முகப்பு தினதியானம் டிசம்பர் ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது

டிசம்பர் 27

“ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது” (சங்.36:9)

தேவன்தான் எல்லாருக்கும் உயிர் ஊற்று. அவரே சர்வ சிருஷ்டிகளையும் போஷித்து ஆதரிப்பவர். நமக்கு ஜீவனையும் சுகத்தையும் அருளுபவர் அவரே. இங்கு நாம் வாழ்வதே அவருடைய சித்தம்தான். அவருடைய சுத்தக் கிருபையினால்தான் நாம் வாழ்கிறோம். நம்முடைய ஆவிக்குரிய ஜீவன் வருவது அவரிடத்திலிருந்துதான். இந்த ஜீவனே நமக்கு உயிர்கொடுக்கும் மருந்து. நாம் தேவனால் பிறந்ததனால்தான் வல்லமையோடு வாழ்கிறோம். அவர்தான் நமது ஆத்துமாக்களை உயிரோடு காப்பவர். அவர் நம்மை உயிர்ப்பிக்கிறார். நம்மை உயிர்ப்பித்து நமக்கு வாழ்வைக் கொடுப்பவர் அவர்தான்.

நண்பனே, நீ ஆண்டவர்மீது வைத்த அன்பு குறைந்திருக்கிறதா? ஆவிக்குரிய வாழ்க்கையில் குறைந்துவிட்டாயா? அவருடைய சமுகத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறாயா? ஒன்றைமட்டும் மறவாதே. தேவனுடைய ஊற்று உன்னிடம்தான் இருக்கிறதென்பதை மறவாதே. அந்த ஊற்று உன் ஆத்துமாவுக்குள் பாயும் ஊற்று. ஒருகணப்பொழுதில் அது உங்களுக்கு உயிரைக் கொடுக்க வல்லது. அந்த ஊற்று தேவ திருமுகப் பிரகாசத்தை உங்கள்மேல் வீசப்பண்ணுகிறது. அவருடைய மன்னிப்பையும், சமாதானத்தையும் உனக்குக் கொண்டு வருகிறது. தூய ஆவியானவரை அளவில்லாமல் கொண்டுவருகிறது. இந்த ஊற்றில் பருகுவோருக்கு மறுபடியும் தாகம் ஏற்படாது. இது ஆத்தும தாகத்தைத் தீர்க்கக்கூடியது. இந்த ஊற்று வேண்டுமென்று ஜெபி. அப்பொழுது நீ பெற்றுக்கொள்ளுவாய். தாகம் தீருமட்டும் அதில் பருகு. அவர் உன்னை உயிர்ப்பிப்பார், உன் ஆத்துமாவும் அவரைத் துதிக்கும்.

ஜீவ ஊற்றாம் இயேசுவே,
என் ஆத்ம தாகம் தீருமே
நீரே ஜீவ அப்பமுமாதலால்
என் பசியையும் தீர்த்திடும்.