யூலை 15
“பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1.கொரி. 5:8
இந்த இடத்தில் பஸ்கா பண்டிகையைக் குறித்தே பவுல் அப்போஸ்தலன் கூறுகிறான். பஸ்கா ஆட்டுக்குட்டி முதலாவது கொல்லப்பட்டு கதவின் நிலைகளில் இரத்தம் தெளிக்கப்பட்டபோது எகிப்தியரின் தலைச்சன் பிள்ளைகள் அழிந்தார்கள். இஸ்ரவேலர் விடுதலை அடைந்தார்கள். நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி. அவருடைய இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டு நம்மேல் தெளிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய சத்துருக்கள் அழிந்துப் போனார்கள். நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. இஸ்ரவேலர் பஸ்காவின் இரத்தம் சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியைப் புசித்தார்கள். இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்துவை நாம் உள்கொள்ளு வேண்டும். ஆகவே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
அது நமக்காகச் சிலுவையில் அறையப்பட்டுப் பலியிடப்பட்ட கிறிஸ்துவை புசிக்கிற பண்டிகை. அவர் நம்மை மீட்கும் பொருளாக மாத்திரமல்ல பஸ்காவுமாய் இருக்கிறார். அவருடைய மகிமையைப் பற்றியும் அவர் நிறைவேற்றின கிரியைப்பற்றியும் அவர் முடித்த வெற்றியைப்பற்றியும் அவருக்குக் கிடைத்த நித்திய கனத்தைப்பற்றியும், விசுவாசமுள்ள சிந்தையால் நம்முடைய ஆத்துமா போஷிக்கப்படுகிறது. நம்முடைய கண்களை நித்தம் கிறிஸ்துவண்டைக்கு உயர்த்த வேண்டும். மனம் அவரையே தியானிக்க வேண்டும். இதயம் அவரையே உள்கொள்ள வேண்டும். அவர் ஜீவன் அளிக்கும் தேவன். என்னைப் புசிக்கிறவன் என்னால் பிழைப்பான் என்கிறார். நாம் ஆசரிக்க வேண்டிய பண்டிகையின் சாரம் கிறிஸ்துதான். ஆதலால் நாம் தினந்தோறும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். அதிக ஜெபத்தோடும், ஸ்தோத்திரத்தோடும், விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும், தாழ்மையோடும், பயபக்தியோடும், உத்தம மனஸ்தாபத்தோடும், மெய்யான சந்தோஷத்தோடும் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். தேவன் கற்பித்திருக்கிறபடியால் நாம் அதை ஆதரிக்க வேண்டும். அதை ஆசரிப்பதால் இரட்சகர் மகிமைப்படுகிறபடியால் அதை ஆசரிக்க வேண்டும்.
இயேசுவே உள்கொண்டு
ஆனந்தம் கொள்வோமாக
ஜீவன் சுகம் பெலன்
எல்லாம் அவரால் வரும்.