வாழ்க்கை என்ற நீடிய பயணத்திலே என்னோடு கூடி நடந்த பலரும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிரிந்து செல்லுகின்றார்கள். வாழ்க்கைப் பயணத்தின் பாதைகள் எல்லாமே மலர்ப்படுக்கைகளாக அமைவதில்லை. கண்கவரும் சோலைகளையும் கடந்து செல்லுகிறேன். கண்ணீரின் பள்ளத்தாக்குகளையும் கடந்து செல்லுகிறேன்.
இறுதியாக, என் வாழ்க்கைப் பயணத்தில் மரணத்தின் வாசலுக்கூடாக நான் பிரவேசிக்கிற வேளையில், என்னோடு கூட வந்தவர்களெல்லாம் அங்கே நின்று விட்டார்கள். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே தனியாக நடக்கிறேன். கூடி வாழ்ந்த மனைவியும், கொஞ்சி வளர்த்த பிள்ளைகளும் குலவித்திரிந்த நண்பர்களும் குளறி அழுவார்களே தவிர, கூடி வருவதில்லை. மானிட உறவுகள் மரணத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால், வாழ்க்கைப் பயணமோ மரணத்திலும் முடிவதில்லை. அழிவற்ற மனுஷ ஆத்துமாவாகிய எனது பயணமோ மரணத்தையும் கடந்தும் தொடர்கிறது. மரணம் வாழ்க்கையின் முடிவு அல்ல. மரணமே வாழ்க்கையின் தொடக்கமாயிருக்கிறது. ஆம் மரணத்திலே தான் நித்திய மோட்ச வாழ்வு ஆரம்பமாகிறது. ஆனால் இந்த நிலையற்ற வாழ்விலே, மரணத்தின் பின்வரும் நித்திய மோட்ச வாழ்வைப்பற்றிச் சிந்திக்காதவன், அதைத் தேடாதவன், அதற்காகத் தன்னை ஆயத்தம் பண்ணாதவன் அதை அடைவதில்லை. மோட்ச வாழ்வைத் தேடுகிறவனோ நிச்சயமாய் அதைக் கண்டடைவான். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்பது இயேசுவின் அமுத வாக்கு!
கடைசி வரை யாரோ? என்று கதறும் மனுஷாத்துமாவின் குரல் கேட்டு பரமாத்மாவாகிய இறைவன், மனுஷவதாரமாகி நம்மைத்தேடி வந்தார். அவர்தான் உலக இரட்சகராகிய இயேசுக்கிறிஸ்து.
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).
உன் இருதயம் கலங்காதிருப்பதாக. கடவுளிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் (யோவான் 14:1).
நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன் (யோவான் 14:8).
இதே உலகத்தின் முடிவு பரியந்தமும் சகல நாட்களிலும், நான் உங்களுடனேகூட இருக்கிறேன் (மத்தேயு 28:20).
ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை (ஏசாயா 49:15).
என்பதெல்லாம் அந்த அன்புத் தெய்வத்தின் வார்த்தைகளே. எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்! அந்த அன்புத் தெய்வமாகிய இயேசுவை அண்டிக்கொள்வோமேயானால் நமது ஆத்துமாவில் தேவ சமாதானம் ஆளுகை செய்யும்.
இன்னும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு அருளிச்செய்த பரிசுத்த வேதாகமத்திலே இவ்வுலக வாழ்வு மரணம். மரணத்தின் பின் நாம் அடையத்தக்க மறுவாழ்வு, என்பவற்றைப்பற்றிய உண்மைகளைக் கூறி வைத்திருக்கிறார். உலகத்தில் தோன்றிய ஞானிகளெல்லாம் மரணத்தின் பின் என்ன நிகழலாம் எனத் தங்கள் ஊகங்களைச் சொன்னார்களேயன்றி உண்மைகளைச் சொல்லவில்லை. கடவுளுடைய வார்தைகளாகிய பரிசுத்த வேதாகம் மாத்திரமே மரணத்தின் பின் மனிதர்களாகிய நமக்கு கடவுள் நியமித்திருக்கும் வாழ்வு பற்றிய உண்மைகளைக் கூறுகிறது. அந்த வேதாகம சத்தியங்களைப் பக்தியோடு ஏற்றுக்கொள்ளும் மனிதர்களுக்கு மெய்யாகவே இறைவன் மெய்வாழ்வு அளிக்கிறார். மனித வாழ்வின் சில முக்கிய அம்சங்கள் பற்றி பரிசுத்த வேதாகமம் சொல்வதைக் கவனிப்போம்.
1. இவ்வுலக வாழ்வு
ஸ்திரியினிடத்தில் பிறந்த மனிதன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். அவன் பூவைப்போல் பூத்து அறுப்புண்கிறான். நிழலைப்போல் நிலை நிற்காமல் ஓடிப்போகிறான் (யோபு 14:1-2).
எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருடம். பெலத்தின் மிகுதியால் எண்பது வருடமாயிருந்தாலும், அதன் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே. அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது. நாங்கள் பறந்துபோகிறோம் (சங்கீதம் 90:10).
இதோ என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர். என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது. எந்த மனிதனும் மாயையே என்பது நிச்சயம் (சங்கீதம் 39:5).
பின்பு இயேசு அவர்களை நோக்கி: பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்: ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு வாழ்வு அல்ல என்றார் (லூக்கா 12:15).
குறுகிய எனது வாழ் நாட்களை, வீண்நாட்களாகக் கழிப்பேனா? அல்லது நித்திய வாழ்விற்கு ஆயத்தமாவேனா?
2. மரணம்
நாம் மரிப்பது நிச்சயம்….. (2சாமு 14:14)
அன்றியும் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபிரேயர் 9:27).
(ஆதாம் என்ற) மனுஷனாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது, எல்லா மனுஷரும் பாவம் செய்தபடியால்மரணம் எல்லாருக்கும் வந்தது (ரோமர் 5:12).
மரணம் நிச்சயம். மரணத்தின் பின் கடவுளின், நித்திய நியாயத்தீர்ப்பு நிச்சயம். யாரும் தப்பவே முடியாது.
3. மரணத்தின் பின்னுள்ள நியாயத்தீர்ப்பு
மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும், கடவுளுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன… அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செயங்களுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள் (வெளி 20:12).
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதவரும், விபச்சாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும் (சிலைவழிபாட்டினர்), பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் (வெளி 21:8).
ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்: இந்த அக்கினிச் சுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கத்தினான் (லூக்கா 16:22-24).
கடவுள் ஆவியாயிருக்கிறார், என்று வேதாகமம் போதிப்பது போலவே, பௌதீக உலகத்திற்கு அப்பால் ஒரு ஆவிக்குரிய உலகம் (Spiritual World) உண்டு என்றும் போதிக்கிறது. பௌதீக உலகத்தில் வாழ்க்கை முடிவுற்றதும் மனுஷ ஆத்துமா ஆவிக்குரிய உலகத்தில் பிரவேசிக்கிறது. அந்த ஆவிக்குரிய உலகத்திலே தான் மனித ஆத்துமா நித்திய மோட்ச வாழ்வையோ, அல்லது நித்திய நரகத்தையோ அடைகிறது. அந்த ஆவிக்குரிய உலகத்தின் சில நிகழ்வுகளையே மேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்கள் தெரிவிக்கின்றன.
4. பரலோக வாழ்வு
பின்பு பரலோகத்திலிருந்து ஒருசத்தம் உண்டாகக் கேட்டேன்: அது, கர்த்தருக்குள் மரித்தவர்கள் பாக்கியவான்கள் என்று எழுது. அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் (வெளி 14:13).
இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது. அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவர்கள், என்றார்கள் (வெளி 19:1-2).
5. நரக ஆக்கினை
துன்மார்க்கரும் கடவுளை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள் (சங் 9:17)
ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவான் (வெளி 20:15).
மேற்குறிப்பிட்ட பரிசுத்த வேதாகம வசனங்களின் வெளிச்சத்தில் மரணத்திற்கப்பாலும் ஒரு வாழ்வு உண்டு என்பதைத் தெளிவாய் அறிந்து கொண்டோம். பாவங்களோடு நாம் பரலோகம் செல்லமுடியாது. பாவங்கள் தொலைந்தால் மாத்திரமே பரலோக வாழ்வை நாம் அடையமுடியும். பாவங்களைத் தொலைக்க ஒரே வழி கடவுள் நமக்களிக்கும் இலவசமான பாவமன்னிப்பே. இந்த இலவசமான பாவமன்னிப்பை பாவமறியாத தேவ குமாரனாகிய அவர் உலகத்தோருடைய பாவங்களைச் சுமந்து தீர்த்து தமது சிலுவை மரணத்திலே பாவத்தைத் தொலைத்தார். இதை நாம் விசுவாசித்து இயேசுக்கிறிஸ்துவை நமது இரட்சகராக ஏற்றுக்கொண்டால் நமக்கு நிச்சயதாகவே பாவமன்னிப்பு உண்டு. ஆண்டவராகிய இயேசுவே என்னுடைய பாவங்களை எனக்கு மன்னியும் எனக்கும் உமது பரலோக வாழ்வைத்தாரும் என்று பிரார்த்திக்கும் போது இயேசு நம்முடைய பாவங்களை மன்னிப்பார். நமது இருதயத்தில் சமாதானம் அருளுவார்.
மரணம் நம் வாழ்க்கையின் முடிவல்ல. மரணம் நம் நித்திய வாழ்க்கையின் ஆரம்பம். அழித்து போகும் அநித்தியமான இச்சரீரத்திற்கு முற்றுப்புள்ளி போடும் மரணமானது அழியாத நித்தியமான ஆத்துமாவின் நிலையான வாழ்வுக்கு ஆரம்பமாகிறது.
ஆவியை விடாதிருக்க ஆவியின்மேல் ஒரு மனிதனுக்கும் அதிகாரமில்லை. மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை: அந்தப்போருக்கு நீங்கிப்போவதுமில்லை. துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவும் மாட்டாது. (பிரசங்கி 8:8)