முகப்பு தினதியானம் டிசம்பர் அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது

டிசம்பர் 29

“அவர்கள் இருதயமோ, எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது” மத்தேயு 15:8

இப்படி இருதயம் தூரமாய் இருக்கிறவர்கள் பக்தியுள்ளவர்களாகக் காட்சியளிக்கின்றனர். சிலர், பிறருக்குமுன் தேவனுக்கு உகந்தவர்கள்போல் மாய்மாலம் செய்கிறார்கள். இவர்கள் மனிதருக்கு முன்னால் நடிக்கிறார்கள். இவர்களுடைய பக்தி வெறும் வேஷமே. இவர்களுடைய ஆராதனையில் ஜீவன் இல்லை. வாழ்க்கையில் உண்மை இல்லை. இவர்களுக்கு ஆண்டவர்மேல் ஆசை கிடையாது. உன்னதமான ஆவிக்குரிய வல்லமை அற்றவர்கள். வெளி வேஷம்போடும் இம்மக்கள் உயிரோடிருந்தாலும் ஆவிக்குள் மரித்தவர்களே. தங்களை விசுவாசிகள் என்று தாங்களே கூறிக்கொண்டாலும் இவர்கள் பாவிகளே. நீதிமான்கள் என்று அழைக்கப்பட்டாலும் நீதியற்றவர்களே. தேவனை ஆராதிப்பவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும், இவர்களுடைய இருதயம் எப்படியோ, இவர்களும் அப்படியே தேவனுக்குத் தூரமாய் இருக்கிறார்கள். „மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், தேவனோ இருதயத்தைப் பார்க்கிறார்“ என்பதே வசனம்.

அன்பரே, இப்பொழுது உமது இருதயம் தேவனுக்குச் சமீபமாய் இருக்கிறதா? அவருக்கருகில் உங்கள் இருதயம் இருக்குமெனில், நீரும் அவர் அருகில் இருக்கிறீர். „அவர் எனக்கு இரங்குவார், காப்பாற்றுவார், நன்மைசெய்வார், விடுவிப்பார் என்று அவரையே நம்பியிருப்பீரானால், உமது இருதயம் அவருக்கு அருகிலேயே இருக்கிறது. மனிதருக்குமுன் வசனத்தின்படி நடந்து, ஆண்டவர் சொன்னபடியே செய்து, சற்றும் மாறாமல் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நடப்பீரானால், உமது இருதயம் அவருக்கு சமீபமாகவே இருக்கும். மாய்மாலத்தைத் தேவன் வெறுக்கிறார், நாமும் வெறுப்போமாக. அவருக்கருகிலேயே வாழ்ந்து, அவரோடே நடந்து, அவர்மேல் அன்பு வைத்து நடப்போமாக. வேஷமாகப் பெயருக்கென்று நாம் இவ்வாறு நடந்தால் பரிதாபத்திற்குரியவர்களாவோம்.

ஆண்டவர் அன்பைப்போல்
இனியது ஏதும் உண்டோ
இதைவிட்டு வேறெதையும்
உனதாவி விரும்பலாமோ, பாவி.