Home துண்டு பிரதிகள் மன்னனின் மதியீனம்

மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும் நாடாது சுயநலவாதியாய் வாழ்ந்து வந்தான். அவனது குடிமக்கள் அவனது ஆட்சியின்கீழ் அவதிகள் பல பட்டு வாடி வதங்கினர். பலர் கூடித் திட்டமிட்டு அவிவரசனைக் கொலை செய்யச் சதி செய்தனர். அவ்வரசன் இதனை அறியாதிருந்த போதிலும் அதி தூரத்தில் அத்தனே என்னும் பட்டணத்தில் உள்ள அவனது ஆத்மநண்பன் இச்சதியைக் குறித்துக் கேள்வியுற்று ஒரு கடிதம் எழுதி அவனுக்கு ஒரு தூதுவன் மூலம் அவசரமாய் அனுப்பினான்.

அத்தூதுவன் வந்த தினத்தில் அரசன் தனது நண்பர்களுக்கு பெரிய விருந்தொன்று ஆயத்தப்படுத்தி முடிவில் ஏராளமான மதுவருந்திக் கொண்டிருந்தான். அச்சமயத்தில் அத்தூதுவன் கடிதத்தை அரசனிடம் கொடுத்து, “இதை அனுப்பியவர் இது அதிமுக்கிய காரியமானதால் நீர் இதனை உடனே படித்து ஆவன செய்ய வேண்டும்’ என்று வேண்டுகின்றார்” என்று கூறினான். அவ்வரசனோ அக்கடிதத்தில் உள்ள ஜீவன் அளிக்கும் செய்தியைப் பற்றி கிஞ்சிற்றும் உணராமல் “முக்கியமான காரியங்களை நாளை பார்த்துக் கொள்ளலாம். இன்றைக்கு புசித்துக் குடித்து இன்புற்றிருப்பேன்” என்று சொல்லி அக்கடிதத்தைத் தூர எறிந்து விட்டான். அன்று இரவில் தானே அவனுடைய பகைஞர் அவன் குடித்து வெறித்திருந்த சமயம் அவன்மீது பாய்ந்து கொன்று விட்டனர். அந்தோ! அவன் ஜீவன் தப்பு அவனது நண்பனால் அருளிய எச்சரிப்பான நற்செய்தியை அல்லத் தட்டினதால் அவன் மாண்டு போனான்.

இதனை வாசிக்கும் அன்புள்ள நண்பரே, இவ்வரசனைப் போலவே நீரும்’ கிஞ்சிற்றேனும் கவலையின்றி சிற்றின்ப வாழ்வை நுகர எண்ணி உலகமே சதம் என்று அதன்பின் சென்று, பின் ஒரு நாள் நமது ஆத்மிக இரட்சிப்பைப் பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்று வாழ்நாளை வீணாளாக்கிக் கொண்டு வருகின்றீரோ? சற்றே நின்று யோசித்துப் பாரும் நாளை நம்முடையதன்று. இன்றே இவ்வுலகில் நமது கடைசி நாளாக இருந்தாலும் இருக்கலாம்: யாரறிவார்? ஒரு வேளை நான் இப்படிச் சொல்வது உமக்குச் சற்று வருத்தமாய் இருக்கலாம். ஆயினும் இது உண்மையல்ல என்று சொல்ல உமது இதயம் துணியவில்லையே! ஆகவே இன்றே உமது நித்தியத்திற்கடுத்த காரியங்களைப் பற்றி நீர் சிந்திக்க வேண்டும். நித்தியத்திலே நாம் கடவுளிடம் சென்று இன்புற்றிருக்க வேண்டுமென்றால், நம்முடைய பாவங்களுடன் செல்ல முடியாது. நாம் மோட்சம் அடைய வேண்டுமென்றால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும். இவ்வுலகின் கண் பாவப் பாரத்தால் சோர்ந்து அழியும் மானிடரை மீட்கவே இயேசு கிறிஸ்து மானிட அவதாரம் எடுத்து, நமது பாவங்களை தம்மீது ஏற்று, நமக்குப் பதிலாக சிலுவையில் தம்மையே தியாக பலியாக்கி, மூன்றாம் நாள் உயிருடன் எழுந்து, இன்றும் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் மீட்டு இரட்சித்து, பாவத்தின்மீது வெற்றி தந்து, தம்முடன் இவ்வுலகிலும் மறு உலகிலும் இனிது வாழும் பெரும் பாக்கியத்தைக் கொடுக்க வல்லவரும் நல்லவருமாய் இருக்கின்றார்.

உமது பாவங்களை அவரிடம் இன்றே அறிக்கை செய்து, அவரை உமது சொந்த தெய்வ இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவரைத் தொழுது அவரையே சேவிக்க முற்படுவீராக. அப்பொழுது இம்மையில் தூயவாழ்க்கையும் பேரின்பத்தையும் மறுமையில் மோட்சானந்த பாக்கியத்தையும் அடைவீர். அவ்வரசனைப் போன்று முக்கியமானகாரியங்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று இந்த இரட்சிப்பின் நற்செய்தியை தள்ளிவிட வேண்டாம் “ஆதலால் சகோதரரே, இவர் (இயேசு கிறிஸ்து) மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் …………. நீங்கள் எவைகளினின்று (பாவத்திலிருந்து) விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக் கூடாதிருந்ததோ … அவரை (இயேசு கிறிஸ்துவை) விசுவாசிக்கிறவன் என்றும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமான்களாக்கப்படுகிறான். (அப்போஸ்தலர். 13:38-39) என்று சத்தியவேதம் வெளிப்படுத்துகிறது. ஆகவே இயேசு கிறிஸ்துவை இன்றை உமது இரட்சகராய் ஏற்றுக் கொள்வீராக.”கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” அப்போஸ்தலர். 16:31)