முகப்பு தினதியானம் டிசம்பர் தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்

டிசம்பர் 02

“தேவனிடத்தில் நம்பிக்கையாய் இருக்கிறேன்” அப். 27:25

தேவனிடத்தில் நம்பிக்கையாயிருப்து மிகவும் நல்லது. ஆனால், அநேக நேரங்களில் அவரை நம்பாமல், தேவனைத் துக்கப்படுத்தி விடுகிறோம். அவர் நமது சித்தத்தைத் தெளிவாய் தெரியப்படுத்தி, நம்முடைய வாக்குகளைத் தமது குமாரனுடைய இரத்தத்தால் உறுதிப்படுத்தி தாம் உண்மையுள்ளவர் என்பதற்குத் தம்முடைய பக்தர்கள் யாவரையும் சாட்சிகளாக ஏற்படுத்தியுள்ளார். பல நேரங்களில் அவர் சொல்வதை நம்பாமல் இருக்கிறோம். நமது அவிசுவாசம் வெகு ஆபத்தானது. சாத்தான் வெகு தந்திரமாக, இம்மைக்குரிய காரியங்களால் நம்மை எளிதில் ஏமாற்றிவிடுகிறான். இதனால்தான் நாம் தேவனை ஆழமாக நம்புவதில் குறைவுபடுகிறோம்.

அவிசுவாசம் என்னும் பாவத்தைக் குறித்த மெய்யுணர்வைத் தேவன் நமக்குத் தரவேண்டும். நமது ஆவியானவரால் நமது விசுவாசத்தைப் பெலப்படுத்த வேண்டும். அவருடைய சிங்காசனத்திற்குமுன் நம்மைத் தாழ்த்துவோமாக. அவருடைய வார்த்தையை வாசிக்கும்போதும், கேட்கும்போதும், அது மெய்தான் என்று நாம் நம்ப வேண்டும். தேவன் அதை நிச்சயம் நிறைவேற்றுவார். என் சோதனையிலும் நன்மையைக் கட்டளையிடுவார் என்று விசுவாசிக்க வேண்டும். எனக்கு எவ்விதக் குறைவுகளும் ஏற்படாது, நான் பயப்படமாட்டேன் என்று சொல்க் கூடியவர்களாயிருக்க வேண்டும்.

அன்பரே, அவர் தம் வாக்கைத் தாம் குறித்த நேரத்தில், தமக்கு சித்தமான முறையில் நிறைவேற்றுவார். அதுவரை காத்திருப்போம் என்று நீர் எப்போதாகிலும் சொன்னதுண்டா? நாம் யாவருமே இவ்வாறு கூறக்கூடியவர்களா இருக்க வேண்டும். இன்றிரவு அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு என்ற நமது இரட்சகர் நம்மைப் பார்த்து கூறுகிறார். எனவே, எப்போதும் நம் தேவனின் பேரில் நம்பிக்கையாயிருப்போம். நம்மை மாற்றி அவரில் நம்பிக்க கொள்வோம்.

எந்நிலையிலும் தவறாது
அன்பர் சித்தத்தையே பிடி
கண்டல்ல, காணாமல்
விசுவாசிப்பதே பாக்கியம்