உற்பத்தியைப் பெருக்கும் தொழிற்கூடங்கள் நிறைந்திருந்த ஒரு பெரிய பட்டணத்தில் ஒருநாள், நான் ஒருவரோடு சம்பாஷித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்து, “வாருங்கள், நாம் பானம் அருந்தி செல்வோம்’ என்றார். அதற்கு நான் அவர் அழைத்த நோக்கத்தை அறிந்துகொண்டு, ‘வேண்டாம், உம்முடைய அழைப்புக்கு மிக்க நன்றி” என்று சொன்னேன். அச்சமயததில் என் உள்ளத்தில் அநேக ஆண்டுகளுக்குமுன் நான் கேள்விப்பட்ட: ‘ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” (யோவான் 7:37). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோ.6:35) என்ற வேத வசனங்கள் ஞாபகத்துக்கு வந்தன. அவைகளை அவருக்குச் சொன்னேன்.
மேற்கூறிய அழைப்புகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர் இப்பூவுலகில் இருந்தபோது கூறியவைகள், அவரது ஆசீர்வாதமான உதடுகளால் அப்பொழுது சொல்லப்பட்டவைகள், இன்றும் உண்மையுள்ளவைகளாக இருக்கின்றன. உலகிலுள்ள ஒவ்வொருவருடைய எண்ணங்களையும் அவர் அறிந்து, “ஒருவன் தாகமாயிருந்தால்” எனக் கூறியுள்ளார். உண்மையான ஆத்தும தாகமுள்ள ஆயிரக்கணக்கான ஆத்துமாக்கள் இன்றைக்கு பல சிற்றின்ப ஊற்றுகளால் தங்களுடைய ஆத்தும தாகத்தை தீர்த்துகொள்ள முயற்சித்தும் வெற்றிபெறாமலிருக்கிறதை அவர் நன்கு அறிவார். துக்கம், துன்பம், துயரம், வேதனை, கொடுமை மனச்சித்திரவதை, உபத்திரவம் ஆகிய பாவ நோய்களின் மூலம் அவர்களின் ஆத்துமாக்கள் மன நிறைவு அடையாமல் ஏங்கித் தவித்து நிற்பதையும் அவர் அறிந்துள்ளார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கிறிஸ்துவினால் மட்டும் அம்மன நிறைவு அருளப்படக்கூடும். இதினிமித்தமே “ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்” எனக்கூறினார்.
அவரிடம் வந்து சேராத ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இங்கே திட்டவட்டமான பரிகாரம் உண்டு. முதலாவதாக இதனை ஒரு தனிப்பட்ட அழைப்பாகத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். மனுக்குலத்தோர் யாராயினும் தங்களுடைய ஆத்தும தாகத்தை உணர்ந்து அவரண்டை வரக்கூடும். தேவனுடைய அருமையான குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே இந்த அழைப்பை விடுத்துள்ளார் என்பது எவ்வளவு ஆச்சரியமானது. ஆனால் என் அருமை நண்பனே ! நான் உம்மிடத்தில் மிக மிக முக்கியமான கேள்வி ஒன்றினைக் கேட்க அனுமதி கிடைக்கட்டும். இந்த அன்பும் கிருபையுமான அழைப்பிற்கு நீ இதுவரை எப்பொழுதாவது தக்க மறுமொழி கூறினதுண்டா?
உனது உள்ளம் தனிமையான நிலையில் துக்கத்தோடு பாவச் சுமையினால் அழுத்தப்பட்டு இருக்கும்போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணுடன் சம்பாஷிக்கையில் “இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகம் உண்டாகும். ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகம் உண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்’ என்று உரைத்தபோது அப்பெண்ணுக்கு உண்டானதுபோல, நீ இதை வாசிக்கையில் கர்த்தரின் பரிசுத்தாவியானவர் அதனை உணரும்படி உன் மனதுக்குள் உன்னை ஏவவில்லையா ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இதனை என்ன கருத்துடன் கூறியுள்ளார் என்பதனை வேறு விதமாக சொல்வோமானால் ‘நான் குடிக்கக் கொடுக்கும் தண்ணீர்’ என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் அந்த வாழ்வளிக்கும் ஊற்றாக இருக்கிறார். உடலுக்குப் புத்துயிர் அளிக்கத்தேவையானது இயற்கையான தண்ணீராகும். ஆனால் மரிக்காமல் என்றும் நிலைத்திருக்கும் ஆத்மாவின் உள்ளான தேவைகளை நிறைவேற்ற அந்த ஜீவத் தண்ணீர் தான் தேவைப்படுகிறது. எனது அருமை நண்பனே நீ ஒரு ஏழ்மையான, ஆதரவற்ற அனாதியான இழந்துபோன பாவியாக உள்ள நிலையில், நம்பிக்கையின் அடிப்படையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை, உன் மீட்பராக ஏற்றுக்கொள்ளமாட்டாயா? தேவன் எங்குமுள்ள எல்லா மனுமக்களுக்கும் “இப்பொழுதே மனந்திரும்புங்கள்’ (அப்போஸ்தலர் 17:30) என்று கட்டளையிடுகிறார். மனந்திரும்பு என்பது பாவத்தினின்று விலகிவா என்பது பொருள். உன்னில் காணப்படும் அசுத்த நிலை, இழந்து போன சீரழிந்த நிலை இவைகளை உணர்ந்து பேதுருவைப் போல, கர்த்தரின் முந்நிலையில் இவைகளை ஒப்புக் கொண்டு.’ஓ கர்த்தாவே நான் ஒரு பாவி” என அறிக்கையிடு. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான் 1:7). தெய்வத்தின் அதிசயமான அழைப்பை ஏற்றுக்கொள்ளாத எல்லோரும் நியாயத்தீர்ப்பின்போது அக்கினிக் குழியில் தள்ளப்படுவார்கள் என்று உணர்ந்து, நரகத்திலே தள்ளக்கூடிய வல்லமையுள்ள “அவருக்கே பயப்படுங்கள்’ (லூக்கா 12:5) என நான் உனக்குக் கூறிக்கொள்ளுகிறேன்.
“தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவான் 3:16)