ஓகஸ்ட் 15
“அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்” 1.சாமு. 2:9
பரிசுத்தமாக்கப்பட்டவர்களே பரிசுத்தர்கள். தம்முடைய புகழ்ச்சிக்காக பிதாவினால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்டெடுக்கப்பட்டவர்கள். உலகத்திலிருந்து எடுத்து பரிசுத்தாவியானவரால் நிரப்பி சுத்திகரிக்கப்பட்டவர்கள். இயேசு உலகத்தாரல்லாததுபோல இவர்களும் உலகத்தாரல்லாதவர்கள். இந்தப் பாக்கியம் இவர்களுக்கு இருந்தாலும்,இவர்கள் முற்றிலும்பலவீனமானவர்கள். இவர்களை எப்போதும் காதுகாக்க வேண்டியது அவசியம். தேவன்தான் இவர்களைப் பாதுகாக்கக் கூடியவர் உலகத்து மனிதனால் இது முடியாது. அவர்களும் பலவீனர்தானே.
இவர்களின் பாதைகள் கரடுமுரடானது. முள்ளுள்ளது. மோசமானது. இவர்களுக்குத் திரளான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஆயினும் இவர்கள் விழிப்புள்ளவர்கள். தைரியமானவர்கள். வெட்கப்படாதவர்கள். காரணம் கர்த்தர் இவர்களைக் காக்கிறார். கொடுமைக்கும், துணிகரத்திற்கும், கவலைக்கும், அழிவுக்கும் இவர்களைக் காக்கிறார். தம்முடைய ஆவியானவராலும், வல்லமையினாலும், தேவ தூதர்களாலும், துன்பங்களினின்றும், நஷ்டங்களினின்றும், மார்க்கப்பேதங்களினின்றும் இவர்களைக் காக்கிறார். தேவன் யாரைக் காக்கிறாரோ, அவர்கள்தான் பத்திரமாய் இருப்பார்கள். தமது பரிசுத்தவான்கள் எல்லாரையும் காக்கிறார். விசுவாசிகளை மாத்திரம் காக்கிறபடியால் பெயர் கிறிஸ்தவர்கள் கெட்டழிவார்கள். விசுவாசத்தினாலும், தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையினாலும் இவர்கள் காக்கப்படுகிறார்கள். என்னை ஆதரித்தருளும், அப்போது நான் இரட்சிக்கப்படுவேன்.
இயேசுவே நீர் உத்தமர்
என் நடையைக் காத்தருளும்
உம்மோடு நடப்பேன்
மோட்சம்பேறு அடைவேன்.