நம் நாட்டில் பல பகுதிகளில் சுமை தாங்கி கற்கள் பாதையின் ஓரங்களில் அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. சுமைகளை தூக்கி நடப்பவர்கள் சுமைதாங்கி மீது தங்கள் சுமைகளை வைத்து அருகிலுள்ள மரத்தின் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுவார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒருவர், ஒரு சமயத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ‘வேறு ஏதாவது சுமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டார்; ஆம், என்றார் அவர்களில் ஒருவர். என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு சுமையாக இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்குப் போதுமான உணவு வகைகளை கொடுக்க என்னால் முடியவில்லை என மிக வருத்தத்துடன் கூறினார். என் பிள்ளைகளை படிக்கவைக்கமுடியவில்லையே என்றார் மற்றவர். உலக வாழ்க்கையில் கண்களினால் காணமுடியாத சுமைகள் பல உண்டு. இதை கேட்ட அந்த தேவனுடைய ஊழியர் பாவ சுமையைப் பற்றி அவர்களுக்கு சொன்னார், இந்த சுமையை அவர்கள் பார்க்க முடியாவிட்டாலும் அது உண்மை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள். மேலும் பாவச்சுமையை தம்மிடம் கொண்டு வரும்படி அழைத்த அன்புள்ள இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர்களிடம் கூறினார்.
அநேக மாதங்களுக்குப்பின் ஒருவன் அதே தேவஊழியரைச் சந்தித்து, “நான் இயேசு கிறிஸ்துவின் மூலம் என் பாவச் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறேன். நீர் எனக்கு மெய்யான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொன்னதற்காக தேவனுக்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்” என்றான். உடனே அவனை அடையாளம் கண்டுகொள்ள அவரால் முடியவில்லை. பின்பு சுமைதாங்கி கல் அருகே சந்தித்ததை நினைவுகூர்ந்தார். அந்த மனிதன் தன் கடந்தகால வாழ்க்கையில் சுய முயற்சியால் பாவச் சுமையை நீக்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் அதினால் தான் சோர்வடைந்ததையும், காலம் வீணானதையும் கூறினதோடு, இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற சந்தோஷத்தையும் கூறினான். இவனுடைய திடீர் மாறுதலைக் குறித்து அறிந்து கொள்ள அந்த கிராமத்து மக்களும், இவனுடைய உறவினர்களும்’ விருப்பங்கொண்டு விசாரித்தனர் (மாற்கு 10:46-52). இயேசு கிறிஸ்து ஒரு குருடனை முதலில் “அழைத்தார்” பின்னர் “அவர் கண்களை திறந்து குணமாக்கினார்” அவன் இயேசு கிறிஸ்துவை பின் தொடர்ந்தான். அதைப்போலவே இவனும் தான் குணமடைந்த பின்பு அவரை பின் தொடர்ந்தான். கிராமத்தார்களுக்கும், தன் உறவினர்களுக்கும் இரட்சகரைப்பற்றி சொல்வதில் ஆனந்தமடைந்தான். இந்த ஏழை மனிதன் தன்னுடைய பாவச் சுமையை “எக்காலத்திலும் மாறாத கன்மலையின் மேல் வைத்து ஓய்வடைந்தான். 1 பேதுரு 2:6-ல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலைக்கல் என்று சொல்லப்பட்டிருக்கிறார்.” அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை.” கர்த்தராகிய இயேசு “விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையின் நிழலாக இருக்கிறார்.
மனந்தளர்ந்து போனவர்களையும், பாவபாரம் சுமந்து தவிப்பவர்களையும் இயேசு கிறிஸ்து வருந்தி அழைக்கிறார். “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பவர்களே ! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28).
இதைப் படித்துக்கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளே, பெரியோரே, இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் “மரண வழி தொடராதிருக்க முடியும்.” தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் உங்கள் பாவச் சுமையை உணர்ந்து விசுவாசத்தினால் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இப்படி செய்யமாட்டீர்களா? அருமையானவர்களே உங்கள் பாவத்தை விட்டு மனந்திரும்புங்கள்; இயேசு இரட்சகரை விசுவாசியுங்கள். அவர் ஒருவரே உங்கள் பாவத்திற்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் ஜெய வேந்தராக உயிர்த்தெழுந்தார். நீங்கள் தாமதிப்பீhகளானால் தேவனுடைய சந்நிதியை விட்டு நிரந்தரமாக புறம்பாக்கப்பட்டு பாவத்தின் கடும் சுமையை சுமந்துகொண்டு அக்கினி கடலுக்கு இரையாவீர்கள். இதிலிருந்து தப்புவதற்கு வேறெந்த நம்பிக்கையோ மார்க்கமோ இல்லை. இப்பொழுதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது அவர் உங்கள் பாவச் சுமையை நீக்கி மெய்யான சமாதானத்தை இலவசமாக கொடுப்பார். “இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் எப்படி தண்டனைக்குத் தப்பித்துகொள்ளுவோம்” (எபிரெயர் 4:2).