முகப்பு செய்திகள் சிலுவையின் மேன்மையான சிந்தை

சிலுவையின் மேன்மையான சிந்தை

ஒருவன் மனந்திரும்பாமல், குணப்படாமல், பாவ மன்னிப்பின் நிச்சயத்தை உணராமல், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல், ‘நான் கிறிஸ்தவன்” என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது “நான் தேவனின் சாட்சி”, “பரலோக சுதந்தரவாளி” என்றோ அல்லது ஆயிரம் வருட அரசாட்சியில் பங்குண்டு என்று சொல்வாரேயாகில் அவனது விசுவாசத்தில் எந்த பயனுமில்லை என்றே சொல்ல வேண்டும். சிலுவையின் மேன்மையை உணராதவன் பரலோக வாசலுக்கே செல்ல முடியாது. ஏனெனில் சிலுவை மரணம் இயேசு கிறிஸ்துவின் வாழ்வின் உச்சக்கட்டமும், நமது வாழ்வின் ஆரம்பமும் ஆகும். இந்நிகழ்ச்சி கிறிஸ்தவ விசுவாசத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் உலகில் அநேக ஞானியரும் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை பற்றி சந்தேகப்படுவதுடன் அவர் சிலுவையில் மரிக்கவில்லை எனவும் தர்க்கிக்கின்றார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவின் மரணத்தின்பின் நடைபெற்ற சம்பவங்கள், கண்ணால் கண்டவர்கள் அவர் உயிருடன் இருக்கின்றார் என சாட்சி கொடுத்தார்கள். அன்று மனித பகுத்தறிவிற்கும் ஞானத்திற்கும் எட்டாமல் போன உண்மை சத்தியம். உலகில் இன்று பிரபல்யமாகியது. இந்நற்செய்தியை நாம் ஆராய்வோம்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லையானால் கிறிஸ்தவ விசுவாசமே ஒரு தெளிவில்லாத புராணக்கதையாகிவிடும். முதல் மனிதனால் இவ்வுலகத்தில் உருவாகிய மானிடப்பிறவிக்கு மனிதன் என்ற உரிமை கிடைத்தது போலவே, அவனால் செய்யப்பட்ட பாவத்திற்கு கிடைத்த கூலியாகிய மரணமும் மானிடப் பிறவியாகிய மனிதனுக்கும் உரிமையாக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவும் மானிடப்பிறவியில் வந்தபடியால் அவருக்கும் மரணம் நியமிக்கப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவின் மரணம் மனிதனது பாவத்தினிமித்தம் அவனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தையே ஒத்திருக்காமல் துன்மார்க்கரைப்போன்று இவருடைய மரணமும் அமைந்திருக்கவேண்டும். மனிதனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தில் அவனது சுபாவத்தின்படியே மரணம் நியமித்த போதிலும், இயேசு கிறிஸ்துவின் மரணமும் மரணத்தின் எல்லையைக் கடந்து விட்ட ஒன்றாக இருக்கிறது. மரணமானது தேவனைக் கட்டி ஆளமுடியாதபடிக்கு அவரது ஜீவியம், நீதி, நேர்மை, உத்தமம், போன்றவற்றால் ஆளப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இயேசுகிறிஸ்து மரணத்தை மேற்கொண்டார் என்பது தெளிவாகிறது. மரணமின்றி உயிர்த்தெழவில்லை. ஆகையால் இயேசுகிறிஸ்துவும் சுபாவத்தின்படியே மனிதனுக்கு நியமிக்கப்பட்ட மரணத்தை தழுவிக்கொண்டார். இயேசு கிறிஸ்து இவ்விதமான பாடுகள் உள்ள மரணத்தை ஏற்றுக்கொள்ளாது நீதிமான்களைப்போல அமைதியாக மரித்திருந்தால் மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுதல் என்ற சம்பவம் ஒன்று நடந்து இருக்காது. இது இவ்விதம் இருக்க இயேசுகிறிஸ்து இவ்வுலகில் நீதிநெறியுடன் வாழ்ந்த முறையை பின்பற்றுதல் பிரயோஜனமற்ற செயலாகிவிடும். ஏனெனில் அவ்வாறு வாழ்ந்து மரணம், நேரிடும்பொது அவ்வாழ்க்கைக்கேற்ற பலனை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால் கிறிஸ்தவ விசுவாசம் என்பது நாம் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றுவதால், அவர் சாவை வென்று கைப்பற்றிக்கொண்ட உயிர்த்தெழுதலின் மூலம் கிடைக்கும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதாகும். ஆகவே இயேசுகிறிஸ்து உண்மையாகவே சிலுவை மரணத்தை தழுவிக்கொண்டார் என்பதை நாம் அவரை குறையாக அல்ல முழுமையாக, முழு உள்ளத்தோடும் அதாவது உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து விசுவாசிக்கவேண்டும். அப்பொழுது நாம் விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாவோம்.

சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவன் வட ஆபிரிக்காவிலுள்ள சிரேனைக்கா மாவட்ட தலை நகரான சிரேனேயைச் சேர்ந்தவன் (மாற்கு 15:21, மத் 27:32, லூக் 2326). இவர் வட ஆபிரிக்காவில் வசித்தாலும் நீக்ரோவாக இருக்க முடியாது. ஏனெனில் இயேசுவின் காலத்தில் யூதர்கள் பலரும் அப்பகுதிகளில் குடியேறி இருந்தனர். ஒருவேளை பஸ்காவைக் கொண்டாட வந்த யூதர்களில் ஒருவராயிருக்கலாம். இவருக்கு அலெக்சாந்தர் ரூபு என்ற புதல்வர்கள் இருந்தனர் (மாற் 15:21). இந்த சீமோன் எருசலேமுக்கு யாத்திரையாக வந்தான். அவனை சிலுவையை சுமக்கும்படி பலவந்தப்படுத்தினார்கள். அதாவது என்னால் முடியாது என்ற நிலையிலும் செய்வித்தல் என்பதைக் குறிக்கின்றது. அநேக சிலுவை குறுக்காக வைத்துக்கட்டப்பட்ட 30 அல்லது 40 இறாத்தல் எடை உள்ள மரக்கட்டைகள் என ஏற்றுக்கொள்கிறார்கள். எவ்வாறெனினும் சிலுவை மரணத்திற்கு உட்பட்டவன் அவனுக்கு குறிக்கப்பட்ட ஸ்தானத்தில் இருந்து அதனை சுமந்து செல்ல வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்துவே இறுதிவரையும் சுமந்து செல்ல முடியாதபடி அவரது சரீரம் புண்பட்டு பெலவீனப்பட்டிருந்தது. கசையடிகளால் உன்னதமானவருடைய சரீரம் காயப்பட்டிருந்ததால் அவரது சரீரம் பெலவீனமடைந்து இருந்தது. அவர் எத்தனை தரம் வீதிகளில் தடுமாறி விழுந்திருப்பார்? ரோம சாம்ராஜ்யத்தில் குற்றுவாளிகளுக்கு கசையடி கொடுப்பதற்காக 36 அங்குலம் (3அடி) நீளமுள்ள தோல்பட்டியல்களின் முனைகளில் ஈயக்குண்டுகுள் பொருத்தப்பட்டிருக்கும் என விஞ்ஞான ஆய்வுகள் கருதுகின்றன. ஒரு மரக்கைபிடியில் 12 வார்கள் பொருத்தப்பட்டிருக்கும் வாரின் மறுமுனையில் எலும்பு அல்லது உலோகத்துண்டுகள் பொருத்தி அடியின் உபாதை கோரமடையச் செய்வார்கள். யூத முறைப்படி 40 அடிவரையிலும் அடிக்கலாம். (உபா25:3, 2கொரி 11:24). ஒரு அடிக்கு 12 வார்பதிந்தால் 27 அடிகளுக்கு 468 வார் அடிகள் இயேசுவின் மேல் பட்டிருக்கும். அத்துடன் எலும்புத்துண்டும் பட்டதினால் முதுகின் சதை கிழிந்து உழவனுடைய படைச்சால்போல கிழித்தனர் என்றார். தீர்க்கதரிசி (சங். 129:3). இவ்விதமாய் தண்டிக்கப்படும்போதே பலர் மரித்திருக்கிறார்கள். அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் உடம்பில் வலு குறைந்திருக்கும். அப்படி சக்தியற்று பலவீனம் நிலையில் இச்சிலுவையை சுமக்க சீமோன் வற்புறுத்தப்பட்டான்.

கொல்கொதா என்று சொல்லுப்படும் கபாலஸ்தலம், மனித மண்டை ஓட்டுக்கு ஒப்பான உருவத்தை உடைய ஒரு சிறு மலைப்பாறையாகும். இவ்விடம் பற்றி வேதாகமம் சரியான விளக்கத்தினைக் கொடுக்காவிடினும் யோவான் 19:20 இல் இவ்விடமானது நகரத்திற்கு சமீபமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகத்தில் கல்வாரி என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த இடத்தில் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கசப்பான காடி என்பது தரம் குறைந்த திராட்சைரசமாகும். காயங்களுக்கு போடுவதற்காக அவர்கள் நாட்டில் செய்யப்பட் மருந்தில் திராட்சைரசமும் கலக்கப்பட்டிருக்கும். இது தான் சிலவேளை இயேசுகிறிஸ்துதுவிற்கு கொடுக்கப்படடதென்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலர் ரோமப் போர்ச்சேவகர்கள் தாகந்தீர்த்துக் கொள்வதற்காகவும், தங்கள் சரீரக் களைப்பைக் போக்கிக் கொள்வதற்காகவும் ஒருவிதமான பாணத்தை தங்களிடம் வைத்திருப்பார்கள். அதுதான் இயேசு கிறிஸ்துவிற்கு கொடுக்கப்பட்ட கசப்பான காடி என்கின்றனர். ஆனால் அந்த நாட்களில் கொடிய தண்டனையாக சிலுவையின் சித்திரவதைக்குள்ளாகும் குற்றவாளிகளுக்கு சிலர் வெள்ளைப்போளம் கலந்த கசப்பான காடியை கொடுப்பார்களாம். அதனைக் குடித்தால் தொடர்ந்து அனுபவிக்கப்போதும் பயங்கர வேதனைகளை அதிகமாக உணராதிருக்க அது ஓரளவு உதவுமாம். ஆனால் அத்தனை வேதனைகளையும் அதன் உண்மையான அளவில் முழுமையான அனுபவிக்க முடிவுசெய்த இயேசு, அந்த வேதனையைக் குறைக்கும் காடியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார் (மாற்கு 15:24 நிலையான அன்பு புதிய ஏற்பாடு வேதாகமம்).

சிலுவை என்பது இன்று உலகமெங்கிலும் ஆசீர்வாதத்தின் சின்னமாக விளங்குகின்றது. ஆனால் இயேசுக்கிறிஸ்துவின் நாட்களில் அது சாபத்தின் சின்னமாகவும் அவமானத்தின் சின்னமாகவும் விளங்கியது. மரத்தில் தொங்கி மரிப்பது என்பது யூதர்களின் நியாயப்பிரமாணப்படி சாபமான ஒரு மரணமாகும். ஆகவே அவர்கள் சிலுவை மரணத்தை வெறுக்கத்தகுந்த சாபத்தின் சின்னமாகக் கருதினர். குற்றவாளிகளை சிலுவையில் அறையும் முறை இஸ்ரவேலிய வழக்கமல்ல. அது ரோமருடைய வழக்கமாகும். இஸ்ரேலிய பிரமாணம் சிறிய குற்றங்களுக்கு பிரம்பினாலும் சவுக்கினாலும் அடிப்பதும் பெரிய குற்றங்களுக்கு கல்லெறிந்து கொல்லுவதுமாகும். இயேசுவுக்கு ஒரு புறஜாதி வழக்கமான ஈன மரணத்தையே வழங்கினர். கொடிய குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து சாகடிப்பதினால் அது ரோம பார்வையில் இழிவானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் விளங்கியது. சிலுவையின் தண்டனை என்பது சமுதாயத்தின் பார்வையில் மிகவும் இழிவான ஒன்றாகக் கருதப்பட்டதால் பெரும்பாலும் தண்டனை அனுபவிக்கும் குற்றுவாளிகளின் அருகில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள்கூடச் செல்லமாட்டார்கள். அவ்விதமான சிலுவையைக் கீழே கிடத்தி மனிதனது உள்ளங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடையில் இரும்பாணியால் அறைவார்கள். கி.பி முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எருசலேமுக்கு அருகிலுள்ள ஒரு கல்லறையின் சிதைவுகளில் இருந்து பல செய்திகள் அறியக்கிடக்கின்றன. சிலுவையில் அறையப்பட்டவர்கள் இரு கால்களும் ஒரே ஆணியால் ஊடுருவப்பட்டு, ஒரு சிறிய ஒலிவப் பலகையில் அறையப்பட்டன. இது கால்களை இணைத்து வைப்பதற்கு உதவியது. ஆகவே இயேசுவை ஆணிகளினால் அறைந்தார்கள் என்பது புலனாகிறது. ரோம ஆட்சியில் சேவைசெய்யும் ஒவ்வொருவனும் திறமையுள்ளன். அகவே இயேசுவை சிலுவையில் அறைந்தவன் கூட நன்கு அனுபவமுள்ள ஒருவனாக இருந்திருக்கலாம். மரணதண்டனையாக சிலுவையில் அறைதல் இருவகைக் கொடுமையைக் கொண்டிருந்தது. (பகிரங்க அவமானம், உடல் சார்ந்த வேதனை) சிலுவை மரணத்திற்கு உள்ளாகும் ஒருவனது தனிப்பட்ட சொத்துக்கள் உரிமைகள் யாவும் மரண தண்டனை கொடுக்கும் குழுவிற்கு உரியது என்று ஒருவர் கூறுகிறார். ஆனால் அவரை ராஜா என்று இழிவுபடுத்தியே இயேசு கிறிஸ்துவின் வஸ்திரங்களை எடுத்துக் கொள்ளும்படியாக ஒவ்வொருவனும் சீட்டுப்போட்டும் பங்கிட்டுக்கொண்டார்கள்.

இவ்வசனத்தில் சீட்டுப்போட்ட குழுவினர் அவரைக் காவல் காத்தனர். இந்த நேரத்தை மாற்கு நற்செய்தி நூல் எழுத்தாளன் மூனறாம் மணிவேளை என்று கூறகிறார். மூலத்தில் யூதர்களின் நேரம் கணக்கின்படி காலை ஒன்பது மணியாகும். ரோம நீதியின்படி மரண தண்டனைக்கு உள்ளான ஒருவனுடைய குற்றத்தை ஒரு பலகையில் எழுதி அதனை சிலுவையை சுமந்து செல்பவனுக் முன் எடுத்துச் சென்று அந்த சிலுவையின் மேல் கட்டித் தொங்கவிடுவார்கள். அவ்வாறே இயேசுவுக்கும் செய்தனர். யூதர்களின் அரசன் என்பதிலிருந்து இயேசு உரோமர்களின் ஆட்சியை எதிர்த்து புரட்சிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்று தெரிகிறது. மேலும் ரோம அதிகாரிகளுக்கு யூதர்களின் மேல் இருந்த அவமதிப்பையும் வெறுப்பையும் இது காட்டுகிறது. யோவான் 19:19-22 இன்படி இப்பலகையில் எபிரேய, லத்தீன், கிரேக்க பாஷைகளில் எழுதப்பட்டிருந்தது. அதில் யூதர்களுடைய பிரதான ஆசாரியர்கள் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா நான் என்று எழுதும்படிகேட்டனர். ஆனால் பிலாத்துவோ மறுத்துவிட்டான். இக்காலச் சிலுவைகளின்மேல் இக்குற்றம் (I.N.R.I) என்று அழகாக பொறிக்கப்பட்டிருக்கும். இதன் I(esus) N (azareneus) R(ex) I (udaeorum) (நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்) என்பதன் சுருக்கவடிவாகும். எவ்விதம்தான் எழுதினாலும் எப்படி முறைப்பாட செய்தாலும் சிலுவை தேவனுடைய திட்டத்தில் எப்போதும் இருந்தது. ஆகவேதான் யூதர்களின் முறைப்பாடு பலன் தரவில்லை.