பல்லாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இரட்டைச் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். வெளித்தோற்றத்திற்கு இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் குணத்தினாலே அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. மூத்தவன் உத்தமனாய் வாழ்ந்து வந்தான். இளையவனோ பஞ்சமாப் பாதகனாய் பல தீய செயல்கள் புரிந்து, தூயவாழ்க்கையற்றும் தனது தனையனுக்குத் தாங்க முடியாத தவிப்பைத் தந்தான்.
ஒருநாள் இளையவன் ஒரு சண்டையில் ஈடுபட்டுக் கொடுங்கொலை புரிந்துவிட்டான். அங்கிருந்த மக்கள் கூச்சலிடவே அவன் மிக்க பீதிகொண்டு வீடு நோக்கி ஓடினான். அதைக் கண்ட ஒரு காவற் சேவகனும் சில பொதுமக்களும் அவனைத் துரத்திச் சென்றனர். அவனோ அதிவேகமாய் வீட்டிற்கு ஓடி அண்ணா என்னை ஆதரியுங்கள். நான் ஒரு கொலை புரிந்துவிட்டேன் என்று சொல்லி அவன் கால்களில் வீழ்ந்து கதறினான். தன் தம்பியின் அவல நிலையை ஒரு கணத்தில் உணர்ந்த அண்ணன், தம்பியின் இரத்தக் கறை படிந்த துணிகளைக் கழற்றி தான் அணிந்துகொண்டு, தன்னுடைய உடைகளைத் தம்பிக்குத் தரித்து அவன் கையிலிருந்த கத்தியைத் தன் கையில் எடுத்துத் தெருவில் வந்து காவற்சேவகனிடத்தில் சரண்புகுந்தான். அங்கிருந்தோர் அவன் தான் கொலைபாதகன் என்று எண்ணி, அவனை நையப்புடைத்தனர். பின் அவன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்படத் தீர்ப்பு அளிக்கப்பட்டான். அவன் மரிப்பதற்குமுன் தன் தம்பிக்கு, உனக்குப் பதிலாய் நான் மரிக்கிறேன். இதை நினைத்து ஆவது உத்தமனாய் நடந்துகொள் என்று ஒரு கடிதம் எழுதி இரகசியமாய் அனுப்பி வைத்தான். இதைக் கண்ட தம்பி ஓவென்று கதறி அழுது, மனம் மாறினான்.
அத்தம்பியைப் போலவே மண்ணில் தோன்றிய மக்கள் யாவரும் பல தீய பாவச் செயல்களைப் புரிந்து, நரகத் தண்டனையை அடைய வேண்டியவராயினர். ஆயினும் கடவுள் தமது திவ்ய கிருபையினாலும், அளவற்ற அன்பினாலும் நம்மீது இரக்கம்கொண்டு, இயேசு என்ற நாமத்தில் மண்ணில் தோன்றி, ஒரு பாவமும் அற்றவராய் வாழ்ந்து, அரிய பல அற்புதங்களை ஆற்றி, உன்னத உபதேசங்களை அன்புடன் அருளிச் செய்து, முடிவில் நம்மை மீட்கும் கிருபாதாரப் பலியாகத் தம்மையே சிலுவையில் பலிகொடுத்தார். நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார் (2.கொரி.5:21) என்றும் நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படி அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார் (1.பேது.2:24) என்றும் சத்திய வேதத்தில் கூறப்பட்டுள்ளன.
ஆகவே, நீரும் அத்தம்பியைப் போன்று உமது பாவங்களுக்காகவும், தீய செயல்களுக்காகவும் உண்மையில் மனம் வருந்தி, எல்லாம் வல்ல இறைவனுடைய பாதக்கமலங்களை தழுவி, அவரிடம் உமது பாவங்களை அறிக்கையிட்டு, அவரை உமது உள்ளத்தில் உறையும் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராகில், அவர் உமது பாவம் யாவையும் மன்னித்து, உமக்கு இரட்சிப்பையும், சாந்தியையும் பேரின்பத்தையும் இறுதியில் மோட்சத்தையும் தருவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர் கள் (அப்.16:31).
இன்றே. நீர் இறைவன் இயேசு இரட்சகரை உமது சொந்தத் தெய்வ இரட்சகராக ஏற்றுக்கொள்வீராக.