முகப்பு தினதியானம் கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்

யூலை 14

“கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார்” சங். 97:1

கர்த்தர் உன் இரட்சகர். அவர் உன் தன்மையைத் தரித்திருக்கிறார். அவர் உன்னை நன்றாய் அறிவார். ஒரு தாய் தன் ஒரே மகனை நேசிக்கிறதிலும் அவர் உன்னை அதிகமாய் நேசிக்கிறார். அவர் செய்கிற சகலத்திலும், அவர் அனுமதிக்கிற சகலத்திலும் உன் நலத்தையே விரும்புகிறார். அவர் சர்வ லோகத்தையும் ஆண்டு நடத்துகிறார். சிம்மாசனங்களும், அதிகாரங்களும், துரைத்தனங்களும் அவருக்குக் கீழ்ப்படிகிறபடியால் அவரே எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுகை செய்கிறார். அவர் ஆளுகையில் அவருடைய ஞானமும், வல்லமையும், நீதியும், இரக்கமும், ஏகாதிபதியமும் ஒன்றுபோல விளங்குகிறது. பரிசுத்தமும் பாக்கியமும் தமது பிள்ளைகளுடைய நித்திய சேமமும் விருத்தியாக வேண்டுமென்றே ஆளுகை செய்கிறார்.

அவர் தம்முடைய சத்துருக்களின்மேல் ஆளுகை செய்து அவர்களுடைய இரகசிய தந்திரங்களை அவமாக்கி அவர்களுடைய சத்துவத்தைக் கொண்டு தமது சித்தத்தை முடிக்கிறார். தம்முடைய சிநேகிதர்மேல் ஆளுகை செய்து பொல்லாங்கினின்று அவர்களைக் காப்பாற்றி அவர்களின் காரியங்களை நடத்தி தம்முடைய வாக்கை நிறைவேற்றுகிறார். கர்த்தர் இராஜரீகம்பண்ணுகிறார். சாத்தான் உன்னைப்பிடிக்க கண்ணிவைக்கும்போதும், பாவம் உன்னைக் கீழே விழத்தள்ளும்போதும் இதை நினை. நற்செல் உனக்கு விரோதிகளை உண்டாக்கி, உன் ஒழுங்குகளைக் குலைத்து, உன் நன்மைகளைக் கெடுத்து, உன் விசுவாசத்தைச் சோதிக்கும்போது இதை நினை. புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் உண்டாகி, சத்துருக்கள் உன்னை வெறுத்து, வியாதி உன்னை வருத்தி, மரணப் படுக்கையில் இருக்கும்போதும் இதை நினை. சகலத்திற்கும் மேலாக இரட்சகர் ஆளுகை செய்கிறபடியால் உனக்குப் பயம் இல்லையென்று நினைத்துச் சந்தோஷப்படு.

கர்த்தர் இராஜாதி இராஜன்
மகிழ்ந்து அவரைப் போற்று,
சுத்தாவி என் உள்ளத்தில்
தங்கும் இது என் மன்றாட்டு.