ஓகஸ்ட் 30
“கர்த்தாவே….. என்னை நினைத்து” சங். 106:4-5
இது அதிக பொருள் அடங்கியுள்ள ஒரு நல்ல ஜெபம். ஓர் ஏழை ஐசுவரியத்திற்காகவும், நிர்பந்தன் இரக்கத்திற்காகவும், அநாதை சிநேகிதனுக்காகவும் வேண்டுகிற ஜெபம். கர்த்தர் நம்மை நினைத்தால் நாசத்திலிருந்து காத்து, மோசத்திற்கு விடுவித்து, வருத்தத்தில் நம்மை நடத்தி, குறைவிலிருந்து நிறைவுக்கு அழைத்து துக்கத்தில் ஆறுதல்படுத்த நாள்தோறும் நடத்திச் செல்கிறார். கர்த்தர் நம்மை நினைத்துவிட்டால் யார் நம்மை மறந்தாலும் கவலையில்லை. அவர் சகல சிருஷ்டிகளைக் காட்டிலும் நமக்கு அதிகம் செய்வார். யார் கைவிட்டாலும் அவர் கைவிடார். அவர் எப்போதும் நம்மை நினைத்துக்கொண்டிருக்கிறார். நம்மை மண் என்றும், பெலவீனர் என்றும் மோசத்துக்கு ஏதுவானவர்கள் என்றும், அடிக்கடி சோதிக்கப்படுகிறவர்கள் என்றும் அவர் நம்மை நினைக்கிறார். நமக்காகச் செய்த தமது உடன்படிக்கையையும், தமது வாக்குத்தத்தங்களையும், தமது குமாரன் பட்ட பாடுகளையும், அவர் நமக்கு வைத்திருக்கும் சம்பத்துக்களையும் அவர் நினைக்கிறார்.
அவரின் திவ்ய ஈவுகளையும், அவர் கிருபைகளையும் நமக்கு இன்னும் கொடுக்க வேண்டுமென்று அவரைக் கேட்கலாம். நம்முடைய பாவங்களை மன்னிக்க நம்முடைய ஆத்துமாக்களை சந்திக்க, உயிப்பிக்க, நமது பிரயாசங்களுக்குப் பலன் கொடுக்க, நாம் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில் பெருக, விசுவாசத்தில் வளர, சந்தோஷத்திலும், சமாதானத்திலும் பெருக நம்மை அவர் நினைக்க வேண்டும் என்று அவரை நாம் கேட்கலாம். ஆத்துமாவே, இந்த இராத்திரியில் எல்லா மோசங்களுக்கும் என்னை விலக்கிக் காத்து, விசுவாசத்தால் நிறைந்து, பக்தி வைராக்கியத்தால் ஏவப்பட்டு, அன்பில் பிரகாசித்து, தாழ்மையைத் தரித்துக்கொண்டவனாய் நாளை காலை நான் எழுந்து கொள்ளச் செய்யும்.
பரிந்து பேசும் கர்த்தாவே
என்னை உமக்கொப்புவிப்பேன்
ஏழைக்கிரங்கி அருளும்
அடியேனை நினைத்தருளும்.