டிசம்பர் 24
“சத்தியத்தை வாங்கு அதை விற்காதே” நீதி.23:23
சத்தியம் நமக்கு அவசியம். நமது மனதுக்கு தெளிவைத்தர, இருதயத்தைத் தூய்மைப்படுத்த, ஆத்துமாவை மகிழ்விக்க, நடத்தையைச் சீர்படுத்த அது மிகவும் அவசியம். எந்த நன்மையும் சத்தியத்திலிருந்ததான் பிறக்கிறது. எல்லாத் தீமைகளையும், அவை பொய்யிலிருந்து உண்டாவதால், அது கண்டிக்கிறது. எனவே சத்தியத்தை வாங்கு. அதை விலைகொடுத்து வாங்க வேண்டிய அளவுக்கு உயர்ந்தது. அதை வாங்குவதற்கு நீ செலவிடவேண்டும். அது விலையேறப்பெற்றது. பலர் இந்தச் சத்தியத்திற்காக தமது சுகத்தையும், பெலத்தையும், இனத்தையும், ஜனத்தையும், ஏன், தங்கள் உயிரையும்கூட கொடுத்திருக்கிறார்கள். சத்தியம் ஒரு பெரும் புதையல். அதன் மையம் கிறிஸ்துவே. கிறிஸ்துவையே சத்தியம் உயர்த்திக் காட்டுகிறது. அதைத் தேடி கண்டுபிடித்து வாங்கு. அதை விற்காதே.
சத்தியத்தைச் சம்பாதிக்க பிரயாசப்படு. கிறிஸ்துவைப்பற்றி ஆழமாகத் தெரிந்துகொள். சத்தியம் எங்கும் நிறைந்துள்ளது. கிறிஸ்துவின் வார்த்தையே சத்தியம். அவரை எவ்வகையிலாயினும் பெற்றுக்கொள். அவரைத் தேடிப் பெற்றுக்கொள். அவருக்காக ஜெபம் செய். சத்தியம் கிடைக்கும்வரை போராடு. அதை உனக்குக் கொடுக்கிறவர் தூயஆவியானவரே. அவரைக் கனப்படுத்து. உனக்கு அவர் சத்தியத்தைக் காட்டுவார். அவர்தான் உன்னைத் தேவனண்டை நடத்துவார். எந்தச் சூழலிலும் உன்னை நடத்த அவரால் முடியும். மனகலக்கத்தில் அவர் உன்னைத் தேற்றி, உன் நோயில் உன்னைக் குணமாக்கி, ஆறுதல்படுத்தி, உன்னைச் சத்தியத்தில் நடத்துவார். அவர் கற்றுத் தருவதனைத்தையும் கற்றுக்கொள். அதுவே உனக்கு உணவும், துணைவுமாகட்டும். ஆண்டவரின் மாட்சிமைக்காக அதைப் பிரசங்கி.
நீரே வழி இயேசுவே
நீரே சத்யம், ஜீவனும்,
நீர் என்னை நடத்தும்,
நேர் வழி நான் காண்பேன்.