ஓகஸ்ட் 25
“வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்” எபி.10:23
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் இலவசமாய் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேவன் உண்மையுள்ளவர். ஆகவே அவர் அவைகளைச் சொன்னபடியே நிறைவேற்றுவார். தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு நித்திய ஜீவனையும் பாவ மன்னிப்பையும், இருதயசுத்தத்தையும், சமாதானத்தையும், கிருபையையும், வாக்களித்திருக்கிறார். இவைகளை நாம் நம்பி அவர் அப்படியே நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்க வேண்டும். அவர் தம்முடைய வாக்குகளுக்கு உண்மையுள்ளவர். அது அவருடைய தன்மை. அவர் அளவற்ற சம்பூரணமுள்ளவராயிருப்பதனாலும், ஒழுங்குப்படுத்தப்பட்ட அவர் உடன்படிக்கை உறுதியாய் இருப்பதினாலும், அவர் ஆணையிட்டு இருப்பதினாலும், அவர் தன் அன்பான குமாரனைக் கொடுத்ததினாலும், பரிசுத்தவான்களின் சாட்சியினாலும், சபையின் சரித்திரத்தினாலும், வாக்குகள் கொடுக்கப்பட்ட நோக்கத்தினாலும் இது தெரிய வருகிறது.
அவர் அப்படியே செய்வார் என்பது கூறப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் உண்மையுள்ளவர். ஆகையால் அவர் எல்லா பொல்லாங்கினின்றும் விலக்கி காப்பார் என்று விசுவாசியுங்கள். நாம் நன்மை செய்து, உண்மையுள்ள சிருஷ்டிகராகிய அவரண்டை நம் ஆத்துமாக்களை ஒப்புவிக்க வேண்டும். அவருடைய வார்த்தை நிறைவேறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கக்கூடாது. வானமும் பூமியும் ஒழிந்துபோம். அவர் வார்த்தை மாறவே மாறாது. அவருடையத் தன்மையைப்போல அதுவும் மாறாது. தேவனுடைய வாக்கைப்போல உறுதியுள்ளது ஒன்றும் இல்லை.
தேவன் உரைத்த சொற்படி
குமாரனைத் தந்தார்
அவர் வாக்குபண்ணினதெல்லாம்
அவ்வாறே நிறைவேற்றுவார்.