முகப்பு தினதியானம் ஏப்ரல் நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்

ஏப்ரல் 11

“நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன்” எசேக். 20:3

இந்த ஜனங்கள் தங்களை உத்தம மார்க்கத்தாரென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்டோர் தேவனுடையப் பார்வையில் மகா அருவருப்பானவர்கள். இவர்களைத் தேவன் தம்முடன் ஐக்கியப்பட இடங்கொடார். என் இருதயத்தில் அக்கிரம சிந்தை வைத்தேனானால் தேவன் எனக்குச் செவி கொடார். வேதத்தை கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபம் அருவருப்பானது.

உன்னுடைய இருதயம் உத்தமமாய் இருக்கிறதா? உன் நடக்கை உண்மையுள்ளதா? நீ பாவத்தை நேசித்து, அதைச் செய்து, சாக்கு போக்குச் சொல்லுவாயானால் தேவன் உன்னுடன் ஐக்கியப்படார். உன்னைக் கழுவி சுத்திகரி என்பார். பாவம் ஆத்துமாவிற்குத் தீட்டு. பரிசுத்தம்தான் ஆத்துமாவிற்கு சுத்தரங்கம். பாவிகள் தீட்டுள்ளவர்கள். தேவன் அவர்களை வெறுக்கிறார். தன்னைப் பரிசுத்தவானென்று சொல்லி பாவம் செய்பவரைப்போல் அருவருப்பானவர்கள் வேறு யாரும் இல்லை. பாவம் உனது ஊழியத்தை கெடுத்துப் போடும். குறிப்பாய் நீ ஒரு பாவத்தை இன்னும் விடாதிருப்பாயானால், உன் ஊழியத்தை இன்னும் தள்ளிப்போடுவார். பாவத்தோடு உன் ஜெபத்தைக் கேளார். பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனானபடியால் அவர் உன்னை அருவருத்துத் தள்ளுவார். இயேசுவானவர் பாவத்திற்கு ஊழியம்செய்ய மாட்டார். அக்கிரமத்துக்கு உடந்தையாக தம் கிரியையைபை; பிரயோகிக்கமாட்டார். நாம் கிருபையினால் நீதிமான்களாக்கப்பட்டு, சத்தியத்தினால் பரிசுத்தராக்கப்படகிறோம். நம்முடைய இருதயம் பாவத்திற்கு பகையாக இருக்கும்போதுதான் நம் ஜெபம் கேட்கப்படும். அன்பர்களே! பாவத்துக்கு இணங்க சோதிக்கப்படும்போது நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று தேவன் சொல்வதை நினைத்துக் கொள்வோமாக.

கர்த்தாவே என்னைக் கழுவும்
உள்ளத்தைச் சுத்திகரியும்
கிருபையின் ஆவி அளித்து
என்னைப் பரிசுத்தமாக்கும்.