முகப்பு தினதியானம் நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்

யூலை 09

“நான் அவர்கள் தேவனாய் இருப்பேன்.” எரேமி. 32:38

இது இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்துச் சொல்லப்பட்டதாய் இருந்தாலும், மெய்யான இஸ்ரவேலரான விசுவாசிகளுக்கும் ஏற்றதுதான். ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட எவரைக்குறித்தும் இப்படி சொல்லலாம். அழுகையோடும் விண்ணப்பத்தோடும் தேவனிடம் திரும்புகிற எந்தப் பாவிக்கும் அவரின் கிருபையின் வார்த்தையை நம்புகிற ஒவ்வொருவருக்கும், எந்த ஓர் உண்மையான விசுவாசிக்கும் இந்த வாக்குத்தத்தத்தில் பங்குண்டு.

நான் அவர்கள் தேவனாய் இருப்பேன் என்பதின் ஆழ்ந்த சத்தியம் என்ன? அவர்கள் என் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, என் வார்த்தையை அங்கிகரித்து, என் சிம்மாசனத்தண்டை பணிந்து, எனக்கு ஊழியம் செய்து, என் சித்தத்தை நிறைவேற்றி, எல்லாவற்றிற்கும் மேலாக என்னை உயர்த்தி, தங்களின் தேவனாக என்னை நம்பி, என்னை ஆராதித்து என்னை நேசிப்பார்கள் என்பதே இதன் கருத்து. நான் அவர்களின் தேவனாய் இருப்பேன் என்றால், அவர்களை நடத்த என் ஞானமும், அவர்களை ஆதரிக்க என் வல்லமையும், அவர்களுக்கு நிச்சம் உண்டாக்க என் அன்பும், அவர்களை இரட்சிக்க என் கிருபையும், அவர்களைச் சுத்திகரிக்க என் பரிசுத்தமும், அவர்களை ஆறுதல்படுத்த என் ஆவியும் கிடைக்கும் என்பதே சத்தியம்.

அவர்கள் தேவனாக நான் அவர்களோடு இருப்பேன். அவர்கள் பட்சத்தில் இருப்பேன். அவர்களுக்குத் தேவனாய் இருப்பேன். அவர்களை விட்டுவிலகவும் மாட்டேன். கைவிடவும் மாட்டேன். நான் வாக்களித்தபடியெல்லாம் அவர்களுக்குச் செய்வேன். என் உடன்படிக்கையில் சவதரித்து வைத்திருக்கிறதெல்லாம் அவர்களுக்குக் கொடுப்பேன். விசுவாசியே, இந்த வாக்குத்தத்தத்தில் தேவன் உனக்குக் காட்டும் மகா பெரிய இரக்கத்தைப் பார்.

இதுவே எனக்காதாரம்
என் கவலைகள் நீங்கும்
அவர் என் தேவனானால்
துக்கம் களிப்பாகுமே.