முகப்பு தினதியானம் நாம் அவரை அறியும்படியாக

நாம் அவரை அறியும்படியாக

மார்ச் 25

“நாம் அவரை அறியும்படியாக” பிலி. 3:10

அப்போஸ்தலனாகிய பவுல் ஏழு விசேஷித்த காரியங்களைக் குறித்து விருப்பங்கொண்டான். அவைகளை இந்தச் சுருக்கமான நிருபத்தில் காணலாம். அவை அத்தனையும் கிறிஸ்துவைப் பற்றினதுதான். பவுல் எல்லாவற்றிற்கும் இயேசுவையே பிடித்து எப்போதும் அவர் சமூகத்தை நோக்கியே ஓடினான். அவன் ஆத்தும வாஞ்சை, விருப்பம் எல்லாம் அவரையே பற்றியிருந்தது. கிறிஸ்துவை அறியவும், அவரைத் தன் சரீரத்திலும், ஆத்துமாவிலும் மேன்மைப்படுத்தவும், அவரை ஆதாயப்படுத்திக் கொள்ளவும், அவரில் கண்டு பிடிக்கப்படவும், அவரில் ஒப்பாகவும், அவர் வரும் நாளில் மகிழ்ச்சி அடையவும், அவரோடிருக்கவும் விரும்பினான்.

கிறிஸ்துவை அறிகிற அறிவு மற்றெல்லா அறிவிலும் மேன்மையானது. ஆனால் நாம் அவரைக் குறைந்த அளவே அறிந்திருக்கிறோம். அதனால் குறைந்த அளவே அனுபவிக்கிறோம். அவரை ஆழமாய் தெளிவாய் அறிந்துக்கொள்ள வேண்டும் என்று நம் ஆத்துமா வாஞ்சிக்கிறதா? அந்த அறிவு பெலனுள்ளதாயும், நமது நினைவுகளையும், விருப்பங்களையும், நம்பிக்கையையும், பயங்களையும், ஆசைகளையும் தேவனுக்கு முன்பாகவும், மனுஷருக்கு முன்பாகவும் குறிப்பாக பரிசுத்தவான்களுக்கு முன்பாக நம் நடக்கையை ஒழுங்குபடுத்த நம் ஆத்தமா வாஞ்சிக்கிறதா? நமது அறிவு கிறிஸ்துவை அறிகிற அறிவில் வளர ஆவல் கொள்ளுகிறதா? நாம் கிறிஸ்துவை உண்மையாயும் உத்தமமாயும் அறிய விரும்புகிறோமா? அப்படியானால் அவர் வசனத்தை ஆராய்ந்துப் பார்ப்போம். அவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோம். அவர் உண்மையான வாக்குகளைப்பற்றி தியானிப்போம். அவர் சமுகத்தையே நோக்குவோம். அவரைக்குறித்து அவருடைய மக்களிடம் பேசுவோம்.

ஆட்டுக்குட்டியின் மரணம்
நித்திய ஜீவ காரணம்
இவ்வறிவை அடையட்டும்
இதிலே நான் தேறட்டும்.