யூலை 13
“இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்.” எபேசியர் 2:4
பாவத்தினால் வரும் நம்முடைய நிர்பந்தம் பெரியது. ஆகிலும் தேவனுடைய இரக்கத்தைப்போல அவ்வளவு பெரியதல்ல. நமது துன்பங்கள் அநேகம். தேவ இரக்கம் அவைகளுக்கெல்லாம் மருந்து. இரக்கம் என்பது தேவனுக்கு இருக்கும் ஐசுவரியம். அதைத் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கிறார். அது துன்பப்பட்ட தம்முடைய பிள்ளைகளுக்கு அவர் காட்டும் தயவு. அதைக் கொண்டுதான் நம்முடைய துன்பங்களை அவர் சரியாய் அறிந்து உணருகிறார். பழைய ஏற்பாட்டில் அவருடைய ஜனங்களைப்ற்றி, அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார். அவர் தமது அன்பின் நிமித்தம் அவர்களுடைய பரிதாபத்தின் நிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வ நாள்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்து வந்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது.
தேவ இரக்கம் அளவற்றது. அது இரட்சகர்மூலமாய்ப் பாய்கிறது. நம்முடைய துக்கத்தை ஆற்றுகிறதினாலும் நம்முடைய குறைவுகளை நீக்குகிறதினாலும், நம்முடைய பாவங்களை மன்னிக்கிறதினாலும் நம்முடைய வருத்தங்களை அகற்றுகிறதினாலும் அலைந்து திரிகிற நம்மைத் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கிறதினாலும் அது மகிமைப்படுகிறது. அன்பர்களே, இந்த நாளில் தேவன் இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர். அவர் உனக்க இரக்கம் வைத்திருக்கிறார். உனக்கு தேவையான இரக்கம் அவரிடத்தில் உண்டு. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்கிறார். அவர் வாக்கை நம்பு. அவர் சமுகத்தில் இரக்கத்திற்காக கெஞ்சு. தமது இரக்கத்தை உன்னிடத்தில் மகிமைப்படுத்த வேண்டுமென்று கேள். தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் அவர் ஐசுவரிய சம்பன்னர் என்பதே உனக்கு போதுமான தைரியம். ஆகவே இன்று அவர் வார்த்தையை நம்பி அவரைக் கனப்படுத்து.
பூமிக்கு வானம் எப்படி
உயர்ந்து இருக்கிறதோ,
அவர் இரக்கம் அப்படி
நமது பாவம் மூடாதோ?