துண்டு பிரதிகள்

முகப்பு துண்டு பிரதிகள்

சுகமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து தங்கள் சுகத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தார்கள்.

முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனிதன் அங்கே படுத்திருந்தான். இந்த மனிதனுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாய் இருந்தது. இந்த மனிதனைக் குறித்து ஆராயும்போது, முதலாவது, இவன் நெடுநாள் வியாதியுள்ளவனாய் இருந்தான். ஒன்று இரண்டு வருடங்களல்ல, முப்பத்தெட்டு வருடம் படுக்கையில் கிடந்து இவனது உறுப்புகள் செயலற்றுப் போயிருந்தன.

இரண்டாவதாக இந்த மனிதன் உதவியற்றவனாயிருந்தான். இவனை ஆரம்பத்தில்கவனித்து வந்தவர்கள் இவனுக்கு உதவி செய்து சலித்துப் போனார்கள். இப்பொழுது உதவி செய்ய யாரும் முன் வரவில்லை. வேளா வேளைக்கு உணவு கொடுத்து கவனிக்கயாருமில்லை. மூன்றாவதாக நம்பிக்கையற்றவனாயிருந்தான். ஆரம்பத்தில் இந்த வியாதி சுகமாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுதோ முப்பத்தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டது. “இனி யார் தான் என்னை சுகப்படுத்தப்போகிறார்கள்? நான் சாகும்வரை இதே படுக்கையில்தான் சாக வேண்டும்” என்று வாழ்க்கையில் நம்பிக்கையற்ற நிலையில் இந்த மனிதன் இருந்தான்.

இப்படி இந்த மனிதன் நெடுநாளாய் வியாதிப்பட்டு, உதவியற்றவனாக, நம்பிக்கையிழந்து படுத்திருக்கும்போது, ஒரு நாள் அவனைத்தேடி வந்த மனிதர் அதிசயமான கேள்வியைக் கேட்டார். சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்பதே அக்கேள்வி. சுகத்திற்கு ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த மனிதன் இந்த வார்த்தைகளைக் கேட்டு உடனே, மிகுந்த ஆச்சரியப்பட்டு, என்னை அன்போடு விசாரிக்கும் இவர் யார்? என்று அவரை நோக்கிப் பார்த்தான். மன உருக்கமுள்ளவராக, கண்களில் அன்பு கனிந்தவராக இயேசு கிறிஸ்து அவனையே நோக்கிக் கொண்டிருந்தார். அவன் தன்னுடைய உதவியற்ற நிலைமையை இயேசுவுக்கு எடுத்துச் சொன்னான். இயேசு அவனை நோக்கி “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றார். உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து போனான். (யோவான் 5:9)

இதை வாசிக்கும் அருமை சகோதரனே! சகோதரியே! ஒருவேளை நீயும் இந்த வியாதியஸ்தனைப்போல் நெடு நாட்களாக வியாதிப்பட்டு படுக்கையில் இருக்கலாம். “எனக்கு உதவி செய்ய யாருமில்லை. நான் தனிமையாக கஷ்டப்படுகிறேன்” என்று கலங்கிக் கொண்டு இருக்கலாம். பயப்படாதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக தனிமையில் கிடந்த மனிதனைத் தேடி வந்த இயேசு கிறிஸ்து இன்று உன்னைத் தேடி வந்திருக்கிறார். அவர் உன்னை நேசிக்கிறவர். அன்போடு விசாரிக்கிறவர். காரணம் அவரே உன்னை உண்டாக்கினவர்.

“டாக்டர்கள் என்னை கைவிட்டார்கள், மருந்துகளாலும் பிரயோஜனமில்லை, நான் வாழப்போவது உறுதியில்லை’’ என்று நம்பிக்கையிழந்து கலங்கிக் கொண்டிருக்கிறாயா? கலங்காதே! முப்பத்தெட்டு ஆண்டுகளாக சுகமாகாத வியாதிக்காரனை “எழுந்து நட” என்ற ஒரே சொல்லால் சுகப்படுத்தின இயேசுக் கிறிஸ்து உன் வியாதியை சுகப்படுத்துவது அதிக நிச்சயம். ஏனென்றால் “இயேசு கிறிஸ்துதாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களை (சிலுவையில்) சுமந்தார்.’ மத்தேயு 8:17 இயேசு கிறிஸ்து உன் பலவீனங்களையும், நோய்களையும், சுமந்து தீர்த்துவிட்டபடியினால் அவர் உன்னைச் சுகமாக்க வல்லவராயிருக்கிறார்.

இந்த இயேசுகிறிஸ்து இப்போது உன்னைத் தேடி வந்திருக்கிறார். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா? என்று உன்னைப் பார்த்து கேட்கிறார். ஆனால் உன் வியாதிக்காக இயேசுவை நோக்கிப் பார்க்கும் முன்பாக ஒரு முக்கியமான காரியத்தை நீ செய்யவேண்டும். உன் பாவங்கள் மன்னிக்கும்படியாக சுகமாக்கும் இயேசுவை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால்… சுகத்தைப் பெற்றுக்கொண்ட இந்த வியாதியஸ்தனை இயேசு தேவாலாயத்தில் கண்ட போது “இதோ நீ சொஸ்தமானாய் அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனி பாவம் செய்யாதே” என்றார். (யோவான் 5:14) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தையிலிருந்து, இந்த மனிதனுடைய பாவமே இவனுடைய வியாதிக்கு காரணமாயிருந்தது என்பதை அறிகிறோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே உன்னுடைய. வியாதிக்குக்கூட உன் பாவமே காரணமாயிருக்கலாம். ஆகவே உன் பாவத்தை சுமந்து தீர்த்த இயேசுவுக்கு உன் உள்ளத்தில் இடம் கொடு. தன்னிடத்தில் வந்த எந்த பாவியையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை.

இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தினார் என்பதை விசுவாசி “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது.” (ஏசாயா 53:5) “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.” (1 யோவான் 1:7)

“இயேசுவே என் பாவங்களை மன்னியும்” என்று இருதய கதவைத் திறந்து கொடு, அப்பொழுது அவர் இருதயத்தில் வருவார், உன் பாவங்களை மன்னிப்பார். உன் வியாதிகளை குணமாக்குவார். தெய்வீக சமாதானத்தினாலும், சந்தோசத்தினாலும் உன் உள்ளத்தை நிரப்புவார். “இதோவாசற்படியில் நின்று தட்டுகிறேன். ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவை திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசிப்பேன்” இயேசு (வெளி 3:20)

உன் உன் இருதய கதவை தட்டிக் கொண்டிருக்கும் இயேசுகிறிஸ்து “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று இப்பொழுது உன்னை கேட்கிறார். அவருக்கு உன் இருதய கதவைத் திறந்து கொடுத்து, இந்த வியாதியஸ்தனைப் போல நீயும் உன் நிலைமையை இயேசுவிடம் சொல், நான் அனுபவிக்கும் இந்த வியாதிக்கு காரணமான என் பாவங்களையும் நீர் எனக்காக சிலுவையில் சுமந்தீரே! ஆகவே என் பாவங்களை மன்னித்து என் வியாதியிலிருந்து சுகம் தாரும் என்று கேள். இயேசுகிறிஸ்து நிச்சயமாக உன்னைச் சுகப்படுத்துவார். “அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (ஏசாயா 53:5)

கிறிஸ்து இயேசு அவருடைய தழும்புகளால் தொட்டு உன்னை சுகப்படுத்துவாராக.

மனம் மாறிய மாலுமி

பல ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை ஒரு பெரிய கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்த சமயம் அக் கப்பலின் தலைவன் கேப்டன் ஜான் கொடிய வியாதிப் பட்டு மரணத் தருவாயில் இருந்தான்.

அப்பொழுது மரண பயமும், நித்திய வாழ்வைக் குறித்த கவலையும் அவனைப் பிடித்து வாட்டி வதைத்தன. தனக்குக்கீழ் பணிபுரியும் முக்கிய அதிகாரியை அழைத்தான். நான் பாவங்களையும் அக்கிரமங்களையும்” ஏராளமாய்ச் செய்துள்ளேன். அவைகள் எனக்கு மன்னிக்கப்படவும், எனது நித்திய வாழ்வுக்காக வும், எனக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக்” கொண்டார். அந்த அதிகாரி தலைவனைப் பார்த்து, ஐயா! நான் ஜெபித்ததேயில்லை. ஜெபிக்க வும் தெரியாது என்றான். கப்பல் தலைவன் சத்தியவேதத்தைக் கொண்டுவந்தாவது வாசி”” என்றான். அதற்கு அந்த அதிகாரி வருத்தத்துடன் தலைவனைப் பார்த்து, என்னிடம் சத்திய” வேதமும் இல்லையே! என்ன செய்வது? என்றான்.

அப்போது அங்கே அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த தேவஊழியர் ஒருவர் முன்வந்தார். கப்பல் தலைவனின் வேண்டுதலின்படி அந்த ஊழியர் வேதத்தைத் திறந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் 53வது அதிகாரத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார்.

“நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு,

நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.

நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.

அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” என்று அந்த அதிகாரத்தின் 5வது வசனத்தை வாசித்தார்.

உடனே, கப்பல் தலைவன், அங்கேயே நிறுத்திக் கொள்ளுங்கள் ஐயா! எனது” தாயார் இந்த வசனத்தில் எனது பெயரையும் வைத்து ஜெபிக்கும்படி கூறினாள். எனக்கோ இதன் அர்த்தம் புரியவில்லை. ஆகையால் இதை நான் ஜெபமாகக் கூறமுடியவில்லை. இந்த வசனம் என்ன சொல்லுகிறது. எனக்கு சற்று விளக்கிச் சொல்லுங்கள் என ஆவலுடன்” கேட்டான்.

அதற்கு அந்த தேவமனிதர், தலைவனே! ஒரு உதாரணம் கூறுகிறேன்.” கேளும். என்னிடமிருந்த விலையுயர்ந்த கண்ணாடிப் பொருளை என் வேலைக்கார சிறுவன் உடைத்துவிட்டு, பிறகு என்னிடம் வந்து அதற்காக மன்னிப்புக் கேட்டான். நானும் அவனை மன்னித்துவிட்டேன். இப்போது உம்மிடம் ஒரு கேள்வி? இந்த மன்னிப்புக்கான விலை எவ்வளவு?எனக் கேட்டார்.

கப்பல் தலைவன் போதகரே! “அந்தக்கண்ணாடிப்பொருளின் விலை எதுவோ? அதுவே மன்னிப்பின் விலை. அதாவது அந்தக் கண்ணாடிப்பொருள் தான் உமது மன்னிப்பின் விலை” என்றார். போதகர் கப்பல் தலைவனைப் பார்த்து நீங்கள் சரியாகச்” சொன்னீர்கள். நாமும் பாவம் செய்யும் போதெல்லாம் கடவுளுக்கு விரோதமாகத்தான் பாவம் செய்கிறோம். புpறகு அவரிடம் வந்து சரணடைந்து மன்னிப்புக் கேட்டால் அவர் உடனே மன்னித்து விடுகிறார். ஆனால் நம்மை அவர் மன்னிக்க அவர் ஒரு விலையைக் கொடுக்கவேண்டும். பாவத்தின் சம்பளம் மரணம். உயிருக்கு விலை உயிர்தான் அல்லவா? எனவே தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தன்னுயிரைத் தந்து எம்மை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டார். என்றார்.”

மேலும் கப்பல் தலைவனிடம், இப்போது” உமது தாயார் சொன்னபடி சொல்லித் தருகிறேன் ஜெபியும் என்றார். தலைவன் உடனேயே” கண்களை மூடி ஜெபிக்க ஆரம்பித்தான். தனது பெயரை அழுத்தம்திருத்தமாக

“கேப்டன் ஜானுடைய மீறுதல்களினிமித்தம் இயேசு காயப்பட்டு,

கேப்டன் ஜானுடைய அக்கிரமங்களினிமித்தம்

இயேசு நொறுக்கப்பட்டார்.

கேப்டன் ஜானுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை இயேசுமேல் வந்தது.

இயேசுவின் தழும்புகளால்

கேப்டன் ஜான் குணமடைகிறான். “என்று தேவ மனிதர் சொல்லச் சொல்ல கேப்டனும் ஜெபித்தார்.

ஜெபித்தவுடன் கேப்டனின் இருதயம் இலகுவானது.

கேப்டன் தானாகவே அழுகையுடன் திரும்பத்திரும்ப ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போதே இயேசு தன் பாவங்களை மன்னித்து விட்டார் என்ற நிச்சயமும், இயேசுவின் காயப்பட்ட கரங்களினால் நான் சுகமானேன் என்ற நம்பிக்கையும் கேப்டன் ஜானுக்கு வந்து விட்டது. அந்த நாளிலேயே அவரது உடலில் ஏற்பட்ட வியாதி நீங்கி நல்ல சுகத்தைப் பெற்றார். மரண பயமும் நீங்கிப் போனது. தொடர்ந்து தன் கப்பற்பணியை சந்தோஷமாக நிறைவேற்றினார்.

ஆம்! கேப்டன் ஜானுடைய வாழ்க்கைப் பயணம் கூட புதிய திசையில் பயணிக்க ஆரம்பித்தது.

அன்பானவர்களே!

இந்த கைப்பிரதியை வாசிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் எந்த மார்க்கத்தவராயிருந்தாலும் கிறிஸ்துவுக்கு விரோதமானவராயிருந்தாலும் அவர் எல்லா வற்றையும் மன்னித்து தங்கள் வாழ்வில் சமாதானத்தையும், மாறாத சந்தோஷத்தையும் தரக் காத்திருக்கிறார்.

இந்த கேப்டன் ஜானைப் போல் அவரைத் தேடினால் கண்டு கொள்வீர்கள். அவனுக்கு உண்டானதுபோல் கொடிய வியாதியினாலோ, மனநிம்மதியின்றியோ, துயரத்திலோ, வேதனையிலோ நீங்கள் இருக்கக் கூடும். ஆனால் இனி நீங்கள் அவ்வாறு இருக்கத் தேவையில்லை. கடவுளுக்குப் பிரியமில்லாத தவறினை, பாவத்தைச் செய்வதால் நம் வாழ்வில் இத்துன்பங்களால் வாடுகிறோம். அவற்றிலிருந்து எம்மை விடுவிக்கவே ஆண்டவராகிய இயேசு காயப்பட்டார். சிலுவையிலே அறையப்பட்டார். கொலையுண்டார். நமக்;கு எட்டாத சந்தோஷமான சமாதானமான வாழ்வு கிடைக்கும்படிக்கே அவர் சிலுவையில் பலியானார்.

இயேசுவின் காயத்தின் தழும்புகள் உங்கள் வியாதிககைக் குணமாக்கும் வல்லமை யுள்ளது. இன்றே நீங்களும் கேப்டன் ஜானைப் போல அந்த வசனத்தில் உங்கள் பெயரை வைத்து நம்பிக்கையுடன் சொல்லிப் பாருங்கள்.

பூட்டிய அறையில் தனித்திருந்து இயேசுவை வேண்டி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். நிச்சயமாகவே நீங்களும் அவரிடம் பாவ மன்னிப்பைப் பெறுவதோடு இப்பூமியிலே மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும் மறுமையில் தேவனோடு கூட வாழும் பரலோக வாழ்வையும் பெறுவீர்கள்.

தேவன்தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

விலை மதிப்பிடமுடியாத முத்து

நம் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதியை ஒட்டியுள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாபு என்கிற வயதான முத்துக்குளிப்பவன் தனியே வசித்து வந்தான். ஒரு நாள் முத்துக்குளியல் முடித்துக்கொண்டு கரையை அடையும்போது, தன் நெருங்கிய நண்பர் நிற்பதை அடையாளம் கண்டுகொண்டதும் பெரு மகிழ்ச்சியடைந்தான். ஏனெனில், இருவரும் அடிக்கடி சந்தித்து மத சம்பந்தமான விஷயங்களை பேசுவர். சாபு இந்துமதப் பற்றுடையவனாக இருந்த போதிலும், தன் கிறிஸ்தவ நண்பரிடம் அன்போடு பழகுவான்.

இப்போது படகு தன் துறையை அடைந்துவிட்டது. நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபின், சாபுவின் குடிசையை நோக்கி பேசிக்கொண்டே நடந்தனர். ‘சாபு, உன்னைப் பார்க்கும்போது, மிகவும் சோர்ந்திருப்பதுடன், வயதாகிவிட்டபடியால் உன் நடையும் தள்ளாடுகிறது, இதுவே நீ கடைசி முறையாக முத்துக்குளிக்கச் சென்றதோ? என எண்ணுகிறேன்’ என்றதும், ‘ஆம், இனி இந்த கடலோரப் பகுதியில் நான் நடமாடப் போவதில்லை. மேலும், நான் விருத்தாப்பியம் அடைந்ததால் முத்துக்குளிப்பதும் சிரமமாக உள்ளது. என் வாழ்க்கையின் ஒரே இலட்சியம் நிறைவேறப்போகும் நாள் மிக அருகாமையில் இருக்கிறது, பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள கங்கை நதியில் நீராடி மனநிம்மதியடையப்போகிறேன். ஏனெனில் என் வாழ்நாள் எல்லாம் எதற்காக ஏங்கினேனோ அது விரைவில் நிறைவேறப்போகிறது” எனச் சொல்லி அளவிலா மகிழ்ச்சியடைந்தான்.

சாபுவின் கிறிஸ்தவ நண்பர், பலமுறை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அவனுக்கு தெளிவுபடுத்தியிருந்தார். மீண்டும் அதை அன்போடு விவரிக்க ஆரம்பித்தவர், பாவ மன்னிப்பானது எந்த புண்ணிய நதியில் நீராடுவதாலும் கிடைப்பதல்ல. ஆனால், பாவங்கள் மன்னிக்கப்பட ஒரே வழி யாதெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் மூலமாக மட்டும் தான் கிடைக்கக் கூடியது. மேலும், இயேசுவானவர் நமக்கு இந்த மாபெரும் மீட்பையும், சந்தோஷத்தையும் இலவசமாக வழங்குவதற்காக சிலுவையில் தன்னுடைய ஜீவனைக் கொடுத்ததை விளக்கினார்.

இதை அடிக்கடி கேட்ட சாபு, நகைப்புடன் “நீர் சொல்லும் கிறிஸ்தவம் இலகுவானது, ஏனெனில் விசுவாசிப்பவனுக்கு இலவசமாக கிடைக்கிறதே ! நான் இரட்சிப்பை பிரயாசப்பட்டு சம்பாதிக்க விரும்புகிறேன்’ என்றான். இந்நேரத்தில் சாபுவின் சிறிய குடிசையை அடைந்துவிட்டார்கள். தன் நண்பரை அன்போடு வரவேற்றான் சாபு.

“நான் புண்ணிய யாத்திரை புறப்பட போவதால், நம் நட்பின் அடையாளமாக ஒரு வெகுமதியை உங்களுக்கு கொடுக்கப் போகிறேன்” என்றவன், குடிசையின் ஒரு மூலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறு துணி உருண்டையை தேடிக் கொண்டு வந்து மெதுவாகப் பிரித்தான். என்ன ஆச்சரியம்! சாபுவின் உள்ளங்கையில் நன்கு இழைக்கப்பட்ட, பிரகாசமான முத்து ஜொலிப்பதைக் கண்ட அவனுடைய நண்பரின் மூச்சு ஒரு விநாடி நின்று விட்டது. “எவ்வளவு அழகான ஒப்பற்ற முத்து ! இது அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட வேண்டியது,” என்று அவர் சொன்னதும், சாபு ஆம், நான் என் ஆயுள் காலத்தில் பார்த்த முத்துக்களில் இதுவே பழுதற்றது. இதை நான் ஒரு விசேஷமான காரணத்திற்காக வைத்திருந்தேன். எனக்கொரு மகன் இருந்தான், அவன் முத்துக்குளிப்பதில் மிகவும் திறமைசாலி. பல மணி நேரம் மூச்சடக்கும் சக்தியுடையவனான அவன், ஒரு நாள் ஆழமான இடத்திற்குச் சென்று தேடிக்கொண்டு வந்ததுதான். இந்த விலையேறப்பெற்ற முத்து.’ எனக் கூறிவிட்டு அழஆரம்பித்தான் சாபு. ‘நண்பரே, நீண்ட நேரம் தண்ணீரில் இருந்ததால் அவன் நுரையீரல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தான்’, என்றவன், “நான் உமக்கு வெகுமதியாகக் கொடுக்கும் முத்தின் விலை மதிப்பு என் அன்பு மகனின் உயிர்” என்று கூறி கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

“இதையா எனக்குக் கொடுக்கப்போகிறாய்? வேண்டாம், இதை இலவசமாக பெற்றுக்கொள்ளமாட்டேன். யாரிடமாவது கடன் வாங்கியோ, அல்லது எப்படியாவது பாடுபட்டு வாங்கிக்கொள்கிறேன் ஆனால்,வெகுமதியாக இதை நான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை” என்றார்.
‘நண்பரே, நீர் இதற்கு போதுமான தொகையை கொடுக்கவே முடியாது. ஏனெனில், இது விலை மதிப்பிட முடியாதது. அத்தோடு என் அன்பு மகன் தன் உயிரையே கொடுத்து சம்பாதித்ததல்லவா ! இதன் விலை என் மகனின் உயிர்’ என்றான் சாபு.

“சாபு, சற்று முன் சொன்னது என்ன? கிறிஸ்தவம் மிகவும் இலகுவானதும், இலவசமானதும் என்றல்லவா ! எதையாவது கொடுத்து சம்பாதிப்பதுதான் மதம் என்பது உன்னுடைய தவறான கருத்து. அருமையான நண்பா, உன்னுடைய இரட்சிப்புக்காக தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து தன் உயிரையே ஈடாகக் கொடுத்து அதை சம்பாதித்திருக்கிறார். நீ மீட்கப்பட்டு, சந்தோஷமுள்ளவனாக வாழ, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு மரித்து, பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார். விசுவாசிக்கிற எவனும் எந்தக் கிரயமுமின்றி இலவசமாக இரட்சிக்கப்படலாம்’ என்றவர் கிறிஸ்தவம் ஒரு மதமல்ல என்பதையும் விவரித்தார். தொடர்ந்து, “இந்த முத்தின் விலை உன் அன்பு மகனின் உயிர் என்பது உண்மையே, அதுபோல தேவகுமாரனாகிய இயேசு இரட்சகர் தன் உயிரையே கிரயமாகக் கொடுத்து சம்பாதித்திருக்கும் இரட்சிப்புக்கு நீ விலை கொடுக்க முடியுமா? இது முற்றிலும் இலவசமான ஈவாகும்’ என்றார்.

வயதான சாபு கண்ணீரோடு, தேவனுடைய அன்பை எண்ணி தன்னையே அந்த அன்புள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு பரிபூரணமாக ஒப்புக்கொடுத்தான். அமைதியாக சிறிது நேரம் முழங்காலிலிருந்து எழுந்ததும், சாபுவின் நண்பர் தன்னிடமிருந்த தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்திலிருந்து கீழ்கண்ட பகுதிகளை உரக்கப் படித்தார். “….நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே. குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்’. (ரோமர் 5:6)

“தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்”. (1.யோவான் 5:11,12)

“கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல’. (எபேசி. 2:8,9)

நிந்திக்கப்பட்டவரின் நிகரில்லா அன்பு

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அமர்ந்துள்ளது மார்ஷிலெஸ் நகரம். – அழகான பூந்தோட்டங்களைக் கொண்டு பொலிவுற்றிருந்தது. ஆனால் வருடத்தின் எல்லா மாதங்களிலும் அவ்விதமாக இல்லாமல், பல மாதங்கள் வறட்சியால் பாதிக்கப்படும். ஏனெனில் உள்ளூரில் நீர் தேக்கிவைக்க போதுமான வசதியில்லாததால், 90 மைல் தூரத்திலுள்ள டியூரென்ஸ் நதியிலிருந்து, கால்வாய் மூலமாக இந்நகருக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இக்கால்வாய் 1837-1848 காலகட்டத்தில் வெட்டப்பட்டதாகும்.

இந்த கால்வாய் வெட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு, மார்ஷிலெஸ் நகரத்தில் கைஸான் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். தன் கடமைகளைச் சரிவரச் செய்வதில் இவர் தீவிர நாட்டமுடையவர். எந்த விதமான ஆடம்பரங்களையும் வெறுத்த கைஸான், மலிவான உணவை உண்டு காட்சியளிப்பார். எளிமையாகக் பணம் சேமித்து வைப்பதில் பெரும் ஆர்வமுடையவராக விளங்கிய இவர், அடிப்படையான தேவைகளைக்கூடத் தவிர்த்து, தனியே வாழ்ந்து வந்தார். மார்ஷிலெஸ் நகர மக்கள் இவரைக் கஞ்சன் என்று அழைத்தனர். எல்லாருடனும் நேர்மையாகவும், கண்ணியமாகவும் பழகியபோதிலும் நகர மக்கள் யாவரும் வெறுத்ததுடன், சிறுபிள்ளைகளும் கைஸானை நோக்கி “இதோ வயதான கஞ்சன் போகிறான்’ என்று கூக்குரலிடுவர். ஆனாலும் பண்பட்ட மனதுடையவரான இவர் முகம் கோணாமல், எதையும் தாங்கும் இதயமுடையவராக தன் கடமைகளைச் செய்வார்.

காலம் கடந்தது. கைஸான் நரை முடியுடன், கையில் கோலேந்தி தள்ளாடி நடமாட ஆரம்பித்தார். எண்பது வயது வரை தனியே வாழ்ந்த இவர் ஒருநாள் திடீரென மரணமடைந்தார்.

இவருடைய மரணத்திற்குப் பிறகுதான், தன் வாழ்நாள் முழுவதுமாக கைஸான் சேமித்து வைத்த பொன் வெள்ளியின் விலை பல லட்சம் என்பதை மார்ஷிலெஸ் நகர மக்கள் அறிந்துகொண்டனர். அவருடைய உயிலில் எழுதப்பட்டிருந்தது யாதெனில்,” ஒரு காலத்தில் நான் ஏழையாக இருந்தேன், நம் மார்ஷிலெஸ் நகர மக்கள் போதுமான தண்ணீர் வசதியின்றி கஷ்டப்படுவதைப் பார்த்ததும், ஏழைகளும் நல்ல குடிநீரை திருப்தியாகப் பெறவேண்டும் என்ற எண்ணத்துடன், கால்வாய் ஒன்று வெட்ட, நான் என்னையே தியாகம் செய்து பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தேன், என்னைப் புரிந்து கொள்ளாத நம் நகர மக்கள் என்னை அவமானப்படுத்தினர், யாருமற்ற நான், யாவரும் குடிநீர் பெற்று கஷ்டமின்றி வாழ என்னையே அர்ப்பணித்தேன்”. இந்தக் குறிக்கோளை அடைய எண்ணிய இந்த நல்ல மனிதர், யாருமற்றவராகவே வாழ்ந்து யாருமற்ற அனாதையாகவே மரித்தார்.

அன்பான வாசகரே! கைஸானைப் போலவே, பாலஸ்தீன நாட்டில் வாழ்ந்த ஒருவர் எல்லாராலும் வெறுத்து புறக்கணிக்கப்பட்டவராக இருந்தார். இவருடைய வாழ்க்கையும் முழுமனதுடன் தரித்திரத்தை ஏற்றுக்கொண்டதாகவே இருந்தது, தலை சாய்க்கக் கூட அவருக்கு இடமில்லை. “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2.கொரி.8:9) சாந்த சொரூபியான இவரை, மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் அளவில், ஜனங்கள் வெறுத்து, ‘அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்” இவர் தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்தாமல் தன்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். கொடிய ஜனங்கள் இவரை சிலுவையில் அறைந்தார்கள். கேலிக்கும் பரியாசத்திற்கும் தன்னை முழுவதுமாக இவர் அர்ப்பணித்தார். நிந்திக்கப்படும் இவர் யார்? அன்பின் வடிவமான இயேசு பெருமான் நம் நிந்தையை நீக்க யாவற்றையும் பொறுமையுடன் சகித்தார்”. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்”. (ரோமர் 4:25)

கைஸானின் தியாகம் மார்ஷிலெஸ் நகர மக்கள் யாவருக்கும் நல்ல தண்ணீர் கிடைக்க வழியுண்டாக்கினது. ஆனால் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்திருக்கிறபடியால், தம்மிடம் வரும் மக்கள் அனைவரின் ஆத்தும தாகத்தை தீர்க்கும் ஜீவத்தண்ணீரை கொடுப்பவர் மட்டுமல்ல, அவர். அவரே ஜீவத்தண்ணீர். நண்பரே! வற்றாத ஜீவநதியாகிய இயேசு பெருமானிடம் வந்து தாகம் தீர்த்துக்கொள்ள மாட்டீரா! ஜீவத்தண்ணீர் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. “விலையுமின்றி பணமுமின்றி’ இலவசமாக அதை நாம் பருகலாம். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே. நீங்கள் எல்லாரும் தண்ணீரண்டைக்கு வாருங்கள்’ (ஏசாயா 55:1).

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்துபானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருகாலும் தாகமடையான்” (யோவான் 6:35). “விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன் (வெளி.22:17).

கடன் தீர்த்த மாமன்னன்

புகழ்பெற்ற இரஷ்ய நாட்டு மாமன்னர் (ஃஸார்) நிக்கோலாஸ், இரவில் சாதாரணச் சிப்பாய் போல உடையணிந்து, சிப்பாய்கள் தங்கள் முகாமில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வெளியே உலாவுவார்.

ஒருநாள் நள்ளிரவு, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க வேண்டிய நேரம். வழக்கம் போல கண்காணிக்க புறப்பட்ட மாமன்னர், பொக்கிஷசாலை அதிகாரியின் அறையில் விளக்கு எரிவதை கவனித்தார். மெல்ல உட்சென்று, கட்டளையை மீறிய நபரை தண்டிக்க எண்ணினார். விளக்கை அணைக்காமல் இருப்பவர், மாமன்னரின் நெருங்கிய நண்பரின் மகன். இந்த இளம் அதிகாரி, மேஜையில் தலைசாய்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாரியை எழுப்ப எண்ணின மாமன்னரின் கண்களில், குண்டுகளால் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியும், ஒரு கத்தை பணமும், அதிகாரியின் கையிலிருந்து நழுவிய பேனாவும் தெரிந்தது. விளக்கின் ஒளியில் அதிகாரியால் எழுதப்பட்டிருந்த பட்டியலை படித்த மாமன்னர் நிலைமையை உடனடியாக புரிந்துக்கொண்டார்.

அந்த நீண்ட பட்டியலில், சூதாட்டம் போன்ற தீயகாரியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தன் மாபெரும் கடனைத் தீர்க்க இவர் ராணுவ நீதியில் கையாடல் செய்திருந்தார். இப்பொழுதோ, இரவில் கணக்கை சீர் செய்ய அமர்ந்தவர், கையிருப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பற்றாக்குறையான தொகை பல லட்சக் கணக்கில் இருப்பதை முதலாவதாகக் கண்டுபிடித்ததும், கலங்கிப் போனார், ஏனெனில் திரும்ப செலுத்துவோம் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாத அளவுக்கு அது மாபெரும் தொகையாக இருந்தது. அந்த கடன் பட்டியலின் கீழ் ஒரு கேள்வியை எழுதியிருந்தார்.

“இவ்வளவு பெரிய கடனைத் தீர்ப்பவர் யார்?“

அவமானத்தை சமாளிக்க தைரியமற்றவராக, தன்னைச் சுட்டு தற்கொலை செய்ய நினைத்தவர். தூரத்திலுள்ள தன் வீட்டாரை நினைத்தவுடன் கலக்கமடைந்தவராக மெய்மறந்து தூங்கிவிட்டார்.

நடந்ததை அறிந்த மாமன்னர், இளம் அதிகாரியை உடனடியாக கைது செய்ய எண்ணினார். இப்படிப்பட்ட குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை, மேலும் ராணுவத்தில் நீதி நேர்மை காக்கப்பட இவ்வகையான குற்றங்கள் ராணுவ நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். ஆனால் மாமன்னர் இந்த அதிகாரியின் தகப்பனார் தன் நெருங்கிய நண்பர் என்பதை நினைவுகூர்ந்ததும், அன்பினால் நீதியாக வழங்கப்பட வேண்டிய நியாயத்தீர்ப்பை மேற்கொண்டார். ராணுவத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதே நேரத்தில் குற்றவாளியைத் தண்டனையிலிருந்து காத்து நீதிமானாக்கவும் மாமன்னர் ஒரு திட்டம் வகுத்தார். நம்பிக்கையிழந்த அந்த அதிகாரியின் பேனாவை எடுத்து அந்தக் கேள்வியின் கீழ் “நிக்கோலாஸ்” எனத் தன் பெயரை எழுதினார்.

மாமன்னர் நிக்கோலாஸ் மனமார கடனைத் தீர்க்க தீர்மானித்தாரே! தண்டனைக்குரியவன் மீட்கப்பட்டான். இந்த தியாக மனப்பான்மை இயேசு இரட்சகர் தம்மிடம் வரும் எல்லோருக்கும் வழங்கும் பாவ மன்னிப்பை நினைவுபடுத்துகிறது. மாமன்னர் வெளியேறிய சிறிது நேரத்தில் விழித்து, தன்னையே சுட்டுக்கொள்ள முயன்ற இளம் அதிகாரி தன் கேள்வியின் கீழ் மாமன்னரின் கையெழுத்தைப் பார்த்து அசந்து போனார். இது உண்மையானது தானோ என்பதைக் கண்டறிய தன் வசமுள்ள தஸ்தாவேஜுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தார். ஆனாலும், தன் துணிகரமான செய்கை மாமன்னருக்கு தெரிந்தும், கடன் சுமையை தன் மேல் சுமத்தாமல் அவர் தாமே ஈடுசெய்ய முன்வந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மன்னிக்கும் மாமன்னர் நிக்கோலாஸ் குற்றவாளியை நீதிமானாக்கி விட்டார். மறுநாள் மாமன்னரிடமிருந்து வந்த பணம், கடன் தொகைக்கு போதுமானதாக இருந்தது.

நண்பரே! நாம் அனைவரும் பாவம் செய்தவர்கள். பாவக் கடனைத் தீர்க்கவேண்டியவர்கள். “யார் இதைத் தீர்க்க முடியும் ?” தேவனுடைய அன்பு இக்கேள்விக்கு விடையளிக்கிறது. மாமன்னர் விடையெழுதினதுபோல இதுவும் ஒரு பெயர்.

இயேசு!

ஆம் அன்பரே ! இயேசு பெருமான் நம் பாவக்கடனையும், நாம் எப்படி இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளாகி அவமானத்துடன் இருக்கிறோம் என்பதை நன்கு அறிவார். ஆனாலும் அவர் நம்மை நேசித்து நம் பாவக்கடன் எல்லாவற்றையும் அவரே செலுத்தினார். அன்பான வாசகரே ! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மாண்டது நம் பாவக்கடனைத் தீர்ப்பதற்காகத்தான். அத்துடன் நம்மை நீதிமானாக்க அவர் வெற்றி வேந்தராக மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். நிக்கோலாஸ் என்ற பெயர் அதிகாரியின் கடன் பிரச்சனையைத் தீர்த்தது. அதுபோல, இயேசு கிறிஸ்து என்கிற ஒப்பற்ற நாமம் நம் எல்லா பாவபாரச் சுமையினின்றும் நம்மை விடுவித்துக் காக்க வல்லது. “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு இரட்சகர் நம்மை அன்போடு அழைக்கிறார்.

“ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும்………… இவராலே (இயேசு கிறிஸ்துவினால்) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.’ (அப்.13:38,39)

நன்றியுள்ள ஒரு நண்பன்

குடியானவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அதிகபிரயோஜனமான ஒரு நல்ல நாய் அவனிடம் இருந்தது. இந்த நாய் மிகவும் வயதானதாகிவிட்டதால். நன்றி கெட்ட தன் எஜமான் அதை கொண்டுபோய் தண்ணீரில் மூழ்கச்செய்து கொன்றுபோட்டுவிட தீர்மானம் செய்தான. ஒருநாள் இக்குடியானவன் நாயை அழைத்துக் கொண்டு தன் வயலுக்கு பக்கத்திலிருந்த ஒருநதியண்டை போனான். அங்கே ஒரு படகில் தன் நாயை ஏற்றிக் கொண்டு நதியின் ஆழமான இடத்துக்கு படகை ஓட்டிக்கொண்டு வந்தான். பிறகு அவன் தன்னோடு கொண்டு வந்திருந்த ஒரு பாரமான கல்லை ஒரு கயிற்றில் கட்டி, அந்த கயிற்றை நாயின் கழுத்தில் கட்டி, நாயை கொன்றுபோட்டுவிட தண்ணீருக்குள் தள்ளிவிட்டான். அந்த நாய் தண்ணீரில் மூழ்கிப் போகும்போது, திடீர் என்று கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்துபோயிற்று. அப்போது நாய் ஊளையிட்டுக்கொண்டு மறுபடியும் படகுக்குள் வர முயற்சித்தது. கொஞ்சமேனும் இரக்கமற்ற எஜமான் கருணையற்றவனாய் அந்த வயது சென்ற நாயை பலமுறை தன் கையிலிருந்த துடுப்பால் தண்ணீரில் அமிழ்ந்துபோக தள்ளினான்.

கடைசியில் கல் நெஞ்சம் படைத்த அம்மனுஷன் நாயை பலமாக துடுப்பால் ஒரே அடி அடித்து நதியின் தண்ணீரின் ஆழத்தில் தள்ளிப் போட கையை ஒங்கினான். அச்சமயம் தவறி அவனே தண்ணீரில் விழுந்துவிட்டான். பின்பு நீந்தி வெளியே வர முடியாமல் தவித்து அமிழ்ந்துபோகும் தருணத்தில் இருந்தான். தன் எஜமான போராடிக்கொண்டிருக்கிறதை கண்ட நாய் அவன தன்னை அவ்வளவு கொடூரமாய், நன்றி கெட்டவனாக அப்போது நடத்திஇருநதபோதும், அவனுடைய உடுப்பை தன் வாயால் கடித்து, இழுத்துக்கொண்டு வந்து அவனை பத்திரத்தோடு கரையில் சேர்த்தது.

என் அருமை நண்பா ! சற்று நிறுத்தி யோசித்துப் பார்! எல்லா அன்புக்கும் நேர்மைக்கும் விரோதமாக பாவம் செய்து பயங்கரமான குற்றவாளிகளாக நாம் இன்றைக்கு இருக்கிறோம். யோசித்துப்பார். சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததைப் பார்ப்போம். அவர் தேவாதி தேவன்; சத்தியமும் ஒளியும் நிறைந்தவர்; அழிவுக்குள்ளும் தரித்திரததிலுமுள்ள மனுஷனுக்கு தம் பரம அன்பையும் ஆசீர்வாதத்தையும் அளித்தார். அவர் வியாதியஸ்தரை குணமாக்கினார்; குருடருக்கு கண்பார்வை அளித்தார்; மரித்தோரை எழுப்பினார்; பசியுள்ளோரை போஷித்தார்; சோர்ந்துபோனவர்களுக்கும் துக்கமுள்ளவர்களுக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து நன்மை செய்து சுற்றித்திரிந்தார். இப்படிப்பட்டவருக்கு மனுஷன் என்ன செய்தான்? அவனை அகற்றும் அகற்றும் என்று சத்தமிட்டு கூவி சிலுவை மரததில் அறைந்தான். ஐயோ ! மனுஷனுடைய இருதயம் எவ்வளவு மோசமாய் கெட்டுப்போய் கசப்பு நிறைந்து இருக்கிறது ! நம்முடைய இருதயத்தின் நிலையும் இன்றைக்கு இப்படிதான் இருக்கிறது. பரிசுத்த வேதம் போதிப்பதாவது: எல்லாவற்றைப் பார்க்கிலும் (மனுஷனுடைய) இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது. அதை அறியத்தக்கவன் யார் (எரேமியா 17:9). ஒரேஒரு நொடியில் அவருடைய கரத்திலிருந்து நாம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளக் கூடும். ஆனால் நாம் அவருடைய பாதையை விட்டு விலகிப்போனால் உடனே அவர் நம்மை விட்டுவிலகி போய்விடுவார் !

இந்த மாட்சிமையான தேவ மனுஷன் நடு சிலுவைபில் கோர காட்சியோடு தொங்குகிறது தேவனுடைய உள்ளம் எப்படிப்பட்டது என்று நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இவர் எதிர்த்து ஒரு இழிவான வாரத்தையோ, வெறுப்பான வார்த்தையோ தன் விரலை சுட்டிக்காட்டி எதிர்த்து பேசவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும் தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் இருந்தார். இவை எல்லாம் உலகத்தில் இருக்கிற எல்லா குற்றவாளிகளுக்கும் பாவிகளுக்கும் தேவன் காண்பிக்கிற பரம அன்பு.

ஓ ! என்ன அருமையான அன்பின் குணம் இது
அவர் இன்றைக்கு திறந்த இருதயத்தோடும்
ஆணிகளால் கடாவப்பட்ட
விரிக்கப்பட்ட கரங்களோடும் நிற்கிறார் !
ஓ! அவரது இரக்கம் இணையற்றது
இந்த இணையற்ற இரக்கத்தை
தம் சத்துருக்களுக்காக எடுத்துக்காட்டுகிறார்.

பிறகு இவர் “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதெனறு. அறியாமலிருக்கிறார்கள்’ என்று ஜெபித்தார்.

மனுஷன் அவரை சிலுவையில் அறைந்து அங்கே அவருக்கு ஒரு முடிவு கட்ட எண்ணமிட்டான். ஆனால் சபிக்கப்பட்ட அதே கல்வாரி சிலுவையின் கொடூர மரணத்திலிருந்து, மனந்திரும்பி, தன் பாவங்களை அறிக்கை செய்து, அவரைத் தன் சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்ள விரும்புகிற ஒவ்வொரு பாவியான மனுஷனுக்கும் இரட்சிப்பின் கிருபையின் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

நாம் படித்த கதையில் அந்த நன்றியுள்ள நாய் தன் எஜமானின் ஜீவனை காப்பாற்றியது. இயேசு கிறிஸ்து இரட்சிக்கும்போது நம்மை மீட்டு இரட்சிக்கிறார்;. அவர் சொற்ப காலத்துக்காக மட்டுமல்ல் நித்திய காலத்துக்கென்று நம்மை இரட்சிக்கிறார் “தன்னை விசுவாசிப்போருக்கு அவர் நித்திய ஜீவனை கொடுக்கிறார்.
இதை வாசிக்கும் என் அருமை நண்பா! இந்த ஆச்சரியமான இரட்சகரை இன்னும் உன் இரட்சகராக அறியாமல் இருப்பாயானால், கிருபையின் நாளாகிய இதே நாளில், இன்றைக்கு, அவரண்டை வந்து அவர் அளிக்கும் இலவச இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நான் உன்னை துரிதப்படுத்துகிறேன். இவ்வுலகத்தை நியாயம் தீர்க்க அவர் சீக்கிரத்தில் வரப்போகிறார் அப்போது அவருடைய கோபம் பற்றி எரியும். அந்த பயங்கரமான நாளில் தெய்வ பக்தியற்றவர்களும், பாவிகள் எல்லோரும் அவருக்கு முன்பாக நிற்பார்கள் ஒருவரும் தப்பித்துக்கொள்ள முடியாது.

“தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”.

“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உணடாயிருக்கிறது” (1யோவான் 4:9,10)

பானம் பண்ணுவோம் வாருங்கள்

உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.

மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.

அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?

உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.

“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)

சுமை தாங்கிகள்

நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர், ஒரு சமயத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ‘வேறு ஏதாவது சுமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டார்; ஆம், என்றார் அவர்களில் ஒருவர். என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு சுமையாக இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்குப் போதுமான உணவு வகைகளை கொடுக்க என்னால் முடியவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார். என் பிள்ளைகளை படிக்கவைக்கமுடியவில்லையே என்றார் மற்றவர். உலக வாழ்க்கையில் கண்களினால் காணமுடியாத சுமைகள் பல உண்டு. இதை கேட்ட அந்த தேவனுடைய ஊழியர் பாவ சுமையைப் பற்றி அவர்களுக்கு சொன்னார், இந்த சுமையை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அது உண்மை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். மேலும் பாவச்சுமையை தம்மிடம் கொண்டு வரும்படி அழைத்த அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களிடம் கூறினார்.

அநேக மாதங்களுக்குப்பின் ஒருவன் அதே தேவஊழியரைச் சந்தித்து, “நான் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் பாவச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். நீர் எனக்கு மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னதற்காக தேவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான். உடனே அவனை அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடியவில்லை. பின்பு சுமைதாங்கி கல் அருகே சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த மனிதன் தன் கடந்தகால வாழ்க்கையில் சுய முயற்சியால் பாவச் சுமையை நீக்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் அதினால் தான் சோர்வடைந்ததையும், காலம் வீணானதையும் கூறினதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற சந்தோஷத்தையும் கூறினான். இவனுடைய திடீர் மாறுதலைக் குறித்து அறிந்து கொள்ள அந்த கிராமத்து மக்களும், இவனுடைய உறவினர்களும்’ விருப்பங்கொண்டு விசாரித்தனர் (மாற்கு 10:46-52). இயேசு கிறிஸ்து ஒரு குருடனை முதலில் “அழைத்தார்” பின்னர் “அவர் கண்களை திறந்து குணமாக்கினார்” அவன் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தான். அதைப்போலவே இவனும் தான் குணமடைந்த பின்பு அவரை பின் தொடர்ந்தான். கிராமத்தார்களுக்கும், தன் உறவினர்களுக்கும் இரட்சகரைப்பற்றி சொல்வதில் ஆனந்தமடைந்தான். இந்த ஏழை மனிதன் தன்னுடைய பாவச் சுமையை “எக்காலத்திலும் மாறாத கன்மலையின் மேல் வைத்து ஓய்வடைந்தான். 1 பேதுரு 2:6-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலைக்கல் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.” அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” கர்த்தராகிய இயேசு “விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறார்.

மனந்தளர்ந்து போனவர்களையும், பாவபாரம் சுமந்து தவிப்பவர்களையும் இயேசு கிறிஸ்து வருந்தி அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28).

இதைப் படித்துக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளே, பெரியோரே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் “மரண வழி தொடராதிருக்க முடியும்.” தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் உங்கள் பாவச் சுமையை உணர்ந்து விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி செய்யமாட்டீர்களா? அருமையானவர்களே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள்; இயேசு இரட்சகரை விசுவாசியுங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் ஜெய வேந்தராக உயிர்த்தெழுந்தார். நீங்கள் தாமதிப்பீhகளானால் தேவனுடைய சந்நிதியை விட்டு நிரந்தரமாக புறம்பாக்கப்பட்டு பாவத்தின் கடும் சுமையை சுமந்துகொண்டு அக்கினி கடலுக்கு இரையாவீர்கள். இதிலிருந்து தப்புவதற்கு வேறெந்த நம்பிக்கையோ மார்க்கமோ இல்லை. இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்கள் பாவச் சுமையை நீக்கி மெய்யான சமாதானத்தை இலவசமாக கொடுப்பார். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் எப்படி தண்டனைக்குத் தப்பித்துகொள்ளுவோம்” (எபிரெயர் 4:2).

பகைவரை நேசிக்கும் இறையன்பு

மிட்சுவோ புச்சிடா என்னும் ஜப்பானிய போர் விமானியே டிசம்பர் 7, 1941 -ஆம் ஆண்டு பேர்ல் துறை முகத்தின் மீது நடந்த விமானத் தாக்குதலைத் தலைமைதாங்கி நடத்தியவர். தாங்கள் நடத்திய அந்தத் தாக்குதலில் முழுவெற்றியை அடைந்து விட்டதைக் குறிக்கும் வகையில், “டோரா, டோரா, டோரா” என்ற செய்தியையும் அவர் அனுப்பினார்.

ஆயினும் இரண்டாம் உலகப்போர் நீடித்தது. கடும் சண்டை நடந்தது. இந்த ஜப்பானிய போர் விமானி தொடர்ந்து பல முறை பறந்து தங்கள் நாட்டின் எதிரிகளைத் தாக்கி வந்தார்.

பலமுறை அவர் சாவுக்கு மிக அருகில் வந்தும், பகைமை உள்ளம் கொண்டு தன் உயிரையும் துச்சமாகக் கருதினார். இறுதியில் போரின் திசை திரும்பியது, அமெரிக்க ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றது.

இப்போர் நடந்துகொண்டிருந்தபோது, பிலிப்பைன்ஸ் நாட்டில் கிறிஸ்தவ ஊழியர்களாகப் பணியாற்றிய வயது முதிர்ந்த தம்பதிகள் இருவரை ஜப்பானியர் படுகொலை செய்துவிட்டனர். அமெரிக்காவில் வசித்துவந்த அவர்களுடைய மகள் அந்தச் செய்தியைக் கேட்ட பிறகு, ஜப்பானியப் போர்க் கைதிகளைச் சந்திக்கவும், அவர்களுக்கு நற்செய்தியை வழங்கவும் தீர்மானித்தார். ஜப்பானியப் போர்க்கைதிகள் அப்பெண்மணியின் அன்பு பாராட்டுதலைக் கண்டு வியந்து, அதன் காரணத்தை வினவியபோதெல்லாம், “என்னுடைய பெற்றோர்கள் கொல்லப்படுவதற்குமுன் செய்த ஜெபமே என்னை இப்பணியில் வைத்திருக்கிறது” என்று பதில் உரைப்பார்.

தோல்வியால் மனக்கசப்பு அடைந்த புச்சிடா, தனக்குள் எழுந்த பகைமை உணர்ச்சியின் காரணமாக போர்க்காலக் குற்றங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளை உலகப் பொது நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கென, அமெரிக்காவில் போர்க்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்களைச் சந்தித்து, சான்றுகளைத் திரட்டலானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறை வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள் தங்களுடைய அனுபவங்களைக் கூறியபோது, அவருக்குப் பெரும் எரிச்சலும் ஏமாற்றமும் உண்டாயிற்று. அது அவர்கள் அடைந்த இன்னல்களினால் அல்ல. பிலிப்பைன்ஸ் நாட்டிலே படுகொலைக்கு ஆளான ஒரு தம்பதியின் மகள் அவர்களுக்குக் காட்டின அன்பைக் குறித்து மீண்டும் மீண்டும் அவர் கேள்விப்படலானார். அந்தப் பெண்மணி தங்களுக்குப் புதிய ஏற்பாடு என்னும் நூலைக் கொடுத்ததாகவும், அவருடைய பெற்றோர்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ஏதோ புரிந்துகொள்ள முடியாத ஜெபத்தைச் செய்ததாகவும் கைதிகளாயிருந்த பலர் கூறினர். உண்மையில் புச்சிடா இதை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவருடைய உள்ளத்தில் அந்நிகழ்ச்சி ஆழமாகப் பதிந்துவிட்டது.

பலமுறை அக்கதையை அவர் கேட்டதினால் தானும் புதிய ஏற்பாடு ஒன்றை வாங்கினார். மத்தேயு நற்செய்தி நூலைப் படித்தபோது அவருக்கு அதில் ஆவல் மேலிட்டது. அடுத்து உள்ள மாற்கு நூலைத் தொடர்ந்து வாசித்தார். இன்னும் ஆவல் அதிகமாயிற்று, லூக்கா 23:34 -ஆம் வசனத்திற்கு வந்தபோது அவருடைய ஆத்துமாவில் ஒளி பிரகாசித்தது, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” வயது முதிர்ந்த தம்பதியினர் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் என்ன ஜெபம் செய்தனர் என்பதை இப்பொழுது அவர் அறிந்துகொண்டார். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியைப் பற்றியோ, ஜப்பானியப் போர்க்கைதிகளைப் பற்றியோ அவருக்கு நினைக்கத் தோன்றவில்லை. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் ஜெபத்தைக் கேட்டு, கிறிஸ்துவிற்குப் பரம எதிரியாக வாழ்ந்த தன்னை மன்னிக்க ஆயத்தமாயிருக்கும் தேவனைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினார். அந்த நேரத்திலேயே கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டவராக, வேண்டுதல் செய்து, பாவமன்னிப்பையும், நித்திய ஜீவனையும் பெற்றுக்கொண்டார்.

பொதுநீதிமன்றத்தைக் குறித்து அவர் எண்ணியிருந்த திட்டம் அவரை விட்டு அகன்று போயிற்று. அதுமுதல் மிட்சுவோ புச்சிடா உலகெங்கும் சென்று, கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தைக் குறித்துப் பிரசங்கித்துத் தனது எஞ்சிய வாழ்க்கையைக் கழித்தார்.

இயேசு கிறிஸ்து பாவங்களை மன்னித்து, பகையைக் கொன்று, அன்பினால் உள்ளங்களை வெல்லுகிறவர் என்பதை, அன்பு வாசகர்களே, இந்த உண்மைச் சம்பவம் உறுதி செய்கிறது. இதுவல்லவோ மனித உள்ளங்களை வெல்லும் இறையன்பு!

திருமறை கூறும் சத்தியங்கள் இவை:

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16).

பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்

(1 தீமோ. 1:15). இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் (1 யோவான் 1:7,9).

உண்மையாதெனில், நாம் அனைவரும் தனிப்பட்ட நிலையில் பாவிகளாகவே இருக்கிறோம். “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை. தேவனைத் தேடுகிறவன் இல்லை. எல்லாரும் வழி தப்பி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்.” என்று வேதம் கூறுகிறது (ரோமர் 3:10-12). ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்தவராகச் சிலுவைக்குச் சென்றார். நம் எல்லோருடைய பாவங்கள் அனைத்தையும் கழுவி, நம்மைச் சுத்தி செய்யத்தக்க வல்லமை, அவருடைய திரு உதிரத்திற்கு உண்டு. அவருக்கு நம்மை ஒப்படைப்போமாக! இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை மன்னிக்க ஆயத்தமாயிருக்கிறார்.

கிறிஸ்துவின் சிலுவைக் காட்சியை, ஒப்பற்ற திருக்காட்சியை, நம் கண்முன் நிறுத்துவோம். சிலுவையேயன்றி வேறொன்றிலும் நான் மேன்மை கொள்ளேன் என்ற பவுலடிகளின் கூற்றைச் சிந்திப்போம், தியானிப்போம், அவரை மனதார உள்ளத்தில் ஏற்போம்.

புச்சிடாவின் சாட்சி இது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்ற வசனத்தை நான் படித்த அச்சணத்தில் முதன் முறையாக, இயேசு கிறிஸ்துவை நேரில் சந்தித்த உணர்வு எனக்கு உண்டாயிற்று. பாவிகளுக்கும் பகைவர்களுக்கும் பதிலாளாக சிலுவையில் மரிக்கையில் இயேசு ஏறெடுத்த ஜெபத்தின் பொருளைப் புரிந்துகொண்டேன். நான் என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்படியும், என் பகை உணர்வை அகற்றி நல்ல மனிதனாக ஆக்கும்படியும் ஆண்டவரிடம் ஜெபித்தேன். அவர் என்னைப் புதிய மனிதனாக்கினார்”, தனிப்பட்ட முறையில் நீங்களும் இயேசு கிறிஸ்துவுக்கு உங்களை ஒப்படைப்பீர்களாக!

பணத்தால் சாதிக்க முடியாது

பணத்தைக் கொடுத்து…..

மெத்தை படுக்கைகள் வாங்கலாம்,
நித்திரையைப் பெற முடியாது.
மருந்துகள் வாங்கி சாப்பிடலாம்,
சுகத்தைப் பெற இயலாது.
புத்தகங்களை வாங்கிப் படிக்கலாம்,
அறிவை அடைய முடியாது.
ஆபரணங்கள் வாங்கி அணியலாம்,
அழகைப் பெற முடியாது.
வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
ஆயினும் வாழ்க்கை அமையாது.
வீடுகளைக் கட்டலாம்,
குடும்பத்தைக் கட்ட முடியாது.
வசதிகள் பலதும் பெறலாம்,
மெய்யின்பத்தை நுகர முடியாது.
உறவுகள் பெற்றிருக்கலாம்,
அன்பைப் பெற முடியாது.
தான தருமங்கள் செய்யலாம்,கடவுளைக் காண இயலாது.
புண்ணிய யாத்திரை செல்லலாம்,
ஆன்ம இரட்சிப்பை அடைய முடியாது.

பணம் வாங்கிக் கொடுக்க முடியாதவைகளை எல்லாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இலவசமாகவே அருளுகிறார். மெய்தேவனிடம் சிபாரிசுகள் பலிக்காது; பணமும் செல்லாது. “நமக்கு பதில் கிடைக்கும்படிக்கு முந்தி தேவனுக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” என்று தூய வேதம் கேட்கிறது. பணம் கொடுத்து நாம் தேவனை திருப்தி செய்ய முடியாது. நமக்கு ஜீவன் கொடுத்து, நாம் வாழ்வதற்குத் தேவையான காற்றையும், நீரையும் இலவசமாக கொடுக்கிற இயேசு கிறிஸ்து நமக்கு பாவமன்னிப்பையும், ஆன்ம இரட்சிப்பை யும் பணமுமின்றி விலையுமின்றி வழங்குகிறார்.

“வருத்தப்பட்டுப்பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக் கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:28-30) தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தினால் நமக்கு உண்டுபண்ணி, உன்னதத்திற்கு ஏறிச் சென்றிருக்கிறார்.

ஆன்ம இரட் சிப்பையும் தேவ சமாதானத்தையும் அவரிடம் வரும் எவருக்கும் இலவசமாக அருளுகிறார்.

“சமாதானத்தையே உங்களுக்கு வைத்துப்போகிறேன்.

என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27) என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, அவரையே உங்கள் ஆண்டவரும், இரட்சகருமாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே அவரிடம் வருவீர்களா?

Popular Posts

My Favorites

தேவனையே நோக்கி அமர்ந்திரு

ஓகஸ்ட் 06 "தேவனையே நோக்கி அமர்ந்திரு" சங். 62:5 தேவனையே நோக்கி அமர்ந்திருப்பதென்றால் அவர்மேல் சார்ந்திருப்பதாகும். குடிமகனும், தேவ ஊழியனும், சிறுபிள்ளையும் இப்படிச் சார்ந்திருக்கிறவர்கள்தான். அமர்ந்திரு என்பது நம்பிக்கையின் குறி. இந்த நம்பிக்கைதான் நம்மைத் தேவனிடம் நடத்துகிறது....