முகப்பு தினதியானம் கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.

மே 23

“கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” 2.தீமோ.2:19

தகப்பனுக்கு தன் பிள்ளை தெரியும். அன்பு கணவன் தன் ஆசை மனைவியை அறிவான். அப்படியே கர்த்தர் தம்முடையவர்களை அறிவார். தம் நேசமான பொருளாக¸ தம் குமாரன் இரத்தத்தினால் வாங்கப்பட்டவர்களாகவும்¸ பரிசுத்த ஆவியின் ஆலயமாகவும் அவர்களை அறிவார். பூமியிலே அவர்கள் பரதேசிகளும் அந்நியருமானவர்கள். ஆகவே அவர்களை அறிவார். தம்முடைய பிள்ளைகளை தேவன் ஆராய்ந்து அறிந்திருக்கிறார். உலகத்தார்¸ அவர்கள் தலைமேல் ஏறும்படி அனுமதித்தாலும்¸ தீய்க்கும் தண்ணீருக்கும் அவர்களை உள்ளாக்கினாலும் அவர்களை அறிவார்.

தம்மை யாரெல்லாம் நேசிக்கிறார்கள் என்றும்¸ இன்னும் அதிகம் நேசிக்க முடியவில்லையே என்று ஏங்குகிறவர்களையும் அவர் அறிவார். விசுவாசத்தால் போராடி¸ விசுவாசம் பெலவீனமாய் இருக்கிறதே என்று மனவேதனைப்படுகிறவர்களையும் அவர் அறிவார். பயமும்¸ திகிலும் அலைக்கழித்து கொந்தளித்தாலும்¸ தம்மை அவர்கள் நம்பியிருக்கிறார்களே என்று அவர் அறிவார். தம்முடைய வழிகளுக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளை எப்போதும் கைக்கொண்டால் நலம் என்று பெருமூச்சு விடுகிறவர்கள் என்று அவர்களை அறிவார்.

அன்பர்களே¸ கர்த்தர் உங்களைத் தம்முடையவர்கள் என்று அறிந்து¸ தமது சொந்தப் பிள்ளைகளென்று நேசித்து¸ தாம் தெரிந்துக் கொண்ட மணவாட்டியாக உங்களுக்காக கவலைப்பட்டு¸ தம் மந்தையின் ஆடுகளாக உங்களை மேய்த்து¸ கண்ணின் கருவிழிப்போல் புடமிட்டு நல் ஆபரணங்களாக உங்களைப் பத்திரப்படுத்தி தம்முடைய கிரீடத்தின் இரத்தின கற்களாக உங்களைப் பூரணமாய் அறிந்திருக்கிறார்.

தேவனே உமது பக்தரெல்லாம்
உமக்கே எவ்வளவு அருமை
உமது நாமம் தரிசித்தோர்
பெற்றுக் கொள்வார் மகிமை.

முந்தைய கட்டுரைஎன் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
அடுத்த கட்டுரைவிசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்