டிசம்பர் 28
“ஆனபடியால் இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன் நிற்கிறார்கள்” வெளி 7:15
இவர்கள் ஆண்டவர் நிமித்தம் அதிகம் துன்பப்பட்டவர்கள். அவரைப் பிரியப்படுத்தவும், மகிமைப்படுத்தவும் விரும்பியவர்கள். துயரங்களையும், சோதனைகளையும், நோய்களையும், துன்பங்களையும் சகித்தவர்கள். உயிரே போய்விடும் அளவுக்கு வேதனையிருந்தாலும், தேவனைவிட்டு விலகாதவர்கள். விசுவாசத்தோடும், தைரியத்தோடும் பெரு நம்பிக்கையோடும் தேவனுடைய பாதையில் கடந்து போனவர்கள். இந்த அசுத்தமான உலகில் பாவம் பெருகியிருக்கும் பொழுதும் தங்கள் இரட்சிப்பின் ஆடைகளை, தூய வெண்மையாகக் காத்துக் கொண்டவாகள். திறக்கப்பட்ட கல்வாரி ஊற்றில் எப்பொழுதும் தங்களைக் கழுவிக்கொண்டபடியால்தான் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள். ஆதலால்தான் இவர்கள் சிங்காசனத்தின்முன் நிற்கிறார்கள்.
தேவனக்கு முன் நிற்பதனால் அவர்கள் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகளாய், இரவும் பகலும் அவரைப் பணிந்து வணங்கும் பாக்கியம் பெறுகிறார்கள். அவருடைய ஊழியத்தை அன்போடும், வெறுப்பின்றி, சோம்பலின்றி, பாரத்தோடு செய்தபடியால் அவருடைய முன்னிலையிலும் தொழுகையின் ஊழியத்தை செய்யும் பேறு பெற்றவர்கள். தேவனைத் தினமும் சேவிப்பதனால் அவர்களுக்குக் குறைகளே கிடையாது. அவர்களுக்கு இனி பசி தாகமில்லை, கண்ணீரும் துயரமும் இல்லை. காரணம், அவர்கள் சதாவாக தேவனுடன் இருக்கிறார்கள். ஆட்டுக்குட்டியானவரே அவர்களை மேய்த்து அன்புடன் நடத்தி வருகிறார். தாங்கள் எண்ணினதற்கு மேலான பாக்கிவான்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் தேவதூதரோடும் பரிசுத்தர்களோடும் சேர்ந்து தேவனை ஆராதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
தூயோர் என்றும்
தூயவர் முன்னிலையில்
துயரமேதுமின்றி
துதித்திடுவர் தேவனை