முகப்பு தினதியானம் எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்

எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்

யூலை 26

“எப்போதும் சந்தோஷமாய் இருங்கள்.” 1தெச 5:16

ஒவ்வொரு தேவபிள்ளையும் கிறிஸ்துவுக்குள் சந்தோஷப்பட்டு, பாக்கியவான் என்று சொல்லப்படுகிறான். அவன் எப்போதும் பாக்கியவானாய் இருக்க வேண்டியவன். எப்போதும் சந்தோஷமாய் இருங்கள் என்று வசனம் சொல்லுகிறது. சந்தோஷம் ஆவியின் கனிகளில் ஒன்று. இது விசுவாசத்தின் பலனாய் நம்பிக்கையோடு சேர்க்கிறது. ஆகவே நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள். இது தைரியம் உள்ள, சேனைத் தலைவன் அடையும் வெற்றியில் போர் சேவகன் அடையும் சந்தோஷம். கப்பலில் பிரயாணம்பண்ணும் ஒருவன், புத்திசாலியும், அனுபவசாலியுமான கப்பலோட்டியைக் குறித்து அடையும் சந்தோஷம். மன்னிப்பைப் பெற்று தேவகிபையை அடைந்தவனுடைய சந்தோஷம். அன்பும், பட்சமுள்ள தகப்பனைப்பற்றி வீடு திரும்பிய குமாரன் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷம் சொல்ல முடியாது. மகிமை நிறைந்தது. இது எப்பொழுதும் பரிசுத்தமான சந்தோஷம்.

இந்த சந்தோஷம் பாவம் செய்தால் சேதமடைந்து குறைந்துபோம். தேவ பிள்ளையே, உன் தேவன் உன்னைப் பார்த்து சந்தோஷப்படு என்கிறார். பழங்கால தேவபக்தர்கள் துன்பத்திலும் சந்தோஷப்பட்டார்கள். தேவனுடைய பரிசுத்த வசனமும், அருடைய கிருபை நிறைந்த உடன்படிக்கையும், இயேசுவில் இருக்கும் பரிபூரணமும், தேவனுடைய மகிமையான தன்மைகளும் இந்தச் சந்தோஷத்திற்கு அஸ்திவாரம். இது நம்முடைய அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் குறித்து நாம் அடையும் சந்தோஷம். இந்தச் சந்தோஷத்தை அடிக்கடி கெடுத்துக்கொள்ளாமல் நாம் பத்திரப்படுத்த வேண்டும். நம்மைச் சேதப்படுத்தி தேவனை வருத்தப்படுத்துகிற நம்முடைய அவிசுவாசம், பாவம், கிறிஸ்துவைப் பற்றின எண்ணம், தகாத சிந்தை, உலகத் தொல்லைகள், தப்பான நடத்தை, தன்னயம் இவைகள் யாவும் நமது நித்தியமான சந்தோஷத்தைக் கெடுத்துப்போடுகின்றன. தேவ பிள்ளையே, நீ சந்தோஷமாய் இருக்க வேண்டும்.

கர்த்தரில் என்றும் மகிழ்ந்திரு
அவர் உன் பரம நேசர்
அவர் மகிமை அளிப்பார்
பரம ராஜ்யமும் தருவார்.