டிசம்பர் 31
தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார். ஆதியாகமம் 33:11
இதை நாம் எப்பொழுதும் மனதில் வைத்திருக்கவேண்டும். கடந்த நாட்களையெல்லாம் கடந்து வந்து மீண்டும் ஓர் ஆண்டை முடிக்கிறோம். எத்தனையோ பாடுகள், துன்பங்கள், சோதனைகளின் மத்தியிலும், சொல்லி முடியாத இரக்கமுள்ள தேவனின் கிருபை நமக்கிருந்தது. சகல தீங்குகளுக்கும் நம்மை நீங்கலாக்கிக் காத்து, தமது வசனத்தை நிறைவேற்றினார். எத்தனை பாவங்கள், எத்தனை மீறுதல்கள், எத்தனை முறை அவருடைய கட்டளைகளை அலட்சியம் செய்தது, எத்தனை முறை நன்மை செய்யாதிருந்தது, எத்தனை முறை நன்றியறிதல் இல்லாதிருந்தது. இத்தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் தேவன் நன்மை செய்பவராய், அன்பானவரால், உண்மையானவராக இருந்தார். அவர் நமக்குச் சொன்னபடியெல்லாம் செய்தார்.
நாம் தேவனுக்கு எவ்வளவாகக் கடமைப்பட்டிருக்கிறோம்! இவைகளை எண்ணி, அவருக்கு நன்றி துதி செலுத்த வேண்டுமே. நமது ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதையும் அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும். நமது பாவங்களை மன்னித்து, ஜெபங்களைக் கேட்டு, சத்துருக்களைக் கீழ்ப்படுத்தி, நம்மைக் காப்பாற்றி, நடத்தி எத்தனை விதமாகத் தயவு காட்டினார். ஆகவே, இவ்வாண்டிறுதி நாளின் இரவில் அவருக்கு நாம் முழுமனதோடு நன்றி கூறுவோம். நம்மை நடத்தி வந்த தேவனுக்கு நன்றி சொல்லுவோம். நம்மைக் காத்து வந்த கரங்களுக்கு நன்றி கூறுவோம். நன்றித் துதிகளை ஏறெடுப்போம். அவருடைய வாக்குகளுக்காக ஸ்தோத்திரம் சொல்லுவோம். இம்மட்டும் நம்மைக் காத்த கர்த்தரைப் போற்றிப் புகழ். தேவன் நமக்கு அனுக்கிரகம் செய்தார். அவர் கரங்களில் இளைப்பாறுவோம். அவருடைய சித்தத்திற்காக காத்திருப்போம். நம்பிக்கையோடிருப்போம்.
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் நம்மைக் காத்திடுவார்
இகத்திலவரையே நம்பியிருப்போம், பின்
இறை வீட்டில் மகிழ்ந்து வாழ்வோம்.