முகப்பு துண்டு பிரதிகள் ஏன் எனக்கு அமைதியில்லை

ஏன் எனக்கு அமைதியில்லை

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு, சரீர் வேதனை என பல பிரச்சினைகளை சரீரத்தில் உணரமுடியும். இவைகள் உண்மையான நோய்கள் அல்ல. உள்ளே மறைந்திருக்கும் கான்சர் நோயின் வெளிப்படையான அறிகுறிகளே இவைகள். எனவே மேற்கண்ட நோய்களுக்கு நாம் மருத்துவம் செய்தால் அதனால் தற்காலிக நிவாரணம் மட்டுமே கிடைக்கும். மறைந்திருக்கும் கான்சர் நோய் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குரிய சிகிச்சை உரிய நேரத்தில் செய்யப்பட்டால்தான் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பலருக்கு பயம், அமைதியின்மை, பதட்டம், நம்பிக்கையின்மை, மனச்சோர்வு போன்ற மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவைகளை அவர்கள் தங்களின் பிரச்சினைகளாக எண்ணிக்கொண்டு அவைகளைச் சரி செய்ய பலவிதமானக் காரியங்களைச் செய்கின்றனர். சிலர் கோயில்களுக்கு செல்கின்றனர். சிலர் பக்தி ரீதியாக சில காரியங்களை செய்கின்றனர். சிலர் ஆன்மீகச் சொற்பொழிவுகளைக் கேட்கின்றனர். சிலர் புனிதத்தலங்கள் போய்வருகின்றனர். சிலர் மனதை இலகுவாக்கும் சில ஆலோசனைகளைப் பின்பற்றுகின்றனர். ஆயினும் அவர்களுக்கு நிரந்தரமானத் தீர்வுகள் அவைகளால் கிடைப்பதில்லை. எல்லாம் சற்று நேரம் மட்டுமே செயல்படுகின்றன.

காரணம் என்ன? மேற்கண்ட மனப்பிரச்சினைகள் யாவும் ஒரு குறிப்பிட்ட நோயின் வெளிப்புறமான அறிகுறிகளே அந்த நோயின் பெயர் என்ன? அதன் பெயர்தான் பாவம். பாவம் என்றால் என்ன? தன்னைப் படைத்த தேவனோடு தனிப்பட்ட உறவுடன் வாழாமையின் பெயர்தான் பாவம். மனிதன் கடவுளின் உறவில் வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவன். மனிதன் கடவுளின் உறவினால் மட்டுமே முழுமையான வாழ்வினை அடைகின்ற இயற்கையுடன் படைக்கப்பட்டவன். கடவுளை நாம் நம்பலாம். கடவுளை நாம் வணங்கலாம். கடவுளை நோக்கி தினமும் பிரார்த்தனைகள் செய்யலாம். ஆயினும் கடவுளின் உறவுடன் வாழ்வது என்பது வித்தியாசமான ஒரு அனுபவம். கடவுளின் உறவினை மனிதன் தனக்குள் அனுபவிக்கும் போதுதான் அவனைவிட்டு தனிமை உணர்வு போகின்றது. தனிமை உணர்வு போகின்ற போதுதான் பயம், சோர்வு, பீதி, கவலை ஆகியவைகளும் போகின்றது.

கடவுளின் உறவு இல்லாத உள்ளான ஒரு நிலைமை தான் பாவம். அந்த பாவத்தின் அறிகுறிகள்தான் அகலாத பயங்களும், நீங்காத நிம்மதியின்மைகளும், மறையாத வேதனைகளும், விலகாத மனச்சோர்வுகளும், உள்ளான இருதயத்தில் கடவுளின் உறவினை அடைந்து உணரும்வரை மனரீதியான பலவிதத் துயர்தரும் விஷயங்கள் தொடர்ந்துக் கொண்டேயிருக்கும்.

கடவுளின் உறவினைப் பெறுவது எப்படி? கடவுளின் உறவை மனிதன் பெறுவதற்காக பாவநிவாரணம் செய்யப்பட வேண்டியத் தேவை உண்டு. அந்தப் பாவநிவாரணத்தை செய்திடவே தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் இந்த பூமியில் மானிடனாக வந்து பாவநிவாரணப் பலியாக தம்மையேக் கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்து பாவநிவாரண பலியாக அடிக்கப்பட்டார். அதன் விளைவாக மனிதன் தேவ உறவுடன் வாழ்வதற்கான வாசல் திறக்கப்பட்டது. இந்த இரட்சகராகிய இயேசுவை
நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, இறை உறவுடன் வாழ விரும்பும்போது பாவம் ஒழிகிறது. அதாவது தேவ உறவற்ற நிலை போய், தேவ உறவுடன் வாழ்வதற்கான வாய்ப்பு கிட்டுகிறது. அதன் விளைவாக நாம் உண்மையான இதய அமைதி, நம்பிக்கை. சந்தோஷம், மனத்தூய்மை ஆகியவற்றுடன் வாழ்வதற்கு வழிதிறக்கின்றது. பலவிதமான வாழ்க்கை சுமைகளினால் வருத்தப்பட்ட மக்களைப் பார்த்து இயேசு ‘என்னிடம் வாருங்கள். நான் இளைப்பாறுதல் தருகிறேன்’ என்றார். அதாவது அவரோடு ஒரு நெருங்கிய உறவுடன் வாழவரும்போது, அவரால் நமக்கு உண்மையான அமைதி கிடைக்கிறது (மத்தேயு 11:28).

ஆண்டவராகிய இயேசு இன்றும் உங்களை அன்புடன் அழைக்கின்றார். தேவ உறவின்மை என்ற பாவ வாழ்வை விட்டு விலகி, தேவ உறவுடன் வாழ்தலாகிய தூய்மையான வாழ்விற்கு வரும்போது அங்கே பயமும், கவலையும், சோர்வும் நீங்கி உண்மையான தேவ அமைதியை இருதயத்தில் உணரலாம்.

ஜெபம்:
அன்பின் ஆண்டவர் இயேசுவே.
தேவ உறவில்லாத என் பாவ
வாழ்வை மன்னியும். எனக்குள் நீர்
வந்து உம்முடைய உறவை
அனுபவிக்கச் செய்யும்,
கவலைகள், பயங்கள், சோர்வுகள்,
சஞ்சலங்கள், பதட்டங்கள்
யாவற்றையும் நீக்கி என்னை
அமைதியுடன் வாழச் செய்யும். உமக்கு
பிரியமாக வாழ்வதற்கு உதவி செய்யும். இயேசுவின்
நாமத்தில் ஆமென்.