முகப்பு தினதியானம் அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்

நவம்பர் 28

“அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” யோபு 13:15

கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருப்பதைத்தவிர நாம் செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை. இவ்வாறு நம்பிக்கை கொண்டிருப்பதே நலமாகும். நம்பியிருப்பதையன்றி நாம் வேறு ஒன்றும் செய்யக்கூடாது. ஆனால் என் சொத்துக்களை என்னைவிட்டு அகற்றி, என் சுகத்தை நோயாகமாற்றி, என் நண்பர்களை எனக்கு பகைஞராக்கிக் கர்த்தர் தமது முகத்தை எனக்கு மறைத்துக் கொண்டால், நான் என்ன செய்வது? ஆம் அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும். இவைகள் போதாதன்றி பட்டயம் கரத்திற்கொண்டு அவர் என்னைக் கொல்லு முயற்சித்தால் என்ன செய்வது? அப்பொழுதும் நீ அவரை நம்பத்தான் வேண்டும்

உனக்கு அவருடைய வாக்குகள் இருக்கிறன. அவ்வாக்குகளை அவர் மாற்றார். நிறைவேற்றாது போகார். அவர் உண்மையுள்ளவர். அன்புள்ளவர். அழுகிற குழந்தையைத் தாய் அணைப்பதுபோல், உன்னை அவர் அணைத்துக் கொள்வார். அவருடைய சிம்மாசனத்தின்முன் அவருடைய வாக்குத்தத்தங்களைச் சொல்லி கேட்கும்போது, அவர் தமது வாக்குகளை நிறைவேற்றியே தீருவார். அவரை நம்பியிரு. அவர் உன் விசுவாசத்தை சோதிக்கிறார். இனி அவர் உனக்குத் தரவிருக்கும் பாக்கியங்களை எண்ணி மகிழ்ந்திரு. அவர் அனுப்பிய சோதனைக்காக நீ ஒரு நாள் அவரைத் துதிப்பாய். அவர் உன்னை சோதித்தபின் நீ பொன்னாக விளங்குவாய். எப்பொழுதும் கர்த்தரையே நம்பியிரு. என்ன நேரிட்டாலும் அவர்மீது கொண்ட நம்பிக்கையை விடாதே.

தேவனே, உம் கரம் என்னை
எவ்வழி நடத்தினாலும் நலமே
உம் அன்பே எனை நடத்துவதால்
உம்மை நம்பி நிற்பேன்.