, அதை எதிர்த்து போராடு.

எப்பக்கம் எனக்குச்
சத்துருக்கள் மிகுதி
அபயம் என்ற தேவவாக்கு
இருப்பது என்றும் உறுதி.

நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்

செப்டம்பர் 05

“நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன்” ஆப. 3:18

இது நல்ல தீர்மானம். நமக்கிருக்கும் எந்தச் சூழ்நிலை மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் கர்த்தர் மாறாமல் இருக்கிறார். வெளிச்சம் இருட்டாயும், சாமாதானம் சண்டையாயும், இன்பம் துன்பமாயும், சுகம் வியாதியாயும் மாறினாலும் நாம் அவருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். நமக்கு சம்பவிக்கும் காரியங்கள் எப்படியிருந்தாலும் நாம் இன்னும் கர்த்தருக்குள் மகிழலாம். ஆபகூக்கைப்போல நாம் இருக்கவேண்டுமானால், கர்த்தர் நமக்குச் சொந்தமாக வேண்டும். அவருடைய வாக்குத்தத்தங்கள் நம்முடையதாக வேண்டும்.

அவருடைய நாமத்தைக் குறித்து நம்முடைய மனதிற்கு தெளிவான, வேத வசனத்திற்கு இசைந்த எண்ணங்கள் உண்டாக வேண்டும். நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது. நாம் தேவனோடு ஒப்புரவாயிருக்கிறோம். ஆகவே, அவர் நம்முடைய உத்தம சிநேகிதன் என்று உணர வேண்டும். அப்போது எக்காலத்திலும் அவரில் நாம் மகிழலாம். அவரின் நிறைவுகள்தான் நமக்குப் பொக்கிஷம். அவருடைய வல்லமை நமக்கு ஆதரவு. அவருடைய அன்பு நமக்கு ஆறுதல். அவருடைய வாக்கு நமக்குப் பாதுகாப்பு. அவருடைய சிம்மாசனம் நமக்கு அடைக்கலம். அவருடைய சமுகம் நமக்குப் பரலோகம், தேவனிடத்திலுள்ள எதுவும் நமது சுகத்தை விருத்தியாக்கும்.

அன்பானவர்களே, இந்த இரவு கர்த்தரிடத்தில் போய், அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து வந்துள்ளோம் என்று சொல்லுங்கள். நீங்கள் அவருடைய நன்மையை உணர்ந்து, அவருடைய வாக்குத்தத்தங்களை எடுத்துச் சொல்லி, அவருடைய கிருபைக்காகக் கெஞ்சுகிற சத்தத்தை அவர் கேட்கட்டும்.

தேவனே என் ஆஸ்தி
என் மகிழ்ச்சியின் ஊற்று
வறுமையிலும் அது வற்றாது
மரணத்திலும் ஒழியாது.

உன் சத்தத்தை நான் கேட்கட்டும்

செப்டம்பர் 04

“உன் சத்தத்தை நான் கேட்கட்டும்” உன். 2:14

இயேசுவானவர் தம்முடைய சபையையும் நம்மையும் பார்த்து இப்படிச் சொல்லுகிறார். நாம் அவருடைய சிங்காசனத்தண்டை சேருகிறதைப் பார்க்கவும், நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக ஊற்றுகிறதைக் கேட்கவும் அவர் பிரியப்படுகிறார். நீதிமான் செய்யும் ஜெபம் அவருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அது புறா கூறுகிறதுபோல் துக்க இராகமாய் இருந்தாலும் ஒன்றாய் முணங்குவதுபோல இருந்தாலும் அவருடைய செவிக்கு அது இன்பமானது. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் நாம் சலித்து விடுவதுப்போல் அவரும் சலித்து விடுவார் என்று நாம் தவறாய் நினைத்து விடுகிறோம். ஆண்டவரோ அப்படியல்ல. நான் உன் சத்தத்தை கேட்கட்டும் என்கிறார். நாம் மாட்டோமென்று சொல்லலாமா?

அவரின் பாதத்தில் போய் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, நம்முடைய புத்தியீனத்திற்காக வருத்தப்பட்டு, மன்னிப்பை நாடி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக்காட்டி, அவரிடம் கெஞ்சி அவரிடம் இருக்கும் ஆசீர்வாதங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாய் கேட்டு வாங்குவோமாக. நாம் அடிக்கடி மிஞ்சி கேட்கிறோம் என்று சொல்லவுமாட்டார். தாராளமாய் நாம் அவரிடம் செல்லலாம். அடிக்கடி அவர் சமுகத்தில் வரும்படி ஏவிவிடுகிறார் செல்லாமலிருக்கும்போது நம்மைக் கண்டிக்கிறார். நம்மை அவரின் பக்கம் வரவழைக்க துன்பங்களையும் சோதனைகளையும் அனுப்புகிறார். அவர் அளிக்கும் ஒவ்வொரு ஆறுதலிலும் உன் சத்தத்தை நான் கேட்கட்டும் என்கிறார். ஒவ்வொரு துன்பத்திலும் என்னை நோக்கிப் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் என்கிறார்.

இரவில் கவலை நீக்குவேன்
என்னை ஆராய்ந்துப் பார்ப்பேன்
கண் மூடும் முன்னே நான்
ஜெபத்தில் பேசுவேன்.

அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்

செப்டம்பர் 03

“அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” ஏசாயா 63:9

கர்த்தருக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இருக்கும் ஐக்கியம் நெருங்கினதும் மெய்யானதுமாயிருக்கிறது. பல நேரங்களில் தேவன் தமது ஜனத்தைவிட்டு விலகினதுப்போல் காணப்படுவார். இது அவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. அவர்கள் தண்டிக்கப்படும் போது அவரும் சேர்ந்து துன்பப்படுகிறார். தேவ ஜனங்கள் துன்பங்களைத் தனிமையாய் அனுபவிப்பதில்லை. தேவன் எப்போதும் அவர்களோடிருந்து தகப்பன் பிள்ளைகளோடு துன்பத்தைச் சகிப்பதுபோல் துன்பத்தைச் சகிக்கிறார். வேதமும் இயேசுவானவர் எல்லாருடைய நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டாரென்று சொல்கிறது. அவர்களுக்கு வருகிற துன்பங்கள் அநேகம். இந்த அநேக துன்பங்கள் இவர்களைக் கொடிய வருத்தத்திற்குள்ளாக்குகிறது. ஆனாலும் அவர்களுடைய எல்லா வருத்தங்களிலும் அவர் நெருக்கப்படுகிறார். அவருடைய சமுகத்து தூதர்கள் இவர்களைக் காப்பாற்றுகிறார்கள்.

அன்பான விசுவாசியே! நீ உன் மனதில் உன் சரீரத்தில் நெருக்கப்படுகிறாயா? அதைப் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசுவானவர் அறிக்கை உன்னோடு அனுதாபப்படுகிறார். உது சோதனைகள், பயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் அவைகளைப் பிதாமுன் வைத்து நீ இரக்கம் பெறவும். தகுந்த வேளையில் உதவிக்காக கிருபையைக் கண்டடையவும், உனக்காகப் பரிந்து பேசுகிறார். அருமையான இரட்சகரே நீர் என் சோதனைகளிலும் துன்பங்களிலும் பங்கடைந்து அவைகள் எல்லாவற்றினின்றும் மகிமையாய் என்னை விடுவிப்பீர் என்கிற சிந்தை எப்பொழுதும் என்னைத் தேற்றும்படி செய்யும்.

நம்முடைய ஆசாரியர் நமக்கு இரங்கத்தக்கவர்
நம்மோடென்றும் அவர் பாடுபடுபவர்
காயத்தில் எண்ணெய் ஊற்றி
தேற்றி இரட்சிப்பார்.

நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ

செப்டம்பர் 02

“நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ” யோனா 4:4

யோனா தேவனோடு வாக்குவாதம்பண்ணினான். இப்படி செய்யாதவன் யார்? யோனாவைப்போல நாம் வெளியே முறுமுறுக்கவில்லையென்றாலும் அவனைப்போல எரிச்சலடைகிறோம். கர்த்தர் செய்ததே சரியென்று சொல்பவர்கள் ஒருசிலரே. அவர் செய்கிற செயல்களைக் குறித்து சந்தோஷப்படுகிறவர் இன்னும் வெகு சிலரே. பலர் தேவனுடைய செயலை அவர் தம் இஷ்டம்படி செய்கிறார் என்று கோபமடைகிறார்கள். அதைக் குறித்து முறுமுறுப்பவர்கள் அநேகர். அவர் செயலைக் குறித்து முறுமுறுத்து அவர் பட்சபாதமுள்ளவரென்றும், அன்பற்றவரென்றும் நினைக்கிறார்கள்.

அன்பர்களே, நாம் அடிக்கடி தேவன்மேல் கோபம் கொள்கிறோம். முறுமுறுப்பிலும், வெறுப்பினாலும், இதை அடிக்கடி வெளிப்படுத்திவிடுகிறோம். சிலர் அவரோடு பேசவும் மனதில்லாமல் ஜெபம்பண்ணாமலும் இருந்து விடுகிறார். சிலர் தாங்கள் பெற்றுக்கொண்டதை அறிக்கையிட மனமற்று அவரைத் துதிக்காமல் போய் விடுகிறார்கள். நாம் இப்படி எரிச்சலாய் இருப்பது நல்லதா?? அளவற்ற ஞானமுள்ளவராய், எப்போதும் நம்மை நேசித்து நமது பேரில் ஆசீர்வாதங்களைப் பொழிகிற பிதாவின்மேல் நாம் கோபமாயிருக்கலாமா? நம்முடைய அக்கிரமங்களை மன்னித்து, நம்முடைய குறைவுகளை நீக்கி, குமாரனோடு ஐக்கியப்படுத்தி, பரம நன்மைகளால் ஆசீர்வதித்து வழிநடத்திய தேவன்மேல் எரிச்சலடையலாமோ? அவர் கொடுப்பதிலும், அவர் செய்வதிலும் சந்தோஷப்படாமல் இருப்பது பாவமாகும். நீ முறுமுறுத்து மனமடிவாகி எரிச்சல் அடைகிறது நல்லதோ?

நான் கொடிய பாவிதான்
மன்னிப்பளித்து இரட்சியும்
பாவ இச்சைக்கு என்னைக் காரும்
இருதயத்தைச் சுத்தமாக்கும்.

இரவிலும் கீதம்பாட

செப்டம்பர் 01

“இரவிலும் கீதம்பாட” யோபு 35:11

தேவ சமுகமும், அவர் சமுகத்தின் பிரகாசமும்தான் கிறிஸ்தவனுக்குப் பகல். இரவு என்பது துன்பத்திற்கு அறிகுறி. வியாதி, வறுமை, நஷ்டங்கள், சோர்வு, மரணம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும்போது அந்த இரவு எவ்வளவு இருட்டாயிருக்கும். இந்த இரவு மிகுந்த குளிர் நிறைந்த நீண்டதொரு இரவு. ஆனால் கர்த்தர் முகம் இருட்டிலும் நம்மைக் கீதம் பாடச்செய்யும். சந்தோஷம், கிருபை என்னும் ஒளியைக் கொண்டு நம் இருதயத்தைப் பளிச்சிட செய்கிறார். துதித்தலுக்கான காரியங்களை நமக்குத் தெரிவிக்கிறார். கண்ணீரிலும், எல்லாரும் பார்த்து வியக்கத்தக்கபடி நம்மைப் பாடச்செய்கிறார்.

பவுலும் சீலாவும் பிலிப்பு பட்டணத்தில் இப்படியே இரவில் துதித்துப் பாடினார்கள். பஞ்சம் வரும் என்று அறிந்தபோது ஆபகூக்கும் இப்படியே பாடினான். அநேக இரத்த சாட்சிகள் சிறைச்சாலையில் பாடனுபவிக்கும்போது இப்படியே பாடினார்கள். பலர் வறுமை என்னும் பள்ளத்தாக்கிலும், வியாதி படுக்கையிலும், மரணம் என்னும் யோர்தானிலும், சந்தோஷத்தால் பொங்கிப் பாடினார்கள். அன்பர்களே, என்னதான் பயங்கரமான காரியங்கள் வந்தாலும், இரவில் காரிருளில் கடந்து சென்றாலும் உனக்குப் பாட்டைக் கொடுக்கிறார். அவரோடு ஒட்டிக்கொண்டு அவரோடு சேர்ந்து நட. அப்போது அவர் முகப்பிரகாசம உனக்குச் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், நன்றியறிதலையும் கொண்டு வரும். அவருடைய அன்பு அவருடைய இரட்சிப்பில் உன்னைக் களிகூரப்பண்ணும். அவரின் ஜனம் பாக்கியவான்களாய் இருப்பதே அவர் விருப்பம். அவர்கள் பாடுவதைக் கேட்பது அவருக்கு இன்பம். அவரோடு நெருங்கி வாழ்பவர்கள் அவரில் மகிழ்ந்து களிகூர்வார்கள்.

இரவிலும் பாட்டளிப்பீர்
துக்கம் யாவும் மாற்றுவீர்
உமது சமுகம் காட்டி
பரம வெளிச்சம் தாருமே.

நான் தேவனை நாடி

ஓகஸ்ட் 31

“நான் தேவனை நாடி” யோபு 5:8

இது ஒரு நல்ல புத்தி. ஒரு நல்ல சிநேகிதன் சொல்லும் யோசனை. மனுஷரிடத்தில் போகிறதைவிட துயரங்களைத் துக்கித்து நினைப்பதைவிட, வீணய் பயப்படுவதைவிட, இதுவே நல்லது. துன்பங்களைத் தூரத்திலிருந்து பார்த்தூல் அவைகள் பயங்கரமாகத் தோன்றினாலும் உண்மையில் பயங்கரமானவைகள் அல்ல. நண்பா, நீ செய்கிறது என்னவென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் கலங்கி நிற்கும்போது நான் தேவனையே நாடுவேன். துன்பத்தில் ஆறுதலுக்காகவும், பெலவீனத்தில் பெலனுக்காகவும், குற்றத்தில் மன்னிப்புக்காகவும், தேவனையே நாடுவேன். பயங்கர போராட்டத்தின்போது ஜெயத்திற்காகவும் சந்தேகத்தில் நம்பிக்கைக்காகவும், வெறுமையில் அவரின் நிறைவுக்காகவும், அவரையே நாடுவேன்.

அவ்விசுவாசத்தின் வல்லமையின்கீழ் இருப்பேனாகில் விசுவாசத்திற்காக அவரிடம் போவேன். அவனுடைய ஜெயத்தை அடக்க, அவனுக்கு விரோதமாய் ஜெயக்கொடியைப் பிடிப்பேன். நான் விழுந்து விடுவேனோ என்நு நினைக்கும்போது அவருடைய நீதியின் வலதுக்கரத்தை பிடித்துக்கொள்ள அவரையே நாடுவேன். மரணத்தைக் கண்டு நான் பயப்படும்போது மரண இருளை வெளிச்சமாக்கும்படி அவரையே நாடுவேன்.

உனக்கு எது தேவையோ அதைத் தேவனிடம் கேள். எந்த பயத்தையும் அவரிடம் சொல். எந்தத் துன்பத்தையும் அவர் முன்னே வை. நீ அவரை நாடித் தேடுவது மட்டும் வீணாய்ப் போவதில்லை.

கர்த்தரைத் தேடு கொடுப்பார்
கேள் உனக்குத் தருவார்
அவர் கிருபை பொழிவார்
நோக்கி கெஞ்சி காத்திரு.

My Favorites

அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து

நவம்பர் 23 "அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்து" எசேக். 7:16 கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்பொழுது ஒவ்வொருவரும் செய்கிற செயல்கள்தான் அக்கிரமத்தினிமித்தம் துக்கிப்பது. தண்டனைக்குப் பயப்படுகிற பாவியான மனுஷன் அழுது பாவத்தினிமித்தம் வரும் பலனுக்காகப் பயந்து கலங்குவான். தேவனுடைய...
Exit mobile version