முகப்பு துண்டு பிரதிகள் இவர் யார்

இவர் யார்

இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு மாட்டுக்கொட்டகையாய் இருந்தபோதிலும் ஒரு விண்மீன் அறிஞர்களைக் கீழ்த்தேசத்திலிருந்து வந்து அவரை வணங்கும்படி வழிநடத்தினது.

அவர் பிறப்பு இயற்கை விதிக்கு முரண்பட்டது. அவர் மரணம் மரணவிதிக்கும் மாறுபட்டது. அவர் ஜீவியமும், போதனையும் விளக்கவொண்ணாத ஒரு மாபெரும் அற்புதம். அவருக்கு கோதுமை வயலோ, மீன்பண்ணையோ இல்லாதிருந்தும் அப்பமும் மீனும் ஐயாயிரம் பேருக்கு திருப்திபடக்கொடுத்து மீதமும் வைக்கமுடிந்தது. அவர் நீர் மேல் நடந்தால் அது தரைபோல் அவரைத் தாங்கும்.

அவரைச் சிலுவையில் அறைந்ததோ கொடுமையிலும் கொடுமை. தேவன் அம் மரணத்தின்மூலம் கிருபையாய் பாவமன்னிப்பையும் மீட்பையும் மானிடர்க்கு அருளிச் செய்தார். அவர் மரித்த அன்று ஒரு சிலரே அவருக்காகப் புலம்பினர். ஆயினும் சூரியன் கருந்திரையினால் மூடப்பட்டதுபோல் அந்தகாரப்பட்டது. கீழிருந்த பூமியோ அக் கொடுமையின் பாரம் தாங்காமல் அதிர்ந்தது. சகல இயற்கையின் தத்துவங்களும் அவரை நன்கு மதித்து அவருடைய அநியாய மரணத்திற்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால் இவ் உலகின் கொடிய பாவிகளோ அவரைத் தூஷித்து, புறக்கணித்து, சிலுவையில் அறைந்தனர்.

பாவம் அவரை எள்ளளவேனும் தீண்டவில்லை. அழிவோ அவரின் சரீரத்தை ஆட்கொள்ளஇயலவில்லை. அவர் இரத்தத்தால் கறைபட்ட மண் அவர் சரீரத்தை மேற்கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர் மரித்து மூன்றாம் நாள் மண்ணிலிருந்து உயிருடன் எழுந்தார்.

அவர் நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்து மூன்றரை வருஷங்கள் சுவிசேஷத்தைக் கூறி அறிவித்தார். அவர் ஒரு புத்தகமும் எழுதியதில்லை. ஒரு கட்சியும் அமைக்கவில்லை. ஒரு ஆலயமும் கட்டவில்லை. அவர் மாபெரும் நிதிகள் ஒன்றும் திரட்டவில்லை. என்றாலும் கடந்த இரண்டாயிரம் வருடங்களாக மனித சரித்திரத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இடைவிடாமல் போதிக்கப்பட்டுவரும் பிரசங்கங்களின் மத்திய பொருள் இவரைப் பற்றியதே. காலத்தின் சகல வர்த்தமானங்களும் இயேசு கிறிஸ்து எனும் ஒரு அச்சாணியிலேயே சுழன்றுகொண்டுவருகிறது. இவர் ஒருவரே மானிடவர்க்கத்தை மீட்டு புதுப்பித்து நித்தியஜீவனைக் கொடுக்க வல்லவர்.

அவர் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மறைந்த மரியாளின் மைந்தனான வெறும் மைந்தனோ? இல்லை! இல்லை! இவர் தெய்வத்தில் தெய்வமானவர். பரஞ்சோதியான உண்மைக் கடவுள். இவர் சர்வத்துக்கும் மேலான தேவன். கல்வாரிச் சிலுவையில் அவர் செய்த ஒப்பற்ற தியாகம்தான் கடந்த நூற்றாண்டுகளில் கொடிய பாவிகளையும் நரமாமிசபட்சணிகளையும் மீட்டு, இரட்சித்து புனிதராக்கி, பிறரைத் தம் தோழராக நேசிக்கச் செய்து அவர்கள் ஜீவியத்தில் அற்புதமாறுதல்கள் உண்டுபண்ணிற்று.

இப்படிப்பட்ட மகத்துவம் நிறைந்த தூயவரை மானிடரை மீட்டு இரட்சித்து இம்மையில் பாவமன்னிப்பின் நிச்சத்தையும் மறுமையில் மோட்சானந்தத்தையும் அளிக்கவல்ல இவ் உன்னத மீட்பரை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் என் ஆண்டவனே! என் தேவனே! என்னை இரட்சியும் என்று வணங்காமல் இருக்க மாட்டான்.

இதை வாசிக்கும் அன்பான நண்பரே, நீர் பாவ மன்னிப்பைப் பெற்று மோட்சம்செல்ல வாஞ்சிக்கிறீரா? இப்படிப்பட்ட ஒப்பற்ற நேசராகிய இயேசு கிறிஸ்துவை உமது உள்ளத்தில் உறையும் கடவுளாகவும், உமது சொந்த இரட்சகராகவும் ஏற்று அங்கீகரிப்பீராகில் அவர் உம்மை முற்றுமுடிய இரட்சித்து மோட்சானந்த பாக்கியத்தை உமக்கு அருளுவார். நீர் இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் (அப்16:31).