முகப்பு துண்டு பிரதிகள் தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

தேவ அன்பின் செய்திகள் – மனமே மருளாதே!

மருந்தகம், சந்தடி அதிகமுள்ள அந்தச் சாலையின் பக்கத்தில் அமைந்துள்ளது ஓர் மருந்தகம். சேவையே தனது வாழ்க்கையின் குறிக்கோள் என்பதைச் சுட்டிக்காட்டும் வண்ணம் அந்த மருந்தகத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரிந்து கொண்டேயிருக்கும். இரவு பகல் பாராது மக்களுக்குச் சேவை புரிவதால் அம்மருந்தகத்திற்குமட்டும் ஒரு தனிச் சிறப்பு. சுமார் 35 வயது மதிக்கக்கூடிய வாலிபன் சுந்தர் ஓர் மருந்தாளுநன். தன் பணியில் எப்பொழுதுமே மிக உண்மையுள்ளவனும், மனச்சாட்சிக்குப் பயந்தவனும், மருந்துகளைப் பற்றிய நல்ல அனுபவமுள்ளவனுமாயிருந்தான். ஆனால், சில நேரங்களில் மருந்து பெறுமிடத்தில் அமர்ந்தவாறே அரைத் தூக்கத்தில் ஆழ்ந்துவிடுவான். அப்பொழுது மருந்து வாங்க வருவோரின் அவசர நடைச் சப்தம் கேட்டு விழித்துக் கொள்வான்.

ஒருநாள் இரவு! மிக நோய்வாய்ப்பட்டிருக்கும் தன் தாய்க்கு மருந்து வாங்க ஒரு சிறுமி மருந்துச் சீட்டைக் கொண்டுவந்து சுந்தரிடம் கொடுத்தாள். அரைத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்த சுந்தரோ வெறுப்போடுகூட, பல்வேறு மருந்துப்புட்டிகளை எடுத்து, வைத்திய நியமத்தின் விகிதாச்சார முறைப்படி கலந்து ஒரு புட்டியில் ஊற்றி, புட்டியின் மேல் ஒரு அடையாளச் சீட்டையும் ஒட்டி அச்சிறுமியிடம் கொடுத்தான். அதை வாங்கிய அச்சிறுமி அதிவேகமாக ஓடி மறைந்தாள். அச்சிறுமி சென்றவுடன் பல்வேறு மருந்துப்புட்டிகளை அதனதன் இடத்தில் எடுத்து வைக்கும் பொழுது சுந்தரைப் “பெரும் பயம்” ஆட்கொண்டது. சுந்தர் என்ன காரியம் செய்து விட்டான்? தப்பிதமான வேறு ஒரு புட்டியையும் எடுத்திருந்தான். மருந்துகளை மருந்தோடு கலப்பதற்குப் பதிலாக கொடிய விஷத்தையும் கலந்துவிட்டான். நோயால் படுத்திருக்கும் அத்தாய் அதைச் சாப்பிட்டால் மரணம் நிச்சயம்! தாங்கொண்ணாத் துயர் கொண்ட மரணம்!!

சுந்தரால் என்ன செய்யமுடியும்? அச்சிறுமியையோ அல்லது அவள் வசிக்கும் இடத்தையோ அவன் அறியான். அச்சிறுமியை மட்டும் இப்போது அவன் கண்டு கொண்டானானால்! தன் மருந்தகத்தை விட்டு இருள் நிறைந்த வீதிக்கு ஓடினான்! தன்னால் முடிந்தமட்டும் வலதுபுறமும் பின் இடது புறமும் ஓடினான்!! தேடினான்!!! மூடிவோ பலனற்றுப் போயிற்று. அநேக வீதிகளின் ஊடாகக்கடந்த அச்சிறுமியையோ கரும் இருள் கவ்விக்கொண்டது. அச்சிறுமியோ வேறு அதிகப் பரபரப்புடன் காணப்பட்டாள். ஒருவேளை, தன் வீட்டையடைந்த சிறுமி அதே நிமிடத்தில் அவ்விஷத்தை ஊற்றித் தன் தாய்க்குக் கொடுத்திருந்தால்? ஆறியா சுந்தருக்குக் குப்பென்று வியர்த்துக்கொட்டியது! அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அப்பொழுது …… தன் கிறிஸ்தவ நண்பன் மறக்க வேண்டாமெனச் சொன்ன திருமறையின் தேவவாக்கு திடீரென அவன் ஞாபகத்திற்கு வந்தது.

“ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்”, கடந்த நாட்களில் சுந்தர், தன் கிறிஸ்தவ நண்பனிடம் குதர்க்கமும் கேலியும் செய்து ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் புறக்கணித்திருந்தாலும் அவன் நினைவில் நின்ற நீங்காத வேத வாக்கு இதுவே.

சுந்தர் தன் மருந்தகத்துக்கு மிக அவசரமாகத் திரும்பினான். முழங்காலிட்டுத் தன்னை முற்றுமுடியத் தாழ்த்தி ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நோக்கி வேண்டுதல் செய்தான். இப்பொழுது அவன் எந்தவிதமான குதர்க்கமோ கேலியோ செய்யவில்லை. தன்னுடைய தாங்கொண்ணா வேதனையில் ஆண்டவராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட்டு உதவி செய்யும்படி மன்றடினான். தன்னுடைய இருதயத்தை முற்றிலுமாகத் தேவனிடத்தில் ஊற்றி வேண்டுதல் செய்து கொண்டிருக்கும்பொழுது திடீரெனக் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டுத் திறந்தான். என்ன ஆச்சரியம்!!

கண்ணீர் வழிந்தோட, உடைந்த மருந்துப் புட்டியைப் பிடித்தவாறே, தான் அதிவேகமாக ஓடியதால் கீழேவிழுந்து மருந்துப் புட்டியை உடைத்து விட்டதாகவும், தன்னை மன்னிக்கும்படியும் விம்மியழுது கெஞ்சினாள் அச்சிறுமி! ஆனந்தப்பெருக்கில் சுந்தர் வேறு ஒரு புதுப் புட்டியை எடுத்து இம் முறை மிகக்கவனத்தோடு நிரப்பி அனுப்பினான். தான் அதிக நாட்களாகப் புறக்கணித்து வந்த தேவனின் ஒப்பற்ற பரிகாரத்துக்கு எவ்வளவு தகுதியற்றவன் என்று தன்னை நொந்துகொண்டான். சுந்தர் தன் கண்களை மூடினபொழுதோ, அவன் உள்ளத்துறைந்திருந்த சகல அசுத்தத்தையும், புத்தியில் புதைந்திருந்த துர்ச்சிந்தை யாவையும் கண்டான். தன் பாவங்களுக்காக மனம் வருந்தி, ‘என்னை உம்முடைய பிள்ளையாக மாற்றிக்கொள்ளும்’ என்று வேண்டுதல் செய்தான். அக்கணமே அவன் ஆண்டவராகிய இயேசுவின் பிள்ளையாக மாறினான். இப்பொழுதோ சுந்தர் அதிகச் சந்தோஷமுள்ளவனாகவும் உண்மையுள்ள தேவனுக்கு நன்றியுள்ளவனாகவும் காணப்பட்டான்.

இக்கைப்பிரதியை வாசிக்கின்ற என் அருமையான நண்பரே! சுந்தர் எப்பேர்ப்பட்ட ஆபத்திலிருந்து விடுதலை பெற்றன் என்பதை உம்மால் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன். ஒருவேளை அவருடைய அன்பான அழைப்பைத் தொடர்ந்து புறக்கணித்திருந்தால் சுந்தரின் முடிவு எப்படியிருந்திருக்கும்? இதை வாசிக்கும் சிநேகிதரே! ஆண்டவர் உம்மைப் பார்த்து “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத். 11:28) என்கிறார். உமக்கு மெய்வருத்தம் உண்டா? சுந்தருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போல நீர் ஈடுபட்டிருக்கும் எப்பொறுப்பிலும் இவ்வித நிர்ப்பந்தமான நிலைமையை எதிர்பார்க்கலாம்.“ பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை” (யோ.6:37) என்று தேவன் கூறுகிறார். தேவன் தமது கையை மிகுந்த ஆவலோடும் அன்போடும் நீட்டிக்கொண்டிருக்கிறார். உருகி அழைக்க உமக்கு மனமில்லையா? உருகி அழைத்தால் உமக்கேது துயரம்? வருந்தும் மனமே ஒளிவீசும் ஆலயம் என்பதை மறவாதேயும் !!

எனவே இதை வாசிக்கும் அன்பரே! பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன் (ரோ.6:23) என்று தேவன் கூறுகிறார். ஒருவேளை இத்தேவ அழைப்பின் சப்தத்திற்கு நீர் செவிசாய்க்காது போனால்….? ” மனமே மருளாதே! நீர் இன்றே அவரை உமது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டால் உமக்கு இளைப்பாறுதல் தந்து இளமையும் முதுமையுமற்ற நித்திய ஜீவனை உமக்களிப்பார்.