டிசம்பர் 23
நீதியின் சூரியன் (மல்.4:2)
நீதியின் சூரியன் என்பது இயேசு கிறிஸ்துவினுடைய பெயர்தான். உலகத்திற்கு ஒரே சூரியன் இருப்பதுபோல ஒரே இரட்சகர்தான் உண்டு. இந்த உதாரணத்தை அவருடைய மாட்சிமையும், உன்னதமும், அழுகும், மகிமையும், நிறைவும், சகல நற்குணங்களும் விளக்கிக்காட்டும். அவர் நீதியின் சூரியன். அவர் தன்னில்தான் நிறைவுள்ளவர், மேன்மையுள்ளவர், ஆளும் கர்த்தர் என்பதையும் தமது ஜனத்திற்கு அவர் நீதியாய் செயல்படுகிறார் என்றும் காட்டுகிறது.
வெளிச்சம் சூரியனிடத்திலிருந்து வருவதுபோல, நம்முடைய நீதி இயேசு நாதரிடமிருந்து வருகிறது. அவரே பரிசுத்தத்தின் உறைவிடம். நம்மை நீதிமான்களாக்க அவரே அனைத்தையும் செய்து முடித்தார். உலகத்திற்கு தேவையான ஒளி சூரியனிடத்தில் இருப்பதுபோல, நமக்கெல்லாம் போதுமான ஆவிக்குரிய ஒளியும், நீதியும் அவரில் இருக்கிறது. சூரியனின் ஒளி நமக்கு இலவசமாகக் கிடைப்பதுபோல இயேசு கிறிஸ்துவும் தமது நீதியை இலவசமாய்த் தருகிறார். வானத்தில் சூரியன் பிரகாசிக்கும்பொழுது வேறிடத்திலிருந்து ஒளி கிடைக்குமென்றிருப்பது மதியீனம். பலர் இன்று இயேசுவைவிட்டு வேறிடங்களில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது மதியீனம். சூரியனிலிருந்து சகல சிருஷ்டிகளுக்கும் தேவையான வெப்பமும், பிரகாசமும் கிடைப்பதுபோல இயேசு நாதரிடத்திலிருந்து ஆசீர்வாதங்களும், வெளிப்பாடுகளும் கிடைக்கின்றன. „நீதியின் சூரியனே, நாங்கள் உமது ஒளியில் நடந்து, நீர் கிருபையாகத் தருவதைப் பெற்றுக்கொண்டு, ஜீவனும் சமாதானமும் அடைய பாவிகளாகிய எங்களைப் பிரகாசிப்பித்தருளும் என்று ஜெபிப்போம்.
மெய் ஒளியாம் எம் இயேசுவே
நீரென் இதயத்துள் வாருமே
மெய் ஒளியால் என் பாவம் காட்டி
நீதியின் சூரியனே இரட்சியும்.