ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் ‘பிரவுன்ஸ்’ என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய பட்டப்படிப்பை மூன்றே வருடங்களில் திறமையுடன் முடித்துக்கொண்டவன். பல்கலைக்கழக நாட்களில் அவனைப் போலவே படிப்பிலும், நாடகத்திலும், நகைச்சுவையிலும் ஆர்வமுள்ள ஒருவன் அவனுக்கு நண்பனாகினான். மதம் சார்ந்த காரியங்களை கேலிக்கூத்தாகக் கருதிய, தெய்வ நம்பிக்கையற்ற அந்த நாத்திக நண்பனின் செல்வாக்கினால், ஜட்சனும் மதம் சார்ந்த காரியங்களை மூட நம்பிக்கையாகக் கருதி, தெய்வம் என ஒன்று இல்லை என எல்லோரிடமும் வாதிடத்தொடங்கினாான்.
பட்டப்படிப்பு முடிந்ததும், தனக்குள் அடக்கி வைத்திருந்த ஆசைகளை அனுபவிக்கத் துடித்தான். சிறகு முளைத்த பறவைபோல புது உலகைக் காணவும், ஒரு நாடககதாசிரியனாக மாறவும் மனக்கோட்டைகள் பல கட்டினான். இருபத்தோராவது வயதில் புதிய உலகைக் காண எண்ணி, மனதில் பல கனவுகளைச் சுமந்தவனாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தை நோக்கிப் பயணமானான். ஆரம்பத்தில் அங்கே நாடகக்கம்பனியொன்றில் சேர்ந்து பணியாற்றினாான். ஆனால் அங்கு அவன் எதிர்பார்த்த திருப்தியும் சந்தோஷமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
அவன் பிரயாணம் செய்கையில் ஒரு நாள், விடுதியொன்றில் இரவு தங்க நேர்ந்தது. அந்த விடுதியில் அவன் கழித்த அந்த இரவு அவன் வாழ்விலேயே அவன் சந்தித்த அத்தனை இரவுகளிலும், மிகப் பயங்கரமானதும் அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் இரவாகவும் இருக்குமென அவன் கற்பனையில் கூடச் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. அவன் தங்கியிருந்த அறைக்கு அடுத்த அறையில் ஒரு மனிதர் வேதனையில் முனகிக்கொண்டிருப்பதும், பயத்தோடு அலறிக்கொண்டிருப்பதும் அவன் காதுகளில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது. ஜட்சனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மரணபயம் அவன் உள்ளத்தைக் கவ்விக்கொள்ள அவனது எண்ணங்கள் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தது.
‘ம் … மரணம்? மரணம்? மரணம்? இந்த மரணத்தைக் குறித்து என் தந்தை அடிக்கடி என்னிடம் கூறுவாரே … நான் மரித்த பின்பு எனக்கு என்ன நடக்கும் ?… ஓ! என்ன பயங்கர நினைவுகள் … , எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஏனெனில் என்னுடைய நண்பன் இந்தப் பயங்கரமான அனுபவத்துக்கும் ஒரு நல்ல ஞானமான பதிலை நிச்சயமாய் வைத்திருப்பான்’ என்றவாறு தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றான். ஆனாலும், அப்பயங்கர இரவு, மரணத்தைப்பற்றிய பயத்தை அவன் மனதில் இன்னும் அதிகமதிகமாய் பதியச் செய்து, அவனைப் பதறச்செய்தது.
இவ் உண்மைச் சம்பவத்தின் அடுத்த கட்டத்தை அறியமுன்பு இதனை வாசிக்கும் உங்களிடம் நான் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். மனிதராய்ப் பிறந்த நாம் எல்லோரும் ஒருநாள் மரணத்தை சந்திக்கவே வேண்டும். மரணம் எந்த வயதில் வரும் எனச் சொல்லமுடியாது. பச்சிளம் பருவத்திலும் மரிக்கலாம், அல்லது வயதுபோய் தளர்ந்த நிலையிலும் இறக்கலாம். நேற்று இருந்த பலர் இன்று இல்லை. இன்று இருக்கும் நாமும், நாளை இருப்போமா என்ற நிச்சயமில்லை. இப்படிப்பட்ட நிலையிலே நீங்கள் மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் இறந்தால் எங்கே போவீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் இறந்ததும், நம்முடைய சரீரம் இந்த மண்ணோடு மண்ணாய் உருவழிந்து போகலாம், ஆனால் நம்முடைய ஆன்மா? அதற்கு என்ன நடக்கும் என்று எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏனெனில் நாம் மிருகங்களைப்போல வெறும் சரீரத்தோடு மட்டும் படைக்கப்படவில்லை. கடவுள் நம்மை ஒரு அழியாத ஆன்மாவுடன் சிருஷ்டித்திருக்கின்றார்.
இனி அக் கதையின் தொடர்ச்சியைக் கண்ணோக்குவோம். அப்பயங்கர இரவை பயத்தோடு கழித்த ஐட்சன் மறுநாள் காலையில் அந்த விடுதிக்காப்பாளரிடம், கடந்த இரவு தன்னுடைய அடுத்த அறையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த அம்மனிதனைக் குறித்து விசாரித்தபோது: “அந்த வாலிபன் இறந்துவிட்டான்” என அந்த விடுதிக்காப்பாளர் பதிலளித்தார்.
“என்ன! இறந்துபோனது ஒரு வாலிபனா?” என ஜட்சன் ஆச்சரியத்தோடு கேட்க. விடுதிக்காப்பாளர் தொடர்ந்து கூறிய காரியம் ஐட்சனை மேலும் அதிக அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“கிட்டத்தட்ட உங்கள் வயதை ஒத்த அந்த வாலிபன், ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகத்தில் பயின்று அண்மையில்தான், தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தவனாம்” என விடுதிக் காப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், ஜட்சன் குறுக்கிட்டு:
“என்ன ‘பிரவுன்ஸ்’ பல்கலைக்கழகமா? அவன் பெயரென்ன?” எனக் கேட்க.
“சற்றுப் பொறுங்கள் பார்த்துச் சொல்கிறேன்” என்று அவர் அவனது பெயரைச் சொன்னதும், உலகமே ஒருகணம் இருண்டுவிட்டதுபோல ஜட்சன் அதிர்ச்சியுற்றான்.
இறந்துபோன அந்த வாலிபன் வேறுயாருமல்ல அவனோடு ஒன்றாகக் கல்வி பயின்ற அவனது கல்லூரி நண்பனே. இறைவன் இல்லையென்று இடித்துரைத்த அவன் இப்போது இறந்துபோனான். வாழ்க்கையின் எல்லாப் பிரச்சனைக்கும் எவரிடத்தில் பதில் உண்டு என்று ஜட்சன் நம்பினானோ, அந்த நண்பனே மறைந்துவிட்டான். ஒருக்காலும் மீளமுடியாத இடத்திற்கே போய்விட்டான். உண்மையில் தன் நண்பன், மரணத்திற்கு ஆயத்தமாக இருக்கவில்லை என்பதை ஐட்சன் நன்கு அறிந்திருந்தான்.
இப்போது ஜட்சனின் மனதில் மரணபயம் கவ்விக்கொள்ள, அவன் மெய்தெய்வத்தைத் தேடத்தொடங்கினான். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், மரணத்தின்பின் அவர் தரும் நித்திய வாழ்வு பற்றியும் அறிந்துகொண்ட அவன், அந்த தெய்வத்தை அனுபவரீதியாக அறிந்து, தன்னுடைய பாவங்களை மன்னிக்கும் இரட்சகராக அவரை ஏற்றுக்கொண்டான். அவன் வாழ்வின் கேள்விகளுக்கு விடைகிடைத்து, பயம் நீங்கியவனாக தைரியம் கொண்டான். இனியும் மரணத்தின்பின் என்ன நடக்கும் என்று அவன் கலங்க அவசியமிருக்கவில்லை. தன் வாழ்வில் தான் செய்த அனைத்துப் பாவங்களின் தண்டனையையும் இயேசுகிறிஸ்து, சிலுவையில், தன்மேல் ஏற்றுக்கொண்டதால் இனி அவன் திரும்பவும் தன் பாவங்களுக்குத் தண்டனை அனுபவிக்க அவசியமில்லை என்றும் ‘மரணத்திலிருந்து உயிரோடு எழும்பிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பவனுக்கு, மரணத்தின் பின்பாக ஒரு சந்தோஷமான வாழ்வு உண்டு’ என்றும் அறிந்தவனாக, தான் அனுபவித்த அந்த கிறிஸ்துவை மற்றவருக்கும் அறிவிக்கவேண்டும் என்ற விருப்பத்தோடு பர்மா தேசத்திற்குப்போய் அங்கிருப்பவர்களுக்கு கிறிஸ்துவைப்பற்றியும் அவர் தரும் நம்பிக்கை, புதுவாழ்வுபற்றியும் அறிவித்தான். அப்படி அறிவித்ததினால் சொல்லொண்ணா துன்பங்களுக்கு உள்ளானான். ஆனாலும் மக்கள் மரணத்தின் பின்பு நரகம் என்று சொல்லப்படுகிற கொடிய வேதனையுள்ள இடத்திற்குப் போய்விடக்கூடாது, இயேசுகிறிஸ்து தரும் பாவமன்னிப்பையும் புதுவாழ்வையும் அவர்கள் அனுபவிக்கவேண்டும். மரணத்தின் பின்பு கிறிஸ்துவோடு பரலோகம் என்னுமிடத்தில் ஒரு சந்தோஷமான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக ஐட்சன் தன்னையே அர்ப்பணித்தான்.
இந்தப் பிரதியை வாசிக்கையில் உங்களில் சிலர் இது மத மாற்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்று என எண்ணலாம். அது உண்மையல்ல. ஏனெனில் கிறிஸ்து மதம் மாற்றுவதற்காக இவ்வுலகிற்குவரவில்லை. ‘பாவிகளை இரட்சிக்கவே (மீட்கவே) கிறிஸ்துஇயேசு உலகில் வந்தார்’ (1திமோத்தேயு1:15) மக்களை பாவத்திலிருந்து மனந்திரும்பச்செய்து, அப்பாவத்திலிருந்தும் அப்பாவத்தின் விளைவான நரக தண்டனையிலிருந்தும் அவர்களை விடுவித்து, புதுவாழ்வு கொடுக்கவும் தேவனோடு ஒரு புதிய உறவை ஏற்படுத்தி, மரணத்தின் பின் பரலோகம் என்னும், நித்தியமானதும் இன்பமானதுமான ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்லவுமே அவர் இவ்வுலகிற்கு வந்தார். ‘பாவத்தின் சம்பளம் மரணம் தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்’ (ரோமர் 6:23) என வேதாகமம் கூறுகிறது எனவே நம்முடைய பாவத்துக்காக, நாம் அடையவேண்டிய தண்டனையை அவர் தன்மேல் ஏற்று நாம் மரிக்கவேண்டிய இடத்தில் அவர் மரித்து, பின் மரணத்தை தம்முடைய உயிர்த்தெழுதலினால் ஜெயித்தார். அவரை விசுவாசிக்கிறவன் எந்த இனத்தவனாயிருந்தாலும் எந்த மதப்பின்னணியைச் சேர்ந்தவனாயிருந்தாலும் அவனுக்கு மரணத்திற்குப் பின்னான ஒரு வாழ்வைக் கொடுப்பார். அவர் கொடுக்கும் இந்த நித்திய வாழ்வை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மரணத்தின் பின்பு சந்தோஷம் இல்லாததும், வேதனை நிறைந்ததுமான நரகத்தில் தங்கள் நித்திய காலத்தைக் கழிக்க நேரிடும். அப்பொழுது புலம்பிப் பிரயோஜனமில்லை ஏனெனில் அதிலிருந்து மீளவே முடியாது. இதனை வாசிக்கும் அன்பானவர்களே! உங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதனை விட்டுவிடுவதற்கான தீர்மானத்தோடு ‘ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உங்கள் பாவங்களுக்காக மரித்து உயிர்த்தார்’ என விசுவாசித்து, அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு பாவமன்னிப்பும் மெய்ச்சமாதானமும் கிட்டுவதுடன், மரித்த பின்பும் பரலோகிற்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். ஆனால் அவர் தரும் பாவமன்னிப்பையும் நித்திய வாழ்வையும் ஏற்க மறுத்தால் இவ்வுலகின் வெறுமையும், விரக்தியுமான வாழ்வு மட்டுமல்ல, மரணத்தின் பின்பு உங்கள் பாவங்களுக்கான தண்டனையாக நரகமும் உண்டு. இவை இரண்டில் எதைத் தெரிவு செய்யப்போகிறீர்கள்? தெரிவு உங்களுடையது.