“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.”
‘கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர். நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” வெளி 4:11.
முதலாம் நாள்
“தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார். வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று.”
இரண்டாம் நாள்
“பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார். அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.”
மூன்றாம் நாள்
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார். தேவன் அது நல்லது என்று கண்டார். அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
நாலாம் நாள்
“பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.”
ஐந்தாம் நாள்
“பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார். தேவன் அது நல்லது என்று கண்டார். தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று.”
ஆறாம் நாள்
“பின்பு தேவன்: பூமியானது ஜாதி ஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார். தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார். அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.”
ஏழாம் நாள்
“இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.”
பூமி உருவாக்கப்படுவதற்கு முன்பே, தேவன் அத்திட்டத்தை மனதில் கொண்டிருந்தார். அவர் தமது தெய்வீக மாட்சிமையில் தனித்து அசைவாடிக்கொண்டிருந்தாலும் இராஜாவாகவே இருந்தார். தம் விருப்பத்தின் படி அவர் உலகத்தைப் படைக்கலாம் அல்லது படைக்காமல் இருக்கலாம். கோடானகோடி கோளங்களைப் படைக்கலாம், அல்லது ஒரே ஒரு உலகத்தைப் படைக்கலாம். அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்: சம மகிமையுள்ள கோடிப் பிராணிகளைப் படைக்கலாம், அல்லது அவற்றை முற்றிலும் ஒன்றிற்கொன்று மாறுபட்டவையாகப் படைக்கலாம். அவருக்கு ஆலோசனை சொல்ல யாரால் கூடும்?
உலக சிருஷ்டிப்பைச் சற்று உற்று நோக்குவோம். அதன் மகத்துவத்தை முற்றும் நம்மால் உணரமுடியுமா? ஆகாயத்துப் பட்சிகள், நீர் வாழும் ஜந்துக்கள், வனவிலங்குகள், ஊர்வன, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகள் முதலியவைகளுள் உருவத்திலும், நிறத்திலும், குணத்திலும் எத்தனை வேறுபாடுகள்! இது அவருடைய சர்வவல்லமையைக் காட்டுகிறதல்லவா? ஆகாய விரிவைப் பார்த்தால் “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே. மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.” (1கொரி 15:41). கிரகங்களைவிடச் சூரியன் மிகப் பிரகாசமாயிருக்கிறது. ஒளியுள்ள நட்சத்திரங்களுக்கிடையே, ஒளி மங்கிய நட்சத்திரங்கள் ஏனிருக்கவேண்டும்? பதில் என்னவென்றால், “உமது சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்பார்கள்” (வெளி 4:11).
நாம் வாழும் உலகத்தில் மூன்றில் ஒரு பங்குதான் தரை. அதிலும் பாலை நிலம், உவர் நிலம், பனிப்பிரதேசம்; நீங்க, நாம் குடியிருக்கத் தகுந்த இடம் எவ்வளவு சொற்பம்! அதில் ஒரு பாகம் வளமுள்ள நிலம், மற்றொரு பாகம் பாழ் நிலம். கர்த்தருடைய விரும்பம் இவையெல்லாம். ஓரிடம் பொன் விளையும் பூமி, பூமியின் ஆழத்திலே இரத்தினக் கற்கள், நிலக்கரி, எண்ணெய், உலோகப் பொருள்கள், இன்னோரிடத்தில் பூமியதிர்ச்சி, எரிமலை இவையெல்லாம் எத்திட்டத்தில் அமைக்கப்பட்டன? உயிர்ப்பிராணிகளில் சிங்கமும் ஆட்டுக்குட்டியும், கரடியும் வெள்ளளாட்டுக் கடாவும், யானையும் சுண்டெலியும் இவற்றில் உருவத்திலும் குணத்திலும், அழகிலும் எத்தனை விதங்கள்! சில மிருகங்களுக்கு உழைத்துக் கடினவேலை செய்யவேண்டியிருக்கிறது, சில சுயாதீனமாயிருக்கின்றன. சில வேகமாக ஓடக் கூடியவை, சில மெதுவாக ஊர்ந்துசெல்லுபவை. சில நெடுங்காலம் வாழுகின்றன: சில அற்ப ஆயுசு உள்ளன. இதோ மாதிரிப் பலவித மாறுதல்கள்: பறவைகள், பூச்சிகள், மரங்கள், பூக்கள், கனிகள் முதலியவைகளிலும் காணப்படுகின்றன. உண்மையாகவே “வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும் கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார்” (சங் 135:6).
“நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்: தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்” (சங் 115:13)
சிருஷ்டிப்பில் உள்ள வேறுபாடுகள்போலவே மனிதருக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஒருவன் பெலசாலி, மற்றொருவன் பெலவீனன்: ஒருவன் தீர்க்காயுசுள்ளவன், மற்றவன் அற்பாயுசுள்ளவன்: ஒருவன் சுறுசுறுப்புள்ளவன், மற்றவன் சோம்பேறி. இவையெல்லாம் பிறப்பினாலும் சூழ்நிலையினாலும் ஏற்பட்டதல்ல. தேவன்தான் இதற்குக் காரணர். அவர் ஏன் இப்படிச் செய்யவேண்டும்? “ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது” (மத் 11:26). சர்வ வல்லமையுள்ள தேவன் தமது சித்தத்தின் படி செய்கிறார். “தீங்கு நாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்” (நீதி 16:4). படைக்கும் தேவனுக்கு அந்த உரிமையுண்டு. அவரைத் தடுத்துக் கேட்கக்கூடியவன் யார்? அவர் செய்கையைக் குறித்து முறுமுறுத்து தேவனுக்கு ஞானமில்லை என்று சொல்லக்கூடியவன் யார்? அவருடைய செயல்களைக் குறை கூறுவது பெரும் பாவம். அவருடைய கர்த்தத்துவத்தை நாம் பக்தியுடன் மனதிற்கொள்ளவேண்டும். “சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஓன்றுமில்லை அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். இப்படியிருக்க தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?” (ஏசா 40:17-18).