முகப்பு தினதியானம் ஜனவரி “அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்”

ஜனவரி 01

“அவனையேநோக்கிப் பார்ப்பேன்” ஏசாயா 66:2

எவனைநோக்கிப் பார்ப்பேன்? சிறுமைப்பட்டவனை, ஆவியில் நொறுங்குண்டவனை, தமது வசனத்துக்கு நடுங்குகிறவனை, சிங்காசனத்தில் வீற்றிருக்குமுன் தான் ஓன்றுமேயில்லை என தாழ்த்துகிறவனை, தன் பாவங்களை நினைத்து மனந்திரும்புகிறவனை, குற்றங்களை நினைத்து உண்மையாக மனஸ்தாபப்படுகிறவனை, தன் வாழ்வில் எல்லாமே இயேசுவால் மட்டுமே கிடைக்குமென்று அவரை நோக்குகிறவனையே.தேவாதி தேவன் நோக்கிப் பார்ப்பேன் என்கிறார்.

கர்த்தர் இப்படிப்பட்டவர்களைக் கவனித்துப் பார்க்கிறார். இவர்களைப் பார்த்து உள்ளம்பூரிக்கிறார். அகமகிழ்கிறார். தேவ அன்பை இவர்கள்மேல் அதிகம் ஊற்றுகிறார். இவர்கள்வாழ்க்கையையும் வழிகளையும் ஆசீர்வதிக்கிறார். தம்முடைய சிநேகிதராக இவர்களைச் சந்தித்துப் பேசி சஞ்சரிக்கிறார். இவர்களுடைய ஜெபங்களுக்குக் கட்டாயம் பதில்கொடுக்கிறார். இவர்களின் பொருத்தனைகளையும் வேண்டுதல்களையும் ஆவலாய் அங்கீகரித்துக்கொள்ளுகிறார். இப்படிப்பட்டவர்களைத் தமது மகிமைக்கு அலங்காரமாக பயன்படுத்தி மேன்மைப்படுத்துகிறார். கிதியோனைப்போல வல்லமையாய் பயன்படுத்தி பேதுருவைப்போல சீர்படுத்துகிறார். இவ்விதமக்கள்மேல் கர்த்தர் தமது நேசமுகப்பிரகாசத்தைத் திருப்புவார்.

என் ஆத்துமாவே, இன்று நீ கர்த்தரை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாயா? அவரை உன் ஆசைத் தகப்பனாகப் பார்த்தாயா? உன் இரட்சகராக அவரை பார்த்தாயா? பார்த்திருப்பாயானால் அவர் தகப்பனுக்குரிய பட்சத்தோடு உன்னையும் பார்ப்பார். இப்போதும் உன்னை அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார். கர்த்தர் நம்மை பார்க்கிறது என்ன ஓர்ஆனந்தம்! என்ன ஒரு பேரின்பம்! தேவன் நம்மை கண்ணோக்குகிறார். உலக ஆஸ்தியைவிட மனித புகழைவிட, அன்போடு கண்ணோக்குகிறார் என்று நினைத்துக் கொண்டே இன்றையநாளில் இருப்பாயாக.

அவர் அன்பும் தயவும்

தேவமீட்பில் விளங்கும்

பாவங்களை மன்னித்து

அக்கிரமங்களை மறந்தார்.