ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருமை, வார்த்தைகளில் அடங்காது. அவருடைய சிறப்பான குணங்களை நம்மால் சொல்லி முடியாது. அவருடைய தன்மைகளை விளக்கிக்காட்டப் பலவிதமான உதாரணங்களும், ஒப்புமைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவருடைய மகத்துவங்களனைத்தையும் அறிய வேண்டுமானால், அவருடைய அன்பில் நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவருடைய மகிமையைக் காண விரும்பும் எவரும் அவரின் பாதத்தில் காத்திருப்பார்கள். இங்கே காட்டு மரங்களில் கிச்சிலி மரங்கள்போலவும், குளிர்ந்த நிழலைப்போலவும், இனிய கனி தருபவைகளாகவும் ஆண்டவர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். அவர் தரும் கனி நமது வாய்க்கு இனிமையாயிருக்கிறது. அவர் கொடுக்கும் கனிகளில் அவரின் வாக்குகளும், அவர் அருளும் மன்னிப்பும், அவரின் ஓப்புரவாக்குதலும், சமாதானமும், ஐக்கியமும், அவருடைய அன்பின் நிச்சயமும், அவருடைய தூய மகிழ்ச்சியும், நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையும், தேவ சமுக மகத்துவத்தைப்பற்றின காரியங்களும் உள்ளடங்கியிருக்கின்றன. பரம சிந்தையுள்ளவர்களுக்கு இந்தக் கனிகள் இன்பத்தைக் கொடுக்கின்றன. வாழ்க்கையின் பெரும் புயலுக்கு தப்பி, கொடுமைகளான வெயிலுக்கு மறைவாக அவரால் கிருபை பெற்றவன் பாக்கியவான். இந்த இரட்சிப்பின் கனியை உண்பவன் பேறு பெற்றோன். அவனுடைய ஆத்துமாவுக்கு ஆண்டவர் இனிமையானவர். இக்கனி அவர்களுக்கு இனிமையாயிருப்பதால், பாவம் கசப்பாயிருக்கிறது. இவ்வுலக ஞானம், இன்பம், வீண் வேடிக்கை அனைத்துமே பைத்தியமாகத் தோன்றும். பாவத்தினாலுண்டாகும் இன்பம் அவனுக்கு வெறுப்பாகும்.
பரம விருந்தின் இன்பம் பாக்கியமே
பரம நாட்டின் நிழல் இன்பமானதே
பரம நாட்டின் கனிகள் அருமருந்தே
பரம நாட்டிற்கெனை கொண்டு சேரும், ஆண்டவரே.