முகப்பு தினதியானம் தேவனை மகிமைப்படுத்துங்கள்

தேவனை மகிமைப்படுத்துங்கள்

பெப்ரவரி 24

“தேவனை மகிமைப்படுத்துங்கள்.” 1.கொரி. 6:20

தேவன் செய்கிற எல்லாமே தமது மகிமைக்காகத்தான். சகலமும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். நாமும் அவரின் மகிமைக்காகவே சிருஷ்டிக்கப்பட்டோம். பாவம் செய்தபோதோ நாம் அவர் மகிமையைச் சீர்குலையப்பண்ணினோம். அவரின் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமல் அவருக்கு எதிர்த்து நின்றோம். அவரின் சாயலை நம்மில் நாமே கெடுத்துக் கொண்டோம். அவரின் சமுகத்தைத் தீட்டுப்படுத்தினோம். ஆனால இயேசுவானவரோ நமக்காக மரித்து, நம்மை மீட்க தம்மைத் தந்து, நீதியை நிறைவேற்றி இரட்சிப்பை ஈந்தார்.

நாம் அவரின் கிரயத்தால் வாங்கப்பட்டவர்கள். ஆகவே நாம் நம்முடையவர்களல்ல. நாம் அவரின் சொந்தமானதால் அவரை மகிமைப்படுத்துவது நமது கடமை. தேவனை மகிமைப்படுத்துவதே இவ்வுலகில் நமக்குக் குறிக்கப்பட்டிருக்கிற பெரிய வேலை. அவருக்கு மகிமையைச் செலுத்துவதென்றால் அவரை விசுவாசித்து, அவர் வாக்குகளை நம்பி, அவர் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதே ஆகும். அவர் நிமித்தம் நாம் எளியோருக்கு நன்மை செய்ய வேண்டும். தேவ பக்தரை ஆதரிக்க வேண்டும். அவர் சுவிசேஷத்தை உலகிற்கு எடுத்து சொல்ல வேண்டும். நம்முடைய கெட்ட குணங்களை அடக்கி, அவருக்குப் பயப்படுகிற பயத்திஈ; நம்முடைய குடும்பங்களை வளர்த்து, சகலத்திலும் அவரை மகிமைப்படுத்த வேண்டும். தேவனுக்கு மகிமை செலுத்துவதே நமது தலையானகடமை, நமது ஊழியம். அதுவே நம்முடைய மகிழ்சியும் ஆனந்தமுமாய் இருக்க வேண்டும்.

என்னை மீட்க வந்து
இரத்தம் சிந்தி மாண்டீர்
உமக்கென்று பிழைக்கவும்
உம்மையே போற்றவும் செய்வீர்.