முகப்பு துண்டு பிரதிகள் கடன் தீர்த்த மாமன்னன்

கடன் தீர்த்த மாமன்னன்

புகழ்பெற்ற இரஷ்ய நாட்டு மாமன்னர் (ஃஸார்) நிக்கோலாஸ், இரவில் சாதாரணச் சிப்பாய் போல உடையணிந்து, சிப்பாய்கள் தங்கள் முகாமில் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வெளியே உலாவுவார்.

ஒருநாள் நள்ளிரவு, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்க வேண்டிய நேரம். வழக்கம் போல கண்காணிக்க புறப்பட்ட மாமன்னர், பொக்கிஷசாலை அதிகாரியின் அறையில் விளக்கு எரிவதை கவனித்தார். மெல்ல உட்சென்று, கட்டளையை மீறிய நபரை தண்டிக்க எண்ணினார். விளக்கை அணைக்காமல் இருப்பவர், மாமன்னரின் நெருங்கிய நண்பரின் மகன். இந்த இளம் அதிகாரி, மேஜையில் தலைசாய்த்தபடி தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாரியை எழுப்ப எண்ணின மாமன்னரின் கண்களில், குண்டுகளால் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியும், ஒரு கத்தை பணமும், அதிகாரியின் கையிலிருந்து நழுவிய பேனாவும் தெரிந்தது. விளக்கின் ஒளியில் அதிகாரியால் எழுதப்பட்டிருந்த பட்டியலை படித்த மாமன்னர் நிலைமையை உடனடியாக புரிந்துக்கொண்டார்.

அந்த நீண்ட பட்டியலில், சூதாட்டம் போன்ற தீயகாரியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த தன் மாபெரும் கடனைத் தீர்க்க இவர் ராணுவ நீதியில் கையாடல் செய்திருந்தார். இப்பொழுதோ, இரவில் கணக்கை சீர் செய்ய அமர்ந்தவர், கையிருப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பற்றாக்குறையான தொகை பல லட்சக் கணக்கில் இருப்பதை முதலாவதாகக் கண்டுபிடித்ததும், கலங்கிப் போனார், ஏனெனில் திரும்ப செலுத்துவோம் என்ற நம்பிக்கைக்கே இடமில்லாத அளவுக்கு அது மாபெரும் தொகையாக இருந்தது. அந்த கடன் பட்டியலின் கீழ் ஒரு கேள்வியை எழுதியிருந்தார்.

“இவ்வளவு பெரிய கடனைத் தீர்ப்பவர் யார்?“

அவமானத்தை சமாளிக்க தைரியமற்றவராக, தன்னைச் சுட்டு தற்கொலை செய்ய நினைத்தவர். தூரத்திலுள்ள தன் வீட்டாரை நினைத்தவுடன் கலக்கமடைந்தவராக மெய்மறந்து தூங்கிவிட்டார்.

நடந்ததை அறிந்த மாமன்னர், இளம் அதிகாரியை உடனடியாக கைது செய்ய எண்ணினார். இப்படிப்பட்ட குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவை, மேலும் ராணுவத்தில் நீதி நேர்மை காக்கப்பட இவ்வகையான குற்றங்கள் ராணுவ நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். ஆனால் மாமன்னர் இந்த அதிகாரியின் தகப்பனார் தன் நெருங்கிய நண்பர் என்பதை நினைவுகூர்ந்ததும், அன்பினால் நீதியாக வழங்கப்பட வேண்டிய நியாயத்தீர்ப்பை மேற்கொண்டார். ராணுவத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அதே நேரத்தில் குற்றவாளியைத் தண்டனையிலிருந்து காத்து நீதிமானாக்கவும் மாமன்னர் ஒரு திட்டம் வகுத்தார். நம்பிக்கையிழந்த அந்த அதிகாரியின் பேனாவை எடுத்து அந்தக் கேள்வியின் கீழ் “நிக்கோலாஸ்” எனத் தன் பெயரை எழுதினார்.

மாமன்னர் நிக்கோலாஸ் மனமார கடனைத் தீர்க்க தீர்மானித்தாரே! தண்டனைக்குரியவன் மீட்கப்பட்டான். இந்த தியாக மனப்பான்மை இயேசு இரட்சகர் தம்மிடம் வரும் எல்லோருக்கும் வழங்கும் பாவ மன்னிப்பை நினைவுபடுத்துகிறது. மாமன்னர் வெளியேறிய சிறிது நேரத்தில் விழித்து, தன்னையே சுட்டுக்கொள்ள முயன்ற இளம் அதிகாரி தன் கேள்வியின் கீழ் மாமன்னரின் கையெழுத்தைப் பார்த்து அசந்து போனார். இது உண்மையானது தானோ என்பதைக் கண்டறிய தன் வசமுள்ள தஸ்தாவேஜுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததும் விவரிக்க முடியாத மகிழ்ச்சியடைந்தார். ஆனாலும், தன் துணிகரமான செய்கை மாமன்னருக்கு தெரிந்தும், கடன் சுமையை தன் மேல் சுமத்தாமல் அவர் தாமே ஈடுசெய்ய முன்வந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். மன்னிக்கும் மாமன்னர் நிக்கோலாஸ் குற்றவாளியை நீதிமானாக்கி விட்டார். மறுநாள் மாமன்னரிடமிருந்து வந்த பணம், கடன் தொகைக்கு போதுமானதாக இருந்தது.

நண்பரே! நாம் அனைவரும் பாவம் செய்தவர்கள். பாவக் கடனைத் தீர்க்கவேண்டியவர்கள். “யார் இதைத் தீர்க்க முடியும் ?” தேவனுடைய அன்பு இக்கேள்விக்கு விடையளிக்கிறது. மாமன்னர் விடையெழுதினதுபோல இதுவும் ஒரு பெயர்.

இயேசு!

ஆம் அன்பரே ! இயேசு பெருமான் நம் பாவக்கடனையும், நாம் எப்படி இந்த இக்கட்டான நிலைக்கு உள்ளாகி அவமானத்துடன் இருக்கிறோம் என்பதை நன்கு அறிவார். ஆனாலும் அவர் நம்மை நேசித்து நம் பாவக்கடன் எல்லாவற்றையும் அவரே செலுத்தினார். அன்பான வாசகரே ! இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மாண்டது நம் பாவக்கடனைத் தீர்ப்பதற்காகத்தான். அத்துடன் நம்மை நீதிமானாக்க அவர் வெற்றி வேந்தராக மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்து இன்றும் ஜீவிக்கிறார். நிக்கோலாஸ் என்ற பெயர் அதிகாரியின் கடன் பிரச்சனையைத் தீர்த்தது. அதுபோல, இயேசு கிறிஸ்து என்கிற ஒப்பற்ற நாமம் நம் எல்லா பாவபாரச் சுமையினின்றும் நம்மை விடுவித்துக் காக்க வல்லது. “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று இயேசு இரட்சகர் நம்மை அன்போடு அழைக்கிறார்.

“ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், விசுவாசிக்கிறவன் எவனும்………… இவராலே (இயேசு கிறிஸ்துவினால்) விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.’ (அப்.13:38,39)