செப்டம்பர் 11
“மரணபரியந்தம் நம்மை நடத்துவார்” சங். 48:14
இந்த நம்பிக்கைதரும் வாக்கு எத்தனை ஆறுதலானவது. கர்த்தர் நம்மை நடத்துகிறவர். முதலாவது இந்த உலகினின்று நம்மைப் பிரித்தெடுத்து நடத்தினார். சமாதான வழியில் நம்மை நடத்தினார். கடந்த நாள்களிலும், நமது துன்பங்களிலும் நம்மை நடத்தினதுபோல இனிமேலும் நம்மை நடத்துவார். இத்தனை நாள்களிலும் நம்மை நடத்தினார். இனிமேலும் நம்மை நடத்தாதிருக்க மாட்டாரா? நமது இறுதிமூச்சுவரை நம்மை நடத்துவார். நாம் நடக்கவேண்டிய வழியை அவரே தெரிந்தெடுத்து, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். வழியில் நம்மோடு அன்பாகப் பேசி நமது பாதையிலிருக்கும் வலைகளையும், கண்ணிகளையும் நமக்குக் காட்டி, விசுவாசத்தின் மூலமாக நம்மைப் பாதுகாத்து, இரட்சித்து வருகிறார்.
நாம் அறியாமலே அந்த ஆரம்ப நாள்களிலும் நம்மை நடத்தினார். நாம் ஜெபிக்கும்பொழுது நமக்குப் பட்சமான வழிகாட்டியாகத் தம்மை வெளிப்படுத்தினார். அந்தத் தேவனே இறுதி மட்டும் பொறுமையோடு நம்மைத் தாங்குவார். நாம் புத்தியீனராக நடந்தாலும், நமது துன்பங்களினால் தொய்ந்து போனாலும், கர்த்தர் கோபப்படாமல் நம் அருகில் வந்து நம்மை நடத்துவார். நமது வாழ்நாள் முடியும் பரியந்தம் அவர் நம்மை நடத்திச் செல்வார். மரண இருளின் பள்ளத்தாக்கில் நாம் நடந்தாலும், அவர் நம்மோடுகூட நடப்பார். தமது இராஜ்யத்திற்கு நம்மை நடத்திச் சென்று அதை நமக்குச் சுதந்தரமாய்த் தருவார்.
அவர் வாக்குமாறாதவர். தாம் கொடுத்த வாக்குகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அன்பானவரே, நமது பரமதந்தை நமக்கு ஆளுகையைத் தரவிரும்புகிறார். ஆகவே, அவர் நம்மை நடத்திச் செல்வார். நம்மைத் தம் இராஜ்யத்தின் மேன்மைக்கு ஆளாக்குவார்.
என்றும் மாறாதவர் நமது தேவன்
நித்தம் நம்மை நடத்துவார் அவர்
மரணம் மட்டும் நம்மைக் காப்பார்
நம்மைத் தம்மிடம் சேர்த்துக்கொள்வார்.