முகப்பு தினதியானம் டிசம்பர் அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார்

டிசம்பர் 14

அவர் தமது சித்தத்தின்படியே நடத்துகிறார் (தானி.4:35)

தேவனுடைய சித்தம் நிறைவானது. அது எல்லாவற்றையும் ஆண்டு நடத்துகிறது. தேவன் தமக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நடப்பதை கவனித்தால், தேவன் என்ன செய்கிறார் என்பது விளங்கும். தம்முடைய வல்லமையான செயலினால் அவர் நடத்துவதை பார்த்தால், அவர் தமது சித்தப்படி செய்யப்போகிற கிரியை வெளிப்படும். எந்தக் காரியத்திலும் தாம் மகிமைப்படவேண்டும் என்பதுதான் தேவனுடைய திட்டம். தமது மக்கள் தம்மோடு இருப்பதனால், அவர்களையே மகிமைப்படுத்த விரும்புகிறார். தேவன் அவர்களை மேன்மைப்படுத்துவதினால் அவர்கள் நன்மைகளைப் பெறுகிறார்கள். தேவனுடைய சித்தம் நடக்கும்போது அவர் துதிக்கப்படுகிறார்.

மனிதர் செய்யும் தவறுகளின் மத்தியில் தம்முடைய சித்தத்தை தேவன் அமைதியாக நடத்துகிறார். எவரும் புரிந்துகொள்ள முடியாமல் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார். அவருடைய சித்தம்தான் சட்டம். அவருடைய நோக்கம்தான் வாழ்க்கையின் திட்டம். அவருடைய சித்தத்திற்கு விரோதமாய் நின்றால், அது தேவனுக்கு விரோதமாக நிற்பது ஆகும், முறையற்றதாகும். நிர்பந்தமான நிலையாகும். தேவனுடைய சித்தத்தில் சர்வ வல்லமை சேர்ந்துள்ளது. அவருடைய சித்தம் செயல்ப்படத் துவங்கினால், அதில் நேர்த்தியும், நலமும் இருக்கும். பூமியின் குடிகள் யாவர்மீதும் அவர் சித்தம் நடக்கிறது. அனைத்து அண்டங்களிலும் நடப்பது அவருடைய சித்தமே, எவராலும் அதைத் தடுத்து நிறுத்த இயலாது. விசுவாசியே, உனது வாழ்க்கையில் தேவசித்தம் நடக்க இடம் கொடு. நீ பரிசுத்தமடைய வேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய சித்தம் அது. அவ்விதமும் அதை அவர் செய்து முடிப்பார்.

வான் புவி கடலெங்கும்
விளங்கிடும் தேவ சித்தமே,
உம் சித்தம் என் பாக்கியம்
என்றிருப்பதே உன் யோக்கியம்.