முகப்பு தினதியானம் நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்

பெப்ரவரி 13

“நீர் என்னைப் புடமிட்டுப் பார்த்தீர்.” சங். 17:3

ஆகையால் ஜெபத்திற்குப் பதில் கிடைத்தது. கிருபை வரங்கள் பெருகியது. தேவன் உன்னைக் கண்டிப்பாய் நடத்தியிருக்கிறார். நீதிமானைக் கர்த்தர் புடமிடுகிறபடியால் அவனுக்கு வரும் துன்பங்கள் மூலம் நற்குணங்கள் பிரகாசிக்கின்றன. அவருடைய அக்கினி சீயோனிலும் அவருடைய குகை எருசலேமிலும் இருக்கினறன. அங்கேதான் அவர் தமது ஜனங்களைப் புடமிடுகிறார். எந்தத் துன்பமும் நமது நன்மைக்கு அவசியம் வேண்டியது. நித்திய நேசத்தால் ஏற்படுத்தப்பட்டு எவ்வளவு காலம் அது தேவையோ அவ்வளவு காலம் அது இருக்கும். அதற்கு மிஞ்சி ஒரு நொடியும் இருக்காது. எந்தப் பக்தனுக்கும் துன்புங்கள் வேண்டும். எந்த விசுவாசியும் புடமிடப்படுகிறான். நம்மைப் பரிசுத்தராக்க தேவன் சித்தங்கொண்டால் நம்மை அக்கினியில் வைப்பார்.

பரிசுத்தத்திற்காக நாம் ஜெபிக்கும்போதெல்லாம் துன்பங்கள் வேண்டுமென்று கேட்கிறோம். துன்பங்கள் வாக்குத்தத்தங்களை அதிக அருமையாக்கி, கிருபாசனத்தின்மேல் நாம் வாஞ்சைக்கொள்ள செய்கிறது. இது இரட்சகரை எவ்வளவோ அருமையுள்ளவர் ஆக்குகிறது. துன்பங்கள் வரும்போது நம்முடைய சொந்த இருதயங்களை நாம் நன்றாய் பார்க்கிறோம். உலகம் நம்மைச் சாந்திப்படுத்தாது என்று அறிகிறோம். நாம் தேவனுடைய பிள்ளைகளென்று காட்டுகிற சாட்சிகளைக் கூர்ந்து கவனிக்கச் செய்கிறது. ஒரு புடமிடப்பட்ட கிறிஸ்தவன் உறுதியுள்ளவனாவான். சோதனையில்லாமல் இருக்கிறவர்கள் பரம சிந்தையில் குறையுள்ளவர்களாயிருப்பார்கள். அதிக பிரயோஜனமுள்ளவர்களாயும் இருக்க மாட்டார்கள். பிறருக்கு ஆறுதலாயுமிருக்க முடியாது. துன்பங்கள் மழை காலத்தில் விழும் மூடுபனிபோல் வசனமாகிய விதையை ஏற்றுக்கொள்ள நமது இருதயத்தைப் பண்படுத்துகிறது. அப்போதுதான் நாம் அதிக கனிகளைக் கொடுப்போம்.

அக்கினியில் என்னைச் சோதித்தீர்
அதை அவித்து தினம் துதிப்பேன்
தண்ணீரில் மூழ்கப் பண்ணினீர்
நீரே இரட்சித்தீரென்று போற்றுவேன்.